முடிவின்மைக்கு அப்பால் (சிறுகதை)
பெருமதிப்பிற்குரிய ஜெயமோகன் அவர்களுக்கு,
நான் பணிசெய்யும் மென்பொருள் நிறுவனத்தின் தலைமையகத்தில் ஒரு நீச்சல் குளம் இருக்கிறது. ஆழம் மிக குறைந்த தட்டையான நீள்வட்ட வடிவ குளம். அதன் உள்ளே நீல நிறமான கற்கள் பாதிக்கப்பட்டு இருப்பதால் ஆழம் போல் தெரியும். அதன் விளிம்புகள் தரையோடு சமதளத்தில் இருப்பது போன்று வடிவமைக்கப்பட்டது. சுற்றிலும் தழும்பும் நீர் வெளியேறிச்செல்ல துளைகள் அமைக்கப்பட்டிருக்கும்.எப்போதும் ஒருபுறமெனும் நீர் தழும்பி துளைகள் வழியாக உள்சென்றவண்ணம் இருக்கும். ஒருமுறை மதிய உனவு இடைவேளையில் என் அலுவலக நண்பர்களோடு அதன் அருகே சென்று நின்று பேசிக்கொண்டிருந்தோம். குளத்தில் அப்போது யாரும் நீந்திக்கொண்டிருக்கவில்லை. அந்த குளத்தின் விளிம்பருகே நின்று அதைப்பார்த்துக்கொண்டிருந்தேன். திடீர் என்று என் நண்பன் விளையாட்டாக என்னை சிறிது உலுக்கிவிட்டான். நான் விழ எல்லாம் இல்லை – ஆனால் உள்ளத்துள் உண்மையிலேயே நடுங்கிப்போய்விட்டேன். நண்பர்கள் என்னைப்பார்த்து சிரித்தார்கள். அந்த நடுக்கம் சிலநாட்களுக்கு என்னுள் இருந்தது. இப்போது நினைத்தாலும் லேசான நடுக்கம் நெஞ்சுக்குள் வந்து செல்கிறது.
அது மிகவும் தட்டையான ஆழமற்ற குளம்தான். நான்கடி கூட ஆழமிருக்காது. அதில் மூழ்க வாய்ப்பே இல்லை – இது எனக்கு நன்றாக தெரியும். இருந்தும் அந்த குளம் என்னை ஏனோ அச்சறுறுத்தியது. ஏன் இப்படி நடுங்கினேன், எத்தனிக்கண்டு அஞ்சினேன் என்று என்று பலமுறை சிந்தித்துப் பார்த்திருக்கிறேன். உண்மையில் காரணம் ஏதுமில்லை. எப்படி சிந்தித்தாலும் ஒன்றும் இல்லை. ஆனால் அன்று நடுங்கியது நிஜம். மீண்டும் பலமுறை அந்த குளத்திற்கு அருகில் சென்று நின்று பார்த்திருக்கிறேன். அனால் அன்று வந்த நடுக்கம் மற்றொருமுறை வந்ததில்லை. நானே அறியாமல் அந்த நீரோடு எதோ உள்ளத்தில் உரையாடியிருக்கிறேன் – அன்று மட்டும்.
முடிவின்மைக்கு அப்பால் படித்தபோது அதே போன்ற ஒரு நடுக்கத்துக்கு கொண்டு சென்று திருப்பிவிட்டீர்கள். அந்தக்கதையில் இருந்த பாச்சியைக் காட்டிலும், புறவைக்காட்டிலும், தாருசிலப சிலைககளைக் காட்டிலும் என்னை முடிவின்மைக்கு அருகே கொண்டு சென்றுவிட்டது அந்த குளம்தான் என்று தோன்றுகிறது.
குளமாக தேங்கிய நீர் உண்மையிலேயே அழகானது மட்டுமல்ல அடியில் அரியத்தூண்டும் மர்மங்களைக்கொண்டது என்றே தோன்றுகிறது. முழுக்க முடியும் இல்லை. கொஞ்சம் ஒளி உள்ளே செல்ல அனுமதிக்கும் – ஆனால் அதன் ஆழம் வரை அல்ல. நீர் தளும்பாமல் தெளிந்து இருக்கும் போது ஆடிபோல் நம்மையே காட்டும், உள்ளிருக்கும் பொருட்களை ஒளித்தே வைத்திருக்கும். குழம்பினால் இன்னும் மோசம் – எல்லாமே மறைந்துவிடும். ஒருவகையில் நம் மேல்மனம்தான் இந்த நீரோ? – அதன் அடியில் ஆழத்தை நம் அடிமானம்தான் தேடுகிறதோ?
