கேரளக் கம்யூனிசம், இடதுசாரி இலக்கியம், பினராய் விஜயன்

pinatay

கொல்லம் முற்போக்கு எழுத்தாளர் சங்க விழாவில்

அன்புள்ள ஜெமோ

நீங்கள் சென்ற நான்காம் தேதி மதுரையில் ஜக்கி வாசுதேவ் அவர்களின் நிகழ்ச்சியில் கலந்துகொண்டீர்கள். அதைப்பற்றிய மிகக்கடுமையான விமர்சனங்கள் இணையத்தில் வெளிவந்ததைப்பார்த்திருப்பீர்கள். அதன்பின் சென்ற 14 ஆம் தேதி கேரளத்தில்முற்போக்கு எழுத்தாளர் சங்க விழாவில் கலந்துகொண்டிருக்கிறீர்கள். பினராயி விஜயன் தலைமையில் நிகழ்ந்த விழாவில் நீங்கள் சிறப்புப்பேச்சாளர். [விழாவுக்கு நான் செங்கோட்டையிலிருந்து வந்திருந்தேன். உங்களை நெருங்கமுடியவில்லை. முதல்மந்திரிக்குரிய கெடுபிடிகள். உங்கள் உரையும் நன்றாகவே இருந்தது. ஆனால் உங்கள் அரசியல் என்ன என்ற குழப்பம் எனக்கு வந்தது. ஆகவேதான் இந்தக்கடிதம்.

ஸ்ரீதர்

***

அன்புள்ள ஸ்ரீதர்,

நான் எழுத்தாளன். ஏதேனும் ஓர் அரசியல்தரப்பின் கொடிதாங்கி அல்ல. எழுத்தாளன் என்றவகையிலேயே எனக்கு ஒரு முக்கியத்துவமும் என் குரலுக்கு அர்த்தமும் உருவாகமுடியும். இன்னும் நூறாண்டுகள் இந்த எளிய செய்தியை சராசரித் தமிழ்ப்புத்திக்குப் புரியவைக்க முடியுமெனத் தோன்றவில்லை. ஆகவே சொல்லிக்கொண்டே இருக்கவேண்டியதுதான்.

தெளிவான ஒற்றைநிலைபாடோ அரசியலைமைப்புகளுடன் சார்போ கொண்ட எழுத்தாளர்கள் ஒருபக்கம் பார்க்கமுடியாதவர்களாக ஆகிவிடுகிறார்கள். உதாரணமாக கௌரி லங்கேஷ் கொலையைப்பற்றி ஆவேசமாகப்பேசிக் கண்ணீர்விடும் மனுஷ்யபுத்திரனால் தினகரன் அலுவலகம் தாக்கப்பட்டு இதழாளர்கள் கொலைசெய்யப்பட்டதைப்பற்றியோ, இன்றுவரை அவர்களுக்கு நீதி கிடைக்காததைப்பற்றியோ, மதுரை லீலாவதி கொலை பற்றியோ பேசமுடியாது. பலவகை நாசுக்குகள் வழியாகக் கடந்துசெல்லவே முடியும்.அது அவரது அரசியலின் ஒரு பகுதி. இலக்கியப்படைப்பாளி சார்பற்றவனாக இருக்கையில் அதையும் சேர்த்தே அவன் பேசுவான்.

நான் ஜக்கி நிகழ்ச்சியில் கலந்துகொண்டதைப்பற்றி எந்த எதிர்க்குரலையும் கவனிக்கவில்லை. இன்றைய சிக்கல் என்னவென்றால் இன்று எழுத்தாளனை பெயர் தெரிந்து வைத்திருப்பவர்களில் பெரும்பாலானவர்கள் வெறுமே ஏதேனும் அரசியல்தரப்பை எடுத்துக் கூச்சலிடுபவர்கள். அவர்கள் பேசும் அரசியலை தாங்களும் பேசாத அனைவருமே அவர்களுக்கு எதிரிகளே.அவ்வரசியலையே பேசுபவர்கள்கூட அவர்கள் சொல்லும் அதே சொற்களில் அவர்கள் கொள்ளும் அதே உணர்ச்சியுடன் பேசியாகவேண்டும். இல்லையேல் வசைகள், அவமதிப்புகள், சிறுமைப்படுத்தல்கள். இது உண்மையில் அரசியல்நிலைபாட்டின் தீவிரம் அல்ல. அப்படி தீவிர அரசியல் எல்லாம் இங்கே மிகமிக அரிது. வெறுக்கவும் வசைபாடவும் காரணமாக எடுத்துக்கொள்ளப்படும் நிலைபாடுதான் அது. உளத்திரிபின் காழ்ப்பின் வெளிப்பாடுகளே இந்த வசைகள்.

