காலையில் வியாபாரிகள் வந்தபோதுதான் ஆசான் அறிந்தார். வெள்ளைச்சட்டையும் கறுப்பு தோல்பையுமாக மூன்றுபேர் முற்றத்தில் நிற்பதைக் கண்டபோது வைத்தியத்திற்கு வந்தவர்கள் என்றுதான் நினைத்தார். “கேறி வாருங்க… என்னவாக்கும் காரியம்?” என்றபடி மேல்துண்டால் முகத்தைத் துடைத்தபடி திண்ணைக்கு வந்தார்.
“இங்க கெணேசன்… பஞ்சாயத்தாப்பீஸிலே சோலி பாக்குறவரு…” என்றார் முதலில் நின்ற வழுக்கைத்தலையர்.
“எனக்க பயதான்… குளிக்குதான்.. இரியுங்க” என்று அவர் பிளாஸ்டிக் நாற்காலிகளை இழுத்துப்போட்டார். அவர்கள் அமர்ந்தபின் அவர் உள்ளே செல்வதற்காக திரும்பினார். வழுக்கையர் “நாம ஆருண்ணு சொல்லியே”
“எனக்கபேரு பாலப்பன்…வர்மாணி வைத்தியராக்கும்” என்றார் ஆசான்
“ஓ கேட்டிட்டுண்டு… எனக்க மூத்தமாமன் பனையிலேருந்து விளுந்தப்பம் தடவி செரியாக்கினது இங்கிணயாக்கும்” என்றார் இன்னொரு கரியவர்
“ஆமா, அப்பம் இங்க வைத்தியசாலை இருந்தது. ஏளெட்டு பயக்க சிஷ்யன்மாரா இருந்தானுவ. இப்பம் எல்லாம் நிறுத்தியாச்சு. வயசாச்சுல்லா” என்றார் ஆசான். ”நான் உள்ள போயி மருமக கிட்ட காப்பியோ டீயோ கொண்டுவரச் சொல்லுதேன்”
அவர் உள்ளே சென்று பொன்னம்மையிடம் “ஏட்டி, உனக்க கெட்டினவன ஆரோ தேடிவந்திருக்காவ” என்றார்
“ஆ, அயினி பாக்குததுக்கு வந்திருக்காவ…” என்று அவள் வெளியே சென்றாள். அவர்களிடம் அவள் ஓரிரு வார்த்தைகள் வரவேற்பாகச் சொல்லிவிட்டு திரும்ப வரும்போது அவர் அவளை தடுத்தார்
“அயினிய விக்குததா? ஆருக்க கிட்ட கேட்டுட்டு விக்குதிய? நான் சாவுதது வரை இந்த அயினி இங்கதான் நிக்கும்… நான் சொன்னா சொன்னதாக்கும்” என்றார்
அவள் அவருக்குப்பின்னால் பார்க்க தலைதுவட்டியபடி வந்த கணேசன் “ஆருகிட்ட கேக்கணும்? நான் முடிவுசெஞ்சாச்சு” என்றான்
“அடிச்சு செவுளப்பேத்திருவேன்… நீ விக்குதத பாக்குதேன்…ஏலே” என்று ஆசான் மூச்சிரைக்க கையை ஓங்கியபடி முன்னால் சென்றார்
“அடியும் பாப்பம்… வே அடியும் பாப்பம்… அப்பன்னு பாக்க மாட்டேன். அடிச்சு முகரைய நவுத்திருவேன்..” என கணேசன் முன்னால் வந்தான்
“அய்யோ இது என்ன செய்யுதீக? வீட்டுக்கு அன்னிய ஆளுக வந்திருக்காவ” என பொன்னம்மை குறுக்கே பாய்ந்தாள்
“நான் விப்பேன்… இண்ணைக்கே விலைபேசி அட்வான்ஸும் வாங்குவேன்… இவரு என்ன செய்யுதாருண்ணு பாக்கேன்” என்றான் கணேசன்
“உன்னையும் கொன்னுட்டு நானும் சாவேன்ல”
“போயிச்சாவும்வே” என்றான் கணேசன்
“நீங்க போறியளா? போங்க” என்றாள் பொன்னம்மை
