அன்புள்ள அண்ணா,
நேற்று புதுக்கோட்டை, காரைக்குடி வட்டாரங் களில் உள்ள சிற்பங்கள், கோவில்களை பார்க்க சென்றிருந்தேன். முதலில் வயிரவன் பட்டி பாண்டியர்கள், சோழர்கள், நாயக்க மன்னர்களின் திருப்பணியில் தமிழக அளவில் தனி முத்திரை பதித்த ஆலயத்தில் சமீபத்தில் ஆலய திருப்பணி என்ற பெயரில் ஆயிரமாண்டு கள் பழமையான நுட்பமான சிற்பங்களில் sand blasting செய்து சிற்பங்களில் முகம், நகம், முத்திரை, ஆடை மடிப்புகள், ஆபரண ங்களை சிதைத்திருக்கிறார்கள். அதோடு ஆயிரமாண்டு பழமையான கோபுரங்களில் உள்ள சுதை சிற்பங்களிலும் நவீன வர்ணங்களைப் பூசி அசிங்கப் படுத்தியிருக்கிறார்கள். முன் பகுதியில் உள்ள வினாயகர் ஆலயத்தின் வரவேற்பு யானைகள் படியின் முன்பு அமைக்கப்பட்டிருக்கிறது.
அந்த குவலயங்கள் தமிழகத்தில் உள்ள சிறந்தவைகளில் ஒன்று. அதை மண் போட்டு மூடி, நடப்பதற்கு வசதியாக இருப்பதற்காக பேவர் பிளாக் கல்கள் போட்டு மூடி வைத்திருக்கிறார்கள். யானையின் கண்கள் வரை மண் நிரப்பி இந்த வேலையை செய்திருக்கிறார்கள். உள்ளிருக்கும் நாய்க்கர்களின் குதிரை வீரன், மன்மதன் சிற்பங்களுக்கு மெலமைன் பாலிஷ் ஏற்றி வைத்திருக்கிறார்கள்.
அடுத்து இரணியூரிலும், நேமத்திலும் சோழர்களின் கலை அற்புதத்தின் உச்சமான செப்பு திருமேனிகள் கல் ஆலின் கீழ் அமர்ந்த தென்முக கடவுளின் கீழ் அமர்ந்து பாடம் கேட்கும் சனகாதி முனிவர்களின் சிற்பங்கள் , சோமாஸ்கந்தர், நடனத்திலிருக்கும் திரு ஞான சம்பந்தரின் உற்சவ மூர்த்திகள் பெரும்பாலான ஆலயத்தில் உள்ளது போல சன்னதிகளில் அல்லாமல் கம்பி கிராதிகளில் வழிபாடின்றி அடைத்து வைக்கப்பட்டிருக்கிறது. சோழர்களின் செப்பு திருமேனிகளும், நம் கற் சிற்பங்களும் அடுத்த கணம் உயிர் பெற்று இறங்கி நம்மை ஆட்கொள்ளும் எனும் அளவு தத் ரூபமும் உயிரோட்டமும் கொண்டவைகள் அவற்றை வழி பட்டு இறை அனுபவம் பெறுவதை, ஒரு பக்தரின் அடிப்படை உரிமையை எப்படி தடுப்பது என்று தோன்றினாலும் சிலை திருடர்கள், பன்னாட்டு கலாச்சார திருட்டு அமைப்புகளை நினைத்தால் பயமாக தான் இருக்கிறது.
அடுத்து சென்ற பிள்ளையார்பட்டியிலும் உள்ள ஒரு பொது பிரச்சினை கூட்டத்தை கட்டுபடுத்தவும், பக்தர்கள் வெயிலில் நிற்காமல் இருக்கவும் GI sheet ல் மேல் மறைப்பும், இரும்பு கம்பிகளில் தடுப்பு கம்பிகள் இவை கோவிலின் முன் அமைப்பு அதன் தோற்ற பழமைக்கு சற்றும் சம்பந்தமில்லாமல் இருக்கிறது. பக்தர்களின் வசதி, வழிபாட்டு உரிமையோடு அதன் அழகிற்கும் பழமைக்கும், ஒரு முக்கியத்துவம் வழங்கப்பட வேண்டும்.
