அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,
வணக்கம். இன்று காலை உங்கள் வாயிலாக நண்பர் வே. அலெக்ஸ் அவர்களின் மறைவுச்செய்தியை அறிந்தேன். உறவினர்களின் பிரிவின் போது கூட இத்தனை வலியை உணர்ந்ததில்லை. நான்காண்டுகளுக்கு முன்பு உங்களால் அறிமுகமானவர் நண்பர் அலெக்ஸ். உங்கள் வழிகாட்டலில் 1999இல் தமிழினி பதிப்பித்த “கேரளத்தின் முதல் தலித் போராளி அய்யன்காளி”- வாழ்க்கை வரலாற்று நூல் வெளியானது . சி.அபிமன்யு என்பவரால் கேரள பண்பாட்டுத்துறையின் பதிப்பகப் பிரிவு மூலம் வெளியான வாழ்க்கை வரலாற்று நூலை அடியொற்றி இப்புத்தகத்தை உருவாக்கியிருந்தேன். தமிழ்ச்சூழலில் பெரும்வரவேற்பைப் பெற்ற இந்நூலை விரிவானதோர் ஆய்வுநூலாகப் பதிப்பிக்க வேண்டுமென்ற பேரார்வத்தைக் கொண்டிருந்தார் அலெக்ஸ்.
ஒரு தேர்ந்த ஆய்வாளரின் நோக்கில் முந்தைய பதிப்பை எதிர்கொண்டார் அலெக்ஸ். முதலாவதாக அபிமன்யுவின் நூலில் நெருடல்களையும் இடறல்களையும் நுட்பமாக உள்வாங்கிய அலெக்ஸ் அவற்றைப் பற்றி என்னிடம் விரிவாக விவாதித்தார். புதிய ஆய்வுத் தகவல்களைப் பெறும் போது கிடைக்கும் மகிழ்ச்சி அலாதியானது. எடுத்துக்காட்டாக கேரளச் சிந்தனைச் சூழலை நவீனப்படுத்தவும் , சமுதாய மறுமலர்ச்சிக்கான தேடல்களுக்கு வழிகாட்டியாகவும் விளங்கிய ஞானஜோஷ்வா தமிழ் பறையர் சமுதாயத்தைச் சேர்ந்தவர் என்பது போன்ற வியப்பளிக்கும் தகவல்களைத் திரட்ட பேருதவியாக இருந்தவர் அலெக்ஸ்.
“பொதுவாகவே அரசாங்க வெளியீடுகள் சர்ச்சைகளுக்கும் எதிர்ப்புகளுக்கும் இடமளிக்கக் கூடுமென ச் சந்தேகிக்கும் வரலாற்று நிகழ்வுகளை இருட்டடிப்பு செய்து வெளியிடுவது வழக்கம். அப்படியான கோணத்தில் இப்புத்தகத்தை அணுகலமே “ என்றார் அலெக்ஸ். அவர் அறிவுறுத்தலின்படி அய்யன்காளியின் வாழ்க்கை வரலாற்றை அணுகியபோது திகைத்துப் போனேன். விவாதத்திற்கு இடமளிக்கும் என்று கருதப்பட்ட பல அரிய வரலாற்றுச் சம்பவங்கள் வேண்டுமென்ற தவிர்க்கப்பட்டிருப்பதை அறிந்தேன். ஒரு சமரசமற்ற வாழ்க்கை வரலாற்றின் உள்ளீடாகத் திகழக்கூடிய வரலாற்று நிகழ்வுகளின் ஐம்பதுக்கு மேற்பட்ட பக்கங்களை திரட்டி இந்நூலை நிறைவும் முழுமையும் கொண்ட அரிய வாழ்க்கை வரலாற்று நூலாக உருவாக உறுதுணையாக விளங்கினார் அலெக்ஸ் அவர்கள். “பின்தொடரும் நிழலின் குரல் “ நாவலின் “மெல்லிய நூல்” என்னும் அத்தியாயத்தில் காந்தியுடன் அய்யன்காளியின் தனிப்பட்ட சந்திப்பைக் கதையாகப் படைத்திருக்கிறார் ஜெயமோகன். அத்தியாயத்தின் இறுதியில் அய்யன்காளியைப் பற்றிய சிறுகுறிப்பும் இடம் பெற்றிருக்கும். வரலாற்றுடன் பயணித்த மாமனிதர் அய்யன்காளியை நவீனத் தமிழ்ச்சூழலக்கு அறிமுகப்படுத்தியப் பெருமை ஜெயமோகனைச் சாரும் என்பதால் பின்னிணைப்பில் அந்த நாவல் அத்தியாயத்தை இணைத்தார்.
