நாகம் -கடிதம்

9218a01ea4d507e689b1be4bee1f6995

நாகம

ஒத்தைக்கொட்டின் உறுமல் மெல்ல மெல்ல அதிர்ந்து காதுகளில் ரீங்கரித்தது. மாயாண்டி சுடலை ஈசனின் வில்லுப்பாட்டுக் கதை தூரத்து ஒலிப்பெருக்கியில் நிலையழிந்து கார்வை உயர்ந்திறங்கியது. களப மணம் கமழ்ந்து நாசி நிறைத்தது. முண்டங்கோவில் வாசலில் ஊட்டுச்சோறு வைத்து, வருத்தல் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. கச்சையணிந்த ஆண்டாள் மாமா, கைகளில் பந்தமெரியும் தடியுடன் அசையாமல் முண்டனை நோக்கி விழி உருட்டுகின்றார். சுற்றிலும் மக்களின் முகங்கள் ஆரவாரத்துடனும், பயத்துடனும் பார்த்து நிற்கின்றனர். ஸ்தம்பித்த கூர் நொடியில் முண்டன் அசைந்தான், அவனது ஈனக் குரலின் சப்த முழக்கம் தெரு முழுதும் வியாபித்து செவிகளில் அறைந்திறங்கியது. உந்திச்சாடக் கொட்டின் தாளம் வேகமெடுக்கிறது. முண்டன் சரிந்து விழுந்து மண் தரையில் புரண்டு உருள்கிறான். என்ன நிகழ்கிறது என்பதை ஊகிப்பதற்கு முன் அவன் கை கால் மூட்டிகளில் ரத்தம் உராய்ந்து வழிகிறது. வலிப்பு வந்தவன் போல புயங்கள் இழுபட மண்ணில் அறைந்து அறைந்து விடுபட்டான். ஏதோ சரடின் மைய நுனியில் அகப்பட்டு சித்தமழிந்தது போல அவனது பார்வை ஆகாசம் தொனித்தது. மஞ்சள் நீரை குடம் குடமாக ஊற்றுகின்றனர் அவன் மேனியெங்கும். அலைவுறுதல் அடங்கிய பாடில்லை. பூசாரி மகராச மாமா கைகாட்டுகிறார். தாளம் அடங்குகிறது. கால்கள் முறுக்கிய நிலையில் முண்டனான ஆண்டாள் மாமாவின் மெலிந்த உடல் விம்மி அதிர்ந்தது. பீடி இழுத்து ஒடுங்கிய நெஞ்சுக்கூடு உள் அழுந்தி இறங்கியது. தண்ணீ! தண்ணீ! என்றலறினார். பூசாரி அருகில் வந்து, எல்லாம் நிறைவுதானா? என்று கேள்வியெழுப்ப, ஊட்டுச்சோறில் முகம் அமிழ விழுந்தெழுந்தான் முண்டன்.

ஏன்? முண்டன் சாமி நிக்க மாட்டுக்காரு என்று ஆண்டாள் மாமாட்டையே கேட்டேன். லே! பிள்ளே அவனுக்கு கால் கெடையாது. இடுப்புக்கு கீழ முண்டனுக்கு ஒன்னும் கெடையாது. அந்தக் கட்டப் பீடத்தப் பாத்தாலே தெரியும் என்றார். ஆண்டாள் மாமா நல்ல உயரம் உண்டு. ஆனால் சாமி வரும் போது கூன் விழுந்தது போல மாறியிருப்பார். நடிப்பென்று எனக்கு தோன்றியதில்லை. முண்டனின் முகக் கவசத்தில் வரைந்த பாவம் அவர் முகத்தில் அனிச்சமாய் அன்நேரம் குடி கொள்ளும். அந்தக் குரலை நான் முண்டனின் குரலாகத் தான் அறிந்திருக்கிறேன். காலில்லாத தெய்வம்! தெய்வங்கள் குடி ஏறுகையில், அவர்களின் பலிச்சோறு மணக்கும் கூடத்தில், அந்தக் கணம், சாமி புகும் அந்த ஒற்றை நொடியை நான் தவற விடக்கூடாது என்ற தவிப்பிலேயே பார்த்துக் கொண்டிருப்பேன். அப்பொழுது என்ன நிகழ்கிறது. சிறு உலுப்பல், ஏதோ அழுத்தத்தில் தெறிக்கும் ஆட்டம், விழிகளின் கூர், உடல் மொழியின் நிமிர்வு, உதடுகளில் வந்திறங்கும் உன்மத்தம், அடக்க இயலா பெரும் ஆற்றல், நம்மைச் சூழும் இருளில் ஒளி புகும் தருணம், தன் வாலைத்தானே கடித்து ஊழ்கத்தைக் கலைக்கும் மென் நொடித் தூண்டல். சகலமும் அசைந்திறங்க, நீலமயமாய் மோனம் கவிழ்ந்து, நிறங்களின் முயக்கத்தில் காம குரோத மோகங்களை நெழித்துருட்டும் பாதாள நாகங்களைப் பார்க்கிறேன்.

