அஞ்சலி வே.அலெக்ஸ்

IMG_2288

அலெக்ஸ் என் வீட்டில் தங்கியிருக்கையில் நள்ளிரவில் அருண்மொழி மேலே ஏறி வந்து எங்களிடம் “சத்தம் கம்மியா சிரிங்க… பக்கத்துவீட்டிலே என்ன நினைப்பாங்க?” என்று சொல்லிக்கொண்டிருப்பாள். எங்கள் வயதுகள் இணையானவை. உள்ளங்களும். அவருடைய இயல்பு எப்போதுமே உற்சாகமானது என்றாலும் ஒரு பெரியமனிதத் தோரணை உண்டு. அது அரசியலில், சமூகப்பணியில் அவர் கொண்டிருந்த அனுபவம் அளித்த குணம். அதை முழுமையாகக் கழற்றிவிட்டுத்தான் என்னுடன் இருப்பார். அவருக்கு மிக நெருக்கமான நண்பர்கள் பெரும்பாலானவர்களுக்கு அவர் ‘அலெக்ஸண்ணன்’ ஆகவே மரியாதையான தூரம். என்னிடம் அந்த விலக்கம் இருக்கவில்லை. அனைத்திலும் நாங்கள் சமானமானவர்கள் என்பது காரணமாக இருக்கலாம். ஐம்பது வயதுக்குமேல் அப்படிச் சில நட்புகள் தேவைப்படுகின்றன- சேர்த்து மேலே கொண்டுசெல்வதற்கு.

குறும்பாக ஏதாவது பேசும்போது புருவங்கள் நெளிய ஆரம்பிக்கும். சிரிக்கையில் இயல்பாகக் கண்களைச் சிமிட்டுவார். பேச்சில் மெல்லிய திக்கல் அவருக்குண்டு. அத்துடன் கணக்கு வழக்குடன் பேசும் வழக்கமும். ‘இந்த விஷ்ணுபுரம் ஃபங்ஷன் எம்பத்தஞ்சு சதவீதம் வெற்றீண்ணு சொல்லலாம்” என்று ஆரம்பிப்பார். “பாஸிட்டிவா சொல்லணும்னா பதினெட்டு பாயிண்ட். நெகட்டிவா சொல்லணும்னா நாலு” என அடுக்குவார். மேடையில் குடிநீர் இல்லை, அமர்ந்திருந்தவர்களின் தலைகளால் பின்னாலிருந்த பேனர் மறைக்கப்பட்டது, பேசுபவர்கள் எழுந்துசெல்லும் வரிசைப்படி அமரவில்லை என பட்டியலிடுவார். செல்வேந்திரன் “ஜே, இந்தவாட்டி நம்ம நிகழ்ச்சி எழுவத்திமூணு புள்ளி எட்டு மூணு நாலு சதவீதம் வெற்றிண்ணு அலெக்ஸண்ணன் சொல்லிட்டார்” என்று ஒருமுறை சொன்னார்

அலெக்ஸுக்குள் ஒரு ’மல்லு’ உண்டு. அவர் பிறந்து வளர்ந்தது கோழிக்கோட்டில். அவர் அப்பா அங்கே ஆலைத்தொழிலாளியாக இருந்தார். ஆகவே காரசாரமில்லாத, எங்கும் எதிலும் தேங்காய் என்னும் கொள்கைகொண்ட, கேரளச்சமையல் அவருக்குப் பிடிக்கும். அருண்மொழியின் சமையல் கேரளபாணி. எனேன்றால் அவள் என்னை திருமணம் செய்த பின்னர்தான் சமைக்கக் கற்றுக்கொண்டாள். என்னுடன் தங்கியிருக்கையில் நாங்களே பலசமயம் ‘கஞ்சி’ ‘சம்மந்தி’ என சமைத்துக் கொள்வோம். சிறந்த மல்லு உணவு மல்லு அல்லாதவர்களால் தொட்டுப்பார்த்தாலொழிய உணவு என கண்டுபிடிக்கமுடியாதபடி நிறம் மணம் அற்றதாக, பரிபூர்ண சாத்வீக வடிவாக இருக்கும். மீன்குழம்பேகூட.

