உணவும் குழுவும்

fundas

அன்பின் ஜெமோ அவர்களுக்கு

‘இந்தியாவில் பசுவை குர்பானி கொடுப்பதை விட்டுக் கொடுக்கக் கூடாது?’ என்று 1945-ல் எழுதப்பட்டதை எழுபது ஆண்டுகள் கழித்து ‘தமிழில்’ மொழியர்த்து இந்த மாத ‘சமரசம்’ இதழில் வெளியிட்டுள்ளனர்.

http://samarasam.net/1-15-sep-2017/#page/51

http://samarasam.net/1-15-sep-2017/#page/52

‘தமிழக இஸ்லாம்’ என்பதன் ‘படித்த முகம்’ என்கிற முன்னொட்டு கொண்ட குழு இது. ’புனிதப் பிரதி’களை ’அரசியல் இஸ்லாம்’ பின்னணியில் மாட்டுக்கறி சாப்பிடாத ‘முஸ்லிம்’களின் ‘இஸ்லாம்’ நம்பகத்தன்மை கொண்டதல்ல என்று மௌதூதி கொடுத்த விளக்கம் எவ்வளவு ‘கடும்போக்கு’ கொண்டது. ’உடும்பு’ – Gauna என்கிற பெரிய பல்லி வகை ’மிருகம்’ அரபு நாடுகளில் இன்றைக்கும் உண்ணும் பழக்கம் உண்டு. நபிகள் நாயகத்துக்கு அதன் இறைச்சி கொடுத்தபோது எனக்கு வேண்டாம் என்று மறுத்த பதிவுகள் ‘நபிமொழி’ தொகுப்புகளில் உள்ளன. ‘இறைச்சி’ சாப்பிட்டால்தான் ‘முஸ்லிம்’ என்பதெல்லாம் ரொம்ப ஓவராக தெரிகிறதே.

என் தாய்வழி பாட்டியின் குடும்பம் ‘தஞ்சை – சீர்காழி’ பகுதியிலிருந்து ‘தாது வருஷத்து பஞ்ச காலத்தில் புலம்பெயர்ந்து வட தமிழக மாவட்டங்களில் மீள்குடியேறியது. இருபது ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு பொங்கல் தினத்தன்று இறந்துபோன அந்த மூதாட்டி உள்ளூர் ‘உருது முஸ்லிம்’ பிரிவிலிருந்து ‘மருமகளாக’ வந்தவர்களை ‘எடி துலுக்கச்சி’ என்றே விளித்தவர். கடைசிவரை ‘மாட்டிறைச்சி’ சாப்பிடாதவர், சமையலறை கட்டுக்குள் அனுமதிக்காதவர், வெறுமனே ‘வெள்ளைத் துப்பட்டி’யுடன் சரளமாக, மங்களமாக புழங்கியவர். தந்தைவழியில் அவருக்கு சில ஏக்கர் நஞ்செய் நிலங்கள் இருந்தன, ஆடு-மாடுகளைக் கொண்ட தொழுவம் இருந்தது, ஆண்டுதோறும் நடக்கும் ‘பெரியாங்குப்பம் திருவிழா’வில் சிறுமியின் குதூகலத்தோடு கலந்துகொண்டவர்.

