நதிமீட்பு -கடிதங்கள்

jaggi

இனிய ஜெயம்,

ஜக்கி அவர்கள் துவங்கி இருக்கும், நதிகளைக் காப்போம் இயக்கத்துக்கான உங்களின் ஆதரவுக் குரலை கேட்டேன். மகிழ்வாக இருந்தது. மனித நாகரீகம் தழைத்ததே, நதியன்னை கொடையை கொண்டே. கங்கைக் கரையில் அமர்ந்திருக்கையில் அவளையும் அவளை சூழ்ந்த நிலத்தயும் காண்கயில் நமது வாழ்வும் வளமும் இவளால்தான் என ஆணித்தரமாக உள்ளே பதிந்தது. அவளுக்கு நிகழும் பூஜை அவள் நமக்களித்த கருணைக்கு நன்றி நவிலல்.

இங்கே தமிழ் நிலத்தில் நாம் வைகையை, அத்தகைய நதிகளை எவ்வாறு பரிபாலிக்கிறோம்? புத்துப்புனல் வருகைக்கு, மன்னன் முன்னிலையில் ஊரே விழா எடுத்து, யுவன்களும், யுவதிகளும் நதியில், பொதுவில் உணவு சமைத்து உண்டும், விளையாடியும், ஊடியும், ஆற்றிடைக் குறையில் கூடியும் கழித்திருக்கின்றனர். கைப்பொன்னை புது வெள்ளத்தில் இட்டு ”பொலிக பொலிக ” என வாழ்த்திய சித்திரத்தை சங்க இலக்கியங்கள் காட்டுகிறது. இங்கே நிகழ்ந்துகொண்டிருந்த இந்திரவிழாவை சிலப்பதிகாரம் காட்டுகிறது. ஜனநாயக யுகம் வந்து, ஏரிகளை தூர் வாரக்கூட வக்கற்றவர்கள் ஆனோம். கடலூர் மாவட்டத்திற்குள் ஒரு நாளைக்கு சராசரியாக, ஆற்று மணல் அள்ளி செல்லும் நூறு மாட்டு வண்டிகளை பார்க்க முடியும். [லாரிகள் கணக்கு தெரியவில்லை]. நெல்லையில் பொருணை நதி தீரம் கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து கொண்டு வருகிறது. நெல்லை டவுன் குதிரை லாயம் [இப்போது அங்கே அருணகிரி தியேட்டர்] துவங்கி, குறுக்குத் துறை முருகன் கோவில் வரை, செறிந்து அடர்ந்து உயர்ந்து நின்றிருந்த பல நூறு நீர் மருதைகளில் இன்று ஒன்றே ஒன்று கூட எஞ்சவில்லை. பொருணை படித்துறை அருகே நின்றிருந்த மூன்று பிரும்மாண்ட மரங்களில், கிளை தெரியா வண்ணம் கொழுத்த பழம் தின்னி வௌவ்வால்கள் செறிந்திருக்கும். [அதன் கீழ் அமர்ந்து, அப்பா அம்மா உடன் பதநீரில் பொங்கிய அரசி பொங்கல் உண்டிருக்கிறேன். அன்று எங்கள் கூட்டு குடும்ப வீட்டில், ஒவ்வொரு குடும்பத்துக்குமான தனி அறையோ, இருக்கும் ஒரே அறைக்கு கதவோ கிடையாது, எனவே பொருணைக்குள் வைத்துதான் நீ கரு புகுந்தாய் என அப்பா சிரித்துக்கொண்டே சொல்வார். நான் கரு நிறைத்த நதி. தாத்தாவின் அஸ்தியை கரைத்த நதி ] எல்லாம் எல்லாம் நமது பேராசைக்கும், அற்பத்தனத்துக்கும் ஈடு கொடுக்க முடியாமல், நினைவுகளுக்குள் குடி பெயர்ந்து விட்டன.

வட தேசம் போல, நதிகளை வணங்கி நமது நாட்களை கடத்திய பண்பாட்டை தமிழகம் என்றோ இழந்து விட்டது. வருடம் ஒரு முறை கள்ளழகர் ஆற்றில் இறங்குவார். மறுநாள் கரை முழுதும் குப்பை காடாக இருக்கும். எந்த ஊர் ஆற்று திருவிழாவிலும் இதே நிலைதான். இன்றைய இளைய தலைமுறைக்கு ”ஆறு ” என்பது ஊரின் கழிவுகள் வெளியேறும் இடம் என்று மட்டுமே பதிவாகி இருக்கிறது.