இது எல்லாவற்றையும் விட முக்கியமான பிரச்சினை மாணிக்க வாசகரின் ஆவுடையார் கோவிலில் இருக்கிறது. தமிழகத்தின் அடையாளம் மட்டுமல்ல, சைவ ஞானத்தின் மையமும், சிற்பங்கள், நுட்பங்களில் மேன்மையான ஆலயத்தின் முகப்பை மறைத்து ஒரு கான்கிரீட் கட்டிடம் கட்டி கொண்டு இருக்கிறார்கள். ஆலய திருப்பணி ஒப்பந்த ங்கள் செய்யும் போது முக்கியமான ஒரு சேர்ப்பாக ஆவுடையார் கோவில் முகப்பு மாதிரி நீங்கலாக என்று இருக்கும். அப்படி ஒரு கலை சிறப்பு மிக்க முன் முகப்பு மண்டபத்தை மறைத்து மனசாட்சியோ, அறிவோ இல்லாமல் ஒரு கான்க்ரீட் கட்டிடம் கட்ட எப்படி அனுமதி அளித்தார்கள் என்றே தெரியவில்லை.
தமிழகத்தின் சிற்ப மரபு, அழகுணர்ச்சி, நுட்பம் இதெல்லாம் என்ன ஆனது? குருடநோ, முழு மூடனோ கூட இப்படியான காரியத்தை செய்ய மாட்டார்கள். இங்கு மட்டும் ஏன் இப்படி நிகழ்கிறது என்றே தெரியவில்லை. இதோடு தமிழகத்தில் ஆலயத் திருப்பணி என்ற பெயரில் நிகழும் அழிவுப்பணிகள் அன்னிய ஆக்ரமிப்பாளர்கள், நிகழ்த்தியதற்கு எந்த அளவிலும் குறைவில்லாதது. இதற்கு ஏதாவது செய்யுங்கள்.
ராஜமாணிக்கம்
திருப்பூர்
***
அன்புள்ள ராஜமாணிக்கம்,
சென்ற மாதம் காஞ்சிபுரம் சென்றிருந்தேன். அங்கே ஓர் ஆலயத்தின் ஆயிரத்தைநூறு ஆண்டுக்காலம் தொன்மையான சிற்பங்களைச்சுற்றி நாலாந்தர ஓடுகளை ஒட்டி ‘புதுப்பித்திருப்பதைக்’ கண்டேன். பக்தர்களின் திருப்பணி. அந்த ஓடுகள் கூடிப்போனால் முப்பதாண்டுகள் இருக்கும். அதன்பின்னர் அதை பெயர்த்து வீசி விடவேண்டும். சிமிட்டி பூசப்பட்ட சுவர் அசிங்கமாக இருக்கும். ஆகவே மீண்டும் ஒட்டவேண்டும். அப்படி இருமுறை பெயர்த்து ஒட்டினால் கோயிலே இருக்காது. என்ன சொல்ல? அதைப்பற்றி இங்கே எவருக்கு அக்கறை?
இந்தமாதிரி மாதம்தோறும் கொதித்துக்கொண்டிருக்கிறேன். இதழாளர்களான நண்பர்களிடம் சொல்லி செய்தியாக இதை வரவழைக்க முயல்வேன். ஆனால் தமிழக ஊடகங்கள் எவையிலும் இதுசார்ந்த அக்கறைகொண்ட எவரும் இல்லை. மேலும் இப்படி கோயில்களை ’புதுப்பித்து’ சிற்பங்களை அழிப்பதென்பது பொதுமக்களால் பெரிதும் விரும்பிச்செய்யப்படுவது. அவர்களின் நிதியால் நிகழும் சமூகச்செயல்பாடு. அதற்கு எதிராக ஊடகங்கள் செல்ல அஞ்சுகின்றன. அதோடு கும்பாபிஷேக விளம்பரங்கள் அவற்றின் மிகப்பெரிய வருவாய்
பக்தர்களிடம் திரும்பத்திரும்பச் சொல்லிக்கொண்டிருக்கிறேன். ஆனால் தமிழகத்தில் பக்தி என்பது உலகியல்வெறி மட்டுமே. தோஷநிவர்த்திக்காக கோயிலை இடிக்கவேண்டும் என்று யாராவது சோதிடர்கள் சொல்ல ஆரம்பித்தால் ஒரே வருடத்தில் தமிழகத்தின் அத்தனை கோயில்களையும் ஜல்லிக்குவியல்களாக ஆக்கிவிடுவார்கள். இந்தப்பதர்களின் மூடத்தனத்தால், சுயநலத்தால் நம் மூதாதையரின் செல்வங்கள் ஒவ்வொரு நாளும் அழிக்கப்படுகின்றன.
