வெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 7

இரண்டு : கருக்கிருள் – 3

fire-iconஅபிமன்யூ கௌரவவனத்தின் வாயிலை அடைந்ததுமே உள்ளே ஏரி உடைந்து அலையெழுநீர் அணைவதுபோல ஓசை கேட்டது. செறிவாக மரங்களை நட்டு உருவாக்கப்பட்ட கோட்டையின் வாயில் மூங்கில்களால் ஆனது. அங்கே காவலுக்கு இருந்த இரு வீரர்களும் முதியவர்களாக இருந்தனர். ஒருவரின் மீசையைத் தாங்கும் எடையே அவர் உடலுக்கிருக்காதென்று தோன்றியது. இன்னொருவர் ஒரு கண் மட்டும் கொண்டவர். சிப்பி போன்ற நோக்கிலாக் கண் அவர் நோக்குகையில் துள்ளியது. அபிமன்யூ அவர்களை அணுகி “உள்ளே செல்ல ஒப்புதல் வேண்டும்” என்றான்.

“இதற்குள் செல்லவா?” என்றார் முதியவர், கையூன்றி எழுந்து அருகே வந்தபடி. “ஏன்?” என்றான் அபிமன்யூ. “இதற்குள் பொதுவாக எவரும் செல்வதில்லை.” அபிமன்யூ “எவருமேவா?” என்றான். “ஆண்கள்” என்றார்

பூவிழியர். “இதை கலிவனம் என்று ஊரில் அழைக்கிறார்கள்” என்ற முதியவர் “நீர் ஏதோ வழிதவறி வந்தவர் என நினைக்கிறேன். உமது அன்னைக்கு நற்பேறு இருப்பதனால் உசாவினீர். திரும்பி ஓடிவிடும்” என்றார். பிரலம்பன் “ஓசை கேட்கிறது” என்றான். அபிமன்யூ “ஆம், போர்க்களம்போல ஓசை” என்றான். முதியவர் “ஓசையா? எங்கே?” என்றார். பூவிழியர் “இங்குதான் ஏதோ ஓசை எப்போதும் கேட்டுக்கொண்டிருக்கிறதே?” என்றபின் அபிமன்யூவிடம் “நேற்று பத்து அத்திரிகளை கயிறுகட்டித் தூக்கி மரங்களின் மேலிருக்கும் பரணுக்கு கொண்டுசென்றுவிட்டனர். அந்த உயிர்கள் கதறிய கதறலில் இங்கே எஞ்சியிருந்த காகங்களும் பறந்துசென்றுவிட்டன…” என்றார். அபிமன்யூ மெல்ல “நல்ல முரசுச்செவிடுகள்” என்றான். பிரலம்பன் புன்னகைத்தான். முதியவர் “எனக்கு காது கேட்காது. ஆனால் இதழ்களை படிப்பேன்” என்றார். அபிமன்யூ “இல்லை, நான் சொல்லவந்தது…” என்று சொல்லப்போக அவர் “முரசறைந்து தெரிவிக்கும் வழக்கம் இங்கில்லை. அரசகுடியினருக்குக்கூட” என்றார். பிரலம்பன் சிரிப்பை அடக்கியபடி வேறுபக்கம் திரும்பிக்கொண்டான். “நாங்கள் உள்ளே செல்லலாமா?” என்றான் அபிமன்யூ. “இங்கே எவரும் எதையும் எங்களிடம் கேட்பதில்லை… கேட்டால் நாங்கள் நெறிகளை சொல்வோம்” என்றார் முதியவர்.

மரக்கூட்டங்களின் நடுவேயிருந்து பன்றிக்கூட்டம் கிளம்புவதுபோல இளைய கௌரவர்கள் தோன்றினர். “ஒரு படை அணைவதுபோல!” என்றான் பிரலம்பன். “நூறுபேர் இருப்பார்களா?” என்றான் அபிமன்யூ. ஆனால் மேலும் மேலுமென வந்தபடியே இருந்தனர். முன்னால் வந்தவன் அபிமன்யூவைவிட உயரமாக பெரிய தோள்களுடன் இருந்தான். தொலைவிலேயே அலைஎழுந்த பெருந்தசைகளில் பற்களும் விழிகளும் தெரிந்தன. அனைவரும் வெவ்வேறு முகங்களும் தோற்றங்களும் கொண்டிருந்தாலும் அசைவால் உணர்வால் ஒன்றுபோலவே இருந்தனர். “நிழல்பெருக்கு போல” என்றான் பிரலம்பன். “நீர் இசைச்சூதருக்குப் பிறந்தவர்” என்றான் அபிமன்யூ.