கணேசன் வெறுப்புடன் முறைத்தபடி வெளியே சென்றான். “வாங்க வாங்க… மரத்தப் பாத்திருவோம்” என்ற குரல் கேட்டது
குரல் தழுதழுக்க “வெட்டிப்போட்டிருவேன்… உன்னாணை வெட்டிப்போட்டிருவேன்” என்றார் ஆசான்
“ஆமா வெட்டுதீரு… வயசாச்சுல்லா? இனிமே எதுக்கு இந்த நிலை நிக்குதீரு? உம்ம மகன்லா? அந்தப்புத்தி இருக்கும்லா?” என்றாள் பொன்னம்மை
ஆசான் மூச்சுவாங்க அங்கணத்து திண்ணையில் அமர்ந்து “நான் சாவுதேன்… எங்கிணயாம் போயி சாவுதேன்” என்றார்
“என்னத்துக்கு இந்த நிலை நிக்குதீரு? அந்தப்பணத்தில சின்னவளுக்கு பத்துபவுனுக்கு நகை வாங்கிபோடணும்னு சொல்லுதாரு… வீடுநெறைஞ்சு நிக்குத பெண்ணாக்கும். ஒரு பொன்னுபண்டம் வேண்டாமா?”
“அதுக்கு நெலத்த விக்கச்சொல்லு… மாட்ட விக்கச்சொல்லு… அந்த அயினிய விக்க நான் விடமாட்டேன்”
“ஏன், செத்து அந்த வெறகிலே எரியணுமாக்கும்? வேற நல்ல புளிவெறகு கொண்டு வந்து அடுக்குதேன். சொல்லு உனக்க மாமனாருகிட்ட” என்றான் அந்த வழியாகச் சென்ற கணேசன்
“வெட்டி கொடல எடுத்திருவேன்… நாறப்பயலே” என ஆசான் எழுந்தார்
“சும்மா இருக்குதியளா? வெட்டும்குத்தும் வயசான காலத்திலே” என்றாள் பொன்னம்மை
வீட்டுக்குள் இருக்க முடியவில்லை. எழுந்து வாக்கத்தியையும் சிறுகோடரியையும் எடுத்துக்கொண்டு வெளியே சென்றார். அவரைக் கண்டதும் கரியபசு திரும்பி “றேங்?” என்று கேட்டது. பெருமூச்சுடன் நடந்து இடைவழியில் இறங்கினார்
கிழக்குத்தோட்டத்தில் அயினி மரம் நின்றுகொண்டிருந்தது. கீழ்க்கிளைகளில் காய்விட்டிருந்தது. நூறுவயதுக்குமேல் ஆகியிருக்கும். நான்குபேர் சேர்த்தணைக்க முடியாத பெரிய உடல். பிரம்மாண்டமான கண்ணாடிவிரியன் போல வெண்ணிற வட்டங்கள் படிந்த உருண்ட தடி. முப்பதடி உயரத்திற்குப்பிறகுதான் முதல்கிளை. இத்தனை நேரான இவ்வளவு வைரம்பாய்ந்த அயினித்தடிகள் இன்று அனேகமாக எங்குமிருக்காது.
ஆறேழு வருடங்களாகவே அதைத் தேடி வந்துகொண்டிருந்தார்கள். இன்று மலேசியமரம் கப்பலில் வருகிறது, அதில்தான் வீடுகட்டுகிறார்கள். ஆனால் பலா, அயினி போன்ற கனிமரங்களில் உத்தரமிட்டால் வீட்டில் பிள்ளைகள் செழிப்பார்கள் என்ற நம்பிக்கை உண்டு. ஆகவே பணமிருப்பவர்கள் எந்த விலைகொடுக்கவும் முந்துவார்கள். ஒருலட்சத்தில் தொடங்கி இப்போது நான்கு லட்சம் வரை பேசிக்கொண்டிருக்கிறார்கள்
கணேசனுக்கு அந்நிலத்தை ரப்பர்த்தோட்டமாக ஆக்கிவிடலாமென்று எண்ணம். அயினி மரம் மட்டும் கிட்டத்தட்ட எட்டு செண்ட் நிலத்தை மூடியிருந்தது. அதனால் எந்த லாபமும் இல்லை.
