இனிய ஜெயம்
பேசிக்கொண்டிருக்கையில் ஒரு முறை கி ரா, ” வாய்மொழி மரபு கொச்சயாத்தாம் இருக்கும். தாய்ப்பாலு கொச்சதாம். வேணாம்ன்னாக்க யாருக்கு நட்டம்?” என்றார். காலச்சுவடு வெளியீடாக அ.கா. பெருமாள் அவர்கள் எழுதி வெளியாகி இருக்கும் வயல்காட்டு இசக்கி நூலுக்கு, அதில் அ. கா. பெருமாள் எழுதி இருக்கும் முன்னுரையில் ஒரு நிகழ்வை வாசிக்கையில், மேற்கண்ட கி ரா அவர்களின் கூற்றை நினைத்துக் கொண்டேன்.
பேராசிரியர் மிகுந்த உழைப்பில் நாட்டார் வழக்காற்றியல் ஆய்வு நூல் ஒன்று கொண்டு வருகிறார். அதிலிலுள்ள சில உண்மைகள் தங்கள் ”சாதியை ” கொச்சை செய்வதாக உள்ளது என்று சொல்லி, அந்த சாதி குறிப்பிட்ட அந்த நூலை வெளியாக இயலாமலேயே செய்து விட்டனர். இதை மனதில் கொண்டு வயல்காட்டு இசக்கி என்ற இந்த நூலில் ”அடக்கியே வாசித்திருக்கிறேன் ” என்கிறார். பேராசிரியர்.
பேராசிரியர் அவர்களின் முந்தய நூலான சுண்ணாம்பு கேட்ட இசக்கி ஒரு கதை சொல்லி வசம் கதை கேட்கும் உணர்வை நமக்கு அளிக்கும். இந்த நூல் அவ்வாறு அல்ல. சற்றே வேறுபட்ட வாசிப்பின்ம்பம் அளிக்கும் நூல் இது. நெல்லை துவங்கி குமரி வரை பேராசிரியரின் கள ஆய்வில், கிடைத்த கள ஆய்வு தரவுகள், அனுபவங்கள், அவற்றின் மீதான மெல்லிய விமர்சனம் அடங்கியது பதினைந்து கட்டுரைகள் கொண்ட முதல் பகுதி. ஐந்து ஆய்வுக் கட்டுரைகள் அடங்கியது இரண்டாம் பகுதி. திருவட்டாறு சிந்துகுமார் தீராநதி இதழுக்காக பேராசிரியரை கண்ட முழுமையான நேர்காணல் மூன்றாம் பகுதி.
பேராசிரியர் தனது முன்னுரையில் நாட்டார் வழக்காற்றியலில் நிகழ்ந்த முதல் பிழையை குறிப்பிடுகிறார். அதுஇங்கே மதம் பரப்பும் பொருட்டு, இந்த இயலை துவங்கி வைத்த, ஜெர்மன், பிரான்ஸ், இங்க்லாந்து, பாதிரியார்கள் இங்கே வந்து, இங்குள்ள வழிபட்டு முறைகளுக்கு அவர்கள் அளித்த பிழையான விளக்கங்கள். தென்னாப்ரிக்கப் பழங்குடி ஒருவரின் வழிபாடு பற்றிய தகவல்களின் அடிப்படையில் உருவாக்கிக்கொண்ட கருத்தாக்கத்தை, இங்குள்ள புலைமாடனுக்கும் சுடலை மாடனுக்கும் போட்டு உருவாக்கிய பிழையான அடிப்படைகள். இன்றும் பல ஆய்வாளர்கள் பிடித்து தொங்கிக் கொண்டிருக்கும் இந்த அபத்தங்களை விட்டு வெளி வந்து, நமதேயான அடிப்படை ஒன்றினில் நின்று நமது நாட்டார் வழக்காற்று ஆய்வுகள் துவங்க வேண்டும் என்கிறார்.
பேச்சிப்பாறை. காணிக்காரர் எனும் சமூகம், வயலை நாசம் செய்யும் மொசிறு எனும் எறும்புக்கூட்டத்தை கட்டுப்படுத்த, அந்த மொசிறு எறும்பை ஒடுக்கும், ஆனால் பயிர்களை பாதிக்காத செவினி எனும் ஏறும்புக்கூட்டத்தை அந்த வயலில் கொண்டு விடுகிறார்கள். இப்படி இன்னும் பதிவு பெறாத நுட்பங்கள், கலை வெளிப்பாடுகள் மீது கவனம் குவிக்கக் கோருகிறார்.
