காட்டைப்படைக்கும் இசை

நத்தையின் பாதை 5

 kaa

சென்ற செப்டெம்பர் மூன்றாம்தேதி மதுரையில் ஓர் இலக்கியக்கூட்டம். அதற்கு இருநாட்களுக்கு முன் செப்டெம்பர் ஒன்றாம் தேதி நீட் தேர்வினால் மருத்துவ இடம்கிடைக்காத அனிதா என்னும் சிறுமி தற்கொலை செய்துகொண்டிருந்தார். மாணவர்கள் நடுவே ஒரு கொந்தளிப்பான மனநிலை. அரசியல்கட்சிகளும் சமூக ஊடகங்களும் அதைப்பற்றி உக்கிரமாகப் பேசிக்கொண்டிருந்தன. நான் கூட்டத்தில் பேசி இறங்கியதும் ஓர் இளைஞர் என்னிடம் “இவ்ளவு கொந்தளிப்பா இருக்கிறது நாடு. இதில் இந்தமாதிரி இலக்கியவிழாவெல்லாம் தேவையா?” என்றார்.

நான் “சமூகம் எப்போதுமே ஏதேனும் விஷயத்திற்காகக் கொந்தளிந்த்தபடித்தான் இருக்கிறது. சிலநாட்களுக்கு முன்னர் கொரக்பூரின் குழந்தைச்சாவுகளுக்காக கொந்தளித்தனர். கொந்தளிப்பில்லாத போதுதான் இலக்கியம் எழுதப்படவேண்டும் என்றால் எதையுமே எழுதமுடியாது…” என்றேன். “இலக்கியவாதிகள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகையானவர்கள். அவர்களின் தேடல்களும் அவர்களின் உள்ளம் செயல்படும் தளங்களும் தனித்தன்மை கொண்டவை. ஒரேதிரளாக அவர்களால் சிந்திக்கமுடியாது, சிந்திக்கவும் கூடாது”

அவர் பிடிவாதமாக “ஊரே உணர்ச்சிவசப்பட்டிருக்கும்போது வேறு எதையாவது எழுதுவது முறையா?” என்றார். “எது தன்னால் எழுதப்படவேண்டியது என அந்த எழுத்தாளர்தானே தீர்மானிக்கவேண்டும்? அவனுக்குள் மேலும் பெரிய கொந்தளிப்பு ஒன்று நிகழலாம் அல்லவா?” என்றேன்

அவர் மேலும் கோபத்துடன் ”உங்கள் வீட்டில் சாவு விழுந்தால் இப்படி மேடையில் வந்து பேசுவீர்களா?” என்றார். “இன்று காலை என் உயிர்நண்பர் அலெக்ஸ் மறைந்தார். அது என் வீட்டில் சாவு விழுந்ததுபோலத்தான். அடக்கநிகழ்வுக்காகத்தான் கிளம்பிக்கொண்டிருக்கிறேன்” என்றேன். ”என் மனம் அங்கேதான் இருந்துகொண்டிருக்கிறது. ஆனால் எனக்கு இதுவும் முக்கியம்தான்”

அவர் என்னுடன் கார்வரை வந்து “சமகாலப்பிரச்சினைகளைப் பேசாத இலக்கியத்தால் என்ன பயன்?” என்றார். “இந்தக்கேள்விக்கு உண்மையான அர்த்தம் இலக்கியத்தால் என்ன பயன் என்றுதான். இலக்கியம் ஏன் எழுதப்படவேண்டும்? வேறுஎதையாவது செய்யலாமே என்றுதான் நீங்கள் சொல்கிறீர்கள்” என்றபடி காரில் ஏறினேன்.

சமகாலத்தன்மை என்பது இலக்கியத்தை மறைக்கும் அழகான மாயத்திரை. கடலை எது மறைக்க முடியும்? அலைகள்தான்.   அறப்பொறுப்பு, சமூகவுணர்வு , கருத்தியல்பிடிப்பு என பல கொக்கிகளால் இலக்கியவாதி சமகாலச் சிக்கல்களை நோக்கி இழுக்கப்படுகிறான். சமகாலத்து விஷயங்களில் ஈடுபடாத எழுத்தாளனை அவனுடைய வாசகன் அல்லாத, ஆனால் அவனைத் தெரிந்துவைத்திருக்கும் ஒரு பெரிய கூட்டம் கண்டித்தும் வசைபாடியும் இழிவுசெய்தும் சீண்டிக்கொண்டிருக்கிறது.

