வெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 17

மூன்று : முகில்திரை – 10

fire-iconகோகுலம் ஆயர்பாடிகளிலே மழை மிகுந்த இடம் என்பார்கள். ஆண்டுக்கு ஒருமுறை மழை பெய்யும் ஆயர் நிலங்களுண்டு. இருமுறையும் மும்முறையும் மழைக்காலம் கொண்டவை உண்டு. ஆண்டெல்லாம் மழைக்காலமாக திகழ்வது அது. அங்கே மாரி பேருருவம் கொண்டு இறங்குவதே இல்லை. பண்டொரு நாள் கரியவன் தன் கைகளால் மந்தர மலையைத் தூக்கி அச்சிற்றூருக்கு மேல் குடையெனப்பிடித்தான் என்கிறார்கள் சூதர்கள். அன்று மழையை ஆளும் இந்திரனுக்கு அவர் ஓர் ஆணையிட்டார். இனி மழை மென்மயிற்பீலியென மட்டுமே இவ்வூர்மேல் இறங்க வேண்டும் என்று.

ஆகவே ஒளிரும் பளிங்கு நூல்களென அங்கு மழை சரிந்தது. ஒவ்வொரு நாளும் அந்திக்குப்பின் மெல்ல தொடங்கி, இரவில் இலைகளை துள்ள வைத்தபடி பெய்திறங்கி, துளி சொட்டி ஓய்ந்து, ஈரக்காற்றென புலரியில் எஞ்சியது. காலையில் கன்றுகள் கால்வைக்கையில் நீர்த்துளிகள் சூடிய பசிய இதழ்களின் விரிவென கிடந்தது புல்வெளி. காலையொளி சுடர்கொள்கையில் ஒவ்வொரு புல்லிலும் விழிகள் எழுந்தன. கோகுலத்தின் பசுக்கள் தளிர்புற்களையன்றி பிற எதையும் கடிப்பதில்லை. புலரி வெம்மை அனல் கொள்வதற்குள் அவை பள்ளை நிறைத்து மரநிழல் தேடிச் சென்று கால்மடக்கி படுத்து விழிமூடி உண்டவற்றை மீண்டும் உண்ணத்தொடங்கிவிடும்.

அவை மேயும்போது அவை அனைத்தையும் பார்க்கும் வண்ணம் கவண் கிளைகொண்ட மரம் ஒன்றில் ஏறி அமர்ந்து அநிருத்தன் குழலிசைப்பான். அவனுக்கு குழலை எவருமே கற்றுத்தரவில்லை. பேசத்தொடங்கும்போதே வேய்குழலையும் அவன் கையில் எடுத்துவிட்டான் என்றார்கள். அவன் வாசித்த மெட்டுகள் கோகுலத்தின் காற்றில் எப்போதுமிருந்தவை. வண்டுத்துளை விழுந்த மூங்கில்கள் காற்றிலாடி தாங்களே அவ்விசையை எழுப்புவதுண்டு.

புற்பரப்பில் அவனைச்சூழ்ந்து நின்றும் படுத்தும் அமர்ந்தும் யாதவ இளையோர் அவ்விசையை கேட்டனர். மேய்ந்து நிறைந்த கன்றுகள் கழுத்து மணி ஒலிக்க தலையசைத்து செவிகோட்டி அவ்விசை கேட்க வந்தன. ஒன்றுடன் ஒன்று உடலொட்டி அவனைச் சூழ்ந்து படுத்து விழிகள் ஈரம் மின்ன அதைக்கேட்டு செவிகள் அசைவிழக்க கனவிலாழ்ந்தன. அவன் பாடிநாய்களை கன்றுகளுக்கு காவல் இருத்திவிட்டு காட்டுக்குள் நுழைந்து பாறைகளின் உச்சிகளில் சென்று அமர்ந்து முகில்களை பார்த்தான். தேனடைகளை எடுத்து பிழிந்து காட்டின் இனிமையை உண்டான். கனிகளும் கிழங்குகளும் தேடிச்சேர்த்துக்கொண்டு வந்தான். இளையோர் கூடி அமர்ந்து அவற்றை உண்டனர். பின்னர் மரநிழல்களில் இலைப்படுக்கை அமைத்து படுத்து துயின்றனர்.

