அன்புள்ள ஜெயமோகன்,
மூன்று ஆண்டுகள் கழித்து கடிதம் எழுதுகிறேன். தொடர்ந்து தங்களை வாசித்து கொண்டும் தங்களின் உரைகளை கேட்டு கொண்டும்தான் வாழ்க்கையை வாழ்கிறேன். நான் எனது முதல் கடிதத்தில் எழுதியிருந்தேன். நான் வேதாத்திரி மஹரிஷியின் மனவளக்கலை பயிலுபவன் என்று. அடிப்படையில் அத்வைதமே இதன் தரிசனம் . அத்வைதம் குறித்து தெய்வத்தின் குரல் வாசிக்க தொடங்கியிருக்கிறேன். கிட்டத்தட்ட 500 பக்கங்கள் அதுகுறித்து பெரியவர் விளக்கியிருக்கிறார். சரி இப்போது பல பேர் பெரியவர் குறித்து உரைகளை ஆற்றுகிறார்களே என்று யூடூபில் தேடினேன். பல மணி நேர சொற்பொழிவுகள் .எல்லாம் அவரின் அற்புதங்களை பற்றி மட்டுமே. யாராவது அவரின் தத்துவார்த்தமான சிந்தனைகளை குறித்து சொல்வார்கள் என்றால் ஏமாற்றம்தான் மிச்சம். பெரிய படிப்பு படித்தவர்கள் உட்பட. நமக்கு கிறிஸ்தவத்தின் அற்புத கூட்டங்கள் தான் சரியோ என்று தோன்றுகிறது.
அன்புடன்
கிஷோர்
அன்புள்ள கிஷோர்,
ஆம், நானும் அவ்வப்போது அதைக் கவனிக்கிறேன். ஒரேசமயம் வெவ்வேறு வார இதழ்களிலும் நாளிதழ்களிலும் எழுதித்தள்ளுகிறார்கள். நான் சென்றமாதம் காஞ்சிமடத்தைச் சேர்ந்த ஒருவரிடம் பேசியபோது ‘இவர்களெல்லாம் யாரென்றே தெரியாது. ஆனால் அற்புதங்களாக எழுதிக்குவிக்கிறார்கள்’ என்றார்.
மாயமந்திரங்களும் அருட்செயல்களும் நாளுக்குநாள் பெருகிக்கொண்டிருக்கின்றன. ஆழ்வார்களும் நாயன்மார்களும் செய்தவற்றை எல்லாம் செய்துமுடித்து ஏசுவும் நபியும் செய்தவற்றையும் அவர் செய்ய ஆரம்பித்துவிட்டார்.ஆனால் இது புரிந்துகொள்ளக்கூடியதுதான்.
இந்தியாவின் சங்கரமடங்களுக்கு நெடிய வரலாறுண்டு. ஏறத்தாழ ஆயிரத்தி இருநூறாண்டுகள் என்பது எத்தனை வரலாற்று அலைகள், எத்தனை கருத்தியல்போர்கள், எத்த்தனை பண்பாட்டு மாற்றங்கள் கொண்டது என எண்ணி நோக்கினால் எதையும் நாம் அந்தப்பின்புலத்தில் வைத்தே புரிந்துகொள்ளமுடியும்.
சங்கரர் மடங்களை உருவாக்கினாரா என்பது விவாதத்திற்குரியது. அவர் குருமரபை உருவாக்கினார். ஏகதண்டி சம்பிரதாயம் அவர் உருவாக்கியது எனப்படுகிறது. அது ஆறுமதங்களையும் ஒன்றெனக் கொள்வதும் அத்வைத நோக்கை அவற்றின் சாராம்சமாக முன்வைப்பதுமாகும். ஏகதண்டி மரபின் துறவிகள் நாடெங்கும் அக்கொள்கையை கொண்டுசென்றிருக்கலாம். அவர்களால் உருவாக்கப்பட்டவையே சங்கர மடங்கள்.