சாமானியர்களுக்கு சமகாலத்தில் அனைவரும் பேசிக்கொண்டிருக்கும் விஷயங்களன்றி வேறேதும் தெரியாது. அதிலும்கூட மேலோட்டமான உணர்ச்சிநிலைகள்தான் தெரியும். சற்று ஆழமாக எவரேனும் அதையே பேசினால்கூட ஆர்வம் காட்டமாட்டார்கள்.  தங்களுக்கு தெரிந்தவற்றை   இலக்கியவாதியும் தங்களுடன் சேர்ந்து, தங்கள் உணர்வுகளுடன் இணைந்து பேசவேண்டும் என அவர்கள் எதிர்பார்க்கிறார்கள். அதாவது இலக்கியவாதியை அரட்டைக்கு அழைக்கிறார்கள். அரட்டையடிப்பவர்களைக் கொண்டாடுகிறார்கள். மற்றவர்களை வசைபாடுகிறார்கள்.  சமூக ஊடகங்கள் வழியாக நேரடியாக வாசகனிடம் எழுத்தாளன் உரையாடத்தொடங்கியிருக்கும் இன்றைய சூழலில் இந்த அபாயம் பலமடங்கு ஆகியிருக்கிறது.

எழுத்தாளனே கூட தான் ஒதுங்கியிருப்பது பற்றிச் சிலசமயம் குற்றவுணர்ச்சி கொள்கிறான்.  கண்முன் நிகழ்வனவற்றால் உணர்வுச்சீண்டல் அடைகிறான். உச்சகட்ட விசையுடன் முன்வைக்கப்படும் ஒற்றைப்படையான பார்வைகளை ஏற்று கொப்பளிக்கிறான்.தன்னை அறியாமல் எதையோ சென்று தொட்டுவிடுகிறான். அக்கணமே ஆயிரம் கொக்கிகள் வந்து அவன்மேல் மாட்டுகின்றன. ஒரு கொக்கியை எடுக்கமுயல்கையில் அதுவே மேலும் நூறு கொக்கிகளை மாட்டிவிடுகிறது. மீளவே முடிவதில்லை.

சமகாலத்தன்மை என்பதில் சிக்கிக்கொள்ளும் படைப்பாளிகள் இலக்கியம் எதன்பொருட்டு செயல்படுகிறதோ அதைத் தவறவிடுகிறார்கள். இலக்கியவாதி அரசியலை, சமூகசீர்திருத்ததை எழுதலாம். ஆனால் இலக்கியம் என்பது எதிலும் எப்போதுமுள்ள வினாக்களை எழுப்பிக்கொள்வதே. அனைத்தையும் முழுமையாகத் தொகுத்துப்பார்ப்பதே. சாராம்சம் நோக்கிச் செல்வதே.

இலக்கியம் சமகாலத்திலிருந்து தொடங்கலாம், சமகாலத்திலேயே நின்றுவிடமுடியாது. சமகாலத்தை முற்றிலும் தவிர்த்த பேரிலக்கியவாதிகள் உண்டு. சமகாலத்திலேயே நின்றுவிட்ட எவரும் இலக்கியம் படைத்ததில்லை.

இலக்கியவாதியும் கலைஞனும் சமகாலச்சிக்கல்கள், உணர்வுகள் ஆகியவற்றிலிருந்து முழுமையாகவே விலகிவிட்டிருக்கவேண்டும் என மிக ஆழமாக வலியுறுத்துகிறார் ஷோப்பனோவர். என்றுமுள்ள மையவினாக்களிலேயே அவன் ஈடுபட்டிருக்கவேண்டும் என்கிறார். எது நிரந்தரமானது என்று அவன் அறியாவிட்டால் எது உடனடியானதோ அதையும் புரிந்துகொள்ளமுடியாது என்று டி.எஸ்.எலியட் சொல்கிறார்.

ஒவ்வொரு கணமும் நிகழ்வாழ்க்கை முட்டிமோதிக்கொண்டிருக்கிறது. தனக்குள்ளேயே அலைமோதுகிறது. தன் எல்லைகளின் மீது அறைகிறது. நம் வினாக்கள் ஒவ்வொன்றும் இந்த கொந்தளிப்பிலிருந்து எழுவனவே. அரசியலின் ,சமூகவியலின் விடைகள் அந்த நிகழ்களத்திலேயே நின்றுவிடுபவை. ஆனால் தத்துவம் இலக்கியம் ஆகியவற்றின் விடைகள் என்றுமுள்ள விடை ஒன்றையே  தேடுகின்றன.  முழுமையான சித்திரமொன்றை முன்வைக்க முயல்கின்றன.

ஆனால் என்றுமுள்ள ஒன்று உண்டா? இவையனைத்திற்கும் முழுமையும் மாறாத உட்பொருளும் இருக்கமுடியுமா? பொதுப்புத்தியில் இருந்து எழும் உடனடிவினா இதுவே. அவ்வினாவை எதிர்கொள்ளாத இலக்கியவாதியும் தத்துவவாதியும் இருக்கமுடியாது. சொல்லப்போனால் அவன் அங்கிருந்தே தொடங்குகிறான். மையமும் முழுமையும் உண்டா என்று ஆராய்கிறான். இல்லையோ என ஐயுறுகிறான். இல்லையென்றால் உருவாக்கவேண்டும் என முடிவுசெய்கிறான். உருவாக்கும்போதே தத்துவவாதியாக, இலக்கியப் படைப்பாளியாக ஆகிறான்.