“பாட்டா, அயினிய வெல பேசியாச்சுண்ணு சொன்னாவ?” என்றபடி பின்னால் எருமையுடன் குணமணி வந்தான்
ஆசான் ஒன்றும் சொல்லாமல் நடக்க எருமை அவரை முகர்ந்துபார்த்தது
“நல்ல வெலையாக்கும்… நாலு லெச்சம். இது நிண்ணு என்னத்துக்கு? இப்ப வெட்டினா நல்லது. இன்னும் நிண்ணா அடிமரம் அப்டியே காலியா போயிரும்லா?” என்றபடி குணமணி உடன் நடந்தான். “நிண்ணு ஒரு லாபமும் இல்ல. பளையகாலத்திலே அயினிப்பளம் திம்போம். அதுக்க கொட்டையிலே எண்ணை எடுப்போம்… இப்பம் அதெல்லாம் ஆருக்கும் தெரியாதுல்லா?”
“ஏல மரம் பளுக்குறப்ப நீ பாத்திருக்கியா? இந்த சுத்துவட்டத்திலே உள்ள அத்தன கிளியும் குருவியும் மைனாவும் இங்கதான் இருக்கும். மனுசன் தின்னாட்டி என்னலே?” என்றார் ஆசான். “இது அம்மையாக்கும்… மனசுநெறைஞ்சு அள்ளி அள்ளி குடுக்குதவ…”. அயினியை நிமிர்ந்து நோக்கி பெருமூச்சுவிட்டபின் நடந்தார்
குணமணி குரலைத் தாழ்த்தி “அதுக்கு இப்பம் என்ன செய்ய? அடுத்த தலைமுறை தலையெடுத்தாச்சு… அவனுகளுக்கு வேண்டியது பணம்லா?” என்றான் . பின்னர் “அவனுகளையும் சொல்லிக்குத்தமில்ல…இந்தக்காலத்திலே எல்லாத்துக்கும் பணம் வேணும்… நோட்டுநோட்டா வாரிவச்சாலும் தீராது”
ஆற்றுக்குள் இறங்கி நீரின் ஒளியைப் பார்த்தபோது அவர் முடிவெடுத்துவிட்டிருந்தார்.அந்த முடிவுக்கு முன்னரே வந்துவிட்டிருக்கவேண்டும், அதை அவரே அறிந்தது அப்போதுதான். “ஏலே, நான் தெக்கேவெளைக்கு போயி அங்க இருக்கலாம்னு நினைக்கேன்…”
“தெக்கே காட்டிலயா? அங்க எதுக்கு?”
‘அந்த குடிலும் போரும் இனி… தடவிவிட வாரம் நாலுபேரு வாறானுக. அந்தப்பைசா நமக்கு போரும். பேங்கிலயும் ஒரு தொக கெடக்குது” என்றார் ஆசான்
“இனின்னா?”
“இனியுள்ள காலம்… ஒருவருசம்னா அப்டி, ரெண்டு வருசம்னா அப்டி. முத்தாலம்மைக்க கணக்கு”
“தனியாட்டா?” என்றான் குணமணி
“ஆமா, நான் பைசா தாறேன். நீ கடைக்குப்போயி ஒரு ரெண்டுகிலோ அரிசியும் உப்புபுளிவெஞ்சனமும் வாங்கிட்டு வா. பின்ன ஒரு நாலஞ்சு பாத்திரம் வேணும். ஒரு ரெண்டு வேட்டி துண்டு வேணும். அத நாளைக்கு நான் சந்தையிலே போயி வாங்கிக்கிடுதேன்”
“சொந்தமா சமைச்சு திங்கப்போறியளா? இந்த வயசிலே”
“ஒருநேரம் பொங்கினா போரும்லே”
“பொங்கினா போராதே. நாக்கு ருசி கண்டு திங்குத ஆளுல்லா?”
