கேட்கப்படுகின்றனவா பிரார்த்தனைகள்?

ஆபிரகாம் பண்டிதர்

து.ஆ.தனபாண்டியன்

ஐயையா, நான் வந்தேன்  பாடலுக்கு நிகராகவே எனக்குப்பிடித்த கிறிஸ்தவப்பாடல் ‘நீ என்றே பிரார்த்தன கேட்டு..” அடிக்கடி என்னுள் இளமைநினைவுகளின் ஒரு பகுதியாக ஓடிக்கொண்டிருக்கும் இப்பாடலை சமீபத்தில் மீண்டும் மீண்டும் கேட்டுக்கொண்டிருந்தேன்.

இந்த இரு பாடல்களுமே நண்பர் அலெக்ஸுக்கும் பிடித்தமானவை. நாங்கள் ஒருமுறை சாதாரணமாகப் பேசிக்கொண்டிருந்தபோது அலெக்ஸ் இதை நினைவுகூர்ந்தார். அவருடைய இளமையில் இது கேரளத்தில் மிகப்பிரபலமாக இருந்திருக்கலாம். அய்யய்யா  நான் வந்தேன் ஓர் அடைக்கலம் கோரல். இது ஒரு நன்றி அறிவிப்பு, ஏற்றுக்கொண்டமைக்கு.

பூவச்சல் காதர் என்ற இஸ்லாமியர் எழுதியது. பீட்டர்- ரூபன் இசையில் மேரி ஷைலா பாடிய இப்பாடல் மலையாளத்தின் எக்காலத்திற்கும் உரிய கிறித்தவ இசைப்பாடல். குறைந்தது நூறு வெவ்வேறு பாடகர்களின் குரலில் இது ஒலித்துள்ளது.

jesus

வாழ்த்துந்நு தெய்வமே நின் மஹத்வம்

வாழ்த்துந்நு  ரக்‌ஷகா நின்றே நாமம்

 

நீயென்றே பிராத்தன கேட்டு

நீ என்றே மானசம் கண்டு

ஹிருதயத்தின் அல்தாரயில்

வந்நென் அழலின் கூரிருள் மாற்றி

பனிநீர் விரியுந்ந பறுதீஸ நல்கி

பாரில்  மனுஷ்யனாய் தெய்வம்

அதினுள்ளில் பாபத்தின் பாம்பினே போற்றுந்நு

அறியாத மர்த்யன்றே கைகள்

செந்நாய்களே போலும் புள்ளிமான்களாக்குந்ந

நின் ஸ்னேக முந்திரிப்பூக்கள்

இந்நும் சொரியேணம் ஈ ஃபவனத்திலே

கண்ணீரின் யோதான் கரையில்.

[நீ என் பிரார்த்தனையைக் கேட்டாய்

நீ என் மனதைக் கண்டாய்

இதயத்தின் ஆல்டர் மேடையில்

வந்து என்  தவிப்பின் இருளை நீக்கினாய்

ரோஜா மலரும் சொர்க்கத்தை

மனிதனுக்கு இவ்வுலகில் அளித்தது தெய்வம்

அதற்குள் பாவமெனும் பாம்பை வளர்க்கின்றன

அறியாமல் மானுடனின் கைகள்

ஓநாய்களையும் புள்ளிமான்களாக்கும்

உன் அன்பின் திராட்சை மலர்கள்

இன்றும் பொழியவேண்டும் இந்த இல்லமாகிய

துயரத்தின் யோர்தான் நதிக்கரையில்]

மேரி ஷைலா சினிமாவுக்காக வேறெந்த பாடலையும் பாடியதில்லை. 1973ல் வெளிவந்த காற்று விதச்சவன் என்ற படத்திற்காக இதை பதின்பருவத்தில் அவர் பாடநேர்ந்தது.  சமீபத்தில் யூடியூபில் இப்பாடலின் ஒரு வடிவத்தின்கீழே ஒரு குறிப்பைக் கண்டேன். மூன்று ஆண்டுகளுக்கு முன் சஞ்சனா சதீஷ் என்பவர் எழுதியிருந்தார்.

My mother Mary Shylla is now Shylla Sathish. We live in Banglore. She is very happy to know that her music has reached people and is still being sung. She continues to minister in a humble way now. Thanks for remembering her, please continue to uphold her in your prayers. I will try to upload some of her songs.

sanjanasatish

*

ஆனால் சஞ்சனா தன் தாயின் வேறெந்த பாடலையும் வலையேற்றியதாகத் தெரியவில்லை.

மேரி ஷைலாவை கற்பனையில் உருவகித்துப்பார்த்தேன். ஐம்பதுகளில் பிறந்த அவருக்கு இப்போது எழுபதை ஒட்டிய வயதிருக்கும். வாழ்க்கை சென்றுமறையும் பொழுது. ஒரே ஒரு பாடல் முடிவிலிக் காலத்தைச் சென்று தொட்டுவிட்டிருக்கிறது. அதை அவர் அறிவதே மிகமிகப்பிந்தித்தான், மகள் சொல்லி. மலையாளமே இல்லாத ஒரு வாழ்க்கைச்சூழலில் இருந்துகொண்டிருக்கிறார்.