இன்றைக்கு அந்த ‘அம்மச்சிகளும்’ காணோம், துப்பட்டியும் காணோம், எங்கள் பேராசிரியர் நாகூர் ரூமியின் கதைகளில் வருவது ‘நிஞ்சா’க்களின் உடையோடு கரும்பூதங்களாக எங்கள் குடும்பத்து இளம்பெண்கள் ‘புர்கா’வுக்கு மாறிவிட்டனர். ‘துப்பட்டி’ விற்கிற கடைகளே இல்லை. இதில் ‘விசுவாசத்தை’ வேறு நிருபித்தாக வேண்டும் என்று வேறு கிளம்பியிருக்கிறார்கள். இது என்னவிதமான மனநிலையென்றே தெரியவில்லை. போகப் போக ‘இந்துத்வா’ முன்வைக்கிற எல்லாவற்றுக்கும் ‘எதிர்’ திசையில் செல்வதையே ‘இஸ்லாம்’ என்று கொடுக்கிற விளக்கம் ‘முஸ்லிம்’களை மென்மேலும் உள்ளொடுங்கச் செய்யாதா? நான் சிறுவனாக இருந்தபோது எங்கள் ‘ஆம்பூரில்’ மொத்தமே பத்து – இருபது மாடுகளையும், ஒரு நூறு ஆடுகளையும் ‘பலி’ கொடுத்து – (அதுவும் முப்பதாயிரம் மக்கள் தொகையில்) கொண்டாடியதே ’பக்ரீத்’ ஆனால் கடந்த வாரம் ‘மாடு’ வெட்டுவதை ‘முஸ்லிம்’களின் ‘மார்க்க கடமை’ என்பதைப் போல தெருவுக்கு தெரு பசுக்களை அறுத்து, அதன் எச்சங்களை நடுவீதியிலும், தெருமுனையிலும் போட்ட வைத்ததை சாதாரணமாக கடந்துபோக முடியவில்லை. எங்கள் வீட்டுமுனையின் குப்பைத் தொட்டியில் கொட்டிவைத்த கழிவுகள் காரணமாக ஒருவாரமாகியும் எங்களால் அங்கு இருக்கமுடியவில்லை.

‘நேர்நோக்கு’ கொண்டிருக்க வேண்டிய ‘முஸ்லிம்’களின் நிகழ்ச்சி நிரல் ஏட்டிக்கு போட்டியாக, எதிர்மறை பண்புகளோடு பயணிக்கத் தொடங்கிவிட்டதை எண்ணும்போது மனம் பதறுகிறது. இதையெல்லாம் ஏன் உங்களுக்கு எழுதுகிறேன் என்றே தெரியவில்லை. ’இறைச்சி’ சாப்பிடுவதும், சாப்பிடாததும் அவரவர் விருப்பம். அதை மதநம்பிக்கையுடன் இணைப்பது எப்படி? சிறுவயது என் பிள்ளைகளுக்கு எந்த வகையான உலகம், சமூகம் காத்திருக்கிறது என்பதை எண்ணும் ஆயாசமுமே எஞ்சுகிறது.

நன்றி, வணக்கம்

கொள்ளு நதீம்

***

அன்புள்ள கொள்ளு நதீம்,

இதற்கு மறுபக்கம் ஒன்றும் நினைவுக்கு வருகிறது. பசுவதை குறித்து விவேகானந்தர் சொன்னது. பசுவைக்காக்கவேண்டும் , மனிதர்கள் பஞ்சத்தில் சாவது அவர்களின் தலைவிதி என்று தன்னிடம் வந்து சொன்னவர்களிடம் “மனிதத்தாய்க்குப் பிறந்தவர்களிடமே மனிதத்தன்மையை எதிர்பார்க்கமுடியும்” என்றார் அவர். பிறிதொரு இடத்தில் ‘இவர்களின் மதம் எதைத்தின்போம், எதை தின்னக்கூடாது என்பதிலேயே அடங்கிவிடுகிறது” என்றார்.

உண்மையில் பிரச்சினை இதுதான். மதம் அல்ல, குறுங்குழுத்தன்மை என்னும் மனநிலையே இங்கே செயல்படுகிறது. இது தொல்பழங்காலம் முதல், மனிதன் சிறிய வேட்டைக்குழுக்களாகவும் குலங்களாகவும் இருந்த காலம் முதல் உருவாகி இன்றும் வெவ்வேறு வகைகளில் நீடிக்கிறது. அங்கே ‘நாம்’ என்னும் அடையாளத்தைத் தீர்மானிப்பதில் நிலப்பகுதி, மொழி,நிறம்போன்ற இன அடையாளங்கள் ஆகியவற்றுக்கு சமானமாகவே உணவு இடம்பெறுகிறது.

