சின்ன அண்ணாமலை ‘சொன்னால்நம்பமாட்டீர்கள்’
அன்பின் சீனு!
இரு மாதங்களுக்கு முன்னால் tamilvu.org என்ற இணையதளத்தில் தரவிரக்கம் செய்து ’’சொன்னால் நம்ப மாட்டீர்கள்’’ நூலை வாசித்தேன். கல்லுவிளை யுவன் கவிதை அரங்கில் ஜெ அந்நூலைப் பற்றி கூறினார். (சுத்தானந்த பாரதியாரின் சுய சரிதம் பற்றியும் சொன்னார். அது இன்னும் அகப்படவில்லை). தமிழ்நாட்டின் தேசியவாதிகளின் அழகான சித்திரத்தை இந்நூலில் காண முடிகிறது. அவர்கள் எதிர்கொண்ட சிக்கல்களையும் அவர்களின் செயல்பாடுகளின் எல்லைகளையும். தகவல் தொழில்நுட்பம் இவ்வளவு வளர்ந்துள்ள காலகட்டத்திலேயே இந்திய அரசாங்கம் மிகவும் சிரமப்பட்டு பிரஜைகளை தன் தொடர்பு வலைக்குள் கொண்டுவந்துள்ளது. ஆனால் 1940களில் அரசாங்கம், கட்சி ஆகிய அமைப்புகளில் அதன் உறுப்புகளாயிருப்பவர்களுக்கே ஒரு செய்தியையைக் கொண்டு சேர்ப்பது என்பதும் மக்களும், தொண்டர்களும் என்ன நினைக்கிறார்கள் எனத் தெரிந்து கொள்வதுமே மிகப் பெரும் பாடாய் இருந்திருக்கக் கூடும். காந்தியின் வழிமுறைகள் காங்கிரஸ் இயங்கும் விதத்தை வடிவமைத்திருந்ததால் எதிர்மறையாக எதைப் பற்றியும் யாரைப் பற்றியும் பேசாமல் ஆக்கபூர்வமான அரசியலை முன்னெடுப்பது அல்லது முன்னெடுக்க முயற்சிப்பது என்பது காங்கிரஸின் பாணியாக இருந்திருக்கிறது. (காங்கிரஸின் நெடிய வரலாற்றில் சில விதிவிலக்குகள் உண்டு). ஆனால் அவர்கள் எதிர்மறை பிரசாரத்தையும் வெறுப்பரசியலையும் எதிர்கொண்டனர். மற்ற மாநிலங்களை விட தமிழ் நாட்டில் அதன் பாதிப்பு மிக அதிகம். யோசித்துப் பார்த்தால், தங்கள் மீது வெறுப்பை உமிழ்பவர்களை அழித்தொழிக்க வேண்டும் என்ற எண்ணம் காங்கிரஸாருக்கு இருந்திருக்கவில்லை என்று படுகிறது. முடிந்த வரை பதில் கூறி இருந்திருக்கிறார்கள். இல்லையேல் பொருட்படுத்தாமல் பெருந்தன்மையாக இருந்திருக்கிறார்கள். இந்த அம்சம் காந்தியத்தின் கூறு என்று தோன்றுகிறது. நேருவும் அதனை முன்னெடுக்கிறார்.
இந்நூலில் சின்ன அண்ணாமலை சொற்களில் வெளிப்படும் ஒவ்வொரு காங்கிரஸ் ஆளுமையுமே வியப்பளிக்கக் கூடியவர்களாக இருக்கிறார்கள். கொள்கை அல்லது அரசியல் சார்ந்த விஷயங்களில் மட்டுமல்ல ஒவ்வொரு நட்பிலும் உறவிலும் அவர்கள் நடந்து கொண்டிருக்கும் விதம் சிலிர்க்கச் செய்கிறது. ஏதோ ஒரு விதத்தில் லட்சியவாதத்தால் ஈர்க்கப்பட்டவர்கள் எவ்வாறு சொந்த வாழ்க்கையிலும் அதைப் போலவே இருக்க முடியும் என்பதற்கு சான்றாக இருந்திருக்கின்றனர். சின்ன அண்ணாமலையின் வாழ்வே அப்படி இருந்திருக்கிறது. அவர் பழகிய தலைவர்களின் இயல்பும் அவ்வாறே இருந்திருக்கிறது. இராஜாஜியுடனான கல்கியுடனான அவரது உறவு குறித்த சித்தரிப்புகளின் மூலம் அவர்களுடைய ஆளுமையை யூகித்துக் கொள்ள முடிகிறது.
திருச்சி ரெயில் நிலையத்தில் அப்போது முதலமைச்சராயிருந்த அண்ணாதுரை அவர்களைத் தற்செயலாக சந்திக்கிறார் சின்ன அண்ணாமலை. உடன் பயணிக்குமாறு அண்ணாதுரை கேட்டுக் கொள்கிறார். ரெயில் சென்று கொண்டிருக்கும் போது முதல் வகுப்பு டிக்கெட் எடுத்திருக்கிறாயா என்று அண்ணாதுரை கேட்கிறார். சின்ன அண்ணாமலை டிக்கெட்டைக் காட்டுகிறார். அண்ணாதுரை தன்னுடன் பயணிக்கும் தன் கட்சியினர் தான் இருக்கும் தைரியத்தில் ‘’வித் அவுட்’’டில் ஏறி விடுகின்றனர்; அவர்களுக்கும் தான் டிக்கெட் எடுக்க வேண்டியிருக்கிறது என வருத்தப்படுகிறார். அதற்கு சின்ன அண்ணாமலை,’’நான் உங்களை நம்பி பிரயாணம் செய்பவனில்லையே ‘’ என்கிறார். ‘’நீங்கள் சொல்லும் அரசியல் கருத்து புரிகிறது’’ என்கிறார் அண்ணாதுரை.
