ஊமைச்செந்நாய், கடிதங்கள் இன்னும்

அன்புள்ள ஜெமோ,
நேற்று தான் உயிர்மையில் ஊமைச்செந்நாய் படித்தேன். மிகுந்த தாக்கத்தை உண்டாக்கியது. பல்வேறு தளங்களில் இக்கதை புரிந்துகொள்ளப்படலாம். காட்டைப் பற்றி நீங்கள் விவரித்ததற்கும், உவமைகளுக்கும், குறியீடுகளுக்கும், அபார தரிசன வரிகளுக்கும் தனித்தனியே மீள்வாசிப்பு செய்யத் தூண்டும், செய்ய வேண்டிய சிறந்த சிறுகதை. உங்களுக்கு இக்கதை பற்றி வந்த கடிதங்கள் கூறிய, அனுபவித்த எல்லா விஷயங்களையும் நானும் ஆமோதிக்க விரும்புகிறேன்.
வர்ணனைகளில் திருமலை அவர்கள் பெரும்பாலானவற்றைக் குறிப்பிட்டாலும், விடுபட்டதில் என் மனதைக் கவர்ந்த சில:
பச்சைப் பாம்பை துரை ‘பச்சைக் கண்ணாடிக் குழாய்’ என்றும், செந்நாய் ‘பச்சை நிறமான அரக்கால் செய்தது போல்’ என்றும் எண்ணுவது.
ஈட்டி பாய்ந்த மானின் ஈரம் மின்னிய கரிய கண்களை ‘உடைந்த கருங்கல் சில்லு’ வுடன் ஒப்பிட்டது எதிர்பாராத ஆச்சர்யம்.
பெரிய இலக்கியவாதிகளால், முன் அனுமானங்கள் ஏதும் இல்லாமல், அலசப்படவேண்டிய ஒரு முக்கிய கதை எழுதியதற்கு வாழ்த்துக்கள் மற்றும் நன்றி.
அனுஜன்யா

அன்புள்ள அனுஜன்யா

உங்கள் கடிதம். எல்லா கதைகளையும் முன் தீர்மானங்கள் இல்லாமல்தான் அணுகவேண்டுமென நினைக்கிறேன். அப்போதுதான் கதைகள் தங்கள் வாசல்களை திறக்க ஆரம்பிக்கும். ஊமைச்செந்நாய் மிக எளிமையாகக் கூறப்பட்ட கதை. அதில் உள்ள காட்சிகளை குறியீடுகளாக கொள்ளும்போது மட்டுமே அத்ன் ஆழ்பிரதிகள் விரிய ஆரம்பீக்கின்றன
ஜெ

அன்புள்ள ஜெ,

சமீபத்தில் நான் வாசித்த மிகச்சிறந்த சிறுகதை என்று ஊமைச்செந்நாயைச் சொல்வேன். நல்ல இலக்கியம் என்பது செயற்கையான சோதனை முயற்சிகள் அல்ல என்பதை எனக்குக் காட்டியது இந்தக்கதை. மிக அற்புதமான அனுபவம். அபப்டியே காட்டுக்குள் சென்று வந்ததுபோன்ற அனுபவம். பல இடங்களில் மனம் குலுங்கியது. அந்த மானின் கண்கள் சோதியின் கண்கள் போல இருந்தன என்று நீங்கள் சொல்லும் இடம் ஓர் உதாரணம். மிகச்சிறப்பான கதை. ஆனால் உயிர்மையில் அடுத்த இதழில் நல்ல கடிதம் எதையும் காணவில்லையே. தமிழில் இந்தக்கதை அவ்வளவாக ரசிக்கப்படவில்லையா ?

தேவி [தமிழாக்கம்]
சென்னை

அன்புள்ள தேவி,

உங்கள் கடிதத்துக்கு நன்றி. உயிர்மை மட்டுமல்ல காலச்சுவடு உட்பட எல்லா சிற்றிதழ்களுமே இன்று இலக்கியத்துக்கு முக்கியத்துவம் அளிப்பதில்லை. அரசியல், சினிமா இரண்டுக்கும்தான் முதலிடம். தமிழில் எல்லா இதழ்களிலும் சினிமாவை அட்டையில் போடும் இதழ் எது? ஆனந்தவிகடன்? குமுதம்? இல்லை, உயிர்மைதான். அதற்கான வாசகர்களும் உருவாகி வந்திருக்கிறார்கள். அவர்கள் வேண்டுவதும் அவற்றையே. வாசித்து ரசிப்பதும் அவற்றையே. ஆகவே உயிர்மை ஒன்றுமே செய்யவும் முடியாது. உயிர்மை வழியாக மிகக்குறைவானவர்களே அந்தக்கதையைப் படித்திருக்கிறார்கள்.  எனக்கு இன்றுவரை தொடர்ச்சியாக கடிதங்களும் தொலைபேசி அழைப்புகளும் வந்துகொன்டே இருக்கின்றன. பெரும்பாலானவ்ர்கள் என் இணையதளத்தில்தான் வாசித்திருக்கிறார்கள். அந்த இதழ் உயிர்மையில் எழுதிய  இளம் கவிஞர்கள் எழுத்தாளர்கள் சக படைப்பாளிகள் மட்டுமே அதில் படித்துவிட்டு கூப்பிட்டு பேசினார்கள். நம் சூழலில் உருவாகிவரும் மாற்றம் ஒன்றின் அடையாளம் இது
ஜெ
ஊமைச்செந்நாய்

ஊமைச்செந்நாய்:கடிதங்கள்

ஊமைச்செந்நாய்:மேலும் கடிதங்கள்

முந்தைய கட்டுரைசாங்கிய யோகம் (54 – 59) : செயலே விடுதலை
அடுத்த கட்டுரைதிரிச்சூர் நாடக விழா