ஆகவே நம் உணவு மேலானது விலக்கப்பட்ட உணவு கீழானது, அதை உண்பவர் கீழானவர்கள் என்னும் மனநிலையிலேயே நாம் வளர்க்கப்படுகிறோம். அதைக் கடப்பது எளிதல்ல. அந்த மனவிலக்கம் மிக ஆழமானது என்பதனால் அதைக்கொண்டு குழுப்பிரிவினைகளை உருவாக்குவதும் நிலைநிறுத்துவதும் மிகமிக எளிது. எல்லா குழுப்பிரிவினைக் கருத்தியல்களும் இதைச் செய்கின்றன.

சிங்கப்பூர் மலேசியாவின் பாடநூல்களில் தமிழிலும் மலாயிலும் பன்றி என்ற விலங்கே கிடையாது. அச்சொல்லே முஸ்லீம்களின் மதஉணர்வுகளைப் புண்படுத்துமாம். அத்தனை நவீனச் சமூகச்சூழலில்கூட அவர்களால் அந்த மனத்தடையை மீறமுடியவில்லை ஆனால் சீன மொழியில் உண்டு. சீனர்கள் பன்றியே முதன்மையுணவாக உண்பவர்கள். அப்படியென்றால் உண்மையில் அங்குள்ள மலாயர்களுக்கும் சீனர்களுக்குமான உறவு எத்தகையது?

சமரசம் இதழை நான் தொடர்ந்து வாசித்துவந்த காலம் ஒன்றிருந்தது. அது அடிப்படைவாத இதழ். அடிப்படைவாதமும் பழைமைவாதமும் வேறுவேறானவை. பழமைவாதம் மரபான மூடநம்பிக்கைகள் கொண்டிருக்கும். பாரம்பரிய அம்சங்களைப் பேணும். அதேசமயம் நீண்டகால வரலாறு காரணமாக ஒத்திசைந்துபோகவும் முயலும். அடிப்படைவாதம் எப்போதுமே சீர்திருத்தவாதிகளால்தான் முன்வைக்கப்படும். அவர்கள் ஒரு மையம் சார்ந்த மூர்க்கமான நம்பிக்கையை முன்வைத்து மற்ற நம்பிக்கைகளை மறுப்பார்கள். நாம் என்றும் அவர் என்றும் பிரித்து உக்கிரமான காழ்ப்பை வளர்ப்பார்கள். பிரிவினையே அவர்களின் வழி. குருதியினூடாகவே அவர்கள் எண்ணும் வெற்றி நிகழமுடியும்.

பசுவைப்புனிதமென்று கருதாத நாட்டில் பசுவை இஸ்லாமியர் உண்ணாவிட்டாலும் பரவாயில்லை, ஆனால் பசுவைப் புனிதமென்று கருதும் நாட்டில் இஸ்லாமியர் பசுவை கொன்று உண்டேயாகவேண்டும், அது அவர்களின் மதக்கடமை ஆகிவிடுகிறது என வாதிடுகிறது இக்கட்டுரை. இதுவே இஸ்லாமிய அடிப்படைவாதத்தின் உலகளாவிய குரல். பசுவை உண்பவன் இந்துவே அல்ல என்ற குரல் இதன் மறுபக்கம்தான்.

இந்தக் குறுக்கல்களைக் கடப்பதற்கான பெரும் இலட்சியவாதங்கள் சென்றநூற்றாண்டில் உலகமெங்கும் உருவாயின. ஐரோப்பிய தாராளவாதம், பொதுவுடைமைவாதம் முதல் காந்தியம் வரை. அவையனைத்துமே பெருந்தொழிலாக்கம், நுகர்வுவெறி ஆகியவற்றால் பொருளிழந்துபோன நூற்றாண்டு இது. அவை இடமொழிந்தபோது அங்கே என்றுமுள்ள குறுங்குழுமனநிலைகள் வந்து அமர்கின்றன

இக்குறுங்குழுப்போக்குகளின் பயனின்மை, அழிவுப்போக்கு வெளிப்படும்போது மானுடம் மீண்டும் பெருங்கனவுகளை, முன்னேறும் இலட்சியவாதங்களை நோக்கிச் செல்லும் என்று நம்பவேண்டியதுதான்

ஜெ

***

முந்தைய கட்டுரைநத்தையின் பாதை- கடிதங்கள்
அடுத்த கட்டுரைவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 2