மாலை வெயில் சரியத் தொடங்குகையில் மாறும் பறவைகளின் ஒலிகேட்டு எழுந்து கூச்சலிட்டபடி ஓடி காளிந்தியில் பாய்ந்து நீந்தி முக்குளித்து மறுகரை சென்றனர். ஆழத்தில் மூழ்கிச்செல்கையில் அவன் கரிய உடலெடுத்து வந்து தன்னைச்சூழ்ந்து நெளிந்த நாகக்குழவிகளை கண்டான். அங்கு வாழ்ந்த முதல் நாகமாகிய காளியனின் மைந்தர்கள் அவர்கள் என்றனர் கோபியர். விழிகள் ஒளிர அவை அவனுடன் திளைத்து நெளிந்து விளையாடின. பன்னிரு முறை கரை கால்தொடாது காளிந்தியை நீந்திக்கடக்கும் ஆற்றல் கொண்டவன் அவன். பிற இளையோர் முன்னரே நின்றுவிட மீண்டும் மீண்டுமென நீந்தி அவன் கரையேறுகையில் அவர்கள் கூவியபடி வந்து அவன் கைகளை பற்றிக்கொண்டனர்.

ஒருமுறை அங்கே வந்த அயல்வணிகர் ஒருவர் வியந்து “தோள் பெருகிய மல்லர்கள்கூட மூன்றுமுறைக்கு மேல் இக்கருநதியை நீந்திக்கடக்க முடிந்ததில்லை. உனக்கு வேறு ஏதோ மாயம் தெரியும்” என்றார். “அவன் நீந்துகையில் காளிந்தி தன் உள்ளங்கையை விரித்து ஏந்திசெல்கிறாள் என்று என் அன்னை சொல்கிறாள்” என்றான் அவன் தோழனாகிய பிரபவன். “நாகங்கள் வந்து உடன் திளைக்கின்றன, வணிகரே” என்றான் அநிருத்தன். “இவன் யார்?” என்று அவர் கேட்டார். “எங்கோ நோக்கிய விழிகள்.” பாவனன் “இவன் துவாரகையின் அரசரின் பெயர் மைந்தன்” என்றதும் “ஆ, இப்போது தெரிகிறது… இளையோனே நீ தென்னகக் கடல்களை நீந்திக்கடந்தாலும் வியப்பதற்கேதுமில்லை” என்றார்.

ஈரம் வழிந்த உடலுடன் உயர்ந்த மரம் ஒன்றின் மேலேறி நின்று கன்றுகளை மும்முறை குரலெடுத்து அழைத்தான். நாய்கள் செவி பறக்க வால் சுழல எழுந்து குரைத்து தங்களைத் தாங்களே சுழன்று களிகூர்ந்தன. கன்றுகள் எழுந்து அதுவரை அசைபோட்ட கனவின் எச்சம் கால்களை தளரவைக்க நீரில் ஒழுகிச் செல்லும் பெருமரக்கட்டைகள்போல் மெதுவாக அவனை நோக்கி வந்தன. அறியாத ஒழுக்கொன்றால் ஒன்று சேர்க்கப்பட்டவைபோல முட்டித்திரண்டு அணுகிய அவற்றுக்குப்பின்னால் வளைகோலும் புல்லாங்குழலும் ஏந்தி தலையிலணிந்த மயில்பீலி அந்தியொளியில் வண்ணம் மாறி ஒளிவிட அவன் நடந்து ஆயர்பாடிக்கு மீண்டான்.

கைக்கோலால் ஒருமுறையும் ஒரு பசுவையும் அவன் தொட்டதே இல்லை. “பிறகெதற்கு இக்கோல்?” என்று ஒரு முறை கேட்ட யாதவச் சிறுவனிடம் “இது என் மூதாதையர் ஏந்திய செங்கோல்” என்று அவன் சொன்னான். “வேட்டையும் ஏரோட்டுதலும் கன்றுபுரத்தலுமே மண்ணை அன்னமாக்கும் முதற்பணிகள். அவற்றில் உயிர்வதை குறைந்தது இதுவே என்பதனால் தெய்வங்களுக்கு உகந்தது இது” என்றான். பின்னிரவு வரை தொழுவில் புகையிட்டும் உண்ணிகள் பொறுக்கியும் பசுக்களுக்கு பணிவிடை செய்தபின்னரே துயிலுக்குச் சென்றான். ஆழ்துயிலிலும் அவை எழுப்பும் ஒரு மென்குரலில் விழித்துக்கொண்டான்.