அவர்கள் வந்த அதே விசையில் இருவரையும் அறைந்து தூக்க அபிமன்யூ அவர்களின் தலைகளின் கொந்தளிப்புக்குமேல் அலைபாய்ந்தான். பிரலம்பனைத் தூக்கி வானில் வீசிவீசிப் பிடித்தனர். “அபிமன்யூ! அபிமன்யூ” என குரல்கள் ஒலித்தன. “நான் இளவரசர் அல்ல… அவர்தான் இளவரசர்” என்று பிரலம்பன் கூவினான். பலமுறை அவனைத் தூக்கி வீசிய பின்னரே அவர்கள் அதை உணர்ந்தனர். அப்படியே அவனை நிலத்திலிட்டபின் அப்பால் வானில் தத்திச் சென்றுகொண்டிருந்த அபிமன்யூவை நோக்கி கூச்சலிட்டபடி சென்றனர். பிரலம்பன் புரண்டு அவர்களின் கால்களில் மிதிபட்டு உயிர்விடாமல் தப்பினான். அவர்களுக்குப் பின்னால் திகைத்து நின்றபின் “இளவரசே” என்று கூவியபடி ஓடினான்.

Ezhuthazhal _EPI_07

அவர்கள் கரிய ஒழுக்குபோல சென்று மரங்களுக்கிடையே மறைந்தனர். உள்ளே சுழற்காற்று புகுந்துவிட்டதுபோல காடு கொந்தளித்தது. கூச்சல்களும் சிரிப்போசையும் எழுந்தன. பிரலம்பன் ஓடிச்சென்று காவலர்களிடம் “எங்கே செல்கிறார்கள்?” என்றான். அவர்கள் அங்கே நிகழ்ந்தவற்றையே அறியாதவர்கள்போல இயல்பாக அமர்ந்துகொண்டிருந்தனர். முதியவர் வாயிலிட்டிருந்த பாக்கை கன்னத்தில் அதக்கியபடி “காட்டுக்குள் செல்கிறார்கள். அங்கேதான் அவர்களின் மாளிகைகள் உள்ளன” என்றார். “உள்ளே செல்லலாமா?” என்று பிரலம்பன் கேட்டான். “உள்ளே செல்ல விரும்புபவர்களை நாங்கள் இதுவரை கண்டதில்லை” என்றார் பூவிழியர்.

பிரலம்பன் திரும்பி காட்டுவழி நோக்கி ஓடினான். காட்டுக்குள் அத்தனை மரங்களின் அடியிலும் காலடிப்பாதைகள் இருந்தன. அவை ஒன்றுடன் ஒன்று பின்னி வலைபோல விரிந்தன. திகைத்தபின் ஓசைகேட்ட திசை நோக்கி அவன் சென்றான். மரங்களின்மேல் பறவைகளோ கிளைகளில் குரங்குகளோ இல்லை என்பதை அறிந்தான். சில மரங்கள் உடைந்தும் சரிந்தும் கிடந்தன. சில பாறைகள் உருண்டு மண்படிந்த அடிவயிற்றைக் காட்டியபடி கிடந்தன. ஒருசில கதைகள், உழலைத்தடிகள் வீசப்பட்டிருந்தன.

அவன் தொலைவில் மாளிகைநிரையைக் கண்டான் அஸ்தினபுரியின் அமுதகலசக் கொடியும் துரியோதனனின் அரவுக்கொடியும் அவற்றில் பறந்தன. பெரிய முற்றத்தில் ஏராளமான தேர்களின் உடைசல்கள் சிதறிக்கிடக்க அவற்றிலேயே புரவிகள் கட்டப்பட்டிருந்தன. அத்திரி ஒன்று கூரைவிளிம்பில் நின்றிருந்தது. அதை முதலில் சிலை என எண்ணிய பிரலம்பன் அது அவ்விளிம்பில் ஏற்றி நிறுத்தப்பட்டிருக்கிறதென்று உணர்ந்ததும் மெல்லிய உடல் விதிர்ப்புகொண்டான். மாளிகைகளுக்கு பக்கவாட்டிலிருந்த முற்றத்தில் யானைகள் கந்துகளில் கட்டப்பட்டிருந்தன. ஓர் யானை உரக்கப் பிளிறி அவனை நோக்கி துதிமுனை நீட்டியது.

அவன் தயங்கி நின்றான். அப்பகுதியில் எவரையும் காணவில்லை. அங்கே ஏவலர் எவரேனும் இருக்கவேண்டுமே என்று எண்ணினான். உள்ளே செல்லும் துணிவும் வரவில்லை. உள்ளே ஏதோ கூச்சல் வெடித்தெழ சாளரத்தினூடாக மரத்துண்டுகள் வெளியே வந்து முற்றத்தில் விழுந்தன. அவை உடைந்த பீடங்கள் என்று தெரிந்தது. அவன் தன்னை திரட்டிக்கொண்டு முற்றத்தை அணுகினான். மேலுமொரு கூச்சல் பீறிட்டெழ பீடங்களும் கலங்களும் கோப்பைகளும் மேலிருந்து பொழிந்தன.