ஒவ்வொரு புத்தகத்தையும் மொழிபெயப்பாளன் என்னும் நிலையில் அணுகும் எனக்கு அலெக்ஸ் அவர்களின் ஆய்வுப்பார்வை வியப்பளித்தது. இருவரும் சேர்ந்து பல புதிய தகவல்களைத் திரட்டினோம். சென்னைப்பல்கலைக்கழகத்தில் மலையாளத்துறையில் பணியாற்றும் முனைவர் ஓ.கே. சந்தோஷ் என்பவரிடமிருந்து அலெக்ஸ் பெற்றுத் தந்த தகவல்கள் இப்புத்தகத்தின் தரத்தை உயர்த்தியது. ஒவ்வொரு புதிய தகவலும் இந்நூலின் தரத்தை கூட்டிக் கொண்டே செல்லும் போது எனக்கு ஆச்சர்யமாக இருந்தது. முதலில் புத்தகம் உடனடியாக வெளிவர வேண்டுமென்று விரும்பினாலும் , தாமதத்தின் மறுபுறம் புத்தகம் மென்மேலும் மெருகேறிக் கொண்டிருக்கும் வித்தையைத் தொடர்ந்து உணர்த்திக் கொண்டே இருந்தார் அலெக்ஸ்.நாங்களிருவரும் கிட்டத்தட்ட ஒத்த வயதினராக இருந்தபோதிலும் அவரை ஆய்வறிஞராகவும் என்னை மாணவனாகவும் உணர்ந்த தருணம் உவப்பும் நெகிழ்ச்சியும் பெருமிதமும் நிறைந்தது.
கடந்த மே மாதம் “ ஊட்டி இலக்கியச் சந்திப்பு “ பணிகளை முடித்து கொண்டு நோய்வாய்பட்டிருந்த அலெக்ஸ மதுரை ஜோனஸ்புரத்திலுள்ள அவரது சரோன் காட்டேஜ் வீட்டில் பார்க்கப் போனேன். வாரத்திற்கு இருமுறை டயாலசிஸ் எனப்படும் கடுமையான சிகிச்சையை எடுத்து வந்தபோதிலும் எதிர்கால பதிப்புத்திட்டங்களை முன்னெடுத்துச் செல்லும் உயிர்ப்பைக் கொண்ட உறுதியான நம்பிக்கையோடும் உற்சாகத்தோடும் உரையாடினார். உடல்நிலையைப் பற்றிய என் பேச்சைத் தவிர்த்து விட்டு, தனது கணினியில் சேமிக்கப்பட்டிருந்த “அய்யன்காளி” வாழ்க்கைவரலாற்று நூலுக்காக ஓவியர் ஷண்முகவேல் தீட்டிய அற்புதமான முகப்போவியத்தைக் காட்டினார்.ஜெயமோகனின் முன்னுரைக்காகக் காத்திருப்பதாகச் சொன்னான். அவரது ஆர்வத்தைக் கலைக்காமல் அவருடன் அமர்ந்து உணவருந்தி விட்டு கிளம்ப முற்பட்ட என்னை “வெயில் தணிந்த பெறகு கிளம்பலாமே நிர்மால்யா” என்ற அவரது கனிவான வார்த்தைகள் தொடர்ந்தவண்ணம் உள்ளன.
கடந்த சில தினங்களுக்கு முன் அவரது செல்பேசியிலிருந்து வந்த குறுஞ்செய்தி அவர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் அவருக்காகப் பிரார்த்திக்குமாறும் கோரியது. அக்கணம் முதல் எதிர்படும் ஒவ்வொரு மனிதமுகத்திலும் அலெக்ஸ் அவர்களின் ஏதோவொரு சாயலை உள்மனம் தேடிக் கொண்டே இருக்கிறது. கலையம்சம் கொண்ட கோட்டோவியங்கள் (அவற்றை எந்த ஓவியரிடமிருந்து வாங்கினார் என்பது தெரியாது) கேரள மகான்களின் அரிய புகைப்படங்களுடன் அவரது பதிப்புக்கனவின் ஒரு துளி அச்சுக்காகக் காத்திருக்கிறது… அலெக்ஸ் இல்லாமல்…
நிர்மால்யா, ஊட்டி
2 pings
அலெக்ஸ் பற்றி…
September 11, 2017 at 6:43 am (UTC 5.5) Link to this comment
[…] அலெக்ஸ் -நிர்மால்யா கடிதம் […]
அலெக்ஸ் -கடிதங்கள்
September 12, 2017 at 12:00 am (UTC 5.5) Link to this comment
[…] அலெக்ஸ் -நிர்மால்யா கடிதம் […]