இரண்டுநாட்கள் சென்னையை அடுத்த நட்சத்திரத் தங்கும்விடுதி ஒன்றில் இருந்தேன், சினிமாதான். மிக உயர்தர விடுதி. ஆடம்பரம், சொகுசு, அழகு மூன்றையும் ஒன்றாக ஆக்குவதில் ஒருவகை நிபுணத்துவத்தை, ஐரோப்பாவிலிருந்து கடன்வாங்கி, அடைந்துவிட்டிருக்கிறோம். தனிப்பட்ட கடற்கரை வைத்திருக்கிறார்கள். கொரியப்புல் வேய்ந்த மிகப்பெரிய முற்றங்கள். பலவகை நீச்சல்குளங்கள். உள்ளேயே படகுவிளையாட்டுக்கு ஒரு குட்டி ஏரி. கடலைநோக்கித்திறக்கும் கண்ணாடிச்சுவர் கொண்ட அறைக்குள் ஒவ்வொன்றும் ’நீ ராஜாவல்லவா?’ என நம்மிடம் சொல்லும் பொருட்கள். பணிவே உருவான மணிப்பூர் பையன்கள்.
இத்தகைய விடுதிகளில் நான் தங்கத்தொடங்கியது 2005ல். இப்போது பன்னிரண்டு ஆண்டுகள் கடந்துவிட்டிருக்கின்றன. இந்தப்பதினைந்தாண்டுகளில் கண்கூடாகவே சில மாறுதல்களைப் பார்க்கிறேன். நட்சத்திரவிடுதிகளில் முன்பெல்லாம் நம் சூழலின் உயர்குடிகளும், வெள்ளையர்களும் மட்டுமே இருப்பார்கள். அவர்கள் பரம்பரை உயர்குடிகள் என்பதற்கான சில அடையாளங்கள் உண்டு. முக்கியமானது தோலின்நிறம்.
பரம்பரை உயர்குடிகள் என்றாலே, அவர்கள் எந்தச்சாதியாக இருந்தாலும், காலப்போக்கில் வெள்ளைநிறம் கொண்டுவிடுகிறார்கள். தற்செயல் அல்ல, குடும்பத்தில் பெண் எடுக்கும்போது செல்வம், குடிப்பெருமை அனைத்தையும்விட மேலாக நிறத்தை முதன்மை நிபந்தனையாக வைப்பது தென்னகத்துப் பழக்கம். ஓரிரு தலைமுறைகளுக்குள் குடும்பமே வெண்ணிறமாகிவிடும். நடுவே ஓரிரு கருநிறங்கள் திகைத்தவைபோலவோ திமிறுபவைபோலவோ காணப்படும்.
பொதுவாகவே தென்னக நட்சத்திர விடுதிகளில் வடஇந்தியர் அதிகமிருப்பார்கள். வடக்கிலிருந்து வருபவர்களே அதிகம். இங்குள்ள அவர்களின் உறவினர்கள் அவர்களை உபசரிக்கும் முறை இது. இங்குள்ள ஆலயங்கள், ஊட்டிதவிர பிற சுற்றுலாத்தலங்கள் அவர்களுக்குப் பிடிப்பதில்லை. அத்துடன் இங்கு வணிகம் செய்பவர்களில் வடஇந்தியர்கள் மிகுதி. இங்கே அவர்கள் செலவழிப்பதற்கான ஒரே வழி இதுதான்.
இதைத்தவிர வெளிநாட்டினர். அவர்களின் பணத்துக்கு இங்குள்ள ரூபாய் மதிப்பில் இவ்விடுதிகள் அதிகச் செலவானவை அல்ல. ஆகவே அங்குள்ள நடுத்தரவர்க்கத்தவர்களே இங்கே பயணிகளில் பெரும்பாலானவர்கள். செல்வந்தர் செல்லும் சுற்றுதாமையங்கள் வேறு. எதிலும் பெரிய அக்கறை இல்லாமல் ஒருவருக்கொருவர் பேசிக்கொண்டு கும்பலாக வரும் பழுத்த முதியவர்கள், கழுத்தில் செவ்வந்தி மாலை அணிந்து முப்பது ரூபாய்க்கு மிகாத திருப்பூர் காட்டன் உடைகளுடன் கறுப்புக்கண்ணாடி வழியாக நோக்கி எல்லாவற்றையும் ‘நைஸ்’ என்று சொல்பவர்கள், முத்தமிட்டுக்கொண்டே இருக்கும் கஞ்சா ஜோடிகள் என பலவகை.
