மதுரையில்….

kidari1

இரண்டாம்தேதி நள்ளிரவிலேயே அலெக்ஸ் இறந்துகொண்டிருக்கிறார் என்னும் செய்தியை அலெக்ஸின் மனைவியில் தங்கை சொன்னார்.விடியற்காலையில் அலெக்ஸின் மனைவியின் செய்தி வந்தது. அரைத்துயிலில் இருந்தவன் எழுந்து அமர்ந்தேன். மூன்றாம்தேதி காலை காரில் மதுரை செல்வதாக இருந்தது. விடியும்வரை விழித்திருந்தேன். படிக்க முயன்றேன். பாட்டு கேட்க முயன்றேன். அதன்பின் அலெக்ஸுக்கு ஓர் அஞ்சலிக் கட்டுரையை எழுதினேன். அப்போதும் விடியவில்லை. மீண்டும் அதை எழுதினேன். அதன்பின் அதை அழித்துவிட்டு ஒட்டுமொத்தமாக மீண்டும் ஒருமுறை எழுதினேன். நான்கரை மணிநேரத்தில் வெறும் ஆயிரத்தைநூறு வார்த்தைகள். எழுத்து என்னை நானே தொகுத்துக்கொள்ளும் முறை. தப்பிச்செல்லும் வழி.மீளும் மருத்துவம்.

விடிந்தபின் காரில் கிளம்பியதும் தூங்கலாமென நினைத்தேன். ஆனால் நினைவு மங்கவே இல்லை. செல்லும்வழியில் நினைவுகள் குழம்ப அலெக்ஸ் மதுரையில் எனக்காகக் காத்திருப்பார் என்றும் அவரை கூட்டிக்கொண்டு புதுக்கோட்டைக்குச் செல்வதாகவும் உள்ளம் நம்பத் தொடங்கியது. திருமங்கலம் சென்றபின்னர்தான் ஓர் உலுக்கலுடன் அவர் இல்லை என்பதை உணர்ந்தேன். ஆனால் அலெக்ஸ் வீட்டுக்குச் செல்லத் தயக்கமாக இருந்தது. அதை கூடுமானவரை ஒத்திப்போட முயன்றேன்

என் நண்பர் டாக்டர் ரவிச்சந்திரன் நார்த் கேட் ஓட்டலில் அறை எடுத்து அளித்திருந்தார். அங்கே சென்று தங்கி அவரிடம் பேசிக்கொண்டிருந்தேன். சுரேஷ்குமார இந்திரஜித், ஆத்மார்த்தி ஆகியோர் வந்தார்கள். பேசிப்பேசி ஒத்திப்போட்டுக்கொண்டே இருந்தேன். உயிர்மை விழாவில் கலந்துகொண்டு செல்வதே முறை என தோன்றியது. மூன்றுமணிக்கு விழா தொடங்கியது. சுரேஷ்குமார இந்திரஜித் பற்றி நீண்டநேரம் பேசியிருக்கவேண்டும். இருபதுநிமிடம் பேசிவிட்டு டாக்டர் ரவிச்சந்திரனின் காரில் அலெக்ஸுக்காக பிரார்த்தனை நடந்துகொண்டிருந்த பசுமலை சி.எஸ்.ஐ. தேவாலயம் சென்றேன்.

உண்மையில் அது மிக மிக ஆறுதலான ஓர் அனுபவம். அந்த பிரார்த்தனை, இசை, மீண்டும் மீண்டும் சொல்லப்பட்ட மறுஉலகம் என்னும் நம்பிக்கை. அது அளித்த நிறைவை சொல்லி விளக்கிவிடமுடியாது. அது மறைவு அல்ல விடைபெறல் மட்டுமே என ஆழம் நம்ப விரும்புகிறது. இறுதிச்சடங்குக்காக மட்டுமாவது உலகில் மதம் எஞ்சியிருந்தேயாகவேண்டும் என நினைக்கிறேன்

அலெக்ஸ் பசுமலை கல்லறைத்தோட்டத்தில் மண்ணில் இறக்கப்பட்டார். இறுதியாக நான் கண்டமுகம் என் நண்பருடையது அல்ல. அவருடையது அந்த கேலிகலந்த சிரிப்புதான். அதற்கு சிலநாட்களிலேயே மீண்டுவிடுவேன் என நினைக்கிறேன்.

kidari2

அன்றிரவு பன்னிரண்டரை மணிவரை நண்பர்கள் உடனிருந்தனர். போகன், சமயவேல் எனப் பல நண்பர்கள். பேசிச்சிரித்து இயல்பாகிவிட்டேன் என நினைத்தேன். அவர்கள் சென்றதுமே படுத்து அரைமணிநேரம் தூங்கினேன். விழித்துக்கொண்டு இரவெல்லாம் தூங்காமலிருந்தேன். சம்பந்தமில்லாமல் எதையோ வாசித்தேன். பழைய மலையாளப்பாட்டுக்கள் கேட்டேன். சன்னல் வழியாக வெளியே நோக்கி நின்றேன். ஐந்தரை மணிக்கு கொஞ்சம் தூக்கம் வந்தது. ஆறுமணிக்கு ஈஷா யோக அமைப்பைச் சேர்ந்த தன்னார்வலர் வந்துவிட்டனர். குளித்துவிட்டு அந்நிகழ்ச்சிக்குச் சென்றேன்.