அனுபவம் பகுதியில் வயல்காட்டு இசக்கி எனும் கட்டுரையில், பெருங்கல்விளை கிராமத்தில், பெருமழை காலம் ஒன்றனில், அந்த கிராமத்து கம்மாய் உடைந்து, ஊரும், வயலும் வெள்ளத்தில் மூழ்காமல் இருக்க, ஒரு கர்ப்பிணிப் பெண் முயலுகிறாள். தனது உயிரைக் கொடுத்து கிராமத்தை வெள்ள அழிவில் இருந்து காப்பாற்றுகிறாள். அவள் அங்கே வயல்காட்டு இசக்கியாக கோவில் கொள்கிறாள். அந்தக் கோவிலில் இருந்து துவங்கி, அன்றைய விவசாயம், நெல்வகைகள், [உயர்ந்த சாதிக்கு மட்டுமேயான நெல் வகைகள் இருந்திருக்கிறது], அதை உணவாக மாற்றும் பக்குவங்கள், அந்த விவசாய அமைப்பை அண்டி வாழ்ந்த ராப்பாடிகள் சமூகம்,அந்த சமூகத்தின், வாழ்க்கை முறை, அதன் இன்றைய நிலை போன்ற சித்திரங்களை அளிக்கிறார்.
அடுத்த இரு கட்டுரைகளில், தனது பெரியதாத்தாவின் வைப்பாட்டியின் மூன்றாவது மகளான சின்னக்குட்டி என்ற சுசீந்திரம் கோவிலை சார்ந்து வாழ்ந்த தேவதாசி வழியே அவர் சொன்ன, வாய்மொழி தரவுகளை ஒப்பு நோக்கி, அன்றைய தேவதாசி சமூக நிலையை விரித்து உரைக்கிறார். ஆயிரத்து எண்ணூறுகளின் மத்தி வரை, கோவில் அதிகாரம் நம்பூதிரிகள் வசமும், நிலம் நாயர்கள், வேளாளர்கள் வசம் இருந்திருக்கிறது. அப்போது அவர்களை அனுசரித்து வாழவேண்டிய தேவை தேவதாசிகளுக்கு இருந்திருக்கிறது. கோவில் நிர்வாகம் அறங்காவல் துறைக்கு மாறிய பின் அவர்களை அனுசரித்து வாழ வேண்டிய நிலை, மருமக்கள் மான்மியம் ஒழிப்பு, தேவதாசி ஒழிப்பு சட்டங்களுக்குப் பிறகு அந்த சமூகம் மெல்ல மெல்ல நாயர், வேளாளர், செங்குந்த முதலியார் சமூகங்களுடன் கலந்து மறைகிறது. பூ வைத்துக் கொள்வது துவங்கி, ஜாக்கெட், உள்பாவாடை எனும் புது மோஸ்தர் வரை ஒவ்வொன்றும் எப்படி தேவதாசிகள் வழியே நடைமுறைக்கு வருகிறது எனும் சித்திரம் கட்டுரைக்குள் வருகிறது. ஒப்பு நோக்க தமிழ் நில தேவதாசிகளைக் காட்டிலும், அங்குள்ளோர் அனைத்து நிலையிலும் சற்றே மேம்பட்ட நிலையில்தான் இருந்திருக்கிறார்கள் என்று சுட்டி நிறையும் கட்டுரை.
பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நிகழும், கடுக்கரை தம்பிரான் கோவில் ஆயினூட்டு என்ற, ஊரே கூடி நிகழ்த்தும் உண்டாட்டு விழா குறித்த விரிவான சித்திரத்தை ஒரு கட்டுரை அளிக்கிறது. விழா நாளில், குறிப்பிட்ட உண்டாட்டு நாளில் படையல் தயாராகும் முறை, அந்த விவரணையே கனவுகளை விரிக்கிறது. ஊர் மொத்ததுக்குமான உண்டாட்டுக்கு தேவையான அரிசி, [எல்லா வகையும் கலந்த அரிசி] நான்காக பகுக்கப் படுகிறது. ஒரே நேரம், பல கலங்கள், ஒரே நேரத்தில் சமையல், குறிப்பிட்ட சரியான நேரத்தில் துவங்குகிறது, முதல் பங்கு அரிசி காலபங்கு வெந்ததும் எடுத்து பாயில் பரப்பப் படுகிறது, அதன்மேல் அரை பங்கு வெந்த அடுத்த பகுதி, அதன்மேல் முக்கால்பங்கு வெந்த மூன்றாம் பகுதி, அதன்மேல் முழுதாக வெந்த நான்காம் பங்கு அரசி கொட்டப் படுகிறது. அழகாக அது எல்லை கட்டப்பட்டு சுற்றிலும், குழம்பு, தொடுகறி, கலங்கள் கொண்டு அலங்கரிக்கப் படுகிறது. விழாவின் முக்கிய அம்சம். குறிப்பிட்ட சரியான நேரத்தில், கொட்டிவைக்கப்பட்ட அரிசி இரண்டு பாதியாக மெல்லிய வெடிப்பொலியுடன் பிளக்கிறது, மங்கல ஒலிகள் முழங்க உண்டாட்டு துவங்குகிறது. ஊர் நாகர்கோவில் பக்கம்தான். கடந்த உண்டாட்டு தற்போதுதான் முடிந்திருக்கிறது. அடுத்த உண்டாட்டில் விஷ்ணுபுரம் கோஷ்டி மொத்தத்தையும் அழைத்து செல்ல வேண்டும்.
பிணமாலை சூடும் பெருமாள் எனும் தெய்வம் குறித்து ஒரு கட்டுரை. திருவாங்கூர் இளவரசி. பயணம் ஒன்றினில் [நெல்லை சாம்பூர்] வழியில் இறந்து போகிறாள். ஆண்டாள் போலும் பெருமாள் பக்தி கொண்டவள். அங்கேயே அவள் புதைக்கப் படுகிறாள். புதைத்த இடத்துக்கு பெருமாளே வருகிறார். இளவரசிக்கு உயிர் அளிக்கிறார். அவளுக்கு மாலை சூடி வைகுந்தம் அழைத்து செல்கிறார். கோவிலின் இந்த கதையில் துவங்கி, தமிழகம் எங்கும் வெவ்வேறு வடிவில் உலாவரும், ஊர் விட்டு நீங்கிய அரங்கநாதன் கதையை, அதன் வடிவ பேதங்களை ஒரு கட்டுரையில் பேசுகிறார்.
இதே கதை. சிதம்பரம் நாடார் என்று ஒருவர், வைத்தியம் அறிந்தவர். ஒருமுறை சுடுகாட்டில் அரவம் தீண்டி மரணம் அடைந்த பிராமணப்பெண் புதைக்கப்படுவதை பார்க்கிறார். உறவினர் அகன்றதும், அந்த இளம்பெண்ணுக்கு தனது வைத்தியம் கொண்டு உயிர் அளிக்கிறார், அவளை திருமணம் செய்து கொள்கிறார். நாடார் பிராமணத்தியை மணம் புரிந்த நிலை ஊரில் பரவுகிறது. பிராமணர்கள் மன்னர் வசம் முறை இட, மன்னன் சிதம்பரம் நாடாருக்கு தூக்கு தண்டனை அளிக்கிறான், அந்தப் பெண் இறந்து போன தன்னை உயிர்ப்பித்த தனது கணவன் குறித்து மன்னன் வசம் சொல்கிறாள். மன்னன் தண்டனையை ரத்து செய்கிறான். ரத்து செய்யும் தகவல் தண்டனை களத்துக்கு வருமுன் நாடார் தூக்கிலிடப் படுகிறார்.[பிராமண சதி?]. அந்த நாடார் ஒரு கோவில் தெய்வம் ஆகிறார். அந்த கோவில் குறித்து ஒரு கட்டுரை பேசுகிறது.