தோளில் காமிராவுடன் குறுந்தாடியுடன் செல்லும் ஆறடி மனிதர் அங்கே குழாய் ரிப்பேர் செய்பவராக இருப்பார். உள்ளூர் தொழிலதிபர் அவர் தன்னிடம் ஓரிரு சொற்களைப் பேசி புன்னகைப்பதை அன்றையகாலையின் தெய்வ அங்கீகாரமாக எடுத்துக்கொள்வார். வழிகாட்டிக்கு அவர் வெறும் குழாய் என தெரியுமென்பதனால் மகாபலிபுரத்தை நுட்பமாக எல்லாம் விவரிப்பதில்லை. அக்காலத்தில் யானைகளை புணரவைத்து மன்னர்கள் ரசிப்பார்கள், அதுதான் இது என கோயிலின் அடித்தளத்திலிருந்த யானைத்தொடரை ஒருவர் சுட்டிக்காட்டி விளக்குவதைக் கேட்டேன். துரைக்கு அவர் தேடிவந்த விபரீதமான கீழைப்பண்பாட்டை தரிசித்த நிறைவு. கொடுத்தகாசு முதல்.
ஆனால் நம்மவர் எவரேனும் அவரிடம் உணவுமேஜையில் பேசப்புகுந்தால் அத்வைதம், திராவிடக்கோபுரமரபு, தெருக்கூத்து என ஆரம்பித்து அவரை நூறுமுறை நைஸ் சொல்லும் வதைக்கு ஆளாக்கிவிடுவார்கள்.நமக்கு வெளிறியவர்கள் அனைவருமே அறிஞர்கள். இங்குள்ள எல்லாமே அவர்களுக்காக மல்லிகைப்பூ சூடி முச்சந்தியில் நின்றிருப்பவை.
இன்னொரு சாரார் உயர்தர நிர்வாகிகள். அவர்களை நிறுவனமே காசுகொடுத்து இங்கே தங்கச் செய்திருக்கிறது. அவர்களுக்கு இது அந்தஸ்து மட்டுமே, அனுபவிக்க நேரமோ மனநிலையோ இல்லை. கவலையுடன் கடுகடுவென செல்பேசியில் குழறுவார்கள். ஒவ்வொரு முறையும் “ஃபூல்ஸ்’ என்ற கறுவலுடன் செல்பேசியை அணைப்பார்கள். ஒருவருக்கொருவர் தொழில்நுட்பப் பேச்சு. ’இதெல்லாம் எனக்குச் சாதாரணம், சலித்துவிட்டேன்’ என்னும் பாவனையை மேற்கொண்டேயாகவேண்டும் என்பதனால் அரைஸ்பூன் பாசந்தியை சாப்பிட்டுவிட்டு தாள்குட்டையால் வாயை ஒற்றிவிட்டு விலகிவிடவேண்டிய கட்டாயம்.