கேரளத்தின் அனைத்துமே அலெக்ஸை மலரும் நினைவுகளுக்குக் கொண்டு சென்றன. திருவனந்தபுரத்தில் சுவர்களில் வரையப்பட்டிருக்கும் மாபெரும் அரிவாள் சின்னங்கள், லட்டுலட்டான எழுத்துக்கள். வேட்டியை தூக்கிக்கட்டி குடையை சட்டைக்காலரில் தொங்கவிட்டு செல்லும் அம்மாவன்கள். அனைத்தையும் விட கூந்தல் விரித்திட்ட பெண்கள். திருவனந்தபுரம் திரைவிழாவில் நானும் அவரும் நகரில் திளைத்துக் கொண்டிருந்தோம். ஆனால் அலெக்ஸ் லாலேட்டனை விரும்பவில்லை. அதில் எனக்கு வருத்தம். ஆனால் என்னைப்போலவே யேசுதாஸின் பக்தர். பழம்பொரியும் பிடிக்கும்.

அசாதாரணமான பொறுமையும் கனிவும் கொண்டவர். அதை அவர் கால்நூற்றாண்டுக்கால சமூகப்பணியிலிருந்து ஈட்டிக்கொண்டார். இச்சமூகத்தின் சிறுமைகளிலிருந்து சினம் கொண்டு எழுந்தவர். எப்போதும் அந்த இலக்கு அவரிடமிருந்தது. ஆனால் தனிப்பட்டமுறையில் அந்த சினம் எழுவதேயில்லை என்பதை வியப்புடன் கண்டிருக்கிறேன். இரு தருணங்கள் நினைவிலெழுகின்றன.

ஒருமுறை மதுரையில் என் பழைய நண்பர் ஒருவர் எங்கள் அறைக்கு வந்தார். கீழவளவு பற்றி பேச்சு வந்ததும் அரசியல் பேசத்தொடங்கி விரைவிலேயே சாதிப்பிரச்சினைக்குச் சென்றார். அவர் தமிழ்த்தேசியம், இயற்கைவேளாண்மை என கலவையான கடும்போக்குகள் கொண்டவர். கூடவே இடைநிலைச்சாதி மேட்டிமை நோக்கும். பேச்சில் விஷமுட்கள் எழுந்து வந்தபடியே இருந்தன எப்படி நிறுத்துவதெனத் தெரியவில்லை. அலெக்ஸ் அவரிடம் விவாதிக்காமல் தவிர்க்க ஆரம்பித்தார். கிருஷ்ணன் கண்கள் சிவக்க கிட்டத்தட்ட சண்டைபோடத் தயாரானார்.

ஒருவழியாக அவர் சென்றதும் கிருஷ்ணன் என்னிடம் கையை நீட்டி “நீங்க சொல்லியிருக்கணும் சார், அவர் உங்க கெஸ்ட்” என்றார். நான் அலெக்ஸிடம் மன்னிப்பு கோரினேன். “அதெல்லாம் ஒண்ணுமில்லை ஜெ. இதுமாதிரி எவ்ளவோ பாத்தாச்சு. இது ஒரு நோய். பேஷண்ட் மேலே கோபமோ அருவருப்போ வர்ரதில என்ன அர்த்தம்? சின்னவயசுன்னா குணப்படுத்த முயற்சி பண்ணணும். வயசானவர்னா விட்டுடணும்… “ என்று இயல்பான சிரிப்புடன் சொன்னார்.