தமிழகத்திலேயே பல கலையிலக்கியப் பெருமன்ற நிகழ்ச்சிகளில் நான் கலந்துகொண்டிருக்கிறேன். திருமாவளவனுடன் நிகழ்ச்சிகளில் பேசியிருக்கிறேன். வரும் 29 அன்று மதுரையில் அலெக்ஸ் நினைவேந்தல் நிகழ்ச்சியில் பேசவிருக்கிறேன். அரசியலுக்கு அப்பாற்பட்டு எழுத்தாளன் என்னும் அடையாளத்துடன்தான் அவற்றுக்கு நான் அழைக்கப்படுகிறேன்.

*

கொல்லத்தில் முற்போக்கு எழுத்தாளர் சங்கச்சார்பில் நடந்த தேசாபிமானி விருதுகள் வழங்கும் விழா எனக்கு முற்றிலும் புதிய ஓர் அனுபவமாக இருந்தது. பிறிதொருவகையில் மார்க்ஸியக் கம்யூனிஸ்டுக் கட்சி தன்னை ஒருங்கிணைத்துக்கொள்வதைக் காணமுடிந்தது. இது சரியான பாதையா என்ற விவாதம் அங்குள்ளது. ஆனால் இது வெற்றிகரமானது என நிரூபிக்கப்பட்டுள்ளது. எனக்கு அது மனநிறைவையே அளித்தது என்று சொல்ல விழைகிறேன்.

சென்ற ஆண்டு தேசாபிமானி ஆய்வு வட்டம் பினராயி விஜயன் தலைமையில் எம்.டி.வாசுதேவன் நாயருக்கு கோழிக்கோட்டில் இரண்டுநாள் திருவிழா ஒன்றை எடுத்தது. கருத்தரங்குகள், பாராட்டுவிழா, கலைநிகழ்ச்சிகள், மாணவர்களுக்கான நிகழ்ச்சிகள் என இரண்டு முழுநாளும் கொண்டாட்டம். சென்ற காலங்களில் மார்க்ஸியக் கம்யூனிஸ்டுக் கட்சி ஒருபோதும் தனிமனிதர்களைக் கொண்டாடியதில்லை. .எம்.எஸுக்குக்கூட அப்படி ஒரு மாபெரும் கருத்தரங்கும் விழாவும் நடத்தப்பட்டதில்லை . எழுத்தாளர்கள், மாற்றுக்கருத்துடையவர்கள்கூட, அதன் இலக்கியநிகழ்ச்சிகளில் கௌரவிக்கப்பட்டதுண்டு. ஆனால் கட்சியுடன் நேரடி உறவில்லாதவரும் கட்சிமேல் விமர்சனங்களை வைக்க அஞ்சாதவரும் காங்கிரஸ் உட்பட பிறகட்சியினருடனும் நெருக்கமான உறவு உள்ளவருமான ஓரு மூத்த எழுத்தாளருக்கான அந்தக்கொண்டாட்டம் மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்டுக் கட்சியின் வரலாற்றில் முதல்முறை.

இது காங்கிரஸ் கட்சிக்கே ஒரு கட்டாயத்தை உருவாக்குகிறது. சி.வி.பாலகிருஷ்ணனுக்கு காஞ்சாங்காட்டில் நடந்த இரண்டுநாள் கருத்தரங்கும் கொண்டாட்டமும் காங்கிரஸ் கட்சியால் ஒருங்கிணைக்கப்பட்டவை. கம்யூனிஸ்டு எழுத்தாளர்களும் அதில் பங்கெடுத்தனர். சி.வி.பாலகிருஷ்ணன் இடதுசாரி. அவரது மனைவி புகழ்பெற்ற இடதுசாரித்தலைவரின் மகள். இந்த கொல்லம் விழாவில் சி.வி.பாலகிருஷ்ணனும் கலந்துகொண்டார். இச்சூழலில் கேரள பாரதிய ஜனதா என்ன செய்கிறது? சசிகலா என்ற நாலாந்தர வன்முறைப் பேச்சாளர் இந்து தர்மத்தை விமர்சிக்கும் எழுத்தாளர்களை கொலசெய்வோம், கௌரி லங்கேஷ் கதியே இங்குள்ளவர்களுக்கும் ஏற்படும் என்று மேடையில் பேசியிருக்கிறார். அதுவே அவர்களின் குரலாக ஒலிக்கிறது. முன்பு கல்லூரி ஆசிரியரின் கையை வெட்டிய இஸ்லாமிய வெறியர்களின் நேர்மறுபக்கம். இந்தியாவில் உருவாகிவரும் .எஸ்..எஸ்.