கன்றோட்டும் ஆயனாக அவன் அங்கிருந்தான். கற்சிலையில் தெய்வமென அவனிலிருந்து பிறிதொருவன் எழுவதை கோபியர் அறிந்திருந்தனர். அவர்களைக் கண்டதும் அவன் உருமாறினான். அவன் குழலில் இசை எழ அவர்கள் தளிர்களும் மலர்களும் ஒளிகொண்ட இளங்காட்டுக்குள் திளைத்தனர். சுனைக்கரையில் விழிமயங்கிப்படுத்தனர். நிலவிரவில் நடனமிட்டனர். யசோதையின் பெயர்மைந்தனை அவர்கள் அறியவேயில்லை. அவன் தன் கனவுகளில் மட்டுமே அவர்களை அறிந்திருந்தான்.

அவன் ஒளிரும் தோள்களையும் விழியொளியையும் குறுநகையையும் குழலில் மின்னிய பீலிவிழியையும் கண்டு பித்துகொண்ட கன்னியர் ஆயர்குடிகளெங்கும் பெருகியிருந்தனர். தனித்திருக்கையில் அவனைப்பற்றியே எண்ணிக்கொண்டனர். தோழியருடன் அமர்ந்து மெல்லியகுரலில் அவனைப்பற்றிப்பேசி கன்றுக்கழுத்துமணிபோல் சிரித்தனர். அவன் எதிரே நீர்க்குடமோ பாற்கலமோ ஏந்தி தனித்து வருகையில் அஞ்சி விதிர்ப்புகொண்டு விழிதாழ்த்தினர். பசுவை ஓட்டிவந்தார்கள் என்றால் கன்றை அதட்டி அன்னையென நடித்து அதனூடாக அத்தருணத்தை கடந்துசென்றனர்.

குழுக்களாக வருகையில் அவனைக்கண்டால் மெல்லிய சீண்டல்களை சொன்னார்கள். “ஆயரே, உங்கள் பீலிவிழி பின்னால் நோக்குகிறது” என்றனர். “கன்று ஒன்று உங்களைத் தொடர்கிறது, நீங்கள் அதை காணவே இல்லை” என்றனர். அவன் அவர்களை இளமைந்தனின் தெளிந்த விழிகளுடன் நோக்கி அவர்கள் சொல்லுக்கு நேர்ப்பொருள் கொண்டு மறுமொழி சொன்னான். “இவனுக்கு நம் விழிகள் புரியவில்லையா என்ன?” என்றாள் லவங்கி. “அன்னையிடம் கொஞ்சிக்கொஞ்சி ஆண்மகனாக மறந்துவிட்டான்போலும்” என்றாள் ஸ்ரீபத்மை. “அவனுக்கு அப்பிச்சியர் குழுவே உவகையூட்டுகிறது போலும்” என்றாள் கஸ்தூரி.

அச்சொல் அவர்களனைவரையும் அமைதியாக்கியது. அவன் அம்முதுமகள்களுடன் கானாடுவதை, அப்போது அவன் குழலில் எழும் இசையை, அவர்களும் அறிந்திருந்தனர். “அது சித்திரத்தில் எழுந்த சோலை. நோக்கலாம், நுழையமுடியாது” என ஹேமமஞ்சரி ஒருமுறை சொன்னாள். “கற்பாறைகளும் தேன்மணமொளி கொண்ட மலர்களாகும் ஒரு மாற்றுலகை அவர்கள் அடைகிறார்கள் என்றான் ஒரு பாடகன்… அதை பிறர் அறியவே முடியாது என்றான்” என்றாள் ரசமஞ்சரி. “அமுதென்பதை அறியாத எவருமில்லை என்பதனால்தான் அச்சொல் வாழ்கிறது… ஒருதுளியேனும் ஒவ்வொருவருக்கும் அளிக்கப்பட்டுள்ளதடி” என்றாள் நேத்ரமஞ்சரி. “அதை அறியாதவளுக்கு ஆயிரம் முகங்களுடன் பிறந்துபிறந்துவரும் அவனை அணுகமுடியாது…. “ என்றாள் அனங்கமஞ்சரி.