ஆசான் ஒன்றும் சொல்லவில்லை. கண்கள் மேல் கைவைத்து ஆற்றுநீரை நோக்கிக்கொண்டிருந்தார். பின்னர் “ஏலே நீ அயினிப் புளிசேரி சாப்பிட்டிருக்கியா?” என்றார்
“என்னது?”
”அயினிப்புளிசேரி.. பிஞ்சு அயினிக்காய் நல்லா புளிக்கும் பாத்துக்க. சும்மா வாயிலே வச்சேன்னாக்க நாக்கு கூசி உடம்பு வெறைச்சிரும். அதப்போட்டு புளிசேரி வைக்குதது ஒரு கலை… கணக்கா உப்பும் பச்சமிளகாயும்போடணும். தேங்கா நல்ல எளசாட்டு இருக்கணும். தேங்காயெண்ண விட்டு கொஞ்சம் இஞ்சி சதைச்சுப்போட்டு தாளிச்சு நல்லா சுண்டி வெண்ணை உருகினது மாதிரி ஆகிறப்ப எறக்கணும்… சோத்தில விட்டா என்ன ஒரு மணமாட்டு இருக்கும்னு தெரியுமா?”
“ஓ” என்றான் குணமணி
“உனக்கெல்லாம் என்னலே ருசி தெரியும்? செத்ததத் தின்னு நாக்கு செத்த பய நீ”
“புளிசேரி ருசிதான் ருசியாக்கும்?”
“லே, ருசியறிஞவனுக்கு ரெண்டு குணமிருக்கும். சின்ன ருசிகள அவன் கண்டுகிடுவான். ஒவ்வொண்ணிலயும் ஒவ்வொரு ருசியுண்டுண்ணு தெரிஞ்சிருப்பான். அதனால அவனுக்கு கடவுள்படைச்ச இந்த மண்ணிலே எல்லாமே ருசியாட்டு தெரியும்… ஏலே கோடிக்கணக்கா ருசியிருக்குலே இந்தப்பூமியிலே”
குணமணி “அயினிப்பளத்துக்க சொளை நல்ல இனிப்பாட்டுல்ல இருக்கு? பின்ன எதுக்கு காயி அந்தப்புளி புளிக்குது?” என்றான்
“ஏலே, நீ பாத்திருக்கியா? பழத்திலே இனிக்குததுதான் காயிலே புளிக்குது , இல்லேண்ணா கடுக்குது. புளிப்பும் கசப்பும் மூத்து கனிஞ்சா அது இனிப்பு…”
அவர் நீரில் இறங்கி முகம் கழுவிக்கொண்டார். எருமை நீரில் தலைமட்டும் தெரிய மூழ்கிக் கிடந்தது. அதன் காதுகள் படகின் துடுப்புகள் போல நீரைத் துழாவின
“பாட்டா, மருமவ அயினிப்புளிசேரி வச்சு தாறதுண்டா? அயினிமரம் எளங்காய் விட்டிருக்குல்லா?” என்றான் குணமணி, கரையோர பொடிமணலை எடுத்து பல்தேய்த்தபடி
“ஆமா வச்சுதாறா… ஏல அவளுக்கு என்ன தெரியும்? நான் அயினிப்புளிசேரி வச்சு சோறுதின்னு வருசம் நாப்பதாகுது” என்றபடி ஆசான் முகத்தைத் துடைத்தார்
“ஆச்சி செய்வாளோ?” என்றான் குணமணி
“ஆரு, ரெண்டாமத்தவளா? அவளுக்கு வடக்கே பாண்டிப்பக்கமில்லா நாடு. அவ சமையல் வேற. இது மூத்தவ செய்யுதது” என்றார். “செரி, வாறண்டே. நீ சாமான வாங்கிட்டு வா…”