வழக்கமாக எதிர்ப்பரசியலின் வேகமே இடதுசாரிகளின் நிகழ்ச்சிகளின் இயல்பாக இருக்கும். இம்முறை மாறுபட்ட தரப்புகளிடையே உரையாடலாகவும் கூடவே ஒருவகை விழாக்கொண்டாட்டத்துடனும் இருந்தது. கூட்டத்திற்குப்பின் கேரளத்தின் புகழ்பெற்ற இசைக்குழுவான தைக்குடம் பிரிட்ஜ் நடத்திய இசைநிகழ்ச்சி நடைபெற்றது. ”பலிகுடீரங்களே…” போன்ற புகழ்பெற்ற பழைய புரட்சிப்பாடல்கள் முற்றிலும் புதிய மெட்டில் பாடப்பட்டன. அரங்கில் இருந்தவர்களில் பெரும்பாலானவர்களுக்கு இருபதுகளை ஒட்டிய வயது. ஆனால் மேடையில் இருந்த அனைவருமே முதியவர்கள். மிக இளையவன் நான். அதை கே.வி.ராமகிருஷ்ணன்ஜெயமோகனைப்போன்ற இளைஞர்கள்…” என்று குறிப்பிட்டபோது ஜிலீர் என்று இருந்தது.

முதிரா இளைஞர்களின் கூச்சல்கள் சிரிப்புகள் . இளமையின் குரல்கள். பழைய கம்யூனிஸ்டுக் கட்சிக்கூட்டங்கள் போல வேட்டி கட்டி, சிவப்பு கைக்குட்டை கழுத்தில் சுற்றிய இளைஞர்கள் அல்ல. நவநாகரீக உடைகள் அணிந்தவர்கள், விலையுயர்ந்த செல்பேசிகள் வைத்திருப்பவர்கள். ஆனால் வெறுமே இசைகேட்க வந்தவர்கள் போலவும் தெரியவில்லை. மேடையில் பேசபட்ட அத்தனை அரசியல் கருத்துக்களுக்கும் தொடர்ச்சியான கவனமும் எதிர்வினையும் இருந்தன. பங்க் தலைகள். விதவிதமான தாடிகள். கூந்தல்கள். அதேசமயம் அதேசமயம் புத்தகங்கள் வாசிக்கிறார்கள், விவாதிக்கிறார்கள். நூல்களை வாங்குகின்றனர்.கையில் புத்தகம் இல்லாதவர்கள் குறைவு. அரசியல் கருத்துக்களைத் தெரிந்துகொண்டு கூர்மையாக விவாதிக்கிறார்கள்.

கேரளம் மாறிவிட்டது இன்று. இன்று அங்கே வறுமை இல்லை. ஆகவே அடிவயிற்று ஆவேசங்கள் இல்லை. கசப்புகளும் கோபங்களும் தணிந்துவிட்டன. ஆனால் ஜனநாயகம், சமத்துவ அரசியல், முற்போக்கான சமூகப்பார்வை சார்ந்த ஆழமான பிடிப்பாக அந்த வேகம் வெளிப்படுகின்றது. இன்றைய புரட்சிகரம் இதுதானோ என்னவோ? அதற்கேற்ப கட்சி மாறுகிறதா? பழைய பருப்புவடைகட்டன்சாயா கலாச்சாரத்திலிருந்து இடதுசாரிகள் மிகவும் அகன்றுவந்துவிட்டார்கள்போலும்.

