அஞ்சலி வெ.அலெக்ஸ்
வெள்ளையானையும் வே.அலெக்ஸும்
சென்னை, ஸ்ரீவில்லிப்புத்தூர், சங்கரன்கோயில்…
இனிய ஜெயம்,
தொடர்ந்து இழப்பு செய்திகளை மட்டுமே கேட்டு வருகிறேன். இதோ இன்று நண்பர் அலெக்ஸ் . கடந்த இரு ஆண்டுகளாக எந்த துயரவீட்டுக்கும் நான் செல்லவில்லை. அந்த அன்பர் உயிருடன் இருக்கையில் இறுதியாக எப்படி பார்த்தேனோ அப்படியே என் மனதில் நீடித்து விடவேண்டும் என்றொரு ஆசை. வெறும் உடலமாகக் கண்டு அவர்கள் எனக்களித்த எதுவும் கனவோ என்று மயங்க விரும்பவில்லை.
வெள்ளையானை வெளியான ஆண்டு. அன்றைய சென்னை புத்தக சந்தையில் , வெவ்வேறு கருத்தியல் சார்ந்த நண்பர்களை தேடி ,தேடி சந்தித்து வெள்ளை யானை நூலை அளித்தார். அவர்கள் தங்கள் மனத்தடையை தாண்டி நூலை வாங்கும் வண்ணம் பேசினார். அன்று முழுதும் அவருடன் நானும் இருந்தேன்.
”சீனு இவங்க எல்லாம் வெவ் வேறு கருத்தியல் தளத்தை சேர்ந்தவங்களா இருக்கலாம், ஆனா தான் நம்பின ஒண்ணுக்காக இறங்கி வேலை பாக்குறவங்க. புத்தகத்தை வாங்கிட்டாங்க இல்லையா ? நிச்சயம் வாசிப்பாங்க. மாற்றம் உடனே வந்திடாது. ஒவ்வொரு நபருக்கும் ஒரு சிக்கல் காலம் வரும். அப்போ திரும்ப வெள்ளை யானையை எடுத்து வாசிப்பாங்க. அப்போ சில விஷயங்கள உணருவங்க. இது மத்த நாவல் போல இல்ல. முதல்ல பரபரப்பா விக்கும். அப்புறம் இது பத்தி பேசாம இருக்க விரும்புவாங்க. கொஞ்ச வருடம் கழிஞ்சு இந்த நாவல் உள்ள கிடந்தது உறுத்தி உறுத்தி அது பத்தி பேச ஆரம்பிப்பாங்க. அப்போ முதன் முதலா இந்த நாவல் பத்தி வந்த எல்லா எதிர்வினையையும் தொகுத்து ஒரு புத்தகமா கொண்டு வரணும். அந்த நாள் முதல்தான் இந்த நாவலின் அடித்தளம் பத்தி பேச்சே ஆரம்பிக்கும். ”
தொட்டு தொட்டு அந்த நாவல் என்ன எல்லாம் இங்கே நிகழ்த்தக் கூடும் என சொல்லிக்கொண்டே போனார். அன்றைய அவரது கனவு முகத்தை கண்டவன் நான் மட்டுமே.
வேறொரு சமயம், தலித் ஆய்வு நூல் வரிசைக்கான விழா, அலெக்ஸ் ”சீனு இன்றைய கூட்டத்தில் கல்லெறிக்கு வாய்ப்பு உண்டுன்னு நினைக்கிறேன். உங்களுக்கு ஓடத்தெரியுமா ?”
”என்ன அப்டி கேட்டு புட்டீங்க , ஜெ ஓடும் போது பாருங்க, எப்டி ஷார்ப்பா அவர் பின்னாலயே ஓடுறேன்னு?”
அலெக்ஸ் ” அவரை நம்பி ஓடாதீங்க , அவர் கல் எறியுற கூட்டத்தை பாத்து, அவங்கள நோக்கி ஓடுற மனுஷன் ”
பயணம் ஒன்றினில் காருக்கு வெளியே பார்த்துக்கொண்டே வந்தார். உதடு மெல்ல உச் கொட்டியது. பின்னர் மாலை நடையில் அவரே சொன்னார் , வெளியே புறக்கணிக்கப்பட்டவர்களுக்கான இடுகாடு ஒன்று, முற்றிலும் வேறொரு குழுவால் கையாகப்படுத்தப்பட்டு இருந்தது. அலெக்ஸ் நண்பர்கள் குழுவுடன் போராடி அதை மீட்டு, வெறும் முள்காடாக மாறிக்கிடந்த அதை செப்பனிட்டு அளித்திருக்கிறார். அது இன்று மீண்டும் யாருடைய ஆதிக்கத்தின் கீழோ சென்று விட்டது. அந்த பணி செய்த நாட்கள் குறித்தும், அன்று உடன் நின்ற நண்பர்கள் குறித்தும் சொல்லிக்கொண்டு இருந்தார்.
அய்யன்காளி நூல் மேப்பு நோக்கும் நாள் ஒன்றினில் நானும் அலெக்ஸுடன் இருந்தேன். இலக்கியத்தில் அய்யன்காளி குறித்த பதிவுகள் எனும் பகுப்பில் பின்தொடரும் நிழலின் குரல் நாவலில் வரும் அய்யன்காளி கதையை இணைக்கப்போவதாக சொல்லிக்கொண்டு இருந்தார்.
புத்தக சந்தையில் அவரது அரங்கத்தை பார்த்துக்கொள்ளும் சூழல் ஒன்று வந்தது. மாலை அலெக்ஸ் அரங்கத்துக்கு வரும் போதெல்லாம். எனக்கு மட்டுமே என , முளை கட்டிய பயிறு, சத்து மாவு உருண்டை, என தினம் ஏதேனும் ஆரோக்கிய உணவு கொண்டு வருவார்.
”தினமும் ஒரு மணி நேரம் தண்டால் போடுங்க சீனு.ஒரே வருஷம் இந்த கூன் காணா போய்டும். என்ன ஆனாலும் சரி மத்தியானம் ஒரு வேளை கண்டிப்பா சும்மா ராஜா கணக்கா சாப்புடுங்க ”
என்னை பலவானாக்கிப் பார்க்க விழையும் பல நல்லிதயங்களில் [ சமீபத்திய வரவு தேவதேவன்] அலெக்ஸுக்கு தனி இடம்.
தம்பியின் அலுவலகத்தில் இருக்கிறேன். என் அன்பு அலெக்ஸண்ணனின் நினைவு. ஆம் அண்ணன் விரும்பியபடி மதியம் ராஜா போல சாப்பிடப்போகிறேன்.
கடலூர் சீனு