நதிகளைமீட்பது குறித்த விழிப்புணர்வை நாடெங்கும் உருவாக்குவதற்கான ஈஷா யோக அமைப்பின் பிரச்சாரப் பயணம். ஜக்கி வாசுதேவ் அவர்களே முன்னின்று நடத்துவது. என் நண்பர் மரபின்மைந்தன் முத்தையா அவ்வமைப்பின் செய்தித்தொடர்பாளர். அவர் என்னை அழைத்திருந்தார்.

இந்தியாவெங்கும் நீர்நிலைகள், ஆறுகள் புறக்கணிக்கப்பட்டு அழிப்படுவதற்கு உலக அளவில்கூட முன்னுதாரணம் இருக்கமுடியாதென நினைக்கிறேன். அத்தனை நதிகளும் சாக்கடைகள். நீர்வழிகள் அடைக்கப்பட்டும் காடுகள் அழிக்கப்பட்டும் நீர்வரத்து இல்லாமலாக்கப்பட்டவை. சென்ற முப்பதாண்டுகளாகச் சூழியலாளர் சொல்லிச்சொல்லி வரும் விஷயம்தான். ஆனால் அடுத்தகட்டத்தில் ஜக்கி வாசுதேவ் போன்ற பலகோடி மக்களால் கவனிக்கப்படுபவர்கள் அதைச் சொல்கையில், முன்னெடுக்கையில்தான் அது ஓர் இயக்கமாக ஆகிறது

உண்மையில் இன்றுவரைக்கும்கூட சூழியல், நீர்ப்பாதுகாப்பு குறித்த எளிய எண்ணங்களைக்கூட நம் பொதுமக்களிடையே கொண்டுசெல்ல முடியவில்லை என்பதே உண்மை. பார்வதிபுரம் வழியாகச் செல்லும் பேச்சிப்பாறை கால்வாய் தூயநன்னீர் ஓடுவதாக இருந்தது, பதினேழாண்டுகளுக்கு முன் நான் இங்கே குடியேறும்போது. இன்று அதில் நகரின் மொத்தச் சாக்கடையும் கொண்டுவந்து கலக்கப்படுகிறது. நகராட்சியே அதைச் செய்கிறது. ஒரு நகர்வழியே செல்லும் தூயநீரோடை என்பது எவ்வளவுபெரிய சொத்து. நான் பேசும்போது இங்குள்ள படித்த, நடுத்தரவர்க்கத்தினரில் ஒருவரிடமிருந்துகூட அதைப்பற்றிய ஓர் அக்கறை வெளிவந்ததைக் கண்டதில்லை

கேரளத்தில்தான் நாற்பதாண்டுகளுக்கு முன் சூழியல்சார்ந்த முதல் விழிப்புணர்வும், அதற்கான அமைப்புசார்ந்த முயற்சிகளும் தொடங்கின. அப்பணிகளுக்கு இந்திய அளவில் முன்னுதாரணமும் கேரளமே. சமீபத்தில் வெளிவந்த புலிமுருகன் என்ற சினிமாவையும் அதற்குக்கிடைத்த மாபெரும் வரவேற்பையும் பார்த்தால் அந்த கருத்துக்கள் எவையும் அம்மக்களிடையே எவ்வகையிலும் சென்று சேரவில்லை என்றே தோன்றுகிறது. அறிவுஜீவிகள் பேசுவதை மக்கள் அறிவதே இல்லை. ஆயிரம் முரசுகள் ஓசையிட்டால்தான் சாமானியன் குண்டூசி உதிரும் ஒலியாக அதைக் கேட்கிறான். மதநம்பிக்கை போன்றவற்றுடன் இணைந்து மிகமிகப்பெரிய ஓசையாக ஒலித்தாலன்றி இந்தியச் சாமானியனிடம் சூழியல் சார்ந்த எளிய கருத்தைக்கூடக் கொண்டுசென்று சேர்க்கமுடியாது

ஜக்கி வாசுதேவ் நிகழ்ச்சி முடிந்தபின் டாக்டர் ரவிச்சந்திரனுடன் அலெக்ஸ் வீட்டுக்குச் சென்றேன். உறவினர்கள் நிறைந்திருந்த வீட்டில் அவர் மனைவியிடமும் பிள்ளைகளிடமும் பேசிவிட்டு வந்தேன். அதன்பின்னர் படுத்து மூன்றுமணிநேரம் தூங்கினேன். விழித்தபோதுதான் மிக ஆழத்திலிருந்து மீண்டு வந்திருப்பது தெரிந்தது.

