நம் ஆலயங்களுக்கான ஐந்து நெறிகள்
ஆலய அழிப்பு – கடிதங்கள்
அன்புள்ள ஜெ,
உங்கள் ஆலய அழிப்பு படித்ததும் 2016ல் ஆதி திருவரங்கம் (திருவண்ணாமலை அருகில்) சென்றிருந்தேன், பழைய கோவிலை எதிர்பார்த்த எனக்கு அதிர்ச்சி. புகைப்படங்களை இணைத்துள்ளேன், அவை தானே பட்ட பாட்டை சொல்லும். கருவறை வெளி வரை டைல்ஸ், மார்பில்ஸ், எல்லாத்தூண்களும் பெயிண்ட் மற்றும் டிஸ்டம்பர், படிகட்டுகள் உயர்த்தப்பட்டு யாளிகள் மாயம், சிமெண்ட் மூலம் கற்சிலைகள் மேல் பூச்சு..
திருவரங்கத்தை விட பழையது. என்ன சொல்ல?
திருமலை
அன்புள்ள திருமலை,.
இதையாவது பொதுவாகப் பண்பாடு சார்ந்த விஷயங்களில் மிகப்பின்னால் நிற்பவர்களான திருவண்ணாமலை மாவட்டத்தில் செய்திருக்கிறார்கள். நானறிந்தவரை சமயக்கல்வி, பண்பாட்டு ஆர்வம் ஆகியவற்றில் பழைமையில் நாட்டமும் புதுமைக்கு இடமும் அளிப்பது கொங்குமாவட்டம். தமிழகத்தின் முதன்மையான நவீன ஆன்மிக அமைப்புகள் பல அமைந்துள்ளது
சமீபத்தில் கோவையைச்சுற்றியிருக்கும் ஆலயங்களுக்குச் சென்றிருந்தேன். அத்தனை ஆலயங்களிலும் முகப்பிலும் உள்ளேயும் கான்கிரீட் அமைப்புகளைக் கற்கட்டிடங்களுடன் சேர்த்து கட்டியிருக்கிறார்கள். பேரூர் பட்டீஸ்வர ஆலயத்தில் மிகப்பெரிய கான்கிரீட் முகப்பு
கான்கிரீட் அமைப்புகள் இருபதாண்டுகளுக்குள் அடித்தளம் இறங்கி விரிசல் விட்டுவிடும். அவை கற்கட்டிடங்களை இழுக்கும். வெறுமே கற்களை அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் கோயிலமைப்பை இடித்துச்சரிக்கும். கோயிலில் கான்கிரீட்டில் கட்டுபவர்கள் கோயிலை இடித்த குலப்பழி கொள்கிறார்கள் என்று என்னுடன் வந்த ஆன்மிகப் பணியாளரிடம் சொன்னேன். அவர் “என்னங்க இப்டி சொல்றீங்க?” என்று திகைத்தார்
ஆனால் இரண்டாம்நாளே என்னிசம் “சோசியக்காரர் கிட்ட கேட்டெனுங்க. ஒண்ணுமில்லை பண்ணலாம்னுட்டாருங்க” என்றார்
ஜெ
அன்புள்ள ஜெ
பட்டீஸ்வரம் ஆலய கும்பாபிஷேகச் சிறப்பு செய்தியை இணையத்திலே பார்த்தேன். படத்தைப்பாருங்கள். இந்தச் சும்பன்களுக்குத்தேவை கோயில் அல்ல. டி.ராஜேந்தரின் செட்
என்னத்தைச் சொல்ல
ஜெயராமன்