fire-iconமழைத்தூறல் முடிந்து இலைசொட்டிக்கொண்டிருந்த ஒரு மாலையில் தலையசைத்து ஒலியெழுப்பி சென்றுகொண்டிருந்த கன்றுகளுக்குப் பின்னால் ஆங்காங்கே தயங்கி நின்று தளிரிலைகளைக் கவ்வி மென்று துப்பி வால் சுழற்றி துள்ளி ஓடி நின்று மீண்டும் பக்கவாட்டில் திரும்பிக்கொண்டிருந்த ஒருமாதக் கன்றொன்றை உந்தி மந்தையுடன் சேர்த்தபடி அவன் கோகுலத்திற்கு மீண்டான். அவன் உந்திச்சேர்க்கும் தோறும் அதை ஒரு களியாட்டென அது மாற்றிக்கொண்டது. பின்னர் அவனைப்பார்த்து ம்ரே என்று அழைத்தபின் திரும்பி புதர்க்காட்டுக்குள் ஓடியது. அங்கே நின்று “என்னை பிடிக்கவே முடியாதே” என தலையசைத்தது.

அவன் “நில், நில், என்ன செய்கிறாய்? சோணை நில்” என்றபடி அதற்குப்பின்னால் ஓடினான். அவன் வரும்வரை காத்திருந்துவிட்டு பிடிப்பதற்கு முன் மீண்டும் தாவி ஓடியது. அப்பால் சென்று அவனை காணவேயில்லை என்பதுபோல தளிர்களை கடித்தது. புதர்களுக்குள் புகுந்து மரங்களுக்குள் மறைந்து பாறைகளின் அருகே தோன்றி அது ஓட சிரித்தபடி அவன் அதை தொடர்ந்து சென்றான். “பிடித்தால் உன் வாயில் வளையம் மாட்டிவிடுவேன். ஒரு சொட்டு குடிக்கவிடமாட்டேன்… நில்!” என்று கூவினான். அது “நான் எங்கே ஓடினேன்?” என்று கேட்டு அவன் தன் வாலைப்பிடித்ததும் உருவிக்கொண்டு துள்ளி அகன்றது.

அதை அவன் பற்றி காட்டுக்கொடியொன்றைப் பறித்து கழுத்தில் சுற்றிக்கட்டி பற்றி இழுத்து திரும்பியபோது நுணா மரத்தடியில் நின்றிருந்த அழகிய இளம்பெண் ஒருத்தியை கண்டான். ஆயர்குடிப்பெண் அல்லவென்று அவள் அணிந்திருந்த ஆடைகளும் அணிகளுமே காட்டின. வலம்புரியாகப்பின்னி தோளிலிட்டிருந்த குழல் இடைவரை தொங்கியது. கழுத்திலிட்ட அருமணி மணி ஆரங்கள் எழுந்த முலைகளுக்கு மேல் வளைந்து ஒசிந்தன. சற்றே இடைவளைத்து, பெரிய தொடைகள் எழுந்து தெரிய, மரத்தில் சாய்ந்து புன்னகைக்கும் விழிகளுடன் அவனை நோக்கி நின்றாள்.

அவன் அவள் அருகே சென்று “யார் நீ?” என்றான். அணங்கோ என்ற ஐயம் கொண்டு அவளை மீண்டும் நோக்கினான். அவன் எண்ணத்தை உணர்ந்தவள்போல் “நான் அணங்கும் தேவதையும் அல்ல. என் பெயர் சித்ரலேகை. கரந்துவரும் மாயம் கற்றவள், அசுரகுலத்தாள். உங்களைப் பார்க்கும்பொருட்டே வந்தேன்” என்றாள். “என்னை எப்படி அறிவாய்?” என்று அவன் கேட்டான். “பெருஞ்சுடர் அருகே அனைத்தும் சுடர்களாகின்றன” என்றாள்.