மதுரைப் புத்தகக் கண்காட்சிக்குச் சென்றேன். தமிழினி அரங்கில் வசந்தகுமாருடன் தேவதேவன் இருந்தார். அவருடன் பேசிக்கொண்டிருந்தது உற்சாகமானதாக இருந்தது. துயரற்ற ஒரு பெருநிலை கைகூடிய மனிதர் அவர். வாசகர்களை சந்தித்தேன். வெவ்வேறுவகையானவர்கள். ராமநாதபுரத்திலிருந்தும் கோயில்பட்டியில் இருந்தும் புத்தகம் வாங்க வந்தவர்கள். இயற்கைவேளாண்மை செய்பவர்கள்.

ஈரோட்டிலிருந்தும் திருப்பூரிலிருந்தும் சென்னையிலிருந்தும் நண்பர்கள் இரண்டு குழுக்களாக வந்துசேர்ந்தனர். அருகே இன்னொரு விடுதியில் அவர்கள் அறைபோட்டிருந்தனர். இரவு ஒருமணிவரை பேசிக்கொண்டிருந்தோம். அவர்கள் சென்றபின் மேலும் ஒருமணிநேரம் எதையோவாசித்துவிட்டு தூங்கினேன். தூக்கம் வராதோ என்ற அச்சமே தூக்கத்தை இல்லாமலாக்கியதோ என சந்தேகமாக இருந்தது

05

காலை ஆறுமணிக்கு எழுந்தேன். நண்பர்கள் வரத்தொடங்கினர். ஏழரைக்கு நண்பர் ஸ்டாலின் வருவதாகச் சொல்லியிருந்தார். எட்டுமணிக்கு வந்தார். நான்கு கார்களிலாக மதுரையைச் சுற்றியிருக்கும் சமணத்தலங்களுக்குச் சென்றோம். முந்தையநாள் இரவு மிகப்பெரிய மழை. அடுத்தநாளின் வெயில் அதனால் கூர்மைகொண்டிருந்தது. மதுரையை வெயிலில் இருந்து காப்பது பாண்டியர்காலம் முதல் அங்கே படர்ந்திருக்கும் தூசிப்போர்வை. அது மழையில் இல்லாமலாகிவிட்டிருந்தது.

நேராக கிடாரிப்பட்டி சமணர்குகைக்குச் சென்றோம். அது தொன்மையான இயற்கைக்குகை. குகை என்ற சொல்லைவிட பாறையிடைவெளி என்பதே இவ்வகை அமைப்புகளுக்குப் பொருந்துவது.  கூரைச்சரிவில் தொன்மையான குடை ஓவியங்கள் இருந்தன. ஆயர்வாழ்க்கையைக் காட்டுபவை. மாட்டின்மேல் செல்லும் ஒரு குழந்தையை தலைச்சுமையுடன் தொடர்ந்து செல்லும் உருவம். கேரளத்தில் தெய்யம் ஆட்டக்காரர்கள் போல தலையில் குருத்தோலைத் தலைமுடி அணிந்த பூசகனின் உருவம்.

தென்னகத்தின் குகை ஓவியங்கள் பொதுவாக ஏழாயிரமாண்டுக்காலத் தொன்மை கொண்டவை. பெருங்கற்காலத்தைச் சேர்ட்ந்தவை. செம்மண்கல்லாலோ சுண்ணக்கல்லாலோ இவை வரையப்பட்டிருக்கும். கிடாரிப்பட்டியில் செம்மண்கல்லால் மட்டுமே வரையப்பட்டிருந்தன. பிற்காலத்தில் சமணர்கள் இவற்றை எடுத்துக்கொண்டிருக்கலாம். ஒரு சமணத்தீர்த்தங்காரரின் மழுங்கிய புடைப்புச்சிலை மேலே செதுக்கப்பட்டுள்ளது

இப்போது இவை சரியாகப்பேணப்படவில்லை. குகைக்குள் ஒரு சிறிய குளம் உள்ளது. அங்கே நாங்களிருக்கையிலேயே ‘பிக்னிக்’ வந்த ஒரு கும்பல் கோழியும் அரிசியுமாக குகைக்குள் சமைக்க ஆரம்பித்தது. இவ்வாறு தொல்லியல்சான்றுகள் அழிவதைப் பற்றி பொதுவாக இங்கே அரசியல்வாதிகளோ சினிமாக்காரர்களோ அக்கறைகொள்வதில்லை

மேலூரில் ஒரு ‘மெஸ்’சில் அசைவ உணவு. மதுரையில் பொதுவாக இட்லி தோசை, அசைவ உணவு சுவையாக இருக்கும். நான் சமீபத்தில் சாப்பிட்டவற்றில் சிறந்த உணவு. அங்கிருந்து பஞ்சபாண்டவர் மலை எனப்படும் சமணத்தலத்திற்குச் சென்றோம். சரியாகத் தூங்காததனால் என்னால் மலையில் உற்சாகமாக ஏறமுடியவில்லை. அவ்வப்போது தலைசுற்றி கண்கள் இருட்டாவதுபோலத் தோன்றியது.