பிறிதொரு முறை மூணாறில் எங்கள் நிகழ்ச்சி ஒன்றில் கூட்டமாக நடைசெல்லும்போது எங்கள் விருந்தினர் ஒருவர் திருமாவளவனை அவன் இவன் என பேசத்தொடங்கி பேச்சு கட்டுவிட்டுப்போக நேரடியாகவே ‘நீங்கள்லாம்…” என ஆரம்பித்தபோதும் அலெக்ஸிடம் அதே நிதானத்தைக் கண்டேன். அந்த விருந்தினர் பிராமணர். அலெக்ஸ் பின்னர் என்னிடம் “என்ன இருந்தாலும் பெரிய ஸ்காலர். ஸ்காலர்களுக்கு சில விஷயங்கள் உறுதியா பதிஞ்சிரும். அவங்கள மாத்த முடியாது. நாம அறிவ மட்டும் எடுத்துக்கிடவேண்டியதுதான்” என்றார்.

வேறொரு தருணத்தில் அவரிடம் பேசிய ஒருவர் அலெக்ஸின் நண்பரான இளம் தலித் ஆய்வாளர் ஒருவரின் நூலில் “பிராமணர்” என்ற சொல் இருப்பதைச் சுட்டிக்காட்டி அது “பார்ப்பனர்” என்றுதான் இருக்கவேண்டும், அது பெரியாரின் வழி என்று ஆவேசமாகப் பேசியபோது புருவம் நெளிய “அதை நீங்க சொல்லுங்க. உங்களால மேலயும் கீழயும் பாத்து காறித்துப்ப முடியும். நாங்க இழிவ பாத்தாச்சு. அதனால எந்த மக்களையும் இழிவாப் பேசமாட்டோம்” என கறாரான குரலில் சொன்னார். “நமக்கு எந்த தனிமனிதரும் எதிரி கிடையாது” என்று அவர் சொல்வதை பலமுறை கேட்டிருக்கிறேன்.

அறிவுத்துறையில் ஒரு பதிப்பாளராகவே அலெக்ஸ் இன்று அறியப்படுகிறார். இனி அறிவுலக வரலாற்றில் அவருடைய இடம் தலித் ஆய்வுநூல்களை வெளியிட்டவர் என்பதே.அவர் பெயரில் நூல் ஏதும் இல்லை. ஆனால் உண்மையில் அவர் ஓர் ஆய்வாளர். பதினெட்டு பத்தொன்பதாம் நூற்றாண்டு பிரிட்டிஷ் ஆவணங்களில் அலெக்ஸ் அளவுக்கு வாசிப்புள்ள சிலரையே சந்தித்திருக்கிறேன். மூல ஆவணங்களைத் தேடித்தேடி சேகரித்து முழுமையாகவே வாசித்து சிறிய குறிப்புகளாக ஆக்கிக்கொள்வார். சின்னச்சின்ன அட்டைகளாக சீராக அடுக்கி வைத்துக்கொள்வார். சற்றும் சுவாரசியமில்லாத கணக்குகள், சர்வே விவரணைகளை எல்லாம் நாட்கணக்காக அமர்ந்து வாசிக்கும் அவருடைய பொறுமையையும் ஆர்வத்தையும் கண்டபின்னர்தான் நேரடி வரலாற்றாய்வெல்லாம் என்னைப்போன்றவர்களுக்குச் சரிவராது என்று உணர்ந்தேன்.

அலெக்ஸ் பஞ்சமி நிலம் உருவாக காரணமாக இருந்த பிரிட்டிஷ் நில ஆய்வாளரும் அதிகாரியுமான ட்ரெமென்ஹீர் [ J. H. A. Tremenheere ] குறித்தும் 1876ன் பஞ்சங்களில் தலித்துகளின் இடப்பெயர்வு குறித்தும் இரு நூல்களை அவரே எழுதவேண்டுமென எண்ணியிருந்தார். அவற்றை மொழியாக மாற்றுவதில் நான் உதவுவதாக எங்களுக்குள் ஒப்பந்தம் இருந்தது. கீழைநாடுகளின் சமூக அரசியலில் தியோசஃபிக்கல் சொசைட்டியின் பங்களிப்பு குறித்தும் விரிவான வாசிப்பும் பல முக்கியமான அவதானிப்புகளும் கொண்டிருந்தார். ஒரேசமயம் அடித்தள மக்களின் எழுச்சிக்கும் இனவாத அரசியலின் தொடக்கத்திற்கும் அவர்கள் எப்படிக் காரணமாக இருந்தார்கள் என அவர் விளக்குவதுண்டு.

