தன்மீட்சி
அன்புள்ள ஜெ.
உங்கள் வாசகர்களை இரண்டு வகையாகப் பிரிக்கலாம்.. உங்கள்
புனைவிலக்கியத்தின் பொருட்டு வாசிப்பவர்கள்.. இன்னொன்று அரசியல் சமூகக்
கருத்துக்களுக்காக வாசிப்பவர்கள்..
இதில் முதல்வகை ஆட்களுக்கு உங்கள் கருத்துக்களுடன் முரண்பட்டாலும் பெரிய
பிரச்சினை ஏதும் இல்லை.. ஆனால் இரண்டாம் வகை நபர்களின் நிலை மிகவும்
பரிதாபமானது..
உங்கள் கட்டுரையின் சாரம் அவர்களை ஈர்க்கிறது. உங்கள் அளவுக்குத்
தெளிவாக, வரலாற்றுப்புரிதலுடன் அரசியல் பேசும் சிந்தனையாளர்கள் நம்மூரில்
மிகக்குறைவு..
ஆகவேதான்சேஷகிரி போன்றவர்கள் ‘தயவுசெய்து மோடியைப் பாராட்டுங்கள்’ என்று
மன்றாடுகிறார்கள்..மறுதரப்பினர் மோடியைத் திட்டி ஏதேனும் வராதா என்று
வாய்பார்க்கிறார்கள்..
நீங்கள் லிங்காயத்துப் பற்றி எழுதிய கட்டுரை இந்துத்துவத் தரப்பிற்குப்
புளகாங்கிதம் அளிக்கும்.. ஆனால், கௌரி லிங்கேஷ் கட்டுரை நிலைகுலைவை
உண்டாக்கும்..என்ன செய்வது கூழுக்கும் ஆசை மீசைக்கும் ஆசை..
பிகு: நானும் மோடியை நம்பும் கூட்டத்தில் ஒருவன் தான்.. ஆனால், அந்த
நம்பிக்கையைக் காப்பாற்ற வேண்டிய பொறுப்பு மோடியிடம் இருக்கிறது, அதை
உங்கள் மேல் திணிப்பது மடத்தனம்..
நன்றி,
ரத்தன்
அன்புள்ள ரத்தன்
நலம்தானே? அரசியல் கருத்துக்களை ஏற்றுக்கொண்டு அதனடிப்படையில் வாழ்க்கைநோக்கை உருவாக்கிக் கொள்ள்வதைப்போல அசட்டுத்தனம் ஏதுமில்லை. வாழ்க்கையில் அரசியல் வகிக்கும்பங்கு மிகமிகக்குறைவு. ஓர் அரசு நம் சமூக வாழ்க்கையை, ஏன் பொருளியலையே கூட பெரிதாகப் பாதிப்பதில்லை என்றே இன்று நினைக்கிறேன். ஆட்சிமாற்றம் வழியாக எந்த மாற்றமும் நிகழாது. அதை உணர சில ஏமாற்றங்கள் நிகழவேண்டியிருக்கிறது
ஜெ
அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,
தன்மீட்சியில் உங்கள் எழுத்து யாரையும் மாற்றவில்லையே என்று வருந்தியிருந்தீர்கள்.யாரையும் முற்றிலும் உடனடியாக மாற்ற இயலாது.கீதையை படித்தவுடன் எல்லோரும் முற்றிலும் மாறிவிட்டார்களா.ஆனால் மாற்றம் உண்டு.காலம் தீர்மானிக்கட்டும்
நன்றி
பா.முருகானந்தம்
மதுரை.
அன்புள்ள முருகானந்தம்
இந்த மதுரைத்தங்கல் மிகுந்த உற்சாகத்தை அளித்தது. தூங்கிய ஐந்துமணிநேரம் தவிர மிச்சப்பொழுதெல்லாம் நண்பர்களுடனேயே இருந்துகொண்டிருந்தேன். அலெக்ஸ் நண்பர்களாக மாறிச் சூழ்ந்துகொண்டதைப்போல
ஜெ
ஆசிரியருக்கு,
வணக்கம். தன்முனைப்பு கட்டுரை மீண்டும் மீண்டும் வாசித்துக் கொண்டுள்ளேன். உங்கள் எழுத்துக்கள் நிச்சயம் தமிழகத்தில் பலருக்கு முக்கிய கணங்களை அறிமுகம் செய்து இருக்கும். உங்களை வெளியில் திட்டுவதாக சொல்லி தினம் சத்தம் போடாமல் வாசித்து மகிழும் நண்பர்களும் உண்டு. புகைப்படங்களும் பதிவுக்கு மிக பொருத்தமாக இருந்தன.
