வங்கடை
அன்புள்ள ஆசானுக்கு,
உங்கள் வங்கடை பதிவைப் படித்தேன், பேருந்தில் இருந்தவர்கள் எனக்கு ஏதேனும் மனநல பாதிப்பு இருக்கும் என்று நினைத்திருக்க வாய்ப்பு உண்டு.
பத்தினியின் பத்து முகங்கள் எங்கள் நண்பர்கள் வட்டத்தில் மிக பிரபலம்..
உங்கள் சுய எள்ளல் குறிப்பாக அசட்டு கணவன் அல்லது சமூகப் பெரும்பான்மையிலிருந்து விலகி நிற்கும் பாத்திரம் மிகச் சரியாக உங்களுக்கு பொருந்துவதாக தோன்றுகிறது. உங்களை ஒரு முறை நேரில் பார்த்ததுண்டு ராஜேஸ்வரி திருமண மண்டபத்தில்..
“லே கண்ணாடி” என்ற வரியில் ஆரம்பித்து உங்கள் அருகில் இருந்து மீன் வாங்கி முழு நாள் நிகழ்வை (போன் கால்கள் உட்பட) உங்கள் அருகில் இருந்து பார்த்த உணர்வு.. சிரித்து மாளவில்லை.. நன்றி ஒரு நாளை இலகுவாக்கியதற்கு..
அன்புடன்,
ஞானசேகர் வே
***
அன்புள்ள ஞானசேகர்
சுய எள்ளல் போல எளியது வேறில்லை, உண்மையை எழுதினால் போதும்
ஜெ
***
ஜெ,
உங்களின் வாசகன் நான்!!
வங்கடை அற்புதமாக இருந்தது.. உங்கள் குடும்பம் பற்றிய பதிவுகள் ஆர்வமும் மகிழ்ச்சியும் அளிக்கின்றன!!
ஆனால் ஒரு செய்தி .. நீங்கள் உங்கள் சாதியயை குறிப்பிட்டிருக்கிறார்கள் !!
இதை தவிர்த்திருக்கலாம்!! நீங்கள் சாதியை வரலாற்று தொடர்புக்காக பயன்படுத்துகிறீர்கள் என்பதை அறிவேன்!! ஆனால் நிச்சயம் நீங்கள் தாழ்த்தப்பட்டவராக (மலம் அள்ளுபவராக) இருந்திருந்தால் இப்படி குறிப்பிடுவீர்களா?
நேர்மையாக வழக்கம்போல் பதிலளிப்பீர்கள் என நம்புகிறேன் !!
கக்கூஸ் படத்தில் பிள்ளைகள் தங்கள் சாதியை சொல்லும்போது அவர்களின் பின்புலமும் கூடவே வந்து அவர்களை பள்ளியில் இருந்து எப்படி வெளியேற்றுகிறது என்பதை பதிவு செய்கிறது !!
https://www.youtube.com/watch?v=-UYWRoHUpkU
அன்புடன்
ரமேஷ்
***
அன்புள்ள ரமேஷ்
புதிதாக வாசிக்க ஆரம்பித்திருக்கிறீர்கள் என நினைக்கிறேன். பொதுவெளியில் நிகழ்த்தப்படும் ஓர் உரையாடல் என இலக்கியத்தை, இலக்கியவாதிகளின் பேச்சை புரிந்துகொண்டிருக்கிறீர்கள். அல்ல, அது வாசகனுடனான அந்தரங்க வெளியில் நிகழ்வது. ஆகவே அதில் எல்லாமே இயல்பானது. இடக்கரடக்கல்களுக்கு இடமில்லை. அரசியல் சரிநிலைகளைப் பார்த்து, தப்புசரிகளைப் பார்த்து, நாலுபேருக்கு நல்லதாகத் தெரியும்படி, எவர்மனதையும் புண்படுத்தாமல் எழுதப்படுவதல்ல இலக்கியம். தன்னையும் பிறரையும் விமர்சிக்க, பகடி செய்ய, உட்புகுந்து ஆராய துணிவில்லையேல் அது இலக்கியமே அல்ல. தன் சாதியின், அல்லது குடும்பத்தின், அல்லது தன் இழிவையும் பிழைகளையும் எழுத்தாளன் எழுதமாட்டான் என்பது இலக்கியவாசிப்பு அற்ற ஒருவரின் நம்பிக்கை. தமிழில் இலக்கியம் படைத்த ஏறத்தாழ அனைவருமே சமரசமே இல்லாமல் அதைச் செய்திருக்கிறார்கள்.
எனக்கு இவ்வகை கடிதங்கள், அறிவுரைகள் அவ்வப்போது வந்துகொண்டே இருக்கின்றன. செங்கல்பட்டில் ஒரு வாசகர் ஜெயகாந்தன் கஞ்சாபிடித்ததாக நான் சொன்னது குழந்தைகளைக் கெடுக்காதா என அங்கலாய்த்தார். அவருக்குச் சொல்லிப்புரியவைக்கவே என்னால் இயலவில்லை. இலக்கியம் நாகரீகமான பண்பான சௌகரியமான பொய்களைச் சொல்வது அல்ல. அநாகரீகமாக இருந்தாலும் கசடாக இருந்தாலும் சங்கடமானதாக இருந்தாலும் உண்மையைச் சொல்வது என அவருக்கு கூறினேன். திரும்பத்திரும்ப அதையே சொல்லிக்கொண்டிருந்தார். அப்போது தோன்றியது ஒரே ஒருமுறை ஒரு படைப்பில் வாழ்க்கையின் உண்மையை பிடரியறை போல உணரும் அனுபவம் வாய்க்காத ஒருவரிடம் அதைச் சொல்லிப்புரியவைக்கவே முடியாது என
தயவுசெய்து இலக்கியவாதிகளிடம் ஒழுக்கமாக, அரசியல் சரிகளுடன் எழுதும்படி கோராதீர்கள். இலக்கியத்தின் பணியே எதையும் எழுதுவதுதான்
ஜெ
***
வங்கடை கடிதங்கள்