உருவான காலகட்டத்தில் அவை தூய அத்வைத முழுமைநோக்கை முன்வைப்பவையாகவே இருந்திருக்கவேண்டும். கர்மகாண்டத்தை ஒதுக்கி ஞானகாண்டத்தை முன்வைப்பவையாக இருந்திருக்கவேண்டும். நம்பிக்கையை விட தர்க்கத்தைச் சார்ந்தவையாக அன்றைய அத்வைதிகள் செயல்பட்டனர் என்பதற்கான தடையங்கள் பல உள்ளன. ராமானுஜாச்சாரியாரின் கதையில்கூட அத்வைதிகள் தூயதர்க்கவாதிகளாகவே வருகிறார்கள்.
ஆனால் பன்னிரண்டாம்நூற்றாண்டு முதல் துருக்கியப் படையெடுப்பாளர்களின் தாக்குதலால் இந்துமதத்தின் அமைப்புகள் சிதறுண்டு, இந்து நம்பிக்கைகள் ஒடுக்கப்பட்டபோது சங்கரமடங்கள் அவற்றைப் பாதுகாக்கும் பொறுப்பை ஏற்றுக்கொண்டன. ஆகவே அவை ஆலயவழிபாடு, புரோகிதமரபு ஆகியவற்றை ஒழுங்குபடுத்தவும் வழிநடத்தவும் முற்பட்டன. 1380 முதல்1386 வரை சிருங்கேரி சங்கரமடத்தின் தலைவராக இருந்த வித்யாரண்யரே தென்னகத்தில் ஆறுமதங்களின் பூசகமரபுகளையும் ஒன்றென இணைத்து இன்றிருக்கும் ஸ்மார்த்தர் என்னும் அமைப்பை உருவாக்கியவர்.
இவ்வாறாக முழுக்கமுழுக்க தர்க்கம்சார்ந்த அத்வைத தத்துவத்தின் நிலைகளான சங்கரமடங்கள் மறுமுனையில் வேள்விச்சடங்குகளையும் ஆலயவழிபாட்டையும் ஏற்றுக்கொண்டவையாக மாறின. இதை முரண்பாடு என்றல்ல, வரலாற்றின் விளைவான முரணியக்கம் என்றே நினைக்கிறேன். அத்வைத நோக்கில் நிலைகொள்பவர்கள் தூய அத்வைத நோக்கை விசேஷ தளத்திலும் பக்தி, வேள்வி முதலியவற்றை சாமானியதளத்திலும் பிரித்துக் கொண்டார்கள். அதுவும் அத்வைத தர்க்கமுறைக்கு உகந்ததேயாகும்.
இன்று மதம்சார்ந்த ஈடுபாடுகொண்டவர்களில் மிகச்சிலர் தவிர பிறர் உலகியல்சார்ந்த பக்தி கொண்டவர்கள். வழிபாடுகளும் வேள்வியுமே அவர்களின் வழி. நம்பிக்கையே அவர்களுக்கு உகந்தது. அறிதலும் உணர்தலும் அல்ல. ஆகவே சங்கரமடங்களிலும் அத்வைத வேதாந்த நோக்குகள் பின்னுக்கு நகர்ந்து பக்தியும் நம்பிக்கையும் மேலெழுந்துள்ளன. நம்பிக்கையின் வழி என்பது இதுதான். தொன்மங்களை உருவாக்குவது. அதைச்சார்ந்த மிகையுணர்ச்சிகளை நிலைநாட்டுவது. சடங்குகள், குறியீடுகள் சார்ந்த ஆழமான நம்பிக்கைகளைச் சொல்லிச்சொல்லி வளர்த்தெடுப்பது.
அதையே இன்று சங்கர மடங்களை தங்கள் தலைமையிடமாக உருவகித்துக்கொண்டவர்கள் செய்கிறார்கள். ஏனென்றால் அவர்கள் மதநம்பிக்கையால் பக்தர்கள். தொழிலால் புரோகிதர்கள். அதுவே அவர்களின் வழி.
சங்கர மடங்களின் முகம் இருபாற்பட்டது. இப்போது ஒன்றுமட்டுமே எஞ்சியிருக்கிறது, ஏனென்றால் மக்கள் அதனிடம் கோருவது அதை மட்டுமே.
ஜெ