அரதி கட்டுரை வாசித்த பொழுதும் இது போன்றே மனதில் இருந்தது. அனேகமாக அந்த கட்டுரையை நினைகாத நாள் இல்லை, தன்முனைப்பும் அது போல பலநாள் இருக்கும். உங்கள் கர்ம யோகம் கீதை விளக்கம் மீண்டும் எடுத்து படித்தேன்.
நன்றி.
அன்புடன்
நிர்மல்
அன்புள்ள நிர்மல்
நலம்தானே?
இன்று என் அமெரிக்கப்பயணம் குறித்து எண்ணிக்கொண்டிருந்தேன். விரிந்த நிலம் வழியாகக் காரில் செல்லும் அனுபவம். அமெரிக்கா நாம் நெடுஞ்சாலையில் செல்கிறோம் என்பதை மறந்துவிட்டோம் என்றால் மகத்தான இயற்கைவிரிவு
நலமாக இருக்கிறீர்கள் அல்லவா?
ஜெ
அன்பிற்கிய ஜெ சார்
சமூக பிரிவினைகள் அனைத்துமே கலைஞர்களை பயன்படுத்தி கொள்ளவே விரும்பும். அல்லது அப்பிரிவினைகளை ஆதரிப்போர், கலைஞர் என்று வரையறுக்கும். முன்னிறுத்தும். ஆனால் கலைகளின் நோக்கம் அதுவல்லவே. எந்த வட்டத்துக்குள்ளும் கலைகள் நிற்கா. கலைகள் மானுடத்தின் எல்லைகளை விரித்து வைக்கின்றன.
டால்ஸ்டாய் தன் சொத்துகளை துறந்து இறந்தார். அவரின் எழுத்து கலை அவரை மேன்மையுற செய்தது. அழிவின்மையை அள்ளி பார்த்தவர்.
வாசிப்பவர் எல்லோரும் நல்லோரா? வாசிப்பின் மூலம் தன்னை மேம்படுத்த விரும்பிக்கொள்ளாத விரும்பாத வாசகர்கள் சிலரை நான் அறிவேன். இலக்கியம் ஒரு அந்தரங்க உரையாடல்தானே. அது பொதுவெளிக்கு அவ்வளவு எளிதில் வந்துவிடாது. டால்ஸ்டாய் ஐ வாசித்தவர்கள் எல்லோரும் உருப்பட்டுவிட்டார்களா? டால்ஸ்டாய் க்கு அப்படி ஒரு ஆசைதான் இருந்திருக்குமா? அவர் ஆசைப்பட்டே இருந்தாலும் எதிர்பார்த்து காத்திருந்தாரா?
இலக்கியம் பல நிகர்வாழ்க்கைகளை வாசிப்பவருக்கும் எழுதுபவருக்கும் அளிக்கிறது.நவீன இலக்கிய நாயகர்கள் நாமெல்லோரும்தானே.
ஜெயகாந்தன் சொன்னதை சொல்லி முடிக்கலாம்.
எழுதுவதால் நான் மேன்மையுறுகிறேன். எழுதுவதால் என் மொழி வளம் பெறுகிறது. என் மக்கள் இன்பமும் பயனும் எய்துகிறார்கள். எழுதுவதால் புரட்சிகள் தோன்றுகின்றன.இதற்காகவெல்லாம்தான் நான் எழுதுகிறேன். வாளினும் வலிமை பொருந்தியது எழுதுகோல். வாழ்க்கை போராட்டத்தில் நான் தெரிந்துகொண்ட ஆயுதம் எழுதுகோல். எழுதுகோல் என் தெய்வம்.
அன்பன்
அ மலைச்சாமி.
அன்புள்ள மலைச்சாமி
கண்ணூருக்குச் சென்றதுமே கஞ்சியை விரும்ப ஆரம்பித்ததாகச் சொன்னீர்கள். அதைப்பற்றியே எண்ணிக்கொண்டிருக்கிறேன். ஒரு நிலத்திலிருந்து உணவை பிரிக்கமுடியாதோ
ஜெ