திராவிட இயக்கத்தின் பரப்பியத்துக்கு பதிலடி கொடுக்க வேண்டும் என்று தீவிரமாக முனைகிறார் சின்ன அண்ணாமலை. காங்கிரஸ் தலைவர்கள் அதில் ஆர்வம் இல்லாமல் நம்பிக்கை இல்லாமல் இருக்கின்றனர். 1969ல் அகில இந்திய சிவாஜி ரசிகர் மன்றம் என்ற அமைப்பை உருவாக்கி அதன் முதல் மாநாட்டை வெற்றிகரமாக நடத்துகிறார். காங்கிரஸ் செய்து கொள்ள வேண்டிய மாற்றங்கள் குறித்து அதன் தலைவர்களிடம் மன்றாடுவதன் காட்சிகளை இந்நூலில் தொடர்ச்சியாகக் காண முடிகிறது.
ஒரு இலட்சியத்துக்காக சமூக மேம்பாட்டுக்காக எந்த சமூகத்திலும் ஆயிரக்கணக்கான உயிர்நிலை அறிவுஜீவிகள் செயல்பட்டுக் கொண்டேயிருக்கிறார்கள். வரலாறு அவர்கள் அனைவரையும் நினைவில் வைத்துக் கொள்வதில்லை. வரலாற்றால் அவர்களை முழுவதுமாக மறந்து விட முடிவதும் இல்லை!
அன்புடன்,
பிரபு மயிலாடுதுறை
***
அன்புள்ள ஜெ
சின்ன அண்ணாமலையை சிவாஜி ரசிகர்மன்றம் அமைத்தவர் என்றுதான் நான் அறிந்து வைத்திருக்கிறேன். அவருடைய இந்த சுயசரிதையை வாசித்தபோது ஒரு பெரிய சோகம் வந்து மூடிக்கொண்டது. எப்படி ஆரம்பித்தவர், பெரிய தலைவர்களுடன் உறவு. பெரிய பெரிய சாகசங்கள். தியாகங்கள், போராட்டங்கள். ஆனால் கடைசியில் அரசியலுக்காக சிவாஜி ரசிகர்மன்றத்தலைவராக ஆனார்
ஏன்? அது சுயநலம் இல்லை. காங்கிரஸ் மக்களால் கைவிடப்படுவதை அவர் கண்டார். அவர்களுக்கு தியாகமும் சிந்தனையும் பெரிதாகப்படவில்லை. அவர்களுக்கு எம்.ஜி.ஆரின் சினிமாக்கவர்ச்சிதான் முக்கியமாகத் தெரிந்தது. திமுக என்பது அறுபதுகள் முதல் எம்ஜிஆர் ரசிகர்மன்றம்தான். அதை காங்கிரஸ் எதிர்கொள்ளவேண்டும் என்றால் சிவாஜி ரசிகர்மன்றம் தேவை என சின்ன அண்ணாமலை நினைக்கிறார். இளைஞர்களை கவர வேறுவழியில்லை என கண்டுபிடிக்கிரார். அது உண்மை, காங்கிரஸ் மேலும் கொஞ்சநாள் நீடித்ததே சிவாஜியால்தான்.
சின்ன அண்ணாமலையின் சரிவு அல்ல இது. நம்முடைய ஜனநாயகத்தின் சரிவு. எந்தத்தியாகியாக இருந்தாலும் கோமணத்தைக் கட்டிக்கொண்டு டப்பாக்குத்து ஆடினால்தான் ரசிப்போம் என நாம்தான் அடம்பிடிக்கிறோம். இன்றைக்குக்கூட ஒவ்வொரு அரசியல், சமூக நிகழ்ச்சிகளிலும் நடிகர்கள் என்ன சொல்கிறார்கள் என்றுதான் நம் ஊடகங்களும் மக்களும் பார்க்கிறார்கள். இதோ நான் இதை எழுதும்போது நடிகர் விவேக் மாணவி அனிதா தற்கொலை செய்து இறந்ததற்கு அறிவுரைகளும் சிந்தனைகளுமாகப் பேசிக்கொண்டிருக்கிறார். இவர் யார், இவருடைய வாசிப்பு என்ன சமூகப்பணி என்ன? நமக்கு அக்கறை இல்லை. சின்ன அண்ணாமலையைப்போல சென்றகாலத் தியாகிகளை ஒன்று மறந்தோம். அல்லது நம்முடைய சிறுமையை அவர்களுடைய மீதே ஏற்றிவைத்தோம். வெட்கமாக இருக்கிறது
ராமச்சந்திரன்.
***