இன்று எல்லாமே மாறிவிட்டது. ஒருநாள் வாடகை பதினெட்டாயிரம் இருக்கும் இந்த விடுதியில் சனி மாலை அனேகமாக எல்லா அறைகளும் நிறைந்திருந்தன. பெரும்பாலானவர்கள் மேலே சொன்ன வர்க்கம் அல்ல. சென்ற இருபதாண்டுகளுக்குள் பணம் கைவரப்பெற்ற நடுத்தரவர்க்கத்தினர். சேலைகட்டி கொண்டைபோட்டு கைப்பையை இடுக்கியபடி பெரியம்மாக்கள். கொழுத்துருண்ட சோடாப்புட்டிப் பையன்கள், கீச்சுக்குரலில் பேசியபடிச் செல்லும் பெண்குழந்தைகள், பொருந்தாத நவீன உடைகளை அணிந்த குடும்பத்தலைவிகள். “ஏங்க, இந்த போட்டிலே போலாமா?” . “ஆர் யூ அவுட் ஆஃப் மைண்ட்? இட் இஸ் ஃபர் சில்ட்ரன்…” ”டேட் ஐ லவ் தட் ஒன்” “போனவாட்டி சண்முகம் சித்தப்பா கல்யாணப்பார்ட்டியிலே இங்கதான் ஸ்டே. அன்னிக்கு செம மப்பு மாப்ள”
தோல், பேச்சு, தோற்றம் எல்லாமே நடுத்தரவர்க்கம் என அறிவிக்கும் பெருந்திரள். செல்பேசிகளால் எல்லா இடங்களிலும் நின்று புகைப்படம் எடுத்துக்கொள்கிறார்கள். படுத்தும் தழுவிக்கொண்டு அமர்ந்தும் சிந்தனையில் மூழ்கியும் ‘போஸ்’ கொடுக்கிறார்கள். உயர்குடிகளாக தோற்றமளிக்க எவ்வளவு மெனக்கெட்டிருக்கிறார்கள். பத்தாயிரம் ரூபாய்க்குக் குறையாத விலைகொண்ட செருப்புகள், லட்சரூபாய் செல்பேசிகள். பிறரைப்பார்த்துப் பார்த்து உருவாக்கிக்கொண்ட தோற்றம். மழித்த தலை, வட்டத்தாடி, முகவாய்க் குறுந்தாடி என என்னென்னவோ முயற்சிகள்
ஆனால் எப்படியும் எல்லாமே தெரிந்துவிடும். இந்தியச்சூழலில் ஒவ்வொருவரும் பிறிதொருவரின் பொருளியல்நிலையை அளவிட்டுக்கொண்டே இருக்கையில், பிறரை அதைவைத்தே மதிப்பிடுகையில், அதை ஒளிக்கவே முடியாது. ஆகவே எங்கும் அந்த வேறுபாடு வெளியாகிக்கொண்டே இருக்கிறது. ஆகவே மேலும் மேலும் அந்நடிப்பைத் தொடங்கிறார்கள்.
நான் தங்கியிருந்தது ஒரு தனி ‘குடிலில்’. நான்கு அறைகளும் இருகழிப்பறைகளும் சூழ தோட்டமும் கொண்டது. அப்பால் இரட்டைக்குடில் ஒன்றில் ஒரு குடும்பம். இருகுழந்தைகள், கணவன் மனைவி, ஒரு நடுவயதானவர் ,ஒர் அம்மாள். அவர்களுக்கு அந்த வார இறுதியின் செலவு லட்சம் வரை ஆகியிருக்கும். அவர்களுக்கு அது சிறியதொகையும் அல்ல. ஆனால் அதற்கு மதிப்பிருக்கிறது என நினைக்கிறார்கள். அதனூடாக தாங்கள் வாழ்க்கையை அனுபவிப்பதாக, மேலேறிவிட்டதாகக் கனவுகாண்கிறார்கள். ஏதாவது சிறுதொழில் செய்பவராக இருக்கலாம். வெளிநாட்டில் வேலைசெய்பவராக இருக்கலாம். அவரது தந்தை அந்த நடுவயதானவர். பெரிய ஈடுபாடில்லாமல் அரைக்கால்சட்டை அணிந்து ‘climb’ என எழுதப்பட்ட சட்டை அணிந்து பெஞ்சில் அமர்ந்திருந்தார்
