தன்னம்பிக்கை மனிதர்கள் -கடிதங்கள்

rajama

தன்னம்பிக்கை மனிதர்கள்

அன்புள்ள ஆசிரியருக்கு,

தங்களின் தன்னம்பிக்கை மனிதர்கள் படித்தேன். கிருஷ்ணன் ஏன் இவ்வளவு அலட்சியமாக இருக்கிறார். மிகவும் வருத்தமாக இருந்தது. இப்போது தேறி விட்டாரா! என் வரையில் மிகவும் நல்ல மனிதர். நான் அறிந்த வரையில் உங்களின் மிகவும் அன்பிற்கு உரியவர் மற்றும் தேர்ந்த வாசகர். கொல்லிமலை சந்திப்பில் நாங்கள் என்ன கேட்பது என்று விழித்தபோது மிக இயல்பாய் பேசி எங்களை சகஜமாக்கினார். அதுவும் நண்பர் ஒருவர் அக்கப்போர் பண்ணப்போய் கடைசியில் நீங்கள் பொறுமை இழந்த போதும் அனைவரையும் சகஜமாக்கினார். சற்றே பதட்டமாகவே இருக்கிறது.

-திருமலை

***

அன்புள்ள ஜெ

தன்னம்பிக்கை மனிதர்கள் வாசித்தேன். வீட்டில் பயங்கரமாகச் சிரிப்பதைக் கண்டு மனைவி வந்து என்ன என்ன என்று கேட்டாள். பல வரிகளில் உள்ள இடக்கு அபாரம். கைத்தாங்கலாக, ஈஸ்வரமூர்த்தியின் கைதான், என்பதுபோல. ஆனால் கட்டுரை முழுக்க உங்களுக்கு அந்த நண்பர்களிடமிருக்கும் அன்பும் நெருக்கமும் வெளிப்ப்பட்டது. கூடவே வெளிவந்த குறிப்பில் நீங்கள் பத்தாண்டுகளுக்கு முன்பு செய்த பயணத்தைப்பற்றியும் வாசித்தேன். ஆச்சரியமாக இருந்தது. இத்தனை தீவிரமான நட்பு இத்தனை ஆண்டுகளாக நீடிப்பது இன்றைய காலகட்டத்தில் மிகமிக அபூர்வமானது. வாழ்த்துக்கள்

செல்வராஜ்

***

அன்புள்ள ஜெ

தன்னம்பிக்கை மனிதர்கள் வாசித்தேன். அதில் பிரிட்ஜில் மீந்துபோன ஜூஸைகொடுக்க பாரில் டெங்கு நோயாளிகளை டயக்னைஸ் பண்ணி கண்டுபிடிப்பதைப்பற்றி வாசித்ததும் வெடித்துச் சிரித்துவிட்டேன். ராஜமாணிக்கம் சொல்லும் எஞ்சினியர் மருத்துவமும் ஹிலாரியஸ். ஆனால் உண்மை என்னவேன்றால் எனக்கு மூட்டுவலி வந்ததும் நான் என் துறையில் வியாபாரம் செய்பவர்களிடமிருந்துதான் ஆலோசனைகளைக் கேட்டுக்கொண்டிருந்தேன். அதை என் மனைவி சுட்டிக்காட்டியபோதுதான் அறிந்தேன்

ராஜப்பா

***

அன்புள்ள ஜெ,

கல் உப்புக்கு பதிலாக இந்துப்பை 120 நாள்கள் சமையலில் சேர்த்துக்கொள்ளளும்படி கிருஷ்ணனுக்கு வீரா சொன்ன காய்ச்சல் மருத்துவத்தையும் இதனால் ஈரோடு பகுதியில் இந்துப்புக்கு பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டு விலை ஏறிவிட்ட விபரத்தையும் விட்டுவிட்டீர்களே…. ;)) முக்கியமாக இன்னொன்று பிரிட்ஜில் அரைத்து வைத்த பப்பாளி இலைச்சாறு உண்மையிலேயே வீணாகி விட்டதா?

வேணு

***

அன்புள்ள வேணு

கிருஷ்ணன் தன் எதிரிகளின் பட்டியலைத் தயாரித்துக்கொண்டிருக்கிறார். அம்மைநோய் வரும்போதுதான் வாழ்க்கையை ஒட்டுமொத்தமாகப் பார்க்க முடிகிறது என்னும் கருத்தையும் கொண்டிருக்கிறார்

ஜெ

***

முந்தைய கட்டுரைதொல்பழங்காலம்
அடுத்த கட்டுரைதிமிரம்