“என்ன வேண்டும் உனக்கு?” என்றான். “இளவரசே, நீங்கள் இளைஞராக ஆகிவிட்டீர்கள். நோக்குக, ஓராண்டு முடிந்த இளங்காளையின் நடை உங்களுக்கு அமைந்துவிட்டது. அஞ்சாது எங்கும் செல்லவும் எதையும் அடைந்துவிடலாமென்று எண்ணவும் உள்ளம் கொள்கிறீர்கள்.” அநிருத்தன் “என்ன சொல்லவருகிறாய்?” என்று எரிச்சலுடன் கேட்டான். “இங்குள்ள கோபியர் அனைவரிலும் நீங்கள் தேடுவது ஒரு விழியை. அது இங்கே உங்கள் மூதாதைக்கென விரிந்தது. பிறிதின்றி வாழ்ந்தமைந்தது” என்றாள் சித்ரலேகை. அவன் விழிகள் மாற அவளை கூர்ந்து நோக்கினான்.

“முன்பு இளமைந்தனாக கோபியரால் கொண்டுசெல்லப்பட்டு முதன்முறையாக ராதையை நீங்கள் கண்டீர்கள். யமுனைக்கரையில் அமைந்த அச்சிற்றாலயத்தின் கற்சிலையில் எழுந்த விழிகளை உங்கள் விழிகள் தொட்டதுமே உங்களில் என்றும் வாழும் காதலன் எழுந்துவிட்டான். அது அவளுடைய மாயம். தன் விழிதொட்ட அனைத்து விழிகளிலும் காதலின் பித்தை நிறைக்கும் மாறாக்காதலி அவள்” என்றாள் சித்ரலேகை. “அவள் விழிகளைக் கண்டு அன்று நிலைமயங்கி நெடுநேரம் இரு சிறுகைகளையும் கூப்பியதுபோல் வைத்து ரங்கமஞ்சரியின் இடையில் அமர்ந்திருந்தீர்கள். பின்னர் தனிமையை உணரும்போதெல்லாம் அங்குசென்று அக்கல்விழிகளை கண்டுவருகிறீர்கள்.”

“ஆனால் அவ்விழிகளை நீங்கள் இளம்பெண்கள் எதிலும் கண்டதேயில்லை” என சித்ரலேகை தொடர்ந்தாள். “ஏனென்றால் இப்பெண்களைச் சூழ்ந்து அலையடித்துக்கொண்டிருக்கின்றது உலகியல். விழைவுகளும் கணக்குகளும் வெற்றிகளும் பெருமைகளும் என முகம்கோடி கொண்ட மாயை. உலகியலின் ஒரு துளி பாற்கடலை திரிந்துபோகச்செய்யும்.” அனிருத்தன் பெருமூச்சுவிட்டு பின் மெல்ல தளர்ந்து “ஆம், இங்கிருக்கும் கோபியரும் முற்றாக விடுபட்டவர்கள் அல்ல. தங்கள் உள்ளத்தில் ஒருபகுதியை மட்டும் விலக்கி பித்தால் மறைத்து மாசின்றி வைத்திருக்கிறார்கள்” என்றான்.

“முற்றிலும் மாசிலாப் பொற்கலம் ஒன்றுள்ளது. காதலின் அமுது என்றுமிருப்பதற்கு தகுதியானது. அதை உங்களிடம் காட்டவே வந்தேன்” என்று சித்ரலேகை சொன்னாள். “அவள் சோணிதபுரியை ஆளும் பாணாசுரனின் மகள். பிறந்த நாள் முதல் நெருப்பரணிட்ட நீர்சூழ்ந்த தீவொன்றில் தன் செவிலியரும் சேடியரும் மட்டுமே சூழ்ந்திருக்க மலர்ச்சோலையும் இன்னிசையும் நுண்கலைகளும் நற்கவிதையும் அன்றி பிறிதறியாமல் வாழ்பவள். நான் அவள் துணைவி. அவளுக்கு அழகிய உலகொன்றை சமைத்தளித்தவள்.”