அகவை முதிர்ந்த செவிலி ஒருத்தி கையில் ஒரு குடுவையுடன் இடைநாழியில் தோன்றி நெற்றியில் கைவைத்து நோக்கி “யார்?” என்றாள். “நான்…” என தயங்கி “இந்திரப்பிரஸ்தத்தின் இளவரசருடன் வந்தேன்…” என்றான். “இங்கே அனைவருமே இளவரசர்கள்தான்…” என்ற முதுமகள் “அங்கே மேலே இருக்கிறார்கள்…” என்றாள். பிரலம்பன் “எந்த அறையில்?” என்றான். “இளைஞரே, இங்கே எல்லா அறைகளிலும் அவர்கள்தான் இருக்கிறார்கள். அவர்கள் ஆயிரம்பேர்… தெரிந்திருப்பீர்…” பிரலம்பன் “ஆம்” என்றான்.

மேலிருந்து ஒருவன் வீசப்பட்டு வந்து முற்றத்தில் விழுந்தான். பதினேழு அகவை இருக்கும். “ஆ!” என கூவி அவனை நோக்கி காலெடுக்க முதுமகள் “அதிலெல்லாம் நாம் ஈடுபட முடியாது… நம் பணியை நாம் செய்வோம்” என்றாள். அவன் எழுவதற்குள் அவன்மேல் இன்னொருவன் வந்து விழுந்தான். ஒரு எடை மிக்க பீடமும் வந்து அருகே விழுந்தது. அவர்கள் இருவரும் சினத்துடன் கூச்சலிட்டபடி படிகளை பொருட்படுத்தாமல் சுவர்விளிம்புகளில் பற்றி மேலேறிச் செல்ல இன்னொருவன் வந்து முற்றத்தில் விழுந்தான். எங்கோ பேரொலியுடன் ஒரு தூண் முறிந்தது.

“எவரும் இறப்பதெல்லாம் இல்லையா?” என்றான் பிரலம்பன். “இதுவரை இல்லை…” என்றாள் முதுமகள். “ஆனால் உண்மையில் எவரேனும் இறந்தார்களா என்றும் சொல்லமுடியாது… அவர்கள் ஆயிரத்துக்கும் மேல். எப்போது எண்ணிப்பார்த்தாலும் ஒன்றிரண்டு குறைந்தும் கூடியும்தான் எண்ணிக்கை இருக்கிறது.” பிரலம்பன் “அனைவரும் ஓரிடத்திலிருக்கவேண்டுமே” என்றான். “அவர்களின் பெரிய தந்தை கர்ணனின் முன் மயங்கிய பாம்புகள்போல அசைவிழந்திருப்பார்கள்… அப்போது எண்ணிவிடலாம்.” பிரலம்பன் “நான் என் இளவரசரை இந்தச் சுழிக்கொந்தளிப்பிலிருந்து மீட்டுக்கொண்டு செல்லவேண்டும், செவிலியே. என் பெயர் பிரலம்பன்” என்றான். “இங்கிருந்தா? இங்கிருந்து இவர்களே தூக்கி வெளியே வீசாமல் எவரும் செல்லமுடியாது. யானைகளே சிக்கித் தவிக்கின்றன” என்றபின் செவிலி நடந்தாள்.

பின்னால் சென்று “தங்களை நான் அறிந்துகொள்ளலாமா?” என்றான் பிரலம்பன். “என் பெயர் ஊர்மி. நான் இவர்களின் முதலன்னை பானுமதியுடன் காசியிலிருந்து வந்த சேடி. இவர்களில் நூறுபேரையாவது நானே வளர்த்திருப்பேன்… ஆனால் எவரெவர் என என்னால் இக்கூட்டத்தில் கண்டுபிடிக்கமுடிவதில்லை.” பிரலம்பன் “அவர்களுக்குத் தெரியுமே?” என்றான். “இளைஞரே, அவர்கள் தனித்தனியான உள்ளம் கொண்டவர்கள் அல்ல” என்றபடி அவள் சென்றாள்.

தயங்கியபின் படிகளில் ஏறி மேலே சென்று கால்திடுக்கிட்டு நின்றான். நடுவே நாலைந்து படிகள் உடைந்து வெற்றிடமிருந்தது. கீழே அவை உதிர்ந்து கிடப்பதும் தெரிந்தது. கைப்பிடி ஆடிக்கொண்டிருந்தது. மேலேறிச் சென்றபோது முதல்பெருந்தூணே விரிசலிட்டு நிற்பதைக் கண்டான். இடைநாழியிலேயே பலகை பெயர்ந்து உள்ளே ஆள் விழுமளவுக்கு பெரிய பள்ளங்களிருந்தன. கூரையில் பெரிய இடைவெளிகள். அவற்றினூடாக உள்ளே விழுந்த வெயில் துணிபோலக் கிடந்தது. கூரைக்கு மேலே எவரோ நடக்கும் ஓசை. அறைகள் அனைத்திலும் இருந்து குழறல்கள், சிரிப்புகள், பிளிறல்கள், அகவல்கள், கூவல்கள், கூச்சல்கள்…

பட்டியல் முறியும் ஒலியுடன் கூரைத்துளை வழியாக ஒருவன் உள்ளே இறங்கி குதித்தான். அவனிடம் “மது கொண்டுவா, மூடா!” என ஆணையிட்டுவிட்டு இன்னொரு அறைக்குள் நுழைந்தான். அதே விசையில் வெளியே வந்து விழுந்தான். அவனை அறைந்தவனை எழுந்து திருப்பி அறைந்தான். இருவரும் மாறிமாறி வெறியுடன் அறைந்துகொண்டனர். அடிகள் ஒவ்வொன்றும் வெடிப்போசையுடன் விழுந்தன. பிரலம்பன் சுவரோரமாக சாய்ந்துகொண்டான். இருவரும் ஓட வேறுசிலர் அறைக்குள் இருந்து வெளியே வந்து நோக்கி சிரித்தனர். ஒருவன் பிரலம்பனை நோக்கி “மது கொண்டுவாடா, அறிவிலி” என்று ஆணையிட்டுவிட்டு தள்ளாடியபடி உள்ளே சென்றான்.