கூட்டமான ‘தொழில்முறைப்’ பார்ட்டிகள் வேறுவகை. சில கார்ப்பரேட் நிறுவனங்கள், கணிப்பொறி நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை அவ்வப்போது இங்கே அழைத்துவந்து மகிழ்விக்கின்றன. அவர்களே வருவதுமுண்டு. அவர்கள் இங்கே இயல்பானவர்கள் அல்ல. அவர்களை இங்கே தங்கும் ஒவ்வொரு ‘முதலையும்’ அனுதாபச்சிரிப்புடன் மட்டுமே நோக்குகின்றன. அதை இவர்களும் உள்ளூர அறிவார்கள். ஆகவே இங்கே இவர்கள் மெய்மறப்பதில்லை. கொண்டாடுவதில்லை. அப்படி நடிக்கிறார்கள். நடிப்பது எதுவும் மிகையே
இவர்கள் பெரும்பாலும் நடுத்தரக்குடும்பங்களில் இருந்து படித்து வேலைக்கு வந்தவர்கள். தங்கள் பின்னணியிலிருந்து விடுபட்டு சிறகடித்து எழுந்துவிட்டதான பிரமைக்கு ஆளாகிறார்கள். பத்தாண்டுகளுக்கு முன் உயர்தர சூட்டுகளுடன் வருபவர்களை பார்த்திருக்கிறேன். இன்று விடுமுறை உடைகளே இதற்குரியவை என அனைவருக்கும் தெரியும். கூச்சலிடுகிறார்கள், ஒருவரை ஒருவர் கலாய்க்கிறார்கள், அங்குள்ள எல்லா ஆடம்பரமும் முன்னரே பழகியவைபோல பாவனைசெய்கிறார்கள். ஆனால், மீண்டும், ஒவ்வொரு மணிப்பூரகனுக்கும் இவர்கள் யார் என்றும் என்னவென்றும் தெரியும். இச்சூழல் உருவாக்கும் பிரமையை உண்மை என நம்பி உயர்குடி வாழ்க்கையை வாழ ஆரம்பித்தார்கள் என்றால் மாளாக்கடன். அதை அடைக்க ஓயா வேலை. நாற்பதுவயதில் முதுமை. பயனற்ற ஒரு பிறவி கடந்துசென்றிருக்கும்.
சரி, நான் இங்கே யார்? முதல் ஓராண்டுக்குள் எனக்கு ஆடம்பரங்கள் சலித்துவிட்டன. அந்தச் சலிப்பு இயல்பாக முகத்தில் தெரிந்தால் இங்கே நீங்கள் மதிக்கப்படுவீர்கள். அத்துடன் தமிழகத்தில் எங்கும் சினிமாக்காரன் மண்நிகழ் தெய்வம். ஆனால் இங்குள்ள அழகும் ஒழுங்கும் எனக்கு அசாதாரணமான உளஒத்திசைவை அளிக்கின்றன. இந்த ஆடம்பரம் குற்றவுணர்வை அளித்த காலம் இருந்தது. அழகினால் அதை தவிர்க்கமுடியாமலும் தவித்தேன். இப்போது சமரசம் செய்துகொண்டேன். அழகிய நேர்த்தியான அறை, வெந்நீர் குளியல்தொட்டி என இரு சபலங்களிலிருந்து என்னால் விடுபட முடியவில்லை. ஆகவே நான் என்னை காந்தியவாதி என சொல்லிக்கொள்வதே இல்லை.
இச்சூழலுக்காக நான் எதுவுமே செய்வதில்லை. என்னிடமுள்ள எல்லா பொருட்களும் மலிவானவை. பொதுவாக நான் பொருட்களுக்காகச் செலவழிப்பதே இல்லை.நெடுங்காலம் நோக்கியா செல்பேசி. இப்போதுதான் அரங்கசாமி முன்முயற்சியில் ஒரு எம்.ஐ ரெட்மி நோட் வாங்கியிருக்கிறேன். அதெல்லாம் இங்கே பொருட்டே அல்ல, நான் இங்கே ஒருமாதம்வரைகூட தங்கியிருக்கிறேன். கிளம்புகையில் என் தயாரிப்பாளர் ஆறுலட்சம் ரூபாய் வாடகை கட்டியிருக்கிறார். அதுதான் அடையாளம். அரங்கிலேறி அரசனாக நடிப்பது இது. இங்கிருந்து கிளம்பி மறுநாளே பார்வதிபுரம் நாடார்கடையில் பழம்பொரி சாப்பிட்டபடி நிற்பேன். அங்கே எதுவும் மாறவில்லை, முப்பதாண்டுகளாக. அதுதான் நான்.