கீழவளவில் அந்தக்குகையே ஆச்சரியமானது. நடுவே ஒரு பெரிய தூண்போல பாறை நின்றிருக்க குகை சுற்றிப்படர்ந்திருந்தது. சமணத்தீர்த்தங்காரர்களின் புடைப்புச் சிற்பங்கள். அவை மழையால் கரைந்து சற்று மொத்தையாக இருந்தன. கீழவளவு குகை அப்பகுதியினர் மதியத்தூக்கத்திற்குப் பயன்படுத்துமிடமென தோன்றியது . சிலர் தூங்கிக்கொண்டிருந்தனர். சமணமுனிவர்களின் படுக்கைகளில் இருந்த பிராமி லிபி எழுத்துக்களுக்கு மேல் உள்ளூர்க்காரர்கள் உளிகொண்டுவந்து வெட்டிய ஆங்கில, தமிழ் எழுத்துக்கள் பரவியிருந்தன.

வழவழப்பான குளிர்ந்த படுக்கைகள் . சுற்றியடிக்கும் காற்று. அக்காலக் குருகுலம் ஒன்றை நினைவில் எழுப்பின. அங்கே அமர்ந்து உ.வே.சாமிநாதய்யர் காட்டும் அக்கால ஆசிரிய மாணவ உறவிலிருந்து அன்றைய கல்விமுறை வழியாக கல்வி குறித்து பேசிக்கொண்டோம்,

ma1

மாலை மாங்குளம் சென்றோம். மாங்குளம் ஊருக்கு வெளியே மீனாட்சிபுரத்தில் மலைமேல் உள்ள சமணர்குடைவரையில்தான் தமிழகத்தின் தொன்மையான கல்வெட்டுகளில் ஒன்று உள்ளது. படிகளில் ஏறி மேலே செல்லவேண்டும். மாபெரும் பாறைகள் உருண்டும் புரண்டும் நின்றிருக்கும் ஒற்றைக்கல்லை. அதன் உச்சியில் மலைமடிப்புக்குள் உள்ளது அக்குகை. இருட்டிவிட்டதனால் நான் பாதியுடன் நின்றுவிட்டேன். ராஜமாணிக்கம் முன்னரே ஓடிப்போய் கல்வெட்டை தொட்டுவிட்டு வந்தார்கள். நான் முன்பு இளங்கோ கல்லானையுடன் அந்தக் கல்வெட்டைச் சென்று பார்த்திருக்கிறேன் என அங்கே சென்றபின்னரே தெரிந்தது

புகளூர் கல்வெட்டு போல தமிழ்த்தொன்மையின் அடையாளமாக இக்கல்வெட்டு கருதப்படுகிறது. இதில் அச்சமணப்படுக்கை பாண்டியன் நெடுஞ்செழியன் வெட்டுவித்தது என்னும் செய்தி உள்ளது. பிராமி எழுத்துருவில் தமிழ் மொழியில் எழுதப்பட்டது. இவ்வகை எழுத்துக்களை தமிழ்பிராமி என்கிறார்கள். [சிலர் அறியாமையால் தமிழி என இதைச் சொல்வதுண்டு. அறிஞர்கள் பலர் இச்சொல்லாட்சியை கண்டித்திருக்கின்றார்கள். தமிழி என தனி எழுத்துரு ஏதுமில்லை. பிராமி எழுத்துரு இந்திவெங்கும் இருந்த எழுத்துருதான்]

மாலை ஒன்பது மணிக்கு திரும்பி அறைக்கு வந்தேன். களைப்பு இருந்தாலும் நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்துவிட்டு பன்னிரண்டரைக்குத்தான் தூக்கம். இந்த இடைவெளியில்லாத அலைச்சலும் உரையாடலும் கொண்டு அலெக்ஸை ஆழ்மனத்துக்குத் தள்ளிக்கொண்டிருக்கிறேன் என அறிந்திருந்தேன்

அழகர்மலையில் சமணத்தின் சுவடுகள்
முந்தைய கட்டுரைகீழடி ஆதிச்சநல்லூர் எதிர்வினைகள்
அடுத்த கட்டுரைகௌரி லங்கேஷ்