“ஊழ் உங்களுடன் சேர்க்கும்பொருட்டு உருவமும் வடிவமும் அளித்து வடித்தெடுத்தவள் அவள். பெயர் உஷை. உங்களை தன் கனவில் அவள் கண்டாள். உங்களுருவை நான் இந்த ஆடியில் காட்டினேன். அதைக்கண்டு உங்கள் மேல் அவள் பெருங்காதல்கொண்டாள். அவள் பொருட்டு உங்களை பார்க்க வந்துள்ளேன்” என்று சித்ரலேகை சொன்னாள். “அவள் எப்படி என்னை அறிவாள்?” என்றான் அநிருத்தன். “அவளறிந்த புறவுலகம் கலையால் உருவாக்கப்பட்டது. ஆகவே ஒத்திசைவுள்ளது. இலக்குகொண்டது. விளக்கப்படக்கூடியது” என்று சித்ரலேகை சொன்னாள் “எந்தக்கலையிலும் ஓரத்தில் மிகச்சிறிதாகவேனும் அந்த மயிற்பீலி இருந்தாகவேண்டும். எவ்வினிமையும் அமுதே என்பதுபோல எக்கலையும் அப்பீலியிதழே.”

“மிகமிகச்சிறிதாக அதை அச்சுவர்களில் ஒன்றில் வரைந்தேன். உள்ளறைகளின் விளக்கொளியே படாத இருளில். ஒரு கைவிரல்பதிவு போல. இளையோனே, மயிற்பீலி என்பது நாமறியா கையொன்றின் விரல்கோட்டுச்சுழியின் பதிவு உருக்கொண்டெழுந்ததுதானே?” சித்ரலேகை சொன்னாள். “அவள் ஒருமுறைகூட அதை காணவில்லை. ஆனால் கனவில் ஒளிகொண்ட அவள் ஆழத்துநோக்கு அதை அறிந்தது. அவளில் அது விரிந்து நின்றாடியது. மெய்க்காதல் எப்போதும் கனவிலேயே தொடங்குகிறது, அங்கேயே முடிகிறது. இங்கு அதற்கு நின்றிருக்க பீடங்களில்லை. தன்னை உரைக்க மொழியும் இல்லை. அணிந்துகொள்ள நகைகளும் மறைத்துக்கொள்ள ஆடைகளுமே இவ்வுலகிலிருந்து அதற்கு கிடைக்கிறது.”

“அவள் எங்கே?” என்று கேட்டபடி அநிருத்தன் அருகே வந்தான். “நீங்கள் தேடுபவள் இவளே. இவளையன்றி பிறிதெவளை நீங்கள் அடைந்தாலும் இப்பிறவியில் பெண்ணென்பதை அறியாதவர் ஆவீர்கள்” என்றாள் சித்ரலேகை. “நோக்குங்கள்… அவளிடம் உங்கள் உள்ளத்தை உரையுங்கள்.” அநிருத்தன் “அவள் வந்துளாளா? எங்கே?” என்றான் .”இந்த ஆடிக்குள் பாருங்கள்” என்று தன் ஆடைக்குள்ளிருந்து ஆடியை எடுத்து அவள் காட்டினாள்.

அவன் குனிந்து அதற்குள் தெரிந்த உஷையின் தோற்றத்தை பார்த்தான். “இவளா?” என்றான். அவள் புன்னகைத்து “முதற்பார்வையில் கவர்வது வெறும் உடல். அதைக் காண்பது நம் உடல்தான். இளையவரே, உடல்கள் பருவடிவெனத் திரண்டு புலன்சூடி இங்கிருப்பவை. உள்ளமும், உள்ளம் கடந்த கனவும், கனவுக்கு அப்பாலிருக்கும் புதைவும், அங்கே திகழும் முழுமையும் பிறிதொன்றைக் கண்டறிய பொழுது ஆகும். அந்த மலர் அலைகளிலாடித் தவித்து பின் சுழித்து மூழ்கி ஆழத்தை அடைந்து மென்படுகையில் முன்னரே அங்கிருக்கும் தன் நிழல்வடிவின்மேல் மெல்ல படியவேண்டும்…” என்றாள். “எளியதோற்றம் கொண்டவள்” என அவன் சொன்னான்.

“முதல்நோக்கில் பிறிதொரு பெண் தானே என்றும் இரண்டாவது பார்வையில் அறியாத தனித்தன்மையொன்றை கொண்டிருக்கிறாள் என்றும் மீண்டும் நோக்குகையில் ஒவ்வொரு கணமும் பெருகும் அழகு கொண்டவள் என்றும் தோன்றுபவளே மெய்க்காதலி எனக் கொள்க! நோக்க நோக்க பெருகி பெண்டிரெல்லாம் தானே என்றும் தானின்றி பிற பெண்டிர் எவரும் இங்கில்லையென்றும் சூழ்ந்துகொள்பவள் அவள்” என்றாள் சித்ரலேகை. “பீலி விழி ஒளியும் உயிரும் கொள்ள ஒரு கோணத்தில் சற்றே திரும்பவேண்டியிருக்கிறது. நோக்குக!”