பெரிய கூடமொன்றை நோக்கித்திறந்த வாயிலினூடாக பிரலம்பன் எட்டிப்பார்த்தான். அங்கே தோளோடு தோள் நெரிய இளைய கௌரவர் நிறைந்திருந்தார்கள். பேச்சொலிகள் எல்லாமே கூச்சல்களாக எழ குவைக்கூரை முழங்கிக்கொண்டிருந்தது. அவர்கள் நடுவே ஒரு பீடத்தில் அபிமன்யூ நின்றிருந்தான். அவனருகே இன்னொரு பீடத்தில் இடையில் கைவைத்து நின்றிருந்த பட்டத்து இளவரசனாகிய லட்சுமணனை பிரலம்பன் முன்னரே கண்டிருந்தான். கரிய பெருந்தோள்களும் அகன்ற தாடையும் சிறு கண்களுமாக அவன் துரியோதனன் போலவே தெரிந்தான்.

கூச்சல்கள் ஓங்கின. அபிமன்யூ கையிலிருந்த பெரிய பீதர்நாட்டுக் குடுவையைத் தூக்கி அதன் மூக்கை தன் வாயில் வைத்து ஒரே இழுப்பில் குடிக்கத் தொடங்கினான். கூச்சல்கள் அடங்க அவர்கள் அவனை திகைப்புடன் நோக்கினர். முழுக் குடுவையையும் குடித்துவிட்டு அவன் அதை தூக்கி வீசினான். இருவர் பாய்ந்து அதை பிடித்தனர். அதில் துளி எஞ்சவில்லை என்பதைக் கண்டு கூச்சலிட்டு சூழ்ந்து அபிமன்யூவைத் தூக்கி மேலே வீசிப்பிடித்தனர். அபிமன்யூ முன்னரே ஒரு குடுவை மதுவை அருந்திருந்தான். அந்தக் குடுவையை ஒருவன் எடுத்துவந்தான்.

அபிமன்யூவால் நிற்க முடியவில்லை. குமட்டியபடியும் தள்ளாடியபடியும் கைகளைத் தூக்கி வாய் கோணலாக ஊளையிட்டான். தனக்குத்தானே சிரித்துக்கொண்டான். தலை துவண்டுவிழ உடல் வளைந்து தன்னைத் தூக்கிய இளைய கௌரவர்களின் உடல்மேலேயே விழுந்தான். கூடம் ததும்பிக்கொண்டே இருந்தது. மறுபக்க வாயிலினூடாக ஒரு கூட்டம் உள்ளே பிதுங்கி நுழைய பிரலம்பன் இன்னொரு வாயிலினூடாக வெளியே தள்ளப்பட்டான். மீண்டும் கூடத்திற்குள் நுழைய அவனால் முடியவில்லை. அவனருகே தரையில் ஒருவன் அமர்ந்து ஊளையிட்டுக்கொண்டிருந்தான். அவன் மூக்கிலிருந்து குருதி வழிந்தது. ஒரு காது பாதி அறுந்து தொங்கியது.

சிவந்த கண்களால் அவன் பிரலம்பனை நோக்கினான். வாய் இழுபட்டு கோண கண்களில் ஒன்று சுருங்கி அதிர “நான் நாகதத்தன்! உலகிலேயே…” என கைதூக்கியபின் “மது கொண்டுவாடா, இழிமகனே” என்றான். “இளவரசே, தங்கள் செவி…” என்றான் பிரலம்பன். “ஆம், அவன் செவி… இங்கே பாருங்கள் அவன் செவியை” என ஒருவன் கைசுட்டிச் சிரித்தான். “அயல்வணிகரே, நான் உக்ரசேனன். ஆனால் அவன் சத்யசந்தன். ஆகவே…” என்று சிரித்த அப்பால் நின்றவன் மேலும் மேலும் தனக்குத்தானே மகிழ்ந்து சிரித்து “அயல்வணிகரே, உண்மையில் நான்… நான் உக்ரசேனன். ஆனால் அவன் சத்யசந்தன். ஆகவேதான்…” என்றான்.