அவர் முதுகுக்குப்பின்னால் “செம்புமூட்டு ஆச்சி இப்பம் அருமனையிலயாக்கும் தாமசம், போனவாரம் சந்தைக்குப்போனப்ப பாத்தேன்” என்றான் குணமணி
ஆசான் ஒன்றும்பேசாமல் நின்றார். திரும்பிப்பார்க்கவுமில்லை
“அவியளுக்கு ரெண்டு மகளாக்கும். மூத்தது செத்துப்போச்சு, ரெண்டாமத்தவளுக்க கெட்டினவனும் செத்தாச்சு. அவ அருமனையிலே வாத்திச்சியா இப்பம் வந்திருக்கா. ஆச்சி மகளுக்கக்கூட இருக்குதா”
ஆசான் செருமிக்கொண்டு “பீடி இருக்காலே?” என்றார்
“பீடியா? பீடி பிடிக்கமாட்டியள்லா?” என்றான் குணமணி
“சின்னவயசிலே பிடிச்சிட்டுண்டு… ” என்றார் ஆசான்
குணமணி மடியிலிருந்து ஒரு பீடியையும் தீப்பெட்டியையும் அளித்தான். ஆசான் அதை நாலைந்துமுறை உரசியபின்னர் பற்றவைத்துக்கொண்டார். புகையை ஊதியபடி கரையில் தாழைப்புதர் நிழலில் நின்றார்
“கேட்டா தப்பா நினைக்கப்பிடாது… மூத்த ஆச்சி ஏன் அத்துக்கிட்டு போனாவ?”
“அது பளைய கதைல்லா… நாப்பது வருசமாச்சு”
குணமணி “அப்பம்லாம் அத்துக்கிடுதது கூடுதலோ?” என்றான்
“அந்தக்காலத்திலே காசுள்ள வீடுகளிலே பெட்டைக அத்துக்கிட்டு போகும்ங்க” என்றார் ஆசான். “அவ பேருகேட்ட எலஞ்சிக்கல் பெருவட்டருக்க ஒத்த மக. நான் பனையேறி செம்பனுக்க மகன். பாத்து இஷ்டப்பட்டு கெட்டினதாக்கும். சேந்த பிறகு செரிவரல்ல. அவளும் ஒரு இஞ்சு எறங்கல்ல. எனக்கும் திமிரு. செரி இப்பம் அதையெல்லாம் நினைச்சா மனசிலே பளைய கசப்பு கேறி நிறைஞ்சிரும்…”
“கூட்டிட்டுப்போயிட்டாவளோ?”
“பொண்ணுக்கு நாக்கு சாட்டை. ஆம்புளைக்கு கை சாட்டை… மதிக்காம ஒரு பேச்சு வந்தப்ப நான் ஒரு அடி அடிச்சேன். மண்டை உடைஞ்சுபோச்சு. அவ அண்ணன்மாரு வந்தானுக. ரெத்தத்த கண்டதும் அவ தாலிய அறுத்து எனக்க மேலே எறிஞ்சுட்டு வாடீன்னு கூட்டிட்டுப்போனானுக. அடுத்த ஆவணியிலே அருமநல்லூரிலே வேற ஆளப்பாத்து கெட்டிக்குடுத்தாச்சு…”
“பிள்ளைக இல்ல இல்ல?”
“ஏல, சேந்து வாழ்ந்தது வெறும் ஒம்பதுமாசம்லா?” என்றார் ஆசான் “செரி விடு. நாப்பது வருசம் முந்தின கதை. எல்லாம் மண்டையெளுத்து… நான் வாறண்டே”
மணலில் நடந்து செல்லும்போது ஓர் எண்ணம் வந்தது. திரும்பிச்சென்று அயினியின் அடியில் நின்றர். மரம் நன்றாக மூத்துவிட்டிருந்தமையால் குறைவாகவே காய்த்திருந்தது. காய்களும் சிறியவை.
