கௌரி லங்கேஷ்

 

Gauri_Lankesh_FB2

கன்னட எழுத்தாளரும் பத்திரிகையாளருமான பி லங்கேஷ் அவர்களின் என் அன்னை என்னும் கவிதையை 1986ல் நான் ஆங்கிலம் வழியாகத் தமிழில் மொழியாக்கம் செய்திருக்கிறேன். அவருடைய சில கட்டுரைகளை மலையாள இடதுசாரி இதழான ஜயகேரளத்திற்ககா மொழியாக்கம் செய்தேன். அப்போது ஒருமுறை அவரை பெங்களூரில் அவருடைய இல்லத்தில் சந்தித்தேன்- 1987 என நினைவு.

 

அப்போது அவருடைய மகள் கௌரியைச் சந்திக்கவும் ஓரிரு சொற்கள் பேசவும் செய்தேன். அவர் அப்போது இதழாளராக இருந்தார். லங்கேஷுடனான என் சந்திப்பே ஐந்து சொற்றொடர்களில், பத்துநிமிடத்தில் முடிந்தது. என்னால் ஆங்கிலத்தில் உதிரிச்சொற்களை மட்டுமே பேசமுடிந்தமையால். அதன்பின் ஒரு நூல்வெளியீட்டுவிழாவில் ஒருமுறை கௌரியைச் சந்தித்தேன். ஒரு ஹலோ. அதுவும் இருபதாண்டுகளுக்கு முன்பு.

 

நேற்று மனுஷ்யபுத்திரன் ஃபோனில் கூப்பிட்டு கௌரி கொல்லப்பட்டதைச் சொன்னபோது என் மனதிலெழுந்தது அந்தப்பழைய முகம். அதன்பின் இணையத்தில் அவரைப்பார்த்தபோது நான் முற்றிலும் அறியாத முதியமுகம் தெரிந்தது.நெடுந்தூரம் கடந்துவந்திருந்தார். நானும். நம் வயது நம் நினைவில் நிற்பதில்லை. நம் காலகட்டத்தைச்சேர்ந்தவர்களும் அவ்வாறே உறைந்துவிடுகிறார்கள்.

 

லங்கேஷ் இடதுசாரிக்கொள்கை கொண்டவர். தலித் – பண்டாயா இயக்கத்தின் ஆதரவாளர். என் நண்பராக இருந்த டி.ஆர்.நாகராஜின் நண்பர். லங்கேஷ் பத்ரிகா ஒரு விசித்திரமான கலவை. இங்குள்ள நான்மடிப்பு வம்பு இதழ்களின் அமைப்பும் மொழியும் கொண்டது. சீண்டும் கட்டுரைகள், அரசியல் வம்புகள், அதிரடிச்செய்திகளை வெளியிடுவது.  ஒருகாலத்தில் கவற்சிப்படங்களும் அதில் வெளிவரும் – டெபோனிர் போல. கூடவே  மிகத்தீவிரமான இலக்கியப்படைப்புக்களும், பேட்டிகளும் வெளிவரும். கன்னடத்தின் முக்கியமான எல்லாருமே லங்கேஷ் பத்திரிகாவில் எழுதியிருக்கிறார்கள். கன்னட நவ்யா –தலித் இயக்க இலக்கியத்திற்கு லங்கேஷ்பத்ரிகாவின் கொடை முக்கியமானது.

 

கௌரி பெரும்பாலும் லங்கேஷின் பாணியைப் பின்தொடர்ந்தவர் எனத் தோன்றுகிறது. அதிதீவிர ஒற்றைநிலைபாடு. அதற்கு தர்க்கஒருமையும் வரலாற்றுணர்வும் கொண்ட பார்வை ஏதுமில்லை. உணர்ச்சிகரமான பற்று மட்டுமே இருக்கும். அத்தகைய இதழாளர்கள் பலர் இன்றுள்ளனர். அவர்களின் நிலைபாடுகள் மிகமிக எளிமைப்படுத்தப்பட்டவை, ஆகவே தெருச்சண்டை அரசியல்கொண்டவை. அதேசமயம் அவர்கள் இன்றைய இந்தியாவின் மனசாட்சியின் குரல்களாக, பன்மைத்துவத்தின் சமரசமற்ற போராளிகளாக, நவீன உலகு தேங்கியழுகிய பழைமைவாதத்திற்கு அளிக்கும் எதிர்வினைகளாக இருக்கிறார்கள். கௌரி லங்கேஷ் அத்தகையவர்

 

கௌரி லங்கேஷ் லங்கேஷ் பத்ரிகாவை கௌரிலங்கேஷ் பத்ரிகா என்றபேரில் நடத்தினார். அதன் இதழ்களெதையும் நான் கண்டதில்லை. அவரைப்பற்றி விவேக் ஷன்பேக் ஒருமுறை சொல்லியிருக்கிறார் – அவர் லிங்காயத் அமைப்பை இந்துமதப்பிரிவு அல்ல என அறிவிக்கவேண்டும் என மரபான மடங்களின் கூற்றை ஆதரிப்பதைப்பற்றி.