திருப்பணிக்குழுக்களிடம் மணல்வீச்சு பற்றி நேரடியாகவே பேசியிருக்கிறேன். ‘சாமிகும்பிடுவதற்காகத்தான் கோயில். பக்தர்களின் வசதிக்காகத்தான் அதன் கட்டிடங்கள். கோயில் இடிந்தால் வேறுகோயில் கட்டிக்கொள்வோம். கோயில் சிற்பங்களைப் பாதுகாக்கவேண்டும் என்றெல்லாம் பேசுபவர்கள் நாத்திகர்கள். அவர்களுக்கு கோயில் ஒரு அருங்காட்சியகம் மட்டும்தான். சிற்பங்களைப்பார்க்கவேண்டுமென்றால் அருங்காட்சியகம் செல்லவேண்டியதுதானே? ஏன் பக்தியில் தலையிடுகிறீர்கள்?” இதுவே பதில். சமீபத்தில்கூட ஒரு திருப்பணிச்செல்வர் இப்படி என்னிடம் கேட்டார்
இங்கு கலையில் இலக்கியத்தில் ஆர்வமுள்ளவர்கள் மிகமிகக்குறைவு. அவர்களும் இங்கே நிகழ்ந்த நீண்டநாள் மூடநாத்திகப்பிரச்சாரத்தின் அடிமைகள். அவர்களுக்குக் கோயில் என்றாலே பழைமை, மூடநம்பிக்கை, பார்ப்பனியம்தான். தமிழ்த்தேசியம்பேசும் கும்பலுக்குக்கூட கோயில்கள் தமிழர்களின் சொத்து என்னும் எண்ணம் இல்லை. “பீரங்கி வச்சு பிளக்கணும்னு பாவேந்தர் சொன்னார். இப்டி மணல்வீசிப்பிளந்தாலும் நல்லதுதானே?” ஒரு திராவிட இயக்க எழுத்தாளர் கேட்டார்.
மொத்தத்தில் தமிழகம் முழுமையாகவே ஆலயங்களை அழிக்கும் வெறிகொண்டிருக்கிறது. ஒரு சாரார் அதை அழித்து நுகர முயல்கிறார்கள். இன்னொரு சாரார் அதை அழித்து மறைக்க விரும்புகிறார்கள். எஞ்சியிருக்கும் குரல்களால் உண்மையில் ஒன்றுமே செய்யமுடியவில்லை.
மணல்வீச்சுக்கு எதிராக நீதிமன்றத்தடை பெறப்பட்டுள்ளது. நீதிமன்ற ஆணையுடன் சென்று மணல்வீச்சை சட்டபூர்வமாகத் தடுக்கமுடியும். ஆனால் எவர் செய்வது? செய்ய ஆளே இல்லை. இடது வலது, திராவிட, பொதுவுடைமை, தமிழ்த்தேசியம் – எதுவும். ஆகவே நீதிமன்ற ஆணையை மீறியே அனைத்துத் திருப்பணிகளும் செய்யப்படுகின்றன
ஐந்து அடிப்படை விஷயங்கள் நம் மக்களிடையே எடுத்துச்செல்லப்படவேண்டும். அவர்களில் ஆக்கபூர்வமாகச் சிந்திக்கும் பத்து சதவீதம்பேராவது அதை ஏற்றுக்கொள்ளவேண்டும். அது நிகழாமல் என்ன செய்தும் பயனில்லை.
- ஆலயங்கள் வெறும் வழிபாட்டிடங்கள் அல்ல, அவை நம் மரபின் அடையாளங்களும்கூட. அவை கலைச்செல்வங்கள்.மாபெரும் குறியீடுகள். நம்மால் அவற்றை மீண்டும் உருவாக்கிவிட முடியாது.