ஆய்வுகள் பகுதியில் புதுச்சேரி வீரநாயக்கர் நாட்குறிப்பு எனும் ஆய்வுக் கட்டுரை மிக சுவாரஸ்யம் கூடியது. 1778 – 1792 வரை எழுதப்பட்ட நாட்குறிப்புகள். கடலூர் துவங்கி, சிதம்பரம் வரை, அன்று நிலவிய சட்டமில்லா நிலை, யார் யாரோ வந்து கொள்ளை அடித்த நிலவரம் எல்லாம் பேசும் நாட்குறிப்புகள். இந்த நாயக்கரும் ஆனந்தரங்கம் பிள்ளை போல,முக்கிய அரசு பதவி ஒன்றினில் இருந்தவர்தான். திப்பு சுல்தானுக்கும், பிரெஞ்சு மன்னருக்கும் இருந்த நட்பு குறித்து நாட்குறிப்பு பேசுகிறது. ஊருக்கே பந்தல் போடும் வகையில், ஒரு லட்சம் ரூபாய் விலை கொண்ட பிரும்மாண்டமான கம்பளத்தை, மன்னர், திப்பு சுல்தானுக்கு பரிசளிக்கிறார். அவர் திப்புவுக்கு அளித்த பரிசுப் பொருட்களில் ஒன்று, மூக்குப்பொடி டப்பி. வைரம் இழைத்த தங்க டப்பி. திப்புவின் மகன்கள், பிரிட்டன் நிர்வாகத்தால், பிணையாக எடுத்துக் கொள்ளப் படுகிறார்கள், [ குறிப்பிட்ட தொகையை திப்பு அளித்து அவர்களை மீட்டுக் கொள்ள வேண்டும் என ஒப்பந்தம்]. இது கேட்டு திப்புவின் நண்பன் ஒருவர் [வரலாற்றில் அன்றி இந்த நாட்குறிப்பில் மட்டுமே இடம் பிடித்தவர்] துயர் தாளாமல், துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு தற்கொலை செய்து கொள்கிறார். புதுவையில் அன்று கடுமையான இடங்கை வலங்கை தகராறு நிலவி இருக்கிறது. குடை பிடிப்பது துவங்கி, தேர் வடம் பிடிப்பது தொடர்ந்து, சாவுக்கு பாடை கட்டுவது வரை, ஒருவருக்கு மட்டுமே சொந்தமான உரிமையை மற்றவர் கைக்கொண்டு தீராத அடிதடி யில் காலம் தள்ளி இருக்கிறார்கள். சாவுக்கு பல்லக்கு கட்டும் உரிமை தகராறில், ஒரு பிணம் மூன்று நாள் சுடுகாடு போகாமலே இருந்திருக்கிறது. மன்னர் விருந்தில் தேவதாசிகள் கோலாகலமாக வரவேர்க்கப்பட்டிருக்கிரார்கள். வரவேற்க போட்ட வேட்டு ஒன்றில் நெஞ்சிடி கண்டு நட்டுவனார் ஒருவர் நட்டுக்கொண்டிருக்கிறார். பிரன்ச், பேச்சு வழக்கு தமிழ், பேசவே இயலாத ஆங்கிலம் [உதா ஹாஸ்பிடல் – இசுபிதா] எல்லாம் கலந்து கட்டி, மொத்தத்தில் ஏதோ பரிபாஷை போலும் எழுதப்பட்ட நூல் என்கிறார் பேராசிரியர்.
தமிழகப் பழங்குடிகள் மற்றொரு ஆய்வுக் கட்டுரை. இனத்தொற்றம், பூர்வீகம், மொழி, வழிபாடு, வாழிடம், ஆடை அணிகலன், உணவு, தொழில், வாய்மொழி மரபு, இசை நடனம், மருத்துவம், நீதி நிர்வாகம், திருமணம், பிறப்பு இறப்பு சடங்குகள் என அத்தனை அலகுக்குள்ளும் வைத்து தமிழ் நிலத்தின் கிட்டத்தட்ட அனைத்து பழங்குடி சமூகங்களை, சுருக்கமாகவும் செறிவாகவும் முன்வைக்கிறது இக் கட்டுரை.
யானையை பழக்குவதில் வல்லவர் ஒரு சமூகம், யானையால் மட்டுமே அழியும் ஒரு சமூகம். அர்ஜுனனுடன் போரிட்ட வேட சிவனின் வியர்வையில் தோன்றியவர்கள் நாங்கள் என்கிறது ஒரு சமூகம். வைணவத்தை நாடுகிறது மற்றொரு சமூகம். இங்கே இந்த போக்கு இயல்பாக இருக்க, வெர்ரியர்எல்வின், வடநாட்டில் அவர் வாழ்ந்த கோண்டு சமூகத்தில் ”வந்து சேர்ந்த ”இந்து மதம் குறித்து எழுதுகிறார். மார்வாரிகள் இந்த பழங்குடிகளை ”இந்துவாக” உயர்த்த அவர்களை பூணூல் அணிய சொன்னது, பன்றிகள் வளர்க்க வேண்டாம் என்றது குறித்து எழுதுகிறார். தமிழக பழங்குடிகள் கட்டுரையை எல்வினை நினைக்காமல் என்னால் வாசிக்க இயலவில்லை.
