உங்கள் படைப்புகளை வாசகப் பார்வையோடு திரும்பப் பார்க்கிறீர்