பிரலம்பன் பின்னால் சென்று அப்படியே இன்னொரு அறைக்குள் நுழைந்தான். அங்கே மேலிருந்து விழுந்தவர்கள்போல சிதறிக் குவிந்துகிடந்தவர்களை மிதிக்காமல் கடந்துசென்று இடைநாழியை அடைந்தான். அங்கே படியேறி வந்த ஒருவன் “சம்புவை பார்த்தீரா?” என்றான். “நான் இந்திரப்பிரஸ்தத்தின் இளவரசரின் அணுக்கன். அவருடன் வந்தேன். ஆனால்…” என்றான். “அவருடன் வந்தீர்களா? நன்று. என் பெயர் சுஜாதன், உபகௌரவன்” என அவன் தன்னை அறிமுகம் செய்துகொண்டான். “கீழே உணவு ஒருங்குகிறது. அதை மேற்பார்வையிட எவருமில்லை. சம்புவையோ துஷ்பராஜயனையோ அழைத்துச்செல்லலாம் என்று வந்தேன்” என்றான்.

“நான் வருகிறேன்” என்றான் பிரலம்பன். “இங்கிருந்து பயனுள்ளமுறையில் ஒழிவதே நன்று என்று தோன்றுகிறது.” சுஜாதன் நகைத்து “ஆம், இவர்களுக்கு குடியும் தீனியும் மற்போருமன்றி எதுவும் தெரியாது” என்றான். பிரலம்பன் இவர் ஏன் இங்கே இருக்கிறார் என எண்ணியதுமே சுஜாதன் “ஆம், நான் இருக்கவேண்டிய இடமல்ல இது. ஆனால் இவர்கள் நல்லுள்ளம் கொண்டவர்கள். கொடுப்பதில் உவகைகொள்பவர்கள். தன்னை மறந்து பிறருடன் இணைந்துகொள்பவர்கள். இங்கிருக்கையில் நான் அடையும் உவகையை எங்குமே அடைவதில்லை. இவர்களிடமிருந்து எனக்கு விடுதலை இல்லை என்றே உணர்கிறேன்” என்றான்.

அவர்களுக்கு எதிரே வந்த பதினாறாண்டு அகவைகொண்ட இளைய கௌரவனின் முகம் முழுக்க உலர்ந்த குருதி இருந்தது. “மூத்தவரே, என்னை கன்மதன் அடித்தான்” என்றான். “நீ என்ன செய்தாய்?” என்றான் சுஜாதன். அவன் இதென்ன வினா என்பதைப்போல “நான் அவனை அடித்தேன்” என்றான். “இப்போது எங்கே செல்கிறாய்?” என்றான் சுஜாதன். “நான் துர்தசனை அடிக்கச்செல்கிறேன்” என்றான். “ஏன்?” என்று பிரலம்பன் கேட்டான். “அவன் என்னை அடித்தான்” என்றான். “உங்களை கன்மதர் அல்லவா அடித்தார்?” அவன் யாரிவன் அறிவிலாமல் என்பதுபோல நோக்கி “அவனுக்கு முன்னால் இவன் அடித்தான்” என்றான்.

“செல், அடி!” என்றபின் சுஜாதன் நடந்தான். “சற்றுநேரத்தில் உணவின் மணம் எழுந்துவிடும். உடனே அத்தனை போர்களும் முடியும்.” பிரலம்பன் “இவர்கள் ஏன் அடித்துக்கொள்கிறார்கள்?” என்றான். “ஏன் என்ற வினாவுக்கே இங்கு இடமில்லை. இங்கே எது விளையாட்டு எது வினை என்பதையும் நாம் அறியமுடியாது.” “இங்கே ஏவல் பணியாளர்கள் இல்லையா?” என்றான் பிரலம்பன். “மிக அரிதாக சிலர். வந்தவர்கள் இரவோடிரவாக ஓடிவிடுவார்கள். காதும் கண்ணும் இல்லாத முதியவர்கள் எலிகளைப்போல எவர் விழிகளுக்கும் படாமல் வாழ்கிறார்கள். மற்றபடி சமையல் பரிபேணல் கரிபுரத்தல் எல்லாமே இவர்கள்தான்…”

பெரிய கொட்டகை போலிருந்தது அடுமனை. உள்ளே நூற்றுக்கும் மேற்பட்ட அடுப்புகள் தழல்கொண்டிருந்தன. அவ்வொளியில் உடல்வியர்த்து பளபளக்க கிளறியும் கிண்டியும் கலக்கியும் எரிபேணியும் நின்றிருந்தவர்கள் திரும்பி நோக்கினர். ஒருவன் “இளையோனே, துர்த்தசனையும் கஜபாகுவையும் உடனே வரச்சொன்னேனே?” என்றான். “வரவில்லையா? அவர்களிடம் நான் சொன்னேன்” என்றான் சுஜாதன். “இளையோனே, நீ வந்து இந்த எரியை பேணு… கருகிவிடக்கூடாது” என்றபடி அவன் தன் பெருந்தோள்களை விரித்து சோம்பல் முறித்தான்.

