மதுரை கடிதங்கள்

IMG-20170904-WA0004

[சந்திரமௌலி]

மதுரையில்….

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,

நீங்கள் மதுரையில் புத்தக திருவிழாவிற்கு வருகை தருகிறீர்கள் என தெரிந்த உடன் மிகுந்த சந்தோஷமடைந்தேன் உங்கள் பேச்சை நேரில் கேட்கலாம் என்று, விடுமுறை நாளான ஞாயிறன்று நீங்கள் வந்தாலும், பன்னாட்டு நிறுவனம் ஒன்றில் ஷிப்ட் வேலை பார்க்கும் என்க்கு அன்று வேலை!, இருந்தாலும் மதியம் மூன்று மணிக்கு அலுவகத்தில் சொல்லிவிட்டு மனைவியை அழைத்து வர சற்று நேரம் ஆகிவிட்டிருந்தது, வரும் பொழுது நீங்கள் அங்கிருந்தோர்க்கு கையெழுத்திட்டுக் கொண்டிருந்தீர்கள், இப்படி ஒரு வாய்ப்பு இருப்பது தெரிந்திருந்தால் வீட்டில் இருந்து விஷ்ணுபுரத்தை தூக்கிக் கொண்டு வந்திருப்பேன், புத்தகம் எதுவும் இல்லாததால் உங்களுடன் புகைப்படம் எடுத்துக் கொள்ளலாம் எனக் கேட்ட பொழுது நீங்கள் அவசரமாக எங்கோ சென்று கொண்டிருப்பதாகவும், காத்துக் கொண்டிருக்கிறார்கள் எனவும் கை காட்டினீர்கள், எதோ அவரசம் என்று புரிந்தது, சரி கை கொடுத்து விடை பெறலாம் என கை கொடுத்தேன், நீங்கள் சென்ற பிறகுதான் அலெக்ஸ் இறந்துவிட்டதாகவும் , உங்கள் பேச்சை முதலில் முடித்துவிட்டு கிளம்பினீர்கள் எனவும் தெரிந்தது. இது முன்னம் தெரிந்திருதால் அந்த அசந்தர்ப்பத்தில் அப்படி கேட்டிருக்க மாட்டேன், மன்னிக்கவும்.

எனினும் உங்களிடம் கை கொடுக்க எத்தனிக்கும் தருணத்தில் என் மனைவி செல்பேசியில் புகைப்படம் எடுத்துவிட்டார், சற்று நிலையில்லாத புகைப்படம் என்ற போதும் எனக்கு அது முக்கியமாகப்பட்டது, நான் உங்களை சந்திக்க கை கொடுக்கும் பொழுது நீங்கள் , “என்னை சந்திப்பது இருக்கட்டும், முதலில் அரங்கினுள் இருக்கும் புத்தகங்களை சந்தித்துவிட்டு வாரும்” என கூறுவது போல் பட்டது.

மீண்டும் ஒரு முறை உங்களை சந்திப்பேன் என்ற நம்பிக்கை உள்ளது.

சந்திரமௌலி ராமு

***

அன்புள்ள சந்திரமௌலி,

முதற்சந்திப்புகள் பெரும்பாலும் சம்பிரதாயமானவை. அடுத்தடுத்து சந்திக்கையில் மேலும் பேசமுடியுமென நினைக்கிறேன். என் அனுபவத்தில் நான் என் மதிப்புக்குரியவர்களைச் சந்தித்த எல்லா முதற்சந்திப்புகளும் எளியவையாகவே இருந்தன.

ஜெ

***

IMG_20170903_151255

[மருதுபாண்டியன்]

ஆசிரியர் ஜெயமோகன் அவர்களுக்கு வணக்கம்.

மதுரை புத்தக கண்காட்சியில் உங்களை சந்தித்தது மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது.

YouTube video விலும் புத்தகத்தில் எழுத்து வடிவிலும் பார்த்த ஓர் ஆளுமையை நேரில் சந்திக்கும் பொழுது ஒரு பதற்றம். ஏன் என்று தெரியவில்லை.

உங்களுடைய எழுத்து என் பார்வையில் மருந்துக்கு சமமானது.(முகஸ்துதி அல்ல)

எத்தனை தத்தளித்த மனதுக்கு இந்த எழுத்து மருந்தாக பயன்படுகிறது என்றால் அது மிகையாகாது.

( வாகன இட வசதி காரணமாக நம் நண்பர்களுக்கு இடையூறு ஏற்படுத்த விரும்பவில்லை. தங்கள் பயணம் இனிதாகுக )

என்றும் உங்கள் வாசகன்

சந்தோஷ்

வேம்பத்தூர்

சிவகங்கை மாவட்டம்

***

அன்புள்ள சந்தோஷ்

நீங்கள் வந்திருக்கலாம். இடமிருந்தது. பரவாயில்லை, இன்னொரு தருணத்தில் சந்திப்போம். மருந்து கொஞ்சம் கசப்பானது என நினைக்கிறேன்

ஜெ

***

எழுத்தாளர் ஜெயமோகன் அய்யா அவர்களுக்கு,

கடலூர் சீனு அவர்களின் பாணியில் இனிய ஜெயம் என்று அழைக்க ஆசை தான் ஆனாலும்…

புத்தக கண்காட்சியில் உங்களை கண்டு, ஓரிரு வார்த்தைகள் பேசி, இன்றைய காந்தியில் கையெழுத்து பெற்று கொண்டதே மிச்சம் இருக்கும் இந்த வருடத்தின் நாட்களுக்கான ஊட்டச்சத்து.