நீங்கள் அந்த குளத்தை விவரித்த விதம் (கதை சொல்லியின் பார்வையில் ) படிகளற்ற, தரையோடு ஒட்டிய, ஆனால் ஆழமான குளம் – இதில் மர்மங்கள் பல இருக்கலாம், இல்லமால் இருக்கலாம் – என்றாலும் மர்மம்தான்.
சாதாரணமாக திரைப்படங்களில் கால பயணத்தையோ (time travel ), அல்லது பழைய நினைவாயோ (flash back) – குறிக்கும்போது நீர் சுழிகளையோ (அல்லது நீர் சுழிபோன்ற வரைகலை காட்சிகளையோ ) காட்டுவது உலகெங்கும் உள்ளத்து என்பதை தொடர்பு செய்துகொள்கிறேன். நம் மனம் காலத்தை, கனவுகளை எனோ நீரோடு சேர்ந்து புரிந்துகொள்கிறது.
கதை சொல்லியின் பார்வையில் அந்த குளம் சிற்பங்களை நீரில் காண்பதற்காக வடிவமைக்கப்பட்டது. இருக்கலாம். ஆனால் அதற்கு ஏன் அதனை ஆழமான குளம் தேவை. சிசிலியின் கதைப்படி பாச்சி அந்த குளத்தில் குதித்து சாகிறான் – பலரும் அதில் விழுந்து சாகிறார்கள் – இத்தனை ஆழமான குளத்தை அரண்மனையில் நடுவில் ஏன் செய்துவைத்தார்கள். பலரும் வந்துபோகும் இடத்தில நடுவில் இதை இத்தனை ஆழமாக தோண்ட வேறு தேவைகள் இருந்திருக்கலாம். என்னவாக இருக்கும்?. பாச்சி இறந்த பின்னும் அந்த மன்னர் அங்குதானே வாசித்திருப்பார். பாச்சியின் சிலையை ஒவ்வொருநாளும் பார்த்துக்கொண்டுதானே இருந்திருப்பார். இப்போது அந்த அரண்மனை இடிந்து போனதால், சந்ததிகள் இல்லாது போனதால் மன்னருக்கு என்ன நஷ்டம். நல்லவர்களாக வாழ்ந்த மன்னர்கள் சந்ததிகள் மட்டும் இன்னும் வாழ்த்துக்கொண்டிருக்கிறார்களா என்ன? காலம் செல்ல செல்ல – எல்லாரும் ஒன்றுதான். எண்ணிப்பார்க்கும் தோறும் முடிவில்லாத கேள்விகள் வந்துகொண்டே இருக்கின்றன.
அந்த கேரள பாணி மரச்சிலைகள் – அவையும் பாச்சி போலத்தான் (பாச்சி == பொம்மை என்று பொருள் கொள்கிறேன் – மரப்பாச்சி பொம்மைகள் எங்கள் வீட்டு கோலுவரிசையில் உண்டு.) என்னை விடுவித்துவிடு என்று கதை சொல்லியிடம் மன்றாடுகின்றன. அந்த அரண்மனைக்குள் வௌவால்கள் இல்லை – என்பது கூடுதல் பிரச்னை – தூசியைத்தவிர அந்த சிலைகளைத் தீண்டிப்பார்க்க கூட ஒரு உயிரும் இல்லை – முழு தனிமை.
யாரும் இல்லா இருட்டறையில் இருப்பதை விட கலைப்பொருட்களுக்கு தூக்கம் வேறிருக்க முடியாது என்று தோன்றுகிறது – இதற்க்கு அவை மட்கி அழிவதே மேல். (அரண்மனை இருட்டில் வாழப்பிடிக்காமல் தற்கொலையே மேல் என்று முடிவெடுத்த பாசியைப்போல). கதைசொல்லி அங்கே வந்ததும் அதற்குத்தான் – அந்த சிலைகளை பெயர்த்து எடுத்து சென்று எங்கெங்கோ தூரதேசங்களில் வரவேற்பறைகளை அலங்கரிக்க. இருட்டிலிருந்து சிற்பங்களை விடுவிக்க. ஆனால் அவற்றை செய்யாமலே திரும்பிவிடுகிறான். இனம்புரியாத அச்சத்தினால்.