அரக்கர்களுக்கான அடுமனை என தோன்றியது. கொட்டகைக்குள் தோலுரிக்கப்பட்டமையால் சிவந்திருந்த பெரிய எருமைகள் முழுத் தலையும் கொம்புமாக உத்தரத்தில் இருந்து தலைகீழாகத் தொங்கின. பன்றியிறைச்சிகள் வெட்டி அடுக்கப்பட்ட வேங்கைமரத் தடிபோல பாளம்பாளமாக பலகையில் இடையளவுக்கு இருந்தன. பெரிய குறுக்குவெட்டுத்தடிப் பீடத்தில் ஊன்பலகைகளை வைத்து கோடரிகளால் தறித்துக் குவித்துக்கொண்டிருந்தனர் இருவர். ஊன் குன்றுகளிலிருந்து பெரிய கலங்களில் அள்ளிக்கொண்டுசென்று கொதிக்கும் கலங்களிலிட்டனர். தரையில் காய்கறிகள் மிதிபட்டன.

“உன் பெயரென்ன?” என்றான் ஒருவன். “பிரலம்பன்.” “நம்மில் இந்தப் பெயரை கேள்விப்பட்டதே இல்லையே” என்றான் இன்னொருவன். “மூத்தவரே, இவன் உபகௌரவன் அல்ல. காவலன், ஆடையை பாருங்கள்!” அவன் “ஆம், அடேய்! நீ என்ன செய்கிறாய் என்றால் நேராக கரவறைக்குச் சென்று மதுக்குடம் ஒன்றை…” என தொடங்க சுஜாதன் “அடுமனைப்பணி முடிவதுவரை குடிக்கவேண்டியதில்லை” என்றான். அவன் சுஜாதனைவிட மூத்தவன் என்றாலும் ஆணையை ஏற்பதுபோல அச்சொல்லை பெற்றுக்கொண்டு “ஆனால்…” என்றபின் “அடுமனைப்பணி விரைவில் முடியும்” என்றான்.

சுஜாதன் “நீர் காய்கறிகளை கொண்டுசெல்லும்” என்றான். பிரலம்பன் “ஆணை” என்று காய்கறிகளை கூடைகளில் அள்ளிக்கொண்டுசென்று அடுகலங்களில் இட்டான். அப்பால் பன்னிருவர் வெந்த அப்பங்களை கொண்டுசென்று பாய்களில் குவித்தனர். இன்னொரு பாயில் வெண்ணிறச் சோறு குவிந்திருந்தது. “போடா!” என உரக்கக் கூவியபடி ஒருவன் இன்னொருவனை அறைய அவன் திருப்பி அடித்தான். சுஜாதன் “சுப்ரஜா, என்ன அங்கே?” என்றான். “கொசுக்கடி” என்று அவன் தாழ்ந்த குரலில் சொன்னபடி எண்ணைக் கலத்துடன் சென்றான். அவன் உடலை கையால் வருடிய ஒருவன் “எண்ணை!” என சிரித்தான். அனலாட்டத்தில் இருள்நெளிந்த கொட்டகைக்குள் அவர்களின் வியர்வைமணம் உணவுமணத்துடன் கலந்திருந்தது.

fire-iconஉள்ளே பாய்ந்து வந்தவன் “ஒருக்கமா? உணவு ஒருக்கமா?” என்று கூவினான். “மூத்தவர் கேட்டுவிட்டார். கேட்ட மறுகணமே வழக்கம்போல கூச்சலிடவும் தொடங்கிவிட்டார்.” நால்வர் ஒரே குரலில் “ஒருக்கம்தான்…” என்று சொல்லிக்கொண்டிருக்கையிலேயே கலங்கள் கால்பட்டு உருண்டன. ஒரே நேரத்தில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் அடுமனைக்குள் நுழைந்தனர். “எங்கே உணவு? மூத்தவருக்கு உணவு எங்கே?” என்று கூவினர். கையிலகப்பட்ட கலங்களில் ஊன்கறியையும் அப்பங்களையும் அன்னத்தையும் அள்ளிக்கொண்டு சென்றனர். சிலர் கலங்களை அப்படியே தோளிலேற்றிக்கொண்டனர். அலைமேல் படகென கலங்கள் சில ஊசலாடி மிதந்து சென்றன.

அப்பால் “மூடா, எங்கே உணவு?” என்ற கூச்சல் எழுந்தது. யாரோ யாரையோ அடிக்கும் ஓசை. காலடிகள் ஒலிக்க சிலர் ஓடிவந்தனர். “உணவு எங்கே? மூத்தவர் கேட்கிறார்.” பிரலம்பன் “உணவு சென்றுவிட்டது” என்றான். வந்தவர்கள் சூழ நோக்கி எஞ்சிய சமைக்காத ஊனையும் மாவையும் தூக்கிக்கொண்டு சென்றார்கள். பிரலம்பன் அவர்களுக்குப் பின்னால் சென்றான். அங்கே திறந்த முற்றத்திலும் இடைநாழியிலும் கூடங்களிலுமாக உபகௌரவர் உணவுண்டுகொண்டிருந்தனர். இரு கைகளாலும் உணவை அணைத்தனர். அள்ளி உடல்சேர்த்துக்கொண்டனர். உணவுடன் முயங்கி பொருதி ஊடி கூடி கொண்டாடினர். உறுமல்கள், முனகல்கள், முரலல்கள், சவைப்பொலிகள், நக்கலோசைகள்.