அவன் ஆடிக்குள் தெரிந்த அவ்வுருவை நோக்கிக்கொண்டிருந்தான். உஷை அவனைக் கண்டு திடுக்கிட்டாள். ஓசை கேட்ட சிறுகுருவி என உடலதிர்ந்தாள். எக்கணமும் எழுந்து பறந்துவிடுவதென ஒரு மெல்லிய அசைவை உடல்காட்ட அசைவிலாமல் அங்கேயே நின்றாள். அவள் விழிகள் வேறெங்கோ நோக்கி தழைந்திருக்க முழு உடலும் நோக்கு கொண்டு அவனை பார்த்தது. பிறிதொன்றின் அசைவுதுள்ளும் விழி இவ்வுடல்.  அவன் பெருமூச்சுவிட்டான் அப்போதும் அவள் தோற்றத்தின் அழகின்மையை அவன் உள்ளத்தில் ஒருபகுதி சொல்லிக்கொண்டே இருந்தது. அவள் முகவாயில் தோள்களில் முழுமைக் குறைவென எதோ ஒன்றிருந்தது. ஆனால் பிறிதெங்கோ அவன் உள்ளம் அவளே என்று அறிந்துவிட்டிருந்தது.

அவன் உள்ளத்திலிருந்தே வண்ணங்களை எடுத்து அவளை வரையத்தொடங்கினான். அவனறிந்த குறைகள் அனைத்தையும் வரைந்து முழுமித்தான். மெல்ல விழிதிருப்பி அவனை நோக்கி அரைக்கணம் அவள் புன்னகைத்து விலகிக்கொண்டபோது அவள் முகத்தைப் பார்த்து புன்னகைத்தான். அவள் நாணி தலை குனிந்தபோது ஆணென்று தன்னை உணர்ந்தான்.

மேலும் மேலும் அவன் சூழ்மறந்து அவ்வாடியை நோக்கி சென்றுகொண்டிருந்தான். எண்ணியிராக்கணமொன்றில் சித்ரலேகை தோளில் கைவைத்து தள்ளி அவ்வாடிக்குள் அவனை செலுத்தினாள். நீருள் விழுந்ததுபோல அவன் தத்தளித்து அதன் ஒளிப்பரப்பில் அமிழ்ந்து முடிவின்மையில் மூழ்கினான். ஆடியை மீண்டும் ஆடையில் மறைத்துக்கொண்டு திரும்பி அவள் மரங்களுக்கிடையே மறைந்தாள்.

fire-iconஆயர்பாடியில் அந்தியில் அநிருத்தன் திரும்பி வராதது அனைவருக்கும் பதற்றத்தை ஏற்படுத்தியது. “கன்றுதேடிச் சென்றான், நாங்கள் இங்கு மீண்டோம்” என்றான் சுதமன். “அக்கன்று மீண்டுவிட்டது. அவன் வரவில்லை” என்றான் ஸ்ரீதமன். “காட்டில் புலியும் கந்தர்வர்களும் இறங்கும் பொழுது இது” என்றார் மூத்த ஆயரான கிருபாலர். சினத்துடன் பூர்வர் “இளைய யாதவனின் பெயர்மைந்தன் அவன். அவனை எதிரிகள் எளிதில் வெல்லல் இயலாது” என்றார். நந்தகோபர் “விளையாட்டுப்பிள்ளை… எங்காவது ஒளிந்திருப்பான். எதையாவது கண்டு தொடர்ந்திருப்பான். வருவான்” என்றார்.

யசோதை “என் மைந்தன்… என் மைந்தனை தேடிவாருங்கள்” என அழுதுகொண்டிருந்தாள். பந்தங்களை கொளுத்திக்கொண்டு ஆயர்குழு ஒன்று மேய்ச்சல் நிலமெங்கும் சுற்றிவந்து அவனை அழைத்தது. “யமுனையின் அக்கரைக்கு சென்றிருப்பானோ?” என்று யசோதை கேட்டாள். “அப்பிச்சியின் இல்லம் அங்கிருக்கிறது” என தனக்குத்தானே சொல்லிக்கொண்டாள். அவள் சொன்னதென்ன என அங்கிருந்த அத்தனை பெண்களும் உணர்ந்தனர்.