அலெக்ஸ் மேடையில் அல்லது நேர்ப்பேச்சில் அறிஞராக, ஆய்வாளராக தன்னை முன்வைக்கவே இல்லை. என்னுடன் தனிப்பட்ட பேச்சில் வெளிப்பட்ட அலெக்ஸை பொதுவாக அறிந்திருக்கமாட்டார்கள். தான் ஆய்வாளராக முதிரவில்லை என அவர் எண்ணினார் என நினைக்கிறேன். அரிதாக சில மேடைகளில் ஆழமான சிற்றுரைகளை நிகழ்த்தியிருக்கிறார்.

அலெக்ஸின் எழுத்து பிரசுரம் எம்.சி. ராஜா பற்றிய நூலை வெளியிட்டது தலித் ஆய்வுச்சூழலில் ஒரு பெரிய முன்னெடுப்பு. பொதுவான தலித் அரசியல்வரலாற்றில் மறைந்துபோன முன்னோடிகளான ஆல்காட், ராஜா போன்றவர்களை முன்னிலைப்படுத்தும்பொருட்டே அவர் பதிப்பாளராக ஆனார். [அதற்கிணையான முன்னெடுப்பு என்றால் சுவாமி சகஜானந்தரின் நூல்களை ரவிக்குமார் தொகுத்ததைச் சொல்லவேண்டும்]. ஸ்டாலின் ராஜாங்கம் மறைந்துபோன தலித் செயல்பாட்டாளர்களை ஆய்வுசெய்து முன்னிலைப்படுத்தும் எழுத்துக்கள் அப்போக்கின் தொடர்ச்சியே

தமிழகத்தில் தலித் அரசியலுக்கும் சமூக எழுச்சிக்கும் பலர் அரும்பாடு பட்டிருக்கிறார்கள். முன்னோடிகளாகச் சென்று வழிகாட்டியிருக்கிறார்கள். அவர்களில் தலித்துக்களும் அல்லாதவர்களும் உண்டு. ஆனால் அவர்களை சமகால அரசியல் கோணங்களைக்கொண்டே மதிப்பிடுவது நிகழ்ந்தது. உதாரணமாக, எம்.சி.ராஜா அவர்கள் அம்பேத்கருக்கு எதிரான அரசியல் கொண்டவர். ‘நான் இந்துவாகப் பிறந்தேன், இந்துவாக இறப்பேன்’ என அறிவித்தவர். அறுபதுகள் முதல் அம்பேத்கரை முதன்மையாகக் கொண்ட தலித் அரசியல் உருவானபோது ராஜா மறக்கப்பட்டார்.எழுபதுகளில் அவ்வரசியல் தீவிரமடைந்தபோது ராஜா துரோகி என்றே பார்க்கப்பட்டார்.

அலெக்ஸ் எம்.சி.ராஜாவை மீட்டுப் பதிப்பித்தபோது இந்த எதிர்ப்புகளும் கசப்புகளும் எழுந்து வந்தன. அவருடைய வரலாற்று நோக்கின் முதிர்ச்சிதான் அதைக் கடந்துசெல்ல வைத்தது. ஸ்ரீவில்லிப்புத்தூரில் நிகழ்ந்த கூட்டத்தில் பேசும்போது “வரலாற்றில் தப்பு சரிகளை இங்கிருந்து நாம் சொல்லமுடியாது. அன்றைய சூழல் முழுமையாக நமக்குத் தெரியாது. வரலாறு ஒரே போக்காக செல்வதும் இல்லை. அது முரண்பட்டும் முட்டிமோதியும்தான் போகும். வரலாற்று மனிதர்களை அவர்களின் தியாகம் ஆளுமை பங்களிப்பு ஆகியவற்றை வைத்து மட்டும்தான் மதிப்பிடவேண்டும். நம் அரசியலை வைத்து அல்ல. நாமெல்லாம் சிறிய மனிதர்கள். ராஜா சரித்திர புருஷர். வரலாறு அவரை எங்கே வைக்கும் என்று நாம் சொல்லிவிடமுடியாது. நம் பணி வரலாற்றை ஆராய்ந்து பாகுபாடில்லாமல் பதிவுசெய்வது. நம் முன்னோடிகளை மறக்காமலிருப்பது” என்றார்.