கிருஷ்ணதேவராயர் எழுதிய அமுக்த மால்யதா எனும் நூல் குறித்தது மற்றொரு ஆய்வு. நான் லீனியர் கதை கூறல் முறை. மன்னன் ஸ்ரீ வல்லபன் அவைக்கு பெரியாழ்வார் வருகிறார். அங்கு நிகழும் தர்க்க சபையில், சாங்கியம், வைசேடிகம், மாயாவாதம், பௌத்தம் அனைத்தையும் வெல்கிறார். அடுத்தது கேசத்வஜன் புராணம் வருகிறது. அந்த புராணத்தை சொல்லி பெரியாழ்வார் மன்னன் காதில் நாராயான மந்திரத்தை ஓதுகிறார்.மன்னன் மனமும் மதமும் மாறுகிறார். அதிலிருந்து பின் புராணக் கதை, அதிலிருந்து ஆண்டாள் கதை, பின் மணக்கால் நம்பி எனும் பக்தரின் கதை, இறுதியாக ஆண்டாள் கல்யாணம் என நூல் நிறைகிறது. தோசை போல நிலா, அதை சுடுகயில் எழும் புகை போல அலையும் பனி, என்றெல்லாம் ராயர் வர்ணனையை அள்ளி தெளித்திருக்கிறார் என கட்டுரை சொல்கிறது. ஜகன்னாத ராஜா இந்த தெலுங்கு நூலை தமிழில் மொழி பெயர்த்து இருக்கிறார். கிருஷ்ணதேவ ராயரின் தாய்மொழி கன்னடம் என்கிறார் பேராசிரியர்.
கடல்சார் மக்களின் நாட்டார் வழக்காறுகள் எனும் ஆய்வுக் கட்டுரையும், அதற்க்கான ஆ.சிவசுப்பிரமணியன் அவர்களின் எதிர்வினையும் இந்த ஆய்வு எனும் பகுப்பில் உள்ள முக்கிய கட்டுரைகள். கத்தோலிக்க கிறிஸ்துவம் இந்த கடல்சார் மக்களின் வாழ்வில் நிகழ்த்திய மாற்றங்களை, அந்த ஆழத்துக்கு செல்ல இயலாத, ப்ரோடஸ்ட்டன்ட் கிறிஸ்துவத்தை அதற்க்கான காரணிகளை ஆ.சி. விரிவாக முன்வைக்கிறார். இங்கே கடலூர் பகுதி கடல்சார் மக்களிடம் கிறிஸ்துவத்தின் தாக்கம் அனேகமாக முற்றிலும் இல்லை என்றே சொல்லிவிடலாம். முத்துமாரி,சோறங்கிஅம்மன் இவற்றுடன் தான் வாழ்ந்து வருகிறார்கள். சுனாமிக்குப் பின்னால் உருவான மெல்லிய சமூக மாறுதலை கவனித்து வருகிறேன். கடந்த மூன்று ஆண்டுகளில் மீன் பிடிக்கும் லாஞ்சில், பிகாரிகள் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்திருக்கிறது.
அன்றொரு நாள் கடற்கரையில் அமர்ந்திருந்தேன். கரையில் சில கட்டுமரம். சில மீனவர்கள் வந்தார்கள். அலைகளை எண்ணி காத்திருந்தார்கள். சீரான இடைவெளியில் ஒரே ஒரு குறிப்பிட்ட அலை மட்டும் நீண்டு வந்து கட்டுமரத்தை தொடுகிறது. ஒவ்வொரு முறையும் அலையெண்ணி காத்திர்ந்து அந்த அலை வருகையில் கட்டுமரத்தை தள்ளி, தள்ளி, சரியாக பத்தாவது அலையின் முடிவில் அவர்கள் கடலுக்குள் மிதந்துகொண்டிருந்தார்கள். ஆச்சர்யமாக இருந்தது. அலைகளுக்கு பெயர் உண்டு எனில் அந்த அலைக்கும் பெயர் இருக்கும். அலைகளின் பெயரை மனிதர்களுக்கு இடுவார்களா நான் அறியேன். இங்கே ஒரு பெண் குழந்தைக்கு பெற்றோர் இட்ட பெயர் சுனாமி.
மொத்த நூலிலும் எனக்கு தனிப்பட்ட முறையில் பிடித்த கட்டுரை, அனுபவங்கள் பகுப்பில் வரும் கோமரத்தாடி கட்டுரை. சாமியாடிகள் குறித்த கட்டுரை. மனித உடலின் ஆற்றல் திறனையும் தாண்டி, வெளிப்படும் சில மிகை ஆற்றல்களை, அதை நேரில் அவதானித்த தருணங்களை எழுதி இருக்கிறார்.