கீழே நின்று கற்களைப்பொறுக்கி எறிந்தார். பலமுறை குறிதவறியபின் இரண்டு அயினிக்காய்கள் விழுந்தன. தோலின் மெல்லிய முட்கள் உடைந்து பால் கசிந்தது. காம்பிலிருந்து ஊறிச்சொட்டியது
அவற்றை எடுத்துக்கொண்டுவந்து ஆற்றில் கழுவி துண்டில் முடிந்துகொண்டார். ஆற்றைக்கடந்து தோப்பில் ஏறி தெற்குத்தோட்டத்திக்குச் சென்றார். முருக்குமரங்களால் வேலியிடப்பட்ட தோட்டம். உள்ளே தென்னைகளும் மாமரங்களும் பலாமரங்களும் செறிந்திருந்தன. நிழல் இருட்டுபோல தெரிந்தது.
தேங்காய்களைப் போட்டுவைக்கும் கொட்டகைக்கு அருகே கமுகுத்தடிகளை ஊன்றி கூரையிட்டு மண்குழைத்துச் சுவர் கட்டிய குடிசை. அதன் ஓலைக்கூரை காற்றில் கிழிந்து பறந்துகொண்டிருந்தது. கமுகுப்பாளை செருகி சீர்ப்படுத்தாவிட்டால் இரவில் பனி இறங்கும்.
மூங்கில்தட்டியாலான கதவைத்திறந்து உள்ளே சென்றார். உள்ளே கூரைவழியாக வெளிச்சம் வந்து சாணிமெழுகிய தரையில் விழுந்து கிடந்தது. குழல்விளக்கேற்றியது போல அதன் வெளிச்சம் செம்மண் சுவர்களை மின்னச்செய்தது
மண்குடத்தை எடுத்துக்கொண்டுசென்று கிணற்றிலிருந்து நீர் மொண்டுவந்து வைத்தார். சமைப்பதற்குச் சட்டிகள் இருந்தன. உப்பு இருக்கிறதா என்று பார்த்தார். சிறிய மரச்சட்டியில் கல்லுப்பு இருப்பதைக் கண்டதும் எழுந்து சென்று தோட்டத்திலிருந்து பச்சைமிளகாய்கள் பறித்துவந்தார். துரட்டியால் உந்தி ஒரு இளந்தேங்காயை பறித்தார்
தேங்காயை உடைத்து அரிவாளால் கீறி எடுத்து பின்பக்கம் கிடந்த கல்லில் வைத்து நசுக்கினார். அயினிக்காய்களின் முட்பரப்பை சீவி எறிந்துவிட்டு துண்டுகளாக ஆக்கினார். பால் கைகளில் ஒட்டியது. தேங்காயின் நீரை புளிசேரியில் சேர்க்கவேண்டும் என்று ஞாபகம் வந்தது. தாளிக்கமுடியாது. கடுகு, தேங்காயெண்ணை ,கறிவேப்பிலை, இஞ்சி எதுவுமில்லை.
அடுப்புமூட்டி சட்டியை ஏற்றிவைத்து குழம்பை கலந்தார். பானையில் எப்போதும் கொஞ்சம் அரிசி வைத்திருப்பது கணேசனின் வழக்கம். இரண்டு கைப்பிடிதான் இருந்தது. அதைக்களைந்து சிறியகலத்திலிட்டு கொதிக்கவைத்தார்
அயினிக்காயின் புளிமணமும் பச்சைமிளகாய் மணமும் கலந்து குழம்பு கொதிக்கையில் நாவூறியது. இறக்கி வைத்துவிட்டு சோற்றை வடித்தார். தோட்டத்திற்குள் சென்று வாழையிலையை வெட்டிக்கொண்டு வரும்போது குணமணி தலையில் மூங்கில்கூடையுடன் வந்தான்
“பாட்டா என்ன எலையும் கையுமா? சோறுபொங்கியாச்சா?”