தமிழகத் தலித் அரசியலில் வெளியே இருந்து ஏற்றிவைக்கப்பட்ட திராவிட இயக்கப் பார்வையால் கணிசமான முன்னோடிகள் ஒதுக்கப்பட்டு மறைந்தனர். சகஜானந்தர், ஆனந்தத்தீர்த்தர், ஜான்ஜோசப் போன்றவர்கள் உதாரணம். அவர்கள் காங்கிரஸ்காரர்கள். வாழ்க்கையை தலித் பணிக்காக அர்ப்பணித்தவர்கள். அவர்களை மீட்டெடுத்து நிறுத்தும் பணி தலித் ஆய்வாளர்களுக்கு உண்டு என அலெக்ஸ் நினைத்தார். அ.மார்க்ஸ் ஒருமுறை அய்யன்காளி இந்து மதத்தை உதறவில்லை, ஆகவே அவரை தலித் தலைவராக ஏற்கமுடியாது என எழுதியிருந்தார். அலெக்ஸ் ஏளனச்சிரிப்புடன் “தலித் தலைவர் யார்னு இவர் தீர்மானிப்பார்னு நினைக்கிறார் பாருங்க, அதான் தலித்துக்கள் எதிர்கொள்ளவேண்டிய பெரிய சிக்கல். தலித்துக்களுக்கு தங்களுக்கு பணியாற்றியவர் யார்னு கண்டுபிடிக்கத்தெரியாதா என்ன?” என்றார்

அய்யன்காளியின் வரலாறு நிர்மால்யாவால் மொழியாக்கம் செய்யப்பட்டு தமிழினி வெளியீடாக வந்தபின் மறுபதிப்பு வரவில்லை. அலெக்ஸ் இறுதியாக முடித்த பணி என்பது அதை விரிவான மறுபதிப்புக்காகத் தயாரித்ததுதான். நீண்டபயணங்கள் செய்து ஏராளமான புகைப்படங்களையும் ஆதாரங்களையும் சேகரித்து பெரிய ஆய்வுப்பதிப்பாகக் கொண்டுவருவதாக இருந்தார். சென்ற ஆண்டே அச்சுக்குச் சென்றுவிடும் என்றார். நோய்ப்படுக்கையிலும் அதைத்தான் சொல்லிக்கொண்டிருந்தார்

இலங்கையின் மலையகம், மலேசியாவின் தோட்டக்காடு பகுதிகளிலிருந்து எழுதப்பட்ட தலித் இலக்கியங்களை ஆய்வுக்குறிப்புகளுடன் பதிப்பிக்க எண்ணியிருந்தார். மலையக இலக்கியம் சார்ந்து ஆண்டனி ஜீவா உள்ளிட்டோரின் ஆக்கங்களை ஆய்வுக்குறிப்புகளுடன் செம்மைசெய்துமிருந்தார். பனைகுறித்த ஒரு நூலும் வெளியிடுவதாக இருந்தது. என் வெள்ளையானை மறுபதிப்பும் ராய் மாக்சத்தின் உப்புவேலி மறுபதிப்பும் வெளிவரவிருந்தன

நான் அலெக்ஸை முதலில் சந்திப்பது மதுரைப்புத்தகக் கண்காட்சியில். ஒரு சம்பிரதாயமான அறிமுகம். அன்று அலெக்ஸ் என்னை ஒரு ‘பிற்போக்கு’ ஆளாக அவர் நண்பர்களிடமிருந்து அறிந்திருந்தார். அவர் வெளியிட்ட தலித் ஆய்வுநூல் வரிசைக்கு நான் எழுதிய மதிப்புரைகளை கண்டபின்னர் தொடர்பு கொண்டு மேலும் நூல்களை அனுப்பினார். அவ்வாறுதான் ஒரு நட்பு உருவாகியது. ஓரிரு மாதங்களிலேயே அணுக்கமானவர்கள் ஆனோம். தினமும் தொலைபேசியில் பேசிக்கொள்ளும் நெருக்கம் வந்தது. .