மாளிகைக்குள் சென்று சிறிய சாளரத்தினூடாக பிரலம்பன் உள்ளே நோக்கினான். லட்சுமணன் தன் மடியில் அபிமன்யூவை வைத்து ஊட்டிக்கொண்டிருந்தான். “போதும், போதும்” என்றான் அபிமன்யூ. “உண்க, இளையோனே… உண்க!” என்றான் லட்சுமணன். ஒருவன் பெரிய ஊன் துண்டுடன் எழுந்து “இது சுவையானது… பன்றிக்குமேல் ஊனில்லை, விஷ்ணுவுக்குமேல் தெய்வமும் இல்லை” என்றான். அதை தன் எச்சில் கையால் அபிமன்யூவின் வாயில் ஊட்டினான். அதைக்கண்டு அத்தனைபேரும் ஆளுக்கொரு துண்டு ஊனுடன் எழுந்து அபிமன்யூவிற்கு ஊட்டவந்தனர்.

சுஜாதன் பிரலம்பனின் தோளில் தட்டி “என்ன செய்கிறீர்?” என்றான். “இளவரசரை ஊனை ஊட்டியே கொல்வார்கள் என்று படுகிறது” என்றான். “அவர்கள் உணவு வழியாக மட்டுமே அன்புசெய்யக் கற்றவர்கள்… வருக!” என்றான் சுஜாதன். “அங்கே பழச்சாறு எங்கே இருக்கிறது என்று காட்டும்.” பிரலம்பன் அவனுடன் சென்று பழச்சாறு இருந்த பெரிய பீப்பாயை காட்டினான். “உள்ளே எவராவது விழுந்துகிடக்கிறார்களா பாரும்… முன்பொருமுறை ஒருவனை உள்ளிருந்து எடுத்தோம்” என்றான் சுஜாதன். வெளியே பெரும் கூச்சல். “என்ன அது?” என்ற சுஜாதன் வெளியே எட்டிப்பார்த்து “எதற்கு வெளியே வருகிறார்கள்?” என்றான்.

பிரலம்பன் வெளியே சென்று நோக்கியபோது அபிமன்யூ இளைய கௌரவர்களால் சுமக்கப்பட்டு வெளிவந்தான். அவனைச் சூழ்ந்து அவர்கள் கூச்சலிட்டபடி உணவை எடுத்து வீசினர். அவன் உடலெங்கும் ஊனும் சோறும் வழிந்தன. ஒருவன் வில் ஒன்றை கொண்டுவர இன்னொருவன் அம்புக்குடுவையை கொண்டுவந்தான். அபிமன்யூவின் விழிகள் பாதி மூடியிருக்க தலை எடைகொண்டு இடப்பக்கமாக தள்ளியது. கைகள் குழைந்து தொங்கின. கோணலாக இழுத்துக்கொண்ட வாயில் இருந்து கோழை வழிந்தது. லட்சுமணன் “இதோ… ஓசை வேண்டாம்… இதோ” என்று கூச்சலிட்டான். “இதோ, இளையோன் நமக்கு வில்திறன் என்றால் என்னவென்று காட்டுவான்.”

இளையவர்கள் பெருங்குரலெழுப்பினர். “அவன் தந்தையை சிறியோனாக்கும் வீரன்!” என்றான் லட்சுமணன். “தந்தைக்குச் சொல்லுரைத்தவன்… அதாவது…” என்றபின் அருகே நின்றிருந்த இளையவனிடம் “அவன் யார்?” என்றான். “குமரன்” என்றான் அவன். “ஆம், குமரன். இதோ, இவன் என் தம்பி… இவன் பெயர்” என சொல்லி கைகள் காற்றில் நிலைக்க எண்ணம் குவிக்க முயன்று பின் அவனிடமே “உன் பெயர் என்ன?” என்றான். “சுஜயன். சுபாகுவின் மைந்தன்.” லட்சுமணன் “ஆம், சிறிய தந்தை சுபாகுவின் மைந்தன். தன் முதலாசிரியனாக சிறிய தந்தை அர்ஜுனரை எண்ணி வில்கற்றுத் தேர்ந்தவன். அர்ஜுனரை வெல்ல எவராலுமியலாது என்றான்… நான் சொன்னேன் அவர் மைந்தனால் இயலும் என்று.”

லட்சுமணன் கைகளைத் தூக்கி “ஏனென்றால் மாமனிதர்களைக் கண்டு தெய்வங்கள் அஞ்சுகின்றன. ஆகவே அவர்களுக்கு மேலும் திறன்கொண்ட மைந்தர்களை அளிக்கின்றன” என்றவன் உரக்க நகைத்து “அல்லது திறனே அற்ற மைந்தர்களை அளிக்கின்றன” என்றான். இளைய கௌரவர் வெடித்துச் சிரித்தார்கள். “இப்போது என் இளையோனாகிய அபிமன்யூ அவன் தந்தை செய்ததும் பிறர் செய்யமுடியாததுமான வில்திறனை செய்து காட்டுவான். நான் வெல்வேன். வென்றதும் என் இளையோனாகிய இவனை…” என்றபின் காற்றில் கை நிலைக்க அவனை நோக்கி “உன் பெயர் என்ன?” என்றான். “சுஜயன்” என்றான். “ஆம், சுஜயனை நான் மேலே தூக்கி மும்முறை எறிவேன்… இதுவே பந்தயம்!”