இந்த விடுதிகளின் இரட்டைமுகமும் வேடிக்கையானது. தொட்ட இடமெல்லாம் பொன்மிளிரும் கண்கூசும் கூடங்கள். அருகிலேயே கூரைவேய்ந்த ’எளிய’ குடில்கள் – குளிரூட்டிகளுடன். அமெரிக்கா பாணியில் சீனப்பொருட்களைக்கொண்டு அமைக்கப்பட்ட ஐரோப்பிய மதுவறைகள். கடலோரத்தின் மூங்கில்கொட்டகைகள். முந்தையது நம்மவருக்கு பிந்தையது வெள்ளையருக்கு. இன்று நம்மவரும் கற்றுக்கொண்டனர், வெள்ளையர் செல்லும் இடங்களுக்குச் செல்வதே நவநாகரீகம் என. அவர்களும் மண்சட்டிகளில் சாப்பிட்டு கொட்டாங்கச்சிகளில் பீர் குடிக்கிறார்கள்.இவர்கள் நடுவே உடம்பெங்கும் தூண்டிலாக, யோகியைப்போல எண்ணம் வேறேதுமில்லாமல், அமர்ந்திருக்கும் திருப்பூர் கோவை இளந்தொழிலதிபர்கள்.
பெண்குழந்தைகள்தான் திளைக்கின்றன. பையன்களுக்கும் ஆடம்பரம் பிடித்திருக்கிறது. ஆனால் ஒரு சின்ன விலக்கமும் உள்ளது. பெண்கள் துள்ளிக்கூச்சலிட்டு விளையாடுகிறார்கள். பொதுவாக இரட்டைத்துண்டு குளியலாடையில் இளம்பெண்கள் அலைவது இந்தியாவில் வழக்கமில்லை. இத்தகைய விடுதிகளில்கூட வெள்ளைக்காரிகளையே அப்படி பத்தாண்டுகளுக்கு முன் பார்த்திருக்கிறேன். இந்த தடவை எங்கு பார்த்தாலும் தொடைகளும் முலைகளும் தோள்களும் தொப்புள்களும்தான். நாணம் இல்லாத கண்கள் வெள்ளைக்காரிகளுக்குத்தான் சாத்தியமென நினைத்திருந்தேன், இன்றுகூட சிங்கப்பூரிலேயேகூட சீனப்பெண்கள் அதை அடையவில்லை. இங்கே பூத்துவிட்டன அவை.
அந்தியில் கடலோர மதுவரங்கில் புதுஇந்தியர் குடும்பத்துடன் அமர்ந்து குடிப்பதைக் கண்டேன். தந்தையும் தாயும் பிராந்தியோ விஸ்கியோ எடுத்துக்கொள்ள பதினாறுவயது மகனும் மகளும் பீரும் ஒயினும் எடுத்துக்கொண்டார்கள். திடுதிப்பென இசை. அத்தனைபேரும் எழுந்து ’கண்டமானிக்கு’ ஆடினர். கூச்சலிட்டனர். வெள்ளையர்கள் புன்னகையுடன் நோக்கியபடி மெல்ல பேசியபடி மேஜைகளில் அமர்ந்திருந்தனர். அவர்கள் தேடிவந்தது பாம்புப்பிடாரன்களின் நாட்டை. அல்லது யோகாவின் நாட்டை. ஜாக்கெட் அணியாத பழங்குடிப் பெண்களை, அல்லது அந்தப்புரங்களின் முகத்திரைகளை. இனிமேல் இவர்கள் எங்கே செல்வார்கள்?