“நான்லாம் பிற்போக்குல்ல” என்று நான் அடிக்கடி கேலியாகச் சொல்வேன்.

“நீங்க அப்டியே இருங்க ஜெ. ஒடிக்கிட்டே இருங்க. உங்க கான்ஷியஸை மட்டும் கவனிச்சுக்கிடுங்க. நிலைபாடே வேண்டாம்….உள்ள இருந்து நீங்க எது சொன்னாலும் அதுக்கு மதிப்பிருக்கு. சரியா தப்பான்னு நூறு ஆண்டு தாண்டாம சொல்ல முடியாது. நீங்க ஆர்ட்டிஸ்ட்” என்பார்.

அலெக்ஸ் நல்ல இலக்கியவாசகர் அல்ல. சோவியத் நாவல்கள் சிலவற்றை வாசித்ததை விட்டால் பெரிதாக இலக்கியத்தை அணுகியதில்லை. தமிழில் எழுதப்பட்ட தலித் படைப்புக்களைக் கூர்ந்து வாசித்திருக்கிறார். அவருடையது தகவல் சார்ந்த ஆய்வுமுறை வாசிப்பு. ஆனால் வழக்கமான இடதுசாரிகளுடைய இலக்கிய அணுகுமுறை அல்ல அவருடையது. அவருடைய நோக்கு இலக்கியவாதியின் தனித்த தேடலை, அலைக்கழிப்புக்களை, அசட்டுத்தனங்களையும்கூட அடையாளம் கண்டு புரிந்துகொள்ளக் கூடியதாகவே இருந்தது

நான் நடத்திய பெரும்பாலான இலக்கியச் சந்திப்புகளில் அலெக்ஸ் பங்கெடுத்திருக்கிறார். காரைக்குடி விஷ்ணுபுரம் ஆய்வுக்கூட்டத்திற்குத்தான் முதன்முதலாக வந்தார். “நல்லா நுணுக்கமா ஆராயறாங்க” என்று மகிழ்ச்சியுடன் சொன்னார். “ஆனா டிஸ்கஷனுக்கு ஒரு மெதடாலஜி இல்லை” அதாவது எழுபத்தாறு மதிப்பெண். விஷ்ணுபுரம் இலக்கியவட்டத்தின் எல்லா நண்பர்களிடமும் அவருக்கு அணுக்கமிருந்தது.

அலெக்ஸ் சர்க்கரைநோய் கொண்டிருந்தார். அது அவருடைய பாரம்பரியம் என நினைக்கிறேன். அவருடைய தந்தைக்கும் அது இருந்தது, அவர் இளமையிலேயே மறைந்தார். உடல்நலத்தைக் கவனிக்கும் வழக்கம் இன்றி எப்போதும் தன் பணிகளுக்குப்பின்னால் ஓடுவது அலெக்ஸின் இயல்பு. சர்க்கரை நோய்க்கு நாட்டுப்புற மருத்துவம் நல்லது என்ற நம்பிக்கையும் இருந்தது.ஒருமுறை அவருடைய பார்வையில் சிக்கல் வந்தபோது சர்க்கரை இருக்குமோ என சந்தேகம் வந்து நான் திரும்பத் திரும்ப டாக்டரிடம் செல்லும்படி வற்புறுத்தினேன். அவ்வாறுதான் அலெக்ஸ் மருத்துவம் செய்ய ஆரம்பித்தார். ஆனால் பிந்திவிட்டது. சிலமாதங்களிலேயே சிறுநீரகம் பழுதானது