பாவம் அந்த சிலைகள்தான் – இன்னொரு விற்பனையாளனுக்காக காத்திருக்கவேண்டும் – பாச்சியை விடுவிக்க வந்த கண்ணனாவது கழுவேற்றப்பட்டான் – அவன் முயற்சி தோற்க காரணம் இருந்தது. நம் கதை சொல்லி சிலைகளை விட்டுச்செல்ல புறக்காரணங்கள் ஏதும் இல்லை. ஆனாலும் சென்றுவிட்டான் அவன் ஆன்மா அவனை உருத்தியே கொல்லும். அல்லது கொஞ்சநாளில் மறைத்தும் விடலாம்.
அந்த ஊரின் பெயரே குருவிக்காடு – ஆனால் பறவைகளே இல்லை என்ற குறியீடை நான் முழுக்க உள்வாங்கிவிடவில்லை என்றே எண்ணுகிறேன். மீண்டும் மீண்டும் அசைபோட்டுப் பார்க்கிறேன் – இபோதைக்கு அப்படியே இருக்கட்டும் என விட்டுவிடுகிறேன். பறவை – ஒளியின், வானத்தின் ஒருதுளி என்று மட்டும் எண்ணிக்கொள்கிறேன்.
கதை சொல்லியின் பெயர் – கண்ணன், கிருஷ்ணன், கோபாலன் போல எதாவது உள்ளதா என்று தேடிப்பார்த்தேன் – கண்ணன் மீண்டும் பேச்சியை விடுவிக்க வந்துவிட்டான் என்பதுபோன்ற cliche-க்களை தேடினேன் போலும். அப்படி இல்லை என்பது முடிவற்ற சாத்தியங்களை திறந்து வைக்கிறது. அதைப்போலவே செசிலும் – அவள் பாச்சி அல்ல (அல்லது பாச்சியாகவும் இருக்கலாம் ) அவள் பாச்சியை மூன்றாம் நபராகவே அறிகிறாள்.
சிசிலி இன்னொரு மர்மம் – ஸ்காட்லாந்தின் லோக் நெஸ் ஏரியில் தோன்றுவதாக கூறப்படும் monster போல நீரிலிருந்து எழுந்து வருகிறாள் – நீருக்குள் முகம் பார்த்து மறைந்துவிடுகிறாள்.
கதை சொல்லியின் நோக்கிலும் மெல்ல மெல்ல மாற்றம் நிகழ்வது அழகாக அமைந்துள்ளது என்று எண்ணுகிறேன். தான் ஒரு வியாபாரிதான் – கலைப்பொருட்கள் வணிகத்துக்குள் வந்தது ஒரு தற்செயல்தான் – இலக்கு லாபநோக்குதான் என்றெல்லாம் விவரிக்க முனைகிறான் – ஆனால் கதையின் போக்கில் செல்லச் செல்ல கலைப்பொருட்கள் அழகை, தொண்மையயை ரசிக்கத்தொடங்குகிறான். அதை விற்பனைப்பொருளாக பார்ப்பதை மெல்ல வெறுக்கிறான், அவனே அறியாமல் அந்த கலை அழகு அவனை உள்ளிருக்கும் போது. அதனோடு அவன் ஆழ்மனம் உரையாட தொடங்கும் போது – சட்டென்று சுதாரித்துப் பின்வாங்குகிறான் – அவன் உண்மையில் அஞ்சியது அவனுள் நிகழ்த்துவிட்டிருக்கும் இந்த மாற்றத்தைத்தான் என்றும் கொள்ளலாம். இந்த மாற்றம் நிகழவிட்டால் – அதிலிருந்து அவன் விடுபடாவிட்டால் – அவனால் மீண்டும் தன தொழிலைச் செய்யமுடியாது போய்விடலாம். சிற்பங்களை ரசிப்பவனால் அதை விற்க முடியாது. பாச்சியை விடுவித்திருந்தால் அவன் அவன் தொழிலைத் தொடரமுடியாமல் போயிருக்கும். அந்த மனநிலையை தவிர்த்துவிட்டதால் நாளை அவன் அந்த இடத்தை யாருக்கோ விற்றுவிட்டு சென்றுவிட முடியும்.