சேசனும், வாசுகியும், தட்சனும், பத்மனும், குளிகனும், மாபத்மனும், கார்க்கோடகனும், சங்கபாலனும் நெழிகின்ற புடவி. விண்ணும் மண்ணும் பாதாளமும் ஆள்கின்ற சர்ப்பங்கள். மீன் தோல் நெகிழ்வு, மென்மை மினுங்கும் சதை, விரித்த படம், கரு நீலக் கண்கள், விஷ நுனிப்பற்கள். அமானுஷ்ய நெழிவில் புழுவாகவும், பாம்பாகவும் மாறும் வினோத உயிரினம். சாபமும் வரமும் ஒரு சேர அமைந்த தெய்வங்கள். நமக்கு தருவிப்பதும் அதனையே. நம்முள் வருத்தி அவர்கள் ஊர்கையில், நிறைவின்மையை ஊற்றி ஊற்றி நிறைக்கிறார்கள். தாபம் மேலுற இன்னும் இன்னும் எனும் வதைப்படலத்தில், பத்தியுயர்த்தி நிமிர்கிறார்கள்.

புள்ளுவர் குடத்தின் விம்மல் அதிர்வு அடிவயிற்றில் உதைந்தழுந்தியது. சர்ப்பங்களை வருவிக்கும், அவர்களுக்கான மொழியை சமர்ப்பிக்கும் நரம்பில் அலைவுற்றுக் கிடந்தது காலம். “ஆயிரம் தலையுள்ள ஆதிசேசன் ஆயில்ய மாசத்தில ஜனிச்சோனாம்” என்று தொடங்குகையிலேயே அறிந்தேன் அவர்களுக்கு மீட்சியே இல்லை. பயமும் கவர்ச்சியும் ஒரு சேரக் கப்பிக் கொண்டது. மாடனும், மாடத்திகளும் அலந்து கிடந்தனர் அதே நிலத்தில். கொடைப்பாயாசமாவது கிடைக்குமா என்று. மகராச மாமாக்களுக்கும் எந்த மீட்சியும் இருக்கப்போவதில்லை, அப்பிக்களுக்கும் தான். ஆனால் அவர்கள் அங்கெயே தான் இருப்பார்கள். விளக்கொளியில் அசையும் நிழலுருக்களில் அவர்கள் இருந்தார்கள். நிழல்களாக நம்மை சூழ்ந்து கொண்டு பற்றிக் கொள்ளத் துடிக்கிறார்கள்.

அவர்கள் நம்மிடம் அடைந்து கொள்ள விளைவது என்ன. எதைக் காவு கொடுத்து திருப்தி செய்வோம். தன் நிர்வாணத்தில் சர்ப்பம் நெழிந்து விடைக்கையில் அவளுள் விளைந்த நீலத்தின் சாயைகள். அறையெங்கும் களமெழுத்தின் வண்ண நெழிவில் முலையுந்திக் கிடக்கிறாள் கத்ரு. எண்ணற்ற கருக்களால் விசும்பை நிறைக்கத் தொடங்குகிறாள் அந்த பேராச்சி. எளிய மானுடமாகுகையில் களம் கலைந்து வடிவிலியாய் கரைந்தொழுகுகிறது.

சாத்தியமற்ற புள்ளிகளில் நின்று வருத்துகிறோம், திரும்பவும் வந்து அணைந்து கொள் என்று. சாபங்களுக்காகவும், வரங்களுக்காகவும். ஒற்றை நரம்புகள் ஓயாமல் தந்தியடித்து கொண்டே இருக்கிறது இன்மையின் தீராத்தாபத்தில்.

நன்றி,

தங்கள் உண்மையுள்ள,

நந்தகுமார்.

முந்தைய கட்டுரைகௌரி, மீண்டும்…
அடுத்த கட்டுரைமதுரை சொற்பொழிவு