ஆசான் இலையுடன் உள்ளே சென்று அமர்ந்தார்
“என்ன மணமாட்டு இருக்கு? புளிசேரியா?” என்றபடி குணமணி கூடையை இறக்கினான்
“செரியா வரல்லடே…” என்றார்
”நான் போறேன்… சாப்பிடும்.. அரிசியும்பருப்பும் எல்லாம் இதுக்குள்ள இருக்கு” என்றன் குணமணி “உம்ம வீட்டுப்பக்கம் போனேன். சங்கதியச் சொன்னேன். அவரு மனசுபோல நடக்கட்டும்னு சொன்னாரு உம்ம மகன்”
ஆசான் தலையசைத்தார்
”அயினிய நாளைக்குக் காலம்பற வெட்டுறானுக… இப்பமே வாளோட ஆளு வந்தாச்சு…”
ஆசான் அதற்கும் ஒன்றும் சொல்லவில்லை. குணமணி ”வாறேன் பாட்டா” என விடைபெற்றுச் சென்றான்
ஆசான் சற்றுநேரம் தோட்டத்தைப்பார்த்தபடி அமர்ந்திருந்தார். பின்னர் உள்ளே சென்று சோற்றை இலையில் கொட்டினார். புளிசேரியை அகப்பையால் விட்டு பிசைந்தார். புளிப்பு மண்டையில் அறைந்தது. உப்பு மேலும் சற்றுபோட்டிருக்கவேண்டும். ஆனால் உப்பைச் சேர்த்தாலும் புளிப்பு குறையவில்லை.
உண்டுமுடித்தபின் மண் திண்ணையில் வந்து அமர்ந்தார். தோட்டங்களுக்குரிய குளிர்ந்த காற்று வீசியது. அப்படியே படுத்து தூங்கினார். கனவில் வேறெங்கோ இருந்தார். இளமையாக, திடமாக
விழித்துக்கொண்டபோது இரவாகியிருந்தது. நிலவு குடிசைக்கு நேர்முன்னால் பெரிதாக எழுந்து நின்றது. நெருப்பின் நிறமான நிலவு. ஆனால் குளிர்ந்தது. நாளைதான் பௌர்ணமி என்று நினைத்துக்கொண்டார்
நிலவை நோக்கியபடி அமர்ந்திருந்தார். இரவின் ஓசை மாறிவிட்டிருப்பதை உணர்ந்தபின்னர்தான் எழுந்து சென்று உள்ளே பாயை விரித்துப் படுத்தார். சற்றுநேரம் தூங்கி மீண்டும் விழிப்பு. எங்கிருக்கிறோம் என்று திகைத்தபின் பெருமூச்சுடன் அந்த இடத்தையும் அந்த உடலையும் உணர்ந்தார்
எழுந்து வந்து நோக்கியபோது நிலவு இருக்கவில்லை. நிழல்கள் எதிர்ப்பக்கமாக நீண்டு கிடந்தன. குடிலைச் சுற்றிக்கொண்டு சென்று பின்பக்கம் தென்னைமரங்களுக்கிடையே ஒளிவிட்டுக்கொண்டிருந்த நிலவை நோக்கினார். அது வளர்ந்து பெரிதாகிவிட்டிருப்பதாகத் தோன்றியது
விடிவதற்குள் சென்று கிணற்றுநீரை இறைத்துக் குளித்துவிட்டு வந்து விபூதியைப் பூசியபடி அமர்ந்து தியானம் செய்தார். அரிசியையும் சிறுபயறையும் ஒன்றாகச் சேர்த்து ஒரு கஞ்சி வைத்து குடித்தார். குணமணி வர்மசிகிழ்ச்சைக்காக வந்த இருவரை காலையிலேயே கூட்டிக்கொண்டு வந்தான். அவர்கள் சென்றபின் எஞ்சிய கஞ்சியைக் குடித்துவிட்டுப் படுத்துக்கொண்டார்.
எழுந்தபோது வெயில் சுண்டி நிறம் மாறியிருந்தது. தரையிலிருந்து உச்சிவெயிலின் வெக்கை எழுந்தது. காற்று உருகிப்பரந்து அசைவற்று நிற்பதுபோலத் தோன்றியது. சுவரின்மேல் சிகிழ்ச்சைக்கு வந்தவர்கள் அளித்த பணம் இருந்தது. அதை எடுத்து இடுப்பில் செருகிக்கொண்டு துண்டை தோளிலிட்டபடி நடந்தார்
சந்தைநாள் அல்ல. இருந்தாலும் பாதையிலும் சந்தைக்குள்ளும் ஓரளவு கூட்டம் இருந்தது. “ஆசானே, நம்ம பய ஒருத்தனுக்கு இடுப்பிலே ஒரு பிடித்தம். நாளைக்கு கொண்டுவரட்டா?” என்று கருப்பட்டி வியாபாரி ஞானவண்ணம் கேட்டான்.
