ஆலய அழிப்பு – கடிதங்கள்

aavu2
நம் ஆலயங்களுக்கான ஐந்து நெறிகள்

அன்புள்ள ஜெயமோகன்,

 

 

திருப்பணி என்ற பெயரில் அறநிலையத்துறை செய்யும் அராஜகங்கள் பற்றியும், மணல்வீச்சு மூலமாக புராதனங்களை அழிக்கும் போக்கு பற்றியும் நீங்கள் தொடர்ந்தும் எழுதி வருகிறீர்கள். இது பற்றி நான் இரண்டு மூன்று கடிதங்கள் எழுதி, அனுப்பாமல் விட்டேன், எழுதி என்ன ஆகப் போகிறது என்ற ஆயாசமே காரணம். தற்போது ராஜமாணிக்கம் எழுதியுள்ளதைப் பார்த்ததும், மறுபடியும் எழுத வேண்டுமென்ற உந்துதலினால் இக்கடிதம்.

 

 

திருச்சியைச் சுற்றியுள்ள பல்வேறு புராதனக் கோவில்களில் முக்கியமானது திருப்பஞ்சீலியில் அமைந்துள்ள ஞீலிவனேஸ்வரர் திருக்கோவிலாகும். ஆயிரமாண்டுகளுக்கும் மேல் பழமையான இக்கோவிலை இன்று சென்று பார்த்தால் நேற்று கட்டியெழுப்பிய கோவில் போல் புத்தம் புதிதாகப் புதுப்பிக்கப்பட்டுள்ளது; ஆனால் கோவிலின் அம்பாள் சன்னிதியின் வெளிப்புறச் சுவற்றிலுள்ள அனைத்துக் கல்வெட்டுகளிலும் ஒரு எழுத்தைக் கூட முழுமையாகப் பார்க்கவியலாதவாறு மணல் வீச்சு செய்யப்பட்டு, முற்றிலுமாக கல்வெட்டுகள் சிதைக்கப்பட்டுள்ளன, அதன் மேல் சம்பந்தமேயில்லாமல் சிமெண்ட் பூச்சு வேறு! முசிறி அருகேயுள்ள திருஈங்கோயிமலையிலுள்ள கல்வெட்டுகளின் நிலையும் இதேதான். ஸ்ரீரங்கத்திலும் இதே நிலை, அது தவிர, அங்கு கல்வெட்டுக்களின் மீது பெயிண்ட் வேறு அடித்திருக்கின்றனர். ஸ்ரீரங்கம் ஆயிரங்கால் மண்டபத்தைப் பொதுமக்கள் பார்வைக்கு விடாமல் முற்றிலும் கிராதித் தடுப்புகள் அமைத்து, வருடந்தோறும் நவராத்திரி உதஸவ காலம் ஒன்பது நாட்கள் நீங்கலாக மற்ற நாட்கள் முழுவதும் பூட்டியே கிடக்கிறது, மேலும் கல்தூண்களில் எலெக்ட்ரிக் ட்ரில்லர் மூலமாக துளைகளிட்டு கிராதிகள் அமைத்திருக்கின்றனர். இதையெல்லாம் யார் கேட்பது?

 

 

அன்புடன்,

 

 

பாஷ்யம்.

 

 

அன்புள்ள ஜெ,

 

ஆலய பராமரிப்பை அதற்கேற்ற முக்கியதுவம் கொடுத்து பாதுகாக்க இந்தியா அளவில் முயற்சி தேவை.  பல விதங்களில் இதற்கு முயற்சி செய்து, அடங்கி இருக்கிறேன்.

 

IT கம்பெனி வாசலில் கடன் அட்டை விற்பவன்போல், இதை பலருக்கு பல வடிவங்களில் அனுப்பிவிட்டேன்.

PMO வரை எழுதியதில், இது வரை ஒன்றும் பலன் இல்லை.  இதை இதற்கு மேல் எப்படி எடுத்துச்செல்வது என்று தெரியவில்லை.

 

 

அன்புடன்,

ஶ்ரீதர்.​

முந்தைய கட்டுரைவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 4
அடுத்த கட்டுரைவாள் – கடிதம்