 

அவருடைய கருத்துக்களால் சீண்டப்பட்டவர்கள் பலர் இருக்கலாம். ஆனால் முதன்மையாக அவர் எதிர்த்தது கர்நாடகத்தின் இந்துத்துவ அமைப்புக்களை, குறிப்பாக பலபெயர்களில் இயங்கும் சிறுகுழுக்களை. ஆகவே இந்துத்துவ அமைப்புக்கள் மீதே முதன்மை ஐயம் எழுகிறது.

 

இன்று அவர்களிடம் மத்திய அரசு உள்ளது. அவர்கள் நிரபராதிகள் என்றால் குற்றவாளிகளைக் கண்டுபிடிக்கும் பொறுப்பை காங்கிரஸிடம் விட்டுவிட்டு, சதியரசியல்கோட்பாடுகளையும் சம்பிரதாயக் கண்டனங்களையும் தெரிவிப்பதை மட்டும் செய்துகொண்டு , வாளாவிருக்கமாட்டார்கள். குற்றவாளிகளைக் கண்டுபிடித்து சட்டத்தின் முன் நிறுத்தி தங்களை நிரூபிப்பார்கள். ஆனால் கல்பூர்கி உட்பட இவ்வகை கொலைகள் அனைத்துமே காலத்தால் மறக்கப்படும் என்று அவர்கள் காத்திருப்பதாகவே தெரிகிறது.

 

வாள்முனையைவிட பேனாமுனை வலிமை கொண்டது என்னும் வரி பலசந்தர்ப்பங்களில் சொல்லப்படுகிறது. உண்மை, ஆனால் அது கல்வியறிவும் அரசியல்பிரக்ஞையும் கொண்ட சமூகங்களில். உலகமெங்கும் நிகழ்வதென்னவென்றால் ஒருங்கிணைந்த மதப்பழைமைவாத அமைப்புக்களால் மிக எளிதாக ஓரிரு கொலைகள், வன்முறைகள் வழியாக மாற்றுத்தரப்புகளை மையத்திலிருந்து விலக்கி அமைதியாக்கிவிடமுடியும் என்பதே.

 

மாற்றுக்கருத்துக்கள் என்றுமிருக்கும் என்பது உண்மை, ஆனால் அது வலுவான தரப்பாக ஒலிக்காது. அந்தச் சமநிலையின்மையே வன்முறையாளரின் குரல் ஓங்கி ஒலிக்கச்செய்துவிடும். சாமானியர் ஆற்றலை வழிபடுபவர்கள் என்பதனால் ஓங்கி ஒலிக்கும் குரலை நோக்கியே ஈர்க்கப்படுவார்கள். காலப்போக்கில் அந்த பழைமைவாதமும் அடிப்படைவாதமும்  கருத்தியல்சூழலை, அரசியலதிகாரத்தைக் கைப்பற்றிக்கொள்ளநேரும். இஸ்லாமிய அடிப்படைவாதத்தால் கைப்பற்றப்பட்ட நாடுகளில் நிகழ்ந்த அதே அரசியல்பரிணாமம் இங்கும் இந்து அடிப்படைவாதத்தால் தொடங்கப்பட்டுள்ளது என்பதையே இக்கொலைகள் காட்டுகின்றன.

 

கௌரி லங்கேஷின் கொலையாளிகள் கண்டுபிடிக்கப்படவேண்டும், முன்னுதாரணமாகத் தண்டிக்கப்படவேண்டும். அதையொட்டி மக்களின் எதிர்ப்பு திரளவும் அடிப்படைவாதிகள் அதன்பொருட்டு மன்னிப்புகோரும்ம்கட்டாயம் உருவாகவும் வேண்டும். அதுவே இன்று தேவையானது, எதிர்காலத்திற்காக.

முந்தைய கட்டுரைமதுரையில்….
அடுத்த கட்டுரைகௌரி, மீண்டும்…