“கொண்டுட்டு வாடே….நான் இப்பம் வீட்டிலே இல்ல. தெக்கேவெளையிலே குடிலிலே இருக்கேன். அங்க கொண்டுவா” என்றார்
செட்டியார் கடையில் இரண்டு வேட்டிகளும் துண்டுகளும் வாங்கிக்கொண்டார். அலுமினியப்பானை ஒன்றும் இரண்டு சிறிய பாத்திரங்களும் நான்கு கண்ணாடி டம்ளர்களும் வாங்கினார். அவற்றை பிளாஸ்டிக் வாளி ஒன்று வாங்கி உள்ளே போட்டு கையில் எடுத்துக்கொண்டார்
“பாட்டா சொவமா இருக்கியளா?” என்றாள் மீன்கார எலிசாள்
“மவன் எப்டிட்டி இருக்கான்? வேலைக்குப்போறானா?” ஆசான் கேட்டார்
“போறான்… இப்பம் பின்னயும் குடி தொடங்கியிட்டுண்டு” என்றாள் எலிசாள்
”அது கர்மமாக்கும்… அதுக்கு வைத்தியமில்லை” என்றார் ஆசான். “வாறேன் குட்டி…”
திரும்பி நடக்கும்போது கால்கள் எடைகொண்டவை போலத் தோன்றின. புதியவழி சற்று குழம்பியது. திரும்பிச்சென்று தார்ச்சாலையில் ஏறிவிடலாமா? ஏன் இந்தக்குறுக்குவழியில் வந்தோம்? கால்களே இட்டுவந்ததுபோல தோன்றியது
மேலும் சென்றபோது வழியைவிட உயரமான மண்வேலிக்குமேல் நின்றவளைக் கண்டார். பார்வையை விலக்கியபின் தயங்கி நின்றார்
“சந்தைக்கா?”
“ஆமா, கொஞ்சம் சாமானங்க வாங்கவேண்டியிருந்தது” என்றார் ஆசான். திரும்பிப்பார்க்காமல் “இப்டி கோலம்கெட்டுப் போனியேட்டி” என்றார்
”வயசாச்சுல்லா… ” என்றாள் “கெணேசன் எப்டி இருக்கான்?”
“இருக்கான்… நான் இப்பம் தெக்கேவெளை குடிலிலே தனியா இருக்கேன்”
“ஏன்?”
“ஒண்ணுமில்ல. எடம் நல்லா இருக்கு…. வயசுகாலத்திலே காத்தும் வெளிச்சமுமா இருக்கலாமே. மவ எப்டி இருக்கா?”
“அவளுக்கென்ன…”
சற்றுநேரம் அமைதி. அவள் மூச்சுவிடும் ஒலி கேட்டது. “வாறன்” என்று அவர் காலடி எடுத்துவைத்தார். பின்னர் நின்று திரும்பிப்பார்த்தார்
அவள் அவரை பார்த்துக்கொண்டு நின்றாள்
“வாறியாடீ?”
“வாறேன்” என்று சொல்லியபடி அவள் பாய்ந்து வேலியில் இருந்து கீழே இறங்கினாள்
“ஏட்டி மொள்ள…” என்றார் ஆசான். “இப்டியாவா வருவே?”
“எனக்கு வேற என்ன?” என்றாள்
“வா” என்றபடி ஆசான் நடக்க அவள் பின்னால் நடந்தாள். மூச்சுவாங்கும் ஒலி கேட்டது
“நேற்று அயினிப்புளிக்கறி வச்சேன்” என்றார் ஆசான்.. “செரியா வரேல்ல கேட்டியா”
தினமணி தீபாவளி மலர்