பினராயி விஜயன் வெளிப்படையான ஸ்டாலினிஸ்ட். வன்முறை அரசியலின் பின்னணி எப்போதும் அவருக்கிருந்தது. அவரை முதல்வராக ஏற்க நேற்றுவரை கேரளத்திலிருந்த தயக்கமும் அதனால்தான். அதுவே அவருக்கும் அச்சுதானந்தனுக்குமான பூசலில் அச்சு அம்மாவனை மேலே கொண்டுசென்றது. ஆனால் அச்சு அம்மாவனே முன்மொழிய இப்போது அவர் முதல்வர். இந்திய இடதுசாரி அரசியலில் ஸ்டாலினிஸ்டுகளே ஐயத்திற்கு அப்பாற்பட்ட நேர்மைகொண்டவர்கள். பினராயி மேல் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் எவையும் அடிப்படை அளவில்கூட நிலைநின்றதில்லை.

சென்ற ஆண்டுகளில் அவருடைய செயல்பாடுகளில் நிதானமும், கேரளத்தின் பிரச்சினைகளை அறிந்துகொள்ளும் கவனமும், நிர்வாகத்தில் உறுதியும் உள்ளது. கேரளத்தின் சிறந்த முதல்வர்களில் ஒருவர் என்று அவரை எதிர்காலம் சொல்லும் என நினைக்கிறேன். இதை கேரளத்தின் பலதளங்களில் செயல்படும் மார்க்ஸியரும் அல்லாதவர்களும் சொல்லி அறிந்திருக்கிறேன். சிலமுறை அங்கும் இங்கும் பதிவும் செய்திருக்கிறேன்.

விழாவில் நான் கவனித்துக்கொண்டிருந்தது அந்த இயல்புத்தன்மையை. மிகப்பெரும்பாலான எழுத்தாளர்களை அவர் அறிந்திருக்கிறார். மிகத்தொடக்கநிலையாளர்களகூட. அவருடன் வந்தவர்களும் சரி தேசாபிமானிப்பொறுப்பாளர்களும் சரி அவரை முற்றிலும் சமானமாக, எளிதாகவே நடத்தினர். பெரிய பாதுகாப்புக்கெடுபிடிகள் இல்லை. இயல்பாகப்பேசிவிட்டு ஏறத்தாழ அத்தனைபேரிடமும் விடைபெற்றுவிட்டு கிளம்பிச்சென்றார். கேரளத்தில் சாதாரணமான நிகழ்ச்சிதான். நான் தமிழகத்தின் கண்களை அடைந்து நெடுநாட்களாகின்றது. நாம் ஜனநாயகம் என்ற சொல்லை உச்சரிக்க இன்னும் நெடுந்தொலைவு செல்லவேண்டும்.*

விழாவின் ஒரே சிறப்புரை என்னுடையது. நான் சமகாலத்தன்மை என்பது எப்படி இலக்கியத்திற்கு அடிப்படையில் எதிரானதாக இருக்கக்கூடும் என்று பேசினேன். சமகால அக்கறைகொண்டவர்கள் என்பதனால் முற்போக்கு எழுத்தாளர்கள் எளிதில் அதில் விழுந்துவிடுகிறார்கள். எது மாறாததோ அதை அறிந்தாலொழிய எது அன்றாடமோ அதை புரிந்துகொள்ளமுடியாது என்ற டி.எஸ்.எலியட்டின் வரியிலிருந்து தொடங்கி சதத் ஹுசைன் மன்றோ முதல் இந்தியாவின் முக்கியமான முற்போக்கு எழுத்தாளர்களின் படைப்புகள் வழியாக அதை விரித்துரைத்தேன்.

ஒரு நடுக்கம் இருந்துகொண்டே இருந்தது. முன்பொரு முறை நான் கல்லூரி விரிவுரையாளர்களுக்கான ஒரு பயிற்சிவகுப்பில் வகுப்பெடுக்கச் சென்றேன். என் முன் மாணவர்களாக எனக்குப் பாடமெடுத்த ஆசிரியர்கள் இருவர் இருந்தனர். இம்முறை மேடையிலும் முன்னாலும் இருந்த அனைவருமே ஒருகாலத்தில் ஆசிரியர்களாக எண்ணி தேடித்தேடிப் படித்தவர்கள். உணர்ச்சிகரமாக பின் தொடர்ந்தவர்கள். மானசீகமாக வாதிட்டவர்கள். நல்லது, இதுவும் ஒரு வாய்ப்புதான் என நினைத்துக்கொண்டேன் திரும்பிவரும்போது.

ஜெ

***

முந்தைய கட்டுரைபுத்தகங்களும் பனையும்
அடுத்த கட்டுரைவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 4