இங்குநிகழும் உயிர்ப்பரிணாமம், மானுட வாழ்க்கை, வரலாறு சிதறிப்பரவிப் பெருக்கெடுத்துச் சென்றுகொண்டிருக்கிறது. ஒன்றுடன் ஒன்று முட்டிமோதி அழித்து வென்று இணைந்து பிரிந்து ஒழுகுகிறது. இதற்கு ஒரு திசை உண்டா, இவற்றுக்கு ஏதேனும் ஒழுங்கு உண்டா என்ற கேள்விக்கு எவரும் இறுதிப்பதிலைச் சொல்லிவிடமுடியாது. எந்த விடை சொல்லப்பட்டாலும் அது சொல்லப்படும் சூழலை, கணக்கில்கொள்ளப்பட்ட காலத்தை மட்டும் பொறுத்ததாகவே அமையமுடியும்.

ஆயினும் தத்துவஞானியும் இலக்கியப்படைப்பாளியும் காலந்தோறும் மையத்தையும் ஒழுங்கையும் தொடர்ச்சியையும் உருவாக்கிக் கொண்டே இருக்கிறார்கள். ஒருவேளை  ’இயற்கை’ அல்லது ‘கடவுள்’ வாழ்க்கைக்கும் வரலாற்றுக்கும் எந்த அர்த்தத்தையும் உருவாக்கவில்லை என்றால் நானே உருவாக்கிக்கொள்கிறேன் என்ற சவால் அவர்களிடம் எப்போதுமுண்டு.

அதுவே இலக்கியத்தின் முதன்மைச் சவால். அதற்காகவே இலக்கியம் என்னும் இயக்கம் உருவாகி வந்துள்ளது. அங்கு வேர்கொண்டபின் எழுந்துவந்து சமகாலத்தின் அனைத்திலும் இலக்கியம் ஆர்வம் காட்டமுடியும். அனைத்தையும் வரையறையும் மறுவரையறையும் செய்யமுடியும்.  அந்தவேர் இல்லாமல் சமகாலத்தின் ஊர்வலங்களில் அதுவும் கோஷமிட்டுச் செல்லும் என்றால் அது இலக்கியம் அல்ல. துண்டுப்பிரசுரங்களும் மேடைமுழக்கங்களும் ஒருபோதும் இலக்கியமாகாது.

பண்பாட்டையும் வரலாற்றையும் அறிந்துகொள்வது அல்ல இலக்கியம். அவற்றை உருவாக்குவதுதான். நாம் திரும்பிநோக்கினால் வரலாறு, பண்பாடு என்று எவற்றையெல்லாம் சொல்கிறோமே அவையெல்லாமே இலக்கியத்தாலும் தத்துவத்தாலும் உருவாக்கப்பட்டவை என்பதைக் காணலாம். கம்பராமாயணம் தமிழ்ப்பண்பாட்டின் வெளிப்பாடு அல்ல, அதற்குப்பிந்தைய தமிழ்ப்பண்பாடு அதனால் உருவாக்கப்பட்டது. பெரியபுராணம் சைவவரலாற்றை எழுதவில்லை, அதைக் கட்டமைக்கிறது.

நாராயணகுருவின் மாணவர் நடராஜகுரு. அவருடைய மாணவர் நித்ய சைதன்ய யதியுடன் இமையப் பயணம் மேற்கொண்ட அனுபவங்களை அன்றன்று எழுதி பின்னர் நூலாக்கினார். பனிமலைமுகடுகளில் இளவெயில் எழும் அற்புதமான காட்சியை நோக்கி நின்றபோது ஆசிரியர் மாணவரிடம் சொன்னார். “நாம் காணும் இந்தக்காட்சி காளிதாசனால் உருவாக்கப்பட்டது”

விந்தை என்று தோன்றலாம், ஆனால் அது உண்மை. பழங்குடிகள் இயற்கையின் அழகை ரசிப்பதில்லை. நாம் ரசிக்கும் இயற்கை அழகு என்பது இலக்கியத்தால் பல ஆயிரம் ஆண்டுகளாக உருவாக்கப்பட்டது. தொல்குடிப்பாடல்கள் முதல் பேரிலக்கியங்கள் வரை அனைதும் ஒட்டுமொத்தமாக அதைச் செய்துள்ளன