சென்ற ஆண்டு வேலூரில் அவர் சிகிழ்ச்சையில் இருக்கையில் சென்று பார்த்து நெடுநேரம் பேசிக்கொண்டிருந்தேன். அப்போதே உள்ளுணர்வு அவர் கடக்கமாட்டார் என்று சொல்லிவிட்டது. அந்த நோயுற்ற அலெக்ஸ் என் நெஞ்சில் இருப்பதை நான் விரும்பவில்லை. அந்த தோற்றத்தை என்னால் கடக்கவும் முடியவில்லை. இத்தனைக்கும் அன்று மிக உற்சாகமாகத்தான் பேசிக்கொண்டிருந்தோம். என் வாசகரான ஒரு மருத்துவ ஆய்வாளர் வந்து முக்கியமான செய்திகளைச் சொன்னார்.

இறுதியாக பேசும்போது அலெக்ஸ் “ஜே எழுத்துக்கு ஒரு அலுவலகம் மதுரையிலே தொடங்கணும்னு நினைக்கிறேன். எடம் பாக்கணும். நீங்க வந்து திறந்து வைக்கணும்… புக்கெல்லாம் வைக்க எடம் பாக்கணும்” என்றார். அப்போது நினைவுத்தொடர்ச்சி இல்லாமலாகிவிட்டிருந்தது. டயாலிஸிஸ் செய்வதன் நோய்த்தொற்று உடலை வீழ்த்திக்கொண்டிருந்தது.உடல் சோர்ந்தாலும் உள்ளூர தன் பணியில் முன்னால்சென்றுகொண்டே இருந்தார் என நினைக்கிறேன்

ஒரு முறை மொழிசார்ந்து விவாதம் ஒன்று எழுந்து நாலுபக்கமும் வசை சூழ்ந்தது. அவருடைய அரசியல் தரப்பிலிருந்தே என்னை வசைபாடினர். அலெக்ஸ் என்னிடம் ”ஜாலியா இருங்க… இது என்ன வசை? இதவிட நல்ல மொட்டைவசை எல்லாம் நமக்கு வந்திருக்கு” என்றார்.

”அடி வந்தா?” என்றேன்.

“சேந்து வாங்கிகிடுவோம் ஜெ. நாலஞ்சு அடிய நான் வாங்கிக்கறேன், கேரண்டி” என்றார்.

“நான் என்ன பண்ணினா என்னை நீங்க விட்டுட்டு போய்டுவீங்க?” என்று ஒருமுறை அவரிடம் கேட்டேன். வேடிக்கைதான் என்றாலும் அன்று என் உள்ளத்தில் அந்தக் கேள்வி இருந்துகொண்டிருந்தது. ஏனென்றால் நெடுங்காலம் நண்பர்களாக, அணுக்கமான வாசகர்களாக இருந்தவர்கள் அவர்களின் அரசியல், சாதி இரண்டையும் நான் விமர்சிக்கிறேனோ என ஐயம் வந்ததுமே வெட்டிக்கொண்டு விலகுவதை, எதிரிகளாகி வெறுப்பும் ஏளனமும் செய்வவதை அன்று அடிக்கடி சந்தித்துக்கொண்டிருந்தேன்.

“நீங்க என்னதான் செஞ்சாலும் அது இனிமே நடக்கும்னு தோணலை…” என்று அலெக்ஸ் சிரித்தபடிச் சொன்னார்.

உண்மையில் மிகவும் நெகிழ்ந்துவிட்டேன். அவர் கைகளைப்பற்றிக்கொண்டேன்.

அலெக்ஸ் மறைந்துவிட்டார். விட்டுவிட்டுப் போகவில்லை.

***

முந்தைய கட்டுரைகுருவாயூரும் யேசுதாஸும்
அடுத்த கட்டுரைஎழுத்து பிரசுரம் அலெக்ஸ் மறைந்தார்