ரப்பர் முதல்…

rubber-44261

அன்பின் ஜெ,
வணக்கம்.

வெண்முரசென்னும் பிரம்மாண்ட நீர்வீழ்ச்சியின் நீர்வரத்து பதினைந்தாம் தேதிவரை மட்டுப்படுத்தப்பட்டிருப்பதால் மீள்வாசிப்புக்கு  ரப்பரை கைக்கொண்டேன். தென்படாத பல நீர்சுழிகள் மீள்வாசிப்பில் வந்தவண்ணம் இருந்தன..

தகரடப்பாவில் தண்ணீருடன் மாறப்பாடி ஆற்றிலிருந்து மீள்கையில் மறுபிறவி எடுக்கும் பிரான்ஸிஸ்.டாக்டர் ராமின் கிளினிக்கில் பிரான்ஸிஸூக்கும் லாரன்ஸ்ஸூக்கும் நடக்கும் சம்பாஷனைகள்.

“…. அத திமிரினால, எப்படியும் லாபம் சம்பாதிக்கணும் எண்ணுள்ள பேராசையினால, சுகபோகங்கள் மேல உள்ள ஆசையினால,மனுஷன் நாசம் பண்ணிகிட்டு வாறான்.அதுக்க பலன்கள் இப்பமே கிட்ட தொடங்கியாச்சு.இப்பம் சுத்தமான குடிவெள்ளம் உண்டுமா?.சுவாசிக்க சுத்தமான காற்று உண்டுமா?”

இருநாட்களுக்குமுன் நாகப்பட்டினம் மாவட்டத்தின் கடைகோடி கிராமம் ஒன்றுக்கு உறவினரை பார்க்கச் சென்றிருந்தேன். பத்துவருடங்களுக்கு முன்புவரை அக்கிராமத்து சாலையில் செல்கையில் இருபுறமும் நிறைந்து,வளைந்து நிற்கும் நெற்க்கதிர்கள் ஆரவாரமாய் வரவேற்க்கும். கண்ணுக்கெட்டிய தூரம்வரை பசுமைபடர்ந்த வயல்வெளிகளை பார்த்தபடியே செல்வது சந்தோஷமாக இருக்கும். இப்போது செல்கையில் வறண்ட நிலங்களாய், ஓரிரு செங்கள் சூளைகள் மட்டும் வயல்வெளிகளின் வயிற்றெரிச்சலை புகையாய் கசியவிட்டபடி மெதுவாய் கனன்றுகொண்டிருக்கின்றன.

“அதிப்பம் செல்லப் போனா,வலுதா ஒண்ணும் செய்ய ஒக்காதுதான்.ஆனா,ஒண்ணும் செய்யாம இருக்கியதக் காட்டியும் கொறெயென்னெங்கிலும் செய்யியது நல்லது எண்ணு தோணுது – “

பெருவேள்வியில் சிறுதுளியாய் 1984ல் கருவாய் உருவான சொற்கள்,1990ல் அச்சாய் மாறிய வரிகள்.முப்பத்திமூன்று வருடங்கள் கடந்து வார்த்தைகளாகவும் கேட்கையில் மனம் நெகிழ்கிறது.

“நதிகளை இணைப்போம்”  ஒருங்கிணைப்பிற்க்கான தங்களின் சிற்றுரை : https://youtu.be/rAnJ5pidyO8

நட்புடன்,

யோகேஸ்வரன் ராமநாதன்

முந்தைய கட்டுரைதன்மீட்சி
அடுத்த கட்டுரைமுஜிபுர் ரஹ்மான் நூல்கள்