கூச்சல்கள், சிரிப்புகள், கைவீசல்கள், எம்பித்தாவல்கள். “சுப்ரஜன்! சுப்ரஜன்!” என ஓசைகள் எழுந்தன. சுப்ரஜன் தன் தலைமேல் ஒரு நெல்லிக்காயை வைத்தபடி மரத்தடியில் சென்று நின்றான். அபிமன்யூ இறங்கி கைநீட்டி வில்லையும் அம்பையும் பெற்றுக்கொண்டான். பிரலம்பன் “அவரால் நிற்கவே முடியவில்லை… கைகள் தளர்ந்துள்ளன…” என்றான். சுஜாதன் “அவருள் வாழும் வில்லின் தெய்வம் விழித்துத்தான் இருக்கும்” என்றான். இளைய கௌரவர் கைகளை வீசியும் கூவியும் ஊக்க அபிமன்யூ இயல்பாக அம்பை எடுத்து நெல்லிக்காயை இரண்டாகப் பிளந்தான். இன்னொருவன் வாயில் ஒரு நெல்லிக்காயை கவ்விப் பிடித்தபடி நிற்க அதை பிளந்தான்.

“குருதி விழும்… ஆம், என் உள்ளம் சொல்கிறது” என்றான் பிரலம்பன். “குருதியெல்லாம் இங்கு ஒரு பொருட்டே அல்ல” என்றான் சுஜாதன். “சுரகுண்டலன்!” என எவரோ கூவினர். “அவன் சிறிய தந்தை குண்டாசியின் மைந்தன்” என்றான் சுஜாதன். சுரகுண்டலன் மூக்கின்மேல் ஓர் இறகுடன் நிற்க அபிமன்யூவின் அம்பு அந்த இறகை மட்டும் எடுத்துச்சென்றது. இளைய கௌரவர் வெறிகொண்டு கூச்சலிட்டனர். லட்சுமணன் ஓடிச்சென்று அபிமன்யூவைத் தூக்கி தலைமேல் சுழற்றினான். கையிலெடுத்த அம்புடன் அபிமன்யூ அவன்மேல் சுழன்று தோளில் அமர்ந்தான். அவன் கையிலிருந்த அம்புபட்டு லட்சுமணனின் தோள்கிழிந்து குருதி வழிந்தது.

“குருதி” என்றான் பிரலம்பன். “சிறிய கீறல்தான்…” என்றான் சுஜாதன். “சுஜயன் இதோ நழுவுகிறான்… மூத்தவரே” என்று சிலர் கூவ அபிமன்யூவை அப்படியே வீசிவிட்டு லட்சுமணன் சுஜயனை தூக்கினான். பிறர் கூடிநின்று கூச்சலிட்டனர். பிரலம்பன் அடுமனைக் கட்டடத்திற்கு அப்பால் ஒரு புரவி சேணமும் கடிவாளமுமாக நிற்பதைக் கண்டான். அப்போது தோன்றிய எண்ணத்தை தலைக்கொண்டு ஓடிச்சென்று அதைப் பிடித்து இழுத்துக்கொண்டு திரளுக்குள் நுழைந்தான். எவரும் அவனை நோக்கவில்லை.

அபிமன்யூ எழுந்து நின்று கூச்சலிட்டு பிறரைப் பற்றியபடி தள்ளாடிக்கொண்டிருந்தான். அவன் இடையை வளைத்துப்பிடித்துத் தூக்கி புரவியில் வைத்து தானும் ஏறிக்கொண்டான் பிரலம்பன். புரவியைச் செலுத்தி திரளிலிருந்து விலகிச்சென்றான். பின்பக்கம் சுஜயன் காற்றில் எழுந்து எழுந்து விழுந்துகொண்டிருந்தான். “யார் அது? அடேய்” என்று அபிமன்யூ குழறினான். பிரலம்பன் புரவியின் விலாவை மிதித்து விரைவுகூட்டி மரக்கோட்டையை அணுகினான். காவல்மாடத்தில் பூவிழியர் அமர்ந்தபடியே துயில்கொண்டிருந்தார். அவன் வெளியேறிய ஓசையில் மெல்ல விழித்து பொருள் கொள்ளாமல் நோக்கியபின் மீண்டும் துயில்கொண்டார்.

பிரலம்பன் அபிமன்யூவின் கையிலிருந்த அம்பை அப்போதுதான் நோக்கினான். அதைப் பிடுங்கி வீசிய பின்னரே அதன் முனையிலிருந்த துளிக்குருதிப்பூச்சை நினைவால் கண்டான்.

முந்தைய கட்டுரைஅறிவியல்கல்வியும் கலைக்கல்வியும்
அடுத்த கட்டுரைஎன்னத்தைச் சொல்ல?