அன்றிரவு முழுக்க அவன் திரும்பி வருவதற்காக அவர்கள் காத்திருந்தனர். யசோதை எக்கணமும் “என் அழகியே, எங்கிருக்கிறாய்?” என்ற குரல் தன் முற்றத்தில் எழுமென்று எண்ணி செவி கூர்ந்திருந்தாள். ஒவ்வொரு சிறுஅசைவுக்கும் எழுந்து சென்று அம்முற்றத்தை இடைவழியின் தொடக்கப்புள்ளியை நோக்கி மீண்டாள். புலர்ந்தபின்னும் அவன் வராததைக் கண்டு அவள் நெஞ்சை அறைந்து அழத்தொடங்கினாள். “சென்று நோக்கி வருக… என் மைந்தனுக்கேதோ ஆயிற்று… அவன் திரும்பாவிட்டால் நான் உயிர்வாழமாட்டேன்” என்று அவள் அழத்தொடங்க நந்தன் சினந்து “அறிவிலி, அழுது என் சிறுமைந்தனை கோழையாக்காதே.  காளியனையோ கந்தர்வனையோ வென்று மீள்வான். அல்லது கொன்றபுலியை தோளில் தூக்கிவருவான்” என்றார். பின்னர் மரவுரியை தோளிலிட்டு வளைதடியை கையிலெடுத்தபடி “சரி, உனக்காக காட்டுக்குள் ஒருமுறை சென்று பார்த்துவருகிறேன்” என்று கிளம்பினார்.

இறுதியாக அவன் நடந்த பாதையில் அவன் காலடிகளைத்தேடி கண்டடைந்தார். நுணா மரத்தடி வரை சென்ற அக்காலடிச்சரடு அங்கிருந்து முற்றாக மறைந்துவிட்டிருந்தது. மரங்களுக்கு மேல் ஏறிச்சென்றிருப்பானோ என்று ஐயம்கொண்டார். ஆனால் காட்டுக்கொடிகள் படர்ப்புகள் குலையாமல் செறிந்திருந்தன. விலங்குத்தடங்கள் ஏதும் தெரியவில்லை. முதன் முறையாக அச்சம் ஒன்று அவரை பின்னின்று தொட்டது.  அறியாத தெய்வம் எதனாலோ யாதவ இளவரசன் கொண்டு செல்லப்பட்டிருப்பானோ என்று எண்ணினார். மேலும் தேடும்படி தன் அணுக்கர்களுக்கு ஆணையிட்டபின் இல்லத்திற்கு திரும்பி வந்தார்.

“என்னாயிற்று? வந்துவிட்டானா? நினைத்தேன்… எங்கே அவன்? மூடன் இன்றே அவனை…” என்று கால்கள் பின்ன கலைந்த தலையுடன் வந்த யசோதையிடம் “விலகிச் செல், முதுமகளே! இது அரசப் பணி” என்று சீறிவிட்டு ஓலையை எடுத்து இளையவன் விந்தையான முறையில் மறைந்த செய்தியை எழுதி துவாரகைக்கு பறவையில் கட்டி அனுப்பினார். அது பறந்து செல்வதை நோக்கி நின்றபோது பின்னால் வந்த யசோதை “என்ன ஆயிற்று? சொல்லுங்கள்…” என்றாள். அக்கணம் ஓர் நம்பிக்கை அவருக்கு வந்தது, எந்த அடிப்படையுமில்லாத நம்பிக்கைகளுக்குரிய உறுதியுடன். “அவன் தன் வெற்றி ஒன்றை தேடிச் சென்றிருக்கிறான். சிறுவனாகச் சென்றவன் ஆண்மகனாக மீள்வான்” என்றார்.

முந்தைய கட்டுரைவாசகர் கடிதம், சுஜாதா, இலக்கியவிமர்சனம்
அடுத்த கட்டுரைநதியின் ஆழம் -கடிதங்கள்