இங்கே கடலூர் அருகே கிராமம் ஒன்றினில் சிறிய கோவில். தீபம் காட்டுகையில் பக்தர் ஒருவருக்கு சாமி வந்து விட்டது.
ஹூஊம் ஹோஊம் நான்தாண்டா ராமலிங்கம் வந்திருக்கேன்.
பசிச்சுக் கிடக்கேன். குளுர வைங்கடா. நீங்க கேட்டத்த குறை இல்லாம தரேன்…..
என்ன சாமி செய்யணும்..
எனக்கு கிடாவெட்டி பொங்க வைங்கடா….
கேட்ட பூசாரி விட்டார் ஒரு அரை. வாங்கிய அறையில் சாமி மலையேறியது. அது வள்ளலார் கோவில்.
இது போன்ற ஒன்று பேராசிரியர் வாழ்விலும் நடந்திருக்கிறது. அவருக்கு பதிமூன்று வயது, தனது வயது உள்ள சிறுவர்களுடன் கூடி ஒரு விளையாட்டு விளையாடுகிறார். அதாவது அங்குள்ள மாடனுக்கு ஊரை கூட்டி படையல் போடுவது என்பதே அந்த விளையாட்டு. ஊரில் ஒவ்வொரு வீட்டிலும் காசு வசூல் நடக்கிறது. அந்த ஊரில்; ஏர்வாடி ஆச்சி என்றொரு கிழவி. உங்கள் நூஸ் கதை கிழவி போன்ற ஆளுமை. ஆச்சி வழக்கம் போல இதை கிண்டல் செய்கிறாள். இடையூறு செய்கிறாள். எல்லாம் தாண்டி மாடனுக்கு படையல் நாள் நெருங்குகிறது. சாமியாடி இல்லாத படையல் ஒரு படையலா? சாமியாட யாரேனும் கிடைப்பார்களா என தேட, ஒரு குப்பி சாராயத்துக்கு, [சாமியாடி அல்ல அவர்] ஒருவர் சாமியாட சம்மதிக்கிறார். அதிலிருந்து புதிய திட்டம் ஒன்று கிளைக்கிறது.
நாள் வருகிறது, சாமியாடி சாமி வந்து ஆடுகிறார், அனைவருக்கும் அருள் வாக்கு சொல்கிறார், ஆடிக்கொண்டே ஏர்வாடி கிழவியை நெருங்குகிறார் ” இந்தா. … இந்தா. .கேட்டுக்கோ இது மாடன் சொல்லு, அடுத்த வருஷம் இதே நாலு, சிங்கக்குட்டி கணக்கா ஒரு ஆம்புளப்புள்ள பெத்துக்குவ போ…..” ஊரே கூடி ஒரே ஆரவாரம் செய்ய அன்றுடன் அடங்குகிறது கிழவி சேட்டை.
பொதுவாக புனைவு அளிக்கும் பித்து, போதும் என தோன்றினால் அதிலிருந்து விலக ஏதேனும் அ புனைவை வாசிப்பேன். காண்டீபம் அளித்த பித்தில் இருந்து வெளிவர வாசித்த நூல் இந்த வயல்காட்டு இசக்கி. ராப்பாடி, பண்டாரம், தேவதாசி, குறவர்கள், நாட்டுப்புற தெய்வங்கள், சிற்ப்பங்கள், நாட்டார் கலைகள், நம்பிக்கைகள், சடங்குகள், வாழ்க்கை முறைகள், இவற்றில் நிகழும் மாற்றங்கள் என பலநூறு தகவல்கள்.கொண்டு நமது வேர்களை நோக்கிய வித விதமான பாதைகள் ஊடான பயணம். அளித்த நூல். முதலில் நேர்காணல். அடுத்து ஆய்வுகள், மூன்றாவதாக அனுபவங்கள் என நூலின் வைப்பு முறையை வாசிக்கையில் தலைகீழாக மாற்றிக்கொண்டால், இணையற்ற வாசிப்பு இன்பம் கிடைக்கிறது. சூழச் சூழ ஆசிரியர்கள் மத்தியில் ஒரு வாழ்வு. ஆசிரியர் அ.கா. பெருமாள் அவர்களுக்கு என் வணக்கம்.
கடலூர் சீனு
***