பதட்டத்தில் புகைப்படம் எடுக்க தோணவில்லை. இரண்டாம் முறை எனது மாணவர்களிடம் எடுங்களடா என்றேன் அவர்களும் உங்களை பார்த்துக்கொண்டே நின்று விட்டனர். நீங்கள் அரங்கிற்குள் வந்த போது உங்களுக்கு பின்னால் நின்று எடுத்து கொண்ட selfie மட்டும் இப்போதைக்கு போதும்.

நான் கோவில்பட்டி என்றவுடன் நாளைக்கும் வாங்க நான் இங்கே இருப்பேன் என்று உங்களுடைய phone number கொடுத்தீர்கள். எனக்கென்றால் ஆச்சரியம். பின்னர் ஒரு மின்னல் பொழுது கடலூர் சீனு அவர்களின் நம்பரை வைத்து நடந்த நிகழ்ச்சிகள் எல்லாம் நினைவிற்கு வந்தன. நம்பரை பதிந்த உடன் Whatsapp உள்ளது என்று காட்டியது. நீங்கள் smart phone இரண்டு நாள் பயன்படுத்தி விட்டு அருண்மொழி அம்மாவிடம் கொடுத்து விட்டதாக எழுதியிருந்தீர்கள். அதில் last seen sept 2016 என்று காட்டியது. சரிதான். Phone பண்ணி பேசினால் நிச்சயம் கோர்வையாக பேச முடியாமல் போகவே வாய்ப்பு அதிகம் அதனால் தான் இந்த கடிதத்தை எழுத ஆரம்பித்தேன்.

நீங்கள் வெ. அலெக்ஸ் அவர்களின் இறுதி சடங்கிற்கு செல்லவிருப்பதை சொல்லி உரையை முடித்தவுடன் கிளம்புவேன் என்றீர்கள். மேடையில் இருந்து இறங்கி வந்த உங்களை நான் தான் வழி மறித்து கையொப்பம் கேட்டேன். எனக்கும் என் மாணவர்களுக்கும். என் பின்னால் நான்கைந்து பேர் கையொப்பம் கேட்டு வந்து விடவே ஒரு நொடி குற்ற உணர்வு பிடிங்கி தின்று விட்டது. அடடா இப்படி செய்து விட்டேனே என்று.

பின்னர் நீங்கள் வண்டியில் ஏறும் வரை உடன் நடந்து வரலாமா என்று கேட்டேன் ஆனால் உங்களுக்கு அது சரியாக கேட்கவில்லை. நீங்கள் விறு விறுவென வண்டியை நோக்கி சென்று விட்டீர்கள். இந்திய நிலமெங்கும், உலகெங்கும் நடந்த கால்கள் என்ன துடிப்பாக இருக்கின்றன என்று நின்று பார்த்துக்கொண்டிருந்தேன். இதற்குள் அ. முத்து கிருஷ்ணனிடம் பேச ஒரு நிமிடம் வண்டியை நிறுத்தி விட்டு மீண்டும் கிளம்பி விட்டீர்கள்.

நான் 24/08/2017ல் தான் தூத்துக்குடியில் உள்ள கல்லூரியில் வேலைக்கு சேர்ந்தேன். திங்கள் (4/09/2017) RH என்று துறையில் பலர் விடுமுறையில் சென்று விட்டனர். இல்லா விட்டால் எப்படியேனும் விடுமுறை எடுத்து கொண்டு உங்களை காண வந்திருப்பேன்.

அடுத்த முறை உங்களை நேரில் காணும் வாய்ப்பிற்காக காத்திருக்கிறேன்.

மிக்க அன்புடன்

மருது பாண்டியன்

கோவில்பட்டி.

***

அன்புள்ள மருதுபாண்டியன்,

நீங்கள் மாணவர்களுடன் வந்தது மிகுந்த நிறைவளித்தது. கோயில்பட்டியில்தான் தேவதச்சன் இருக்கிறார். வித்யாஷங்கர், உதயஷங்கர், சரவணன் சந்திரன் போன்றவர்கள்கூட உங்கள் ஊர்க்காரர்கள்தான். அவர்களுடன் உங்கள் மாணவர்கள் சந்தித்து உரையாடும் தருணங்களை அமைக்கலாம். மீண்டும் சந்திப்போம்

ஜெ

***

முந்தைய கட்டுரைஅலெக்ஸ் -கடிதங்கள்
அடுத்த கட்டுரைதொல்காடுகளின் பாடல்