இத்தகு சூழலில் இளைய மனங்களை அதிகமும் வசீகரித்த ஜக்கி, நதிகளை காப்போம் என அனைவரையும் அழைத்திருப்பது மகிழ்வாக இருக்கிறது. இந்த இயக்கத்துடன், அவர் முன்பு கைக்கொண்டிருக்கும் மரங்கள் நடும் திட்டத்தையும் விரைவில் இணைத்துக் கொள்வார் என யூகிக்கிறேன். கடலூர் கெடிலம் நதி கரைகளை பலப்படுத்த, பனை வாரியம் வழியே, கரை நெடுக பனை மர கன்றுகள் விதைத்து பராமரிக்கும் திட்டம் ஒன்று முன்பு அரசால் கொண்டு வரப்பட்டு, அத்திட்டம் கெடிலம் நதி கழிவுகளுடன், கைகழுவப்பட்டது. அதை தன்னார்வலர்கள் கொண்டு செயல்படுத்தி பார்க்கலாம். இப்படி தமிழ் நிலத்தின் ஒவ்வொரு நதிக்கும், அரசு முன்னெடுக்க முயன்று கைவிடப்பட்ட திட்டம் ஒன்றிருக்கும். ஈஷா அதில் கவனம் குவிக்கலாம். நிற்க.

ஜக்கி லிட்டருக்கு நான்கு கிமி மட்டுமே பயணிக்கும் அதி உயர் சொகுசு காரை பயன்படுத்துகிறார். சூழலை சீர் கெடுக்கும் இவரா நதிகளை காக்கப் போகிறார் என்றொரு பெயரற்ற [மடையனுக்கு என்ன பெயர் இருந்தால் என்ன ? மடையன் மடையன் அல்லாமல் ஆகி விடுவானா என்ன?]

எவனோவின் பதிவு, முகநூல் மற்றும் வாட்சப்பில் பரவிக்கொண்டு இருக்கிறது. இந்த மடையர்களுக்கு என்ன வேண்டுமாம்? ஜக்கி குமரி முதல் இமயம் வரை அங்கப் பிரதட்சிணம் செய்ய வேண்டுமா என்ன?

மடமைகளை புறம் தள்ளி, வேறுபாடுகளை மறந்து இளைஞர்கள், தமிழர்கள், இந்துத்துவர்கள், நடிகர்கள், அவர்களின் ரசிகர்கள், பொதுமக்கள் என அனைவரும் ஒன்று திரண்டு, ஒரு ஆக்கப் பூர்வமான செயலில் ஒன்றிணைய உருவாகி வந்திருக்கும் நல்ல வாய்ப்பு இது. கடலூரில் நிகழும் பணியில் சிறு துளி என எனது, மற்றும் எனது நண்பர்களின் பங்களிப்பு இருக்கும்.

நம்பிக்கையுடன் துவங்கி, தளராமல் முன்னெடுப்போம். ஆம் நிச்சயம் ஒரு நாள் நதிகளை மீட்போம்.

சீனு

 ***

JM Sir,
“நதிகளை மீட்போம்” இயக்கத்தின் பொருட்டு திருச்சியில் ஒருங்கிணைப்பு பணிகளில் ஈடுபட்டிருக்கும் பொழுதுதான், தாங்கள் மதுரை நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ளும் செய்தி கிடைத்தது. நேரில் பார்க்க இயலவில்லையெனினும், என்னுள் ஓர் குதூகலம்.

தமிழகத்தில், இவ்வியக்கத்தின் பொருட்டு நடந்து வரும் நிகழ்ச்சிகளில், எவரும்
மூன்று நிமிடத்தில், இவ்வளவு செறிவுடனும், இயக்கத்தின் நோக்கத்தைக் குறித்தும் கூறவில்லை.

உங்கள் வாசகனாக, உங்களை மேடையில் பார்த்த பெருமிதத்துடன், ஈஷாவின் தன்னார்வலனாக நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

https://www.youtube.com/watch?v=rAnJ5pidyO8&feature=

அன்புடன்,
மகேஷ்.

***

முந்தைய கட்டுரைவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 1
அடுத்த கட்டுரைநத்தையின் பாதை- கடிதங்கள்