இலக்கியங்கள் இயற்கையில் அழகு என்பது என்ன என்பதை வரையறை செய்கின்றன. அவற்றை பிறவற்றுடன் ஒப்பிடுவதன் மூலம் இணைக்கின்றன. தனித்தனியாக ரசிக்கச்செய்கின்றன. ஒட்டுமொத்தமான பேரனுபவமாகவும் ஆக்குகின்றன. அவ்வாறு காட்சிகளுக்கு இலக்கியம் அர்த்தத்தை அளிக்கிறது. நாம் அறியும் இயற்கைக்கு ஒட்டுமொத்தமாக ஓர் அர்த்தத்தை அளித்து அதிலிருந்து ஒவ்வொரு துளிக்கும் அர்த்தம் அளிக்கிறோம். நாம் இயற்கையில் ரசிப்பது அந்த அர்த்தம் ஏற்றப்பட்ட சித்திரங்களைத்தான். இதை ஜெர்மனியத் தத்துவயியலில் கெஸ்டால்ட் [Gestalt ] என்கிறார்கள்

ஓர் இளந்தளிரை நெருப்பு என்கிறோம். நீர்த்துளி என்கிறோம். புன்னகை என்கிறோம். அப்படி  அதை விரித்து விரித்து அர்த்தப்படுத்தித்தான் நம்மால் அதை ரசிக்கமுடிகிறது. ஐயமிருந்தால் பாருங்கள், ஓர் இயற்கையை ரசிக்கும் எவரும் அடுத்த கணம் ஒர் உவமையைத்தான் சொல்வார்கள்.

இலக்கியமே அறியாதவர்கள் இயற்கையை ரசிப்பதில்லையா? இலக்கியம் நம்முள் வர நாம் நேரடியாகப் படிக்கவேண்டும் என்பதில்லை. நம் மொழியிலேயே நேற்றைய இலக்கியங்கள் கரைந்து சேர்ந்துள்ளன. மொழி நம்மிடம் வரும்போதே இலக்கியமரபின் கணிசமான பகுதி நம்முள் புகுந்துவிடுகிறது. இயற்கையிலேயே நுண்ணுணர்வு கொண்டவர்கள் மேலும் அதிகமாகப் பெற்றுக்கொள்கிறார்கள். இலக்கிய வாசகர்கள் அதைப்பெருக்கிக் கொள்கிறார்கள்

நித்ய சைதன்ய யதியிடம் அவர் தன் குருவிடம் நிகழ்த்திய அந்த உரையாடலைப்பற்றி பேசிக்கொண்டிருந்தேன். நித்யா அடுத்தவரிக்குச் சென்றார். ’நம்மைச்சூழ்ந்துள்ள இந்த மொத்தவாழ்க்கையும் வியாசன் உருவாக்கியது’   வியாசன் சொல்லி விட்ட எச்சிலே இங்குள்ள அனைத்தும் என ஒரு சொலவடை உண்டு [வியாஸோச்சிஷ்டம் ஜகத்சர்வம்] அன்றுமுதல் இன்றுவரை எழுதிய அத்தனை எழுத்தாளர்களும் இணைந்த ஒற்றைஆளுமையை வியாசன் என நான் பொருள்கொண்டேன். இந்தவாழ்க்கை இலக்கியத்தின், தத்துவத்தின் படைப்பு.

காட்டுக்குச் செல்லும்போது கவனிப்பது ஒன்று உண்டு. காடு பலவகை மரங்கள் ஒன்றுடன் ஒன்று முட்டிமோதி போட்டியிட்டு வாய்ப்பையெல்லாம் பயன்படுத்தி வளர்ந்துச் செறிந்த ஒரு மாபெரும் ஒழுங்கின்மை. ஆனால் அங்கே ஒலித்துக்கொண்டிருக்கும் சீவிடுகளின் ஒலி அந்த தாவரப்பெருக்கை காடு என்னும் ஒற்றை இருப்பாக ஆக்குகிறது. சீவிடு ஒலி என்பது பலகோடி உயிர்கள் ஒன்றென ஆகி எழுப்பும் ஓசை. பிரிந்து பிரிந்து பெருகுவது காட்டின் இயல்பு. ஒன்றோடொன்று தொடுத்துக்கொண்டு நேற்றும் இன்றும் எல்லாமாகி இணைந்து ஒலிப்பது சீவிடுகளின் பணி.  அவ்வாறு இந்த மானுட குலத்தை இணைக்கும் ஓர் இசைவொலிதான் இலக்கியம். இலக்கியத்தில் நிரந்தர அம்சம் என்பது அதுதான்.

Tradition and individual Talent – T.S.Eliot

The world as will and representation  – Arthur Schopenhauer

குருவும் சீடனும் – நித்ய சைதன்ய யதி

முந்தைய கட்டுரைபுதியவாசகரின் கடிதம்
அடுத்த கட்டுரைவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 25