அலெக்ஸ் – கடிதங்கள்

IMG_2288

அஞ்சலி வே.அலெக்ஸ்

அன்புடன் ஆசிரியருக்கு

வெள்ளையானைக்கு எழுதியிருந்த முன்னுரை வழியாகவே அலெக்ஸ் அவர்களைத் தெரியும். தலித் ஆய்வுகளில் மிக முக்கியமான முன்னெடுப்பினை நிகழ்த்தி இருக்கிறார். கொந்தளிப்பும் அவநம்பிக்கையும் கொண்ட முதல் தலைமுறையில் இருந்து அதனை செரித்துக் கொள்ளக்கூடிய மேலும் சமநிலை உடைய மனிதராக பரிணமித்திருக்கிறார் என்பதை உங்கள் சொற்கள் வழியே அறிகிறேன்.

அவருக்கு என் அஞ்சலி.

சுரேஷ் பிரதீப்

***

அன்புள்ள ஜெயமோகன் அவா்களுக்கு,

வெ.அலெக்ஸ் அஞ்சலி பதிவை வாசித்தேன். திரு.அலெக்ஸ் அவா்களை பற்றி உங்கள் தளத்தின் வாயிலாகவே அறிந்து கொண்ட எனக்கு அவாின் ஆளுமை பற்றியோ அரசியல் செயல்பாடு பற்றியோ எதுவும் தொியாது. அந்த அளவிற்கு பரந்த வாசிப்பும் கிடையாது. என்னை பாதித்தது உங்கள் இருவருக்குமான நட்பு தான். மனத்துக்கு நெருக்கமான நண்பாின் மரணத்தை போல கலங்க செய்வது வேறு இல்லை. இப்போது மிக மிக தனிமையை மட்டுமே உணா்விா்கள் என்று நினைக்கிறேன். அதை தவிர பிறிதொன்று இருக்க இயலாது அல்லவா…கடைசி வாிகளை வாசித்த போது கண்களை நீா் மறைத்துவிட்டது.  நீங்கள் உணரும் கொடும் தனிமையிலிருந்து மீண்டு அல்ல கடந்து வரவே பிராத்தனை செய்கிறேன். ஏனென்றால் மீள்வது உங்கள் மனவலிமையிலேயே உள்ளது இல்லையா சாா்?

ஆழ்ந்த வருத்தங்களுடன்

உங்கள் வாசகி

தேவி. க

ஆவடி.

***

அன்புள்ள ஜெ,

நண்பர் அலெக்ஸின் மறைவு எதிர்பாராதது. உங்கள் பதிவு அலெக்ஸின் ஆளுமையை, அவரது பங்களிப்பை சிறப்பாக வெளிக்கொண்டுவந்திருந்தது. நண்பரைப் பிரிந்த துயரை உங்கள் முகத்தில், உயிர்மை புத்தக வெளியீட்டு விழா வீடியோவில் காண முடிந்தது. அலெக்ஸ் ஒரு அமைதியான மனிதர். தன் பணியை சிறப்பாகச் செய்ய வேண்டும் என மிக ஆழமாக உணர்ந்த மனிதர். பொது வெளியில் இயங்குபவருக்கான எந்த பரபரப்பும் அற்றவர்.

நிறைய அகால மரணங்களை எதிர்கொண்டு வருகிறோம். அலெக்ஸ் இப்போதுதான் தனது பணியில் உறுதியாகக் கால்பதித்திருந்தார். அவரின் கனவுத் திட்டங்களை யாரும் செய்துமுடிக்காமல் போனால் அது பேரிழப்பு.

அலெக்ஸ் மறைந்த தகவலை ராய் மாக்ஸமுக்குச் மின்னஞ்சல் செய்தேன் அவர் அலெக்ஸின் உபசரிப்பை நினைவுகூர்ந்து தன் அனுதாபங்களை தெரிவித்துள்ளார்.

ஒரு நல்ல நண்பரை, தமிழ் அறிவுலகுக்கு மிக முக்கியமான பங்காற்றிய செயல்பாட்டாளரை இழந்து வருந்தும் உங்களுக்கும், அவர் குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்கள்.

அன்புடன்
சிறில் அலெக்ஸ்

முந்தைய கட்டுரைசமணமும் பாகன் மதங்களும்
அடுத்த கட்டுரைநவகாளி யாத்திரை வெளியீடு