கௌரி -கடிதங்கள்

Gauri_Lankesh_FB2

கௌரி, மீண்டும்…
கௌரி லங்கேஷ்

அன்புள்ள ஜெயமோகன் அண்ணா,

கௌரி லங்கேஷ் அவர்களின் கொலை அச்சத்தை அளிக்கிறது.  கருத்துகள் கூறுவதன் காரணமாக ஒருவர் கொல்லப்படுவார் என்றால், அவ்வாறு செய்யும் தரப்பினர் எவராயினும், மனிதர் என்றே கருத தகுதி அற்றவர்கள்.  இவர்களையும் சிலர் இந்து சமயத்தின் பாதுகாவலர்கள் என்பது போல், துளியும் மனிதத்தன்மையற்று வக்காலத்து வாங்குவது அருவருப்பை உண்டாக்குகிறது.  சமீபத்தில் பாருக் என்கிற கோவை இளைஞர் முகநூலிலும் வாட்ஸ்அப்பிலும் வெளியிட்ட நாத்திக கருத்துக்களுக்காக படுகொலை செய்ப்பட்டார்.  இத்தனைக்கும் அவரைக் கொன்றவர்கள் அவருக்குத் தெரிந்தவர்களே.  இஸ்லாமை விமர்சிக்க வேண்டாம் என்று தொடர்ந்து எச்சரித்தும் அவர் கேட்கவில்லை எனவே கொலை செய்தோம் என்று கூறியதும், அதற்கும் நியாயம் தான் என்று சிலர் வக்காலத்து.  அது இங்கு கண்டு கொள்ளப்படவே இல்லை.  தொலைகாட்சி விவாதங்களோ, கடும் கண்டனப் பதிவுகளோ பெரிதாக ஏதுமில்லை.  அவ்வாறே கர்நாடகத்தில் இந்து மதவெறியர்களின் கொடும் செயல்களுக்கும் கன்னட வெறியர்களின் செயல்களுக்கும் பெரிதாக கண்டு கொள்ளப்படுவதில்லை.  இடத்திற்கும் தரப்பு என்பதற்கும் அப்பால் மனிதன் என்று நின்று நோக்கும் தன்மை அருகிச் செல்லும் இன்று காந்தியின் வழிபற்றி நிற்பது ஒன்றே மனிதர்களாக வாழ விரும்புபவர்களுக்கு உரியது என்று தோன்றுகிறது.

அன்புடன்,
விக்ரம்
கோவை

 

அன்புள்ள ஜெ,

 

வழமை போல் மிகத்தெளிவாக எழுதப்பட்ட கட்டுரை. ஒரு தேசம் மேம்பட்டுக் கொண்டிருப்பதன் முக்கியமான அடையாளம் அத்தேசத்தில் நிலவும் கருத்தியல் சகிப்புத்தன்மை. அதைக் கொஞ்சம் கொஞ்சமாக நாம் இழந்து வருகிறோமோ என்ற அச்சமே தற்போது எழுகிறது.

 

கெளரி லங்கேஷ் அவர்களின் படுகொலை வன்மையாகக் கண்டிக்கப்படவேண்டியது. அதுவும் பெண்களின் பாதுகாப்பையும், பெண் வழிச் சிந்தனைகளை முன்னெடுக்க வேண்டியதன் அவசியத்தையும் பற்றி ‘மனதின் குரல்’ பேசப்படும் இந்நாட்களில்.

 

மிகச்சரியாக மறைந்த ராஜினி திராணகம வை நினைவூட்டியிருக்கிறீர்கள். யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த மருத்துவரான இவர் புலிகள் இயக்கத்துடன் நெருங்கிய தொடர்பில் இருந்து பின்னர் அதன் மனித உரிமை மீறல்களில், குறிப்பாக மாற்றுக் கருத்தினரை அமைதியாக்கும் அதன் வழிமுறைகளில் விமர்சனம் வைக்கத் துவங்கினார், கூடவே அரச பயங்கரவாதத்தையும் எதிர்த்தார். “ஒரு நாள் ஒரு துப்பாக்கி என்னை அமைதியாக்கும், அதை ஒரு வெளியாள் ஏந்தியிருக்க மாட்டான். என்னுடன் என் விதியைப் பகிர்ந்து கொண்ட இச்சமூகத்தின் கருப்பையில் அவன் உருவாகியிருப்பான்” – இது சுடப்படுவதற்குச் சில நாட்கள் முன்பு அவர் கூறியவை!!

 

கருத்தியல் கொலைகள், அப்பாவிகளின் கூட்டுக் கொலைகளுக்கு முதல் படி. நிறுத்தப்பட்டே ஆக வேண்டும், இல்லாவிட்டால் பெரிய விலை கொடுத்தாக வேண்டும். குறிப்பாக கர்நாடகத்தில் இவை நடப்பதன் பின்னணியை விரிவாக ஆராய்ந்து குற்றவாளிகளையும், குற்ற நோக்கத்தையும் வெளிப்படையாகக் கொண்டு வருவது மத்திய அரசின் கடமை. வேறு வழியில்லை, சீசரின் மனைவி சந்தேகத்துக்கு அப்பாற்பட்டவளாகத் தான் இருந்தாக வேண்டும்.

 

அன்புடன்,

அருணாச்சலம் மகராஜன்

 

அன்புள்ள ஜெயமோகன் அண்ணா,

அன்னை என்ற சொல் உலுக்குகிறது.  இதை விட துல்லியமாக கூற முடியாது.  மனசாட்சியின் குரலாக ஒலிக்கிறீர்கள்.  எழுத்துக்களின் வாயிலாக தரப்பிலிருந்து வெறியிலிருந்து விலகி நிற்கச் செய்கிறீர்கள்.  தூரத்தில் நடந்த சாலை விபத்து என்பது போல காண்பவர்களுக்கு அதன் தீவிரம் உணர்த்துகிறீர்கள்.  அறத்தை வீழ்த்தி பெரும் வெற்றி என்பது உண்மை இல்லை.  உங்கள் புனைவுகள் வாயிலாகவே பெற்றது அதிகம்.  சொல்லிக் கொடுங்கள் அண்ணா, மனிதத்தன்மையை கூட கற்பித்தால் மட்டுமே உய்த்துணரும் மூடரில் ஒருவன் நான்.

நன்றி.

அன்புடன்
விக்ரம்
கோவை

முந்தைய கட்டுரைமுஜிபுர் ரஹ்மான் நூல்கள்
அடுத்த கட்டுரைபசவர், தமிழ் ஹிந்து – உளறல்களின் பெருக்கு