மறுபுறம் மனைவி இறந்தாள், மகன் இறந்தான் என்றெல்லாம் வருந்தி சங்கர நாராயணன் தம்பி என்ன அழுதுகொண்டா இருக்கிறார் – குடி, கும்மாளம் என்று சுகமாகத்தானே வாழ்கிறார். அந்த வீட்டில் பேய் இருக்கு என்று நம்புகிறார் – ஆனால் அந்த வீட்டை விற்று அந்த பணத்தைப் பயன்படுத்த மன தடையேதும் அவருக்கு இல்லை . இவருக்கு மூட நம்பிக்கை இருப்பதாக மேலோட்டப்பார்வைக்குத் தெரியும். அனால் உண்மையில் இவர்தான் நடைமுறைத்தளத்தில் வாழ்கிறவர். ஒவ்வொருவருக்கும் ஒரு பகுத்தறிவுத் தர்க்க எல்லை உள்ளது (மிகவும் ஆழமான வரி) என்று நீங்கள் கூறியதைப்போன்று மூட நம்பிக்கை கொண்டவர்க்கும் அந்த நம்பிக்க்கைக்கு ஒரு எல்லை உண்டு – அதற்கு மேலே போகும்போது நடைமுறைத்தளத்தில் இயங்கத்தொடங்கிவிடுகிறார்கள் என்றே எண்ணுகிறேன்.
இறுதியாக பாச்சி – கண்ணன் உறவு. இது காதல் அல்ல (அல்லது காதலாகவும் இருக்கலாம் – கதைக்குள்ளே அதற்கு விளக்கமில்லை) – பாச்சி வேண்டியது எல்லாம் விடுதலையை, வெளிச்சத்தை, வானத்தை – அதைதருவதால் மட்டுமே கண்ணன் மேல் நம்பிக்கைக் கொண்டிருந்தாள். அவனே அவளை மீட்கக்கூடிய ஒரே சாத்தியக்கூறு. கண்ணன் இறந்த செய்தி அறிந்தவுடன் அவளும் இறந்தது, இந்த நம்பிக்கைப் பொய்த்ததால் – கண்ணன் மேல் காதலால் அல்ல. ஒப்பு நோக்க கண்ணனே பாச்சி மேல் கூடுதல் காதல் கொண்டிருந்தான் என தோன்றுகிறது – காதலிக்காக மன்னனையும் எதிர்க்கத்துணிந்தான். கழுவிலேற்றப்பட்டு ஒன்பதுநாள் துடித்து இறக்கிறான். ஆனால் இந்த உலகம் கதையாக, காவியமாக அதை நினைவு கூறும்போது – பாச்சிக்கு நிகழ்ந்த அநீதியாகவே இதைப் பார்க்கிறது. கண்ணன் சாவு யாருக்கும் ஒரு பொருட்டு அல்ல.
பொதுவாகவே நம் மரபில் பேய்க்கதைகளில், தெய்வக்கதைகளில் – பெண்களே பேய்களாகின்றார்கள் (அல்லது தெய்வங்கள் ) – அநீதி இழைத்தவர்களை சபிக்கிறார்கள் அல்லது பழி வாங்குகிறார்கள். ஆண்கள் பேய்களாவதில்லை – தியாகிகளாவோ, வீரர்களாகவோ மட்டுமே நினைவுகூரப்படுகிறார்கள் – அவர்களை யாரும் அஞ்சுவதில்லை. ஆண்கள் இறந்தபின் யாரையும் பழிவாங்குவதில்லை (ஒன்று, இரண்டு exceptions இருக்கலாம் ). இது ஏன் எனவும் எண்ணிப்பார்க்கிறேன் – இந்தக்கதையின் scope – குள் அல்ல. அதன் தொடர்ச்சியாக.
எப்படிப் பார்த்தாலும் – திரும்பத் திரும்ப ரீங்கரிக்கும் கதைக்களத்தை, எண்ணில்லாத தொடர் சிந்தனையயைத், முடிவில்லாத கேள்விகளைத் தூண்டிவிட்ட உங்கள் கதைக்கு கோடி கோடி நன்றிகள்.
கணேஷ்