மேரி ஷைலா பாடிய இந்தப்பாடலின் அசலை யூடியூபில் காண்பது வரை இதை பி சுசீலா பாடியதாகவே எண்ணிக்கொண்டிருந்தேன். பல இசை ஆய்வாளர்களே அப்படி எழுதியிருக்கிறார்கள். பி.சுசீலாவுக்கிணையான குரல். அதைவிடவும் மென்மையான உணர்வுகள். மேரி ஷைலாவின் குரலில் இருந்த பாடல் கிட்டத்தட்ட மறைந்தே விட்டது. ஜேசுதாஸ், கே.எஸ்.சித்ரா, ராதிகா உட்பட பிறர் பாடிய பாடல்களே தேவாலயங்களில் ஒலித்தன. யூடியூப் என்னும் பெருந்தொகை அப்பாடலை வெளிக்கொண்டுவந்தது. இன்று அது மீண்டும் ஒலிக்கத்தொடங்கியிருக்கிறது. நவீனத்தொழில்நுட்பம் என்றும் அழியாது அதை வைத்திருக்கும்.

மேரி ஷைலா அதைப்பாடும்போது ஓர் இளமைக்காலக் குதூகலமாக மட்டுமே எண்ணியிருப்பார். இப்போது என்னதான் நினைக்கிறார்? இப்படி மின்னி மறைபவர்கள் எப்படி இயல்பாக இருக்கிறார்கள்? இழப்புணர்வு கொள்வார்களா? என்றேனும் இப்பாடலைக் கேட்டால் உள்ளம் விம்முமா?

இதற்கு இசையமைத்தவர்களின் கதையும் ஆச்சரியமானது. பீட்டர் – ரூபன் என்ற பேரில் இசையமைத்தவர்கள் இருவர். ரூபன் கிறித்தவர். சென்னையைச் சேர்ந்தவர். அவர் இசைநடத்துநர் மட்டுமே. அடிப்படையில் கித்தாரிஸ்ட். காயங்குளம் புதுப்பள்ளியில் பிறந்த பீட்டரின் இயற்பெயர் பரமசிவம். ஊரில் கர்நாடக இசை பயின்றபின் சென்னையில் இசைவாழ்க்கைதேடிச் சென்றார். கிறித்தவப்பாடல்களுக்கு இசையமைக்க வாய்ப்பு வந்தது. சென்னை கிறித்தவக் கலைக்கல்லூரி முதல்வரின் கட்டாயத்தால் பீட்டர் என பெயரை மாற்றிக்கொண்டு ரூபனுடன் இணைந்து கிறித்தவப்பாடல்களுக்கு இசையமைத்தார்.என்று ஒரு குறிப்பு இணையத்தில் உள்ளது.

1962ல் பாக்யஜாதகம் என்னும் படத்தில் வாசுதேவ என்னும் தியாகராஜ கீர்த்தனையைப் பாட வாய்ப்பு வந்தது. 1964ல் அன்னா என்னும் படத்தில் ஒரு பாடலைப்பாடினார். 1969ல் அடிமகள் என்னும் படத்தில் பாடிய நாராயணம் பஜே நாராயணம் என்பதும் ஒரு பஜனைப்பாடலே . 1973ல் காற்றுவிதச்சவன் என்ற படத்திற்கு இசையமைக்க வாய்ப்பு கிடைத்தது. படத்தை இயக்கி, தயாரித்தவர் ஃபாதர் சுவி. திக்குறிச்சி சுகுமாரன் நாயர் கதாநாயகனாக நடிக்க பிரேமா, சோபா இருவரும் கதாநாயகிகள்.

படத்தில் அத்தனை  பாடல்களும் வெற்றி, ஆனால் படம் ஓடவில்லை. அடுத்த வாய்ப்பு மீண்டும் 11 ஆண்டுகளுக்குப்பின் 1984ல் பிந்து என்ற படம். அதிலும் பாடல்கள் வெற்றி, படம் தோல்வி. திரையுலகிலிருந்து விலகினார். கிறித்தவ இசையும் வேறு திசைகளில் நகர்ந்தது. இன்று அவர்களைப்பற்றி இன்று எந்தச்செய்தியும் இல்லை.

சினிமாவில் மிகமிகச்சிலரே எஞ்சுகிறார்கள். அது பெரும்பாலானவர்களை உதிர்த்துவிட்டுச் சென்றுவிடுகிறது. ஆனால் சென்றவர்களுக்கு சிலசமயம் அழியாத நினைவுத்தடத்தையும் உருவாக்கிவிடுகிறது.

காற்று விதைச்சவர் படத்திற்கு பரமசிவம் பீட்டர் அமைத்த முதல்பாடல் ‘நீ என் பிரார்த்தனையைக் கேட்டாய். நீ என் மனதைக் கண்டாய். இதயத்தில் மேடையில் வந்து நின்று என் தவிப்பின் இருளை அகற்றினாய்’ .அத்தனை உவகையுடன் கண்ணீருடன் அவர் அமைத்த பாடல். உண்மையில் இறைவன் அவர் பிரார்த்தையைக் கேட்டாரா? இல்லை என்று தோன்றும். ஆனால் இன்று இதை எழுதும்போது கேட்டார் என்றும் தோன்றுகிறது

மேரி ஷைலாவையும் பீட்டர் பரமசிவத்தையும் என்னால் மகத்தான புனைவுக்கதாபாத்திரங்களின் ஆழ்ந்த துயர்வட்டத்துடன்தான் பார்க்கமுடிகிறது.

=====================================

மழவில்லின் அக்ஞாத வாசம் கழிஞ்சு பீட்டர் ரூபன் இசை/ஜேசுதாஸ்/பூவச்சல் காதர்

சௌந்தர்ய பூஜைய்க்கு பீட்டர் ரூபந் பூவச்சல் காதர்- ஜேசுதாஸ்

கதலிப்பூவின்றே [பிந்து] பீட்டர் ரூபன் ஜெயச்சந்திரன்

=============================

ரஃபி சாகிபும் விண்மீன்களும்

ஐயையா, நான் வந்தேன்

முந்தைய கட்டுரைவாசிப்பு, அறிவியல்கல்வி – கடிதங்கள்
அடுத்த கட்டுரைவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 9