- இந்தியாவிலுள்ள அனைவருக்குமே இறந்தகாலம் பொதுதான். ஆகவே மரபுச்சின்னங்கள் அனைவருக்கும் சொந்தமானவை. அவை இந்து பௌத்த சமண ஆலயங்கள் என்பதனால் இந்துக்கள் பௌத்தர்கள் சமணர்களுக்கு மட்டும் சொந்தமானவை அல்ல. ஆத்திகர்களின் சொத்து அல்ல ஆலயங்கள்
- ஆலயங்களை புதுப்பிப்பது என்றால் அவை எந்தமுறைப்படி அமைக்கப்பட்டுள்ளனவோ அதே முறைப்படி கட்டுமானங்கள் செய்யப்படவேண்டும். அதே பொருட்களைக்கொண்டு. கல் என்றால் அதே கல்லில். அதே சிற்ப அமைப்பின்படி. அவை சிற்பிகளால்தான் செய்யப்படவேண்டும். சிமிண்ட் முதலிய பொருட்களால் கொத்தனார்களைக்கொண்டு செய்யப்படுவது திருப்பணி அல்ல. ஆலய இடிப்பு. அதைச்செய்பவர்கள், செய்வதற்கு நிதியுதவி செய்பவர்கள் ஆலயத்தை இடித்த குலப்பழியையே தேடிக்கொள்கிறார்கள்.
- ஆலயத்தை வழிபாட்டு வசதிக்காக விரிவாக்கம் செய்யக்கூடாது. ஆலயம் ஒரு சிற்பம். அதற்கு ஒரு வடிவ ஒருமை உள்ளது. ஒரு சிற்பத்தில் மேலதிகமாக ஒரு கையை வைத்து ஒட்டுவதுபோன்ற செயல் அதை விரிவாக்கம் செய்வது. ஆலயத்திற்குள் கழிப்பறை கட்டுவது அலுவலக அறைகள் கட்டுவது. நிரந்தரமாகக் கொட்டகைகள் போடுவது போன்றவை ஆலயத்தை அழிப்பது மட்டுமே. ஆலயத்தில் நிகழும் எந்தவகையான விரிவாக்கமும் காலப்போக்கில் அதன் கட்டிடங்களை அழிக்கும்.
- சிற்பங்களை எவ்வகையிலும் மாற்றியமைக்க நமக்கு உரிமை இல்லை. சிற்பங்கள் அச்சிற்பிகளால் ஆகமமுறைப்படி, கலைமரபுப்படி முழுமையாகச் செதுக்கப்பட்டவை. அவற்றின்மேல் வண்ணம் பூசுவதும், மீண்டும் சுரண்டுவதும், சிமிட்டியால் அவற்றை மாற்றியமைப்பதும், மணல்வீச்சு முறைப்படி மழுங்கடிப்பதும், அழுக்கு ஆடைகளை அவற்றில் நிரந்தரமாகச் சுற்றி வைப்பதும், எண்ணைபூசுவதும் அவற்றை அழிப்பதே. அவை பெரும்பிழை. மதமரபின்படி மிகப்பெரிய ஆகமமீறல். அவற்றை செய்பவர்கள் பழியைத் தேடிக்கொள்கிறார்கள்
இந்த ஆத்திகப்பதர்களிடமிருந்து நம் ஆலயங்களைக் காப்பாற்ற இன்றைய நிலையில் கலையிலும் மரபிலும் ஆர்வம்கொண்ட ஐரோப்பியர்கள் தலையிட்டால்தான் ஏதேனும் விடிவு பிறக்கும். இவை மானுடகுலத்தின் சொத்து என்பதனால் அவர்களின் உடைமைகளும்கூட. இங்கே யுனெஸ்கோவால் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஆலயங்கள் மட்டுமே பாதுகாப்பாக உள்ளன
ஆங்கிலத்தில் எழுதத்தெரிந்தவர்கள், ஊடகம் அறிந்தவர்கள் இப்பிரச்சினையை அவர்களிடம் கொண்டுசெல்வதே ஒரே வழி என நினைக்கிறேன். இந்த அறிவிலிகள் எதையாவது புரிந்துகொள்ள ஆரம்பிக்கையில் இங்கே ஆலயங்கள் அழிந்துவிட்டிருக்கும்
ஜெ
***
=============================================================
இணைப்புகள்
ஆவுடையார் கோயில் பற்றி சிரவை ஆதீனம்
பழைய கட்டுரைகள்
ஆத்திகர்கள் என்னும் பிழைப்புவாதிகள்
சிற்பப் படுகொலைகள்: மேலும் இரு கடிதங்கள்
சிற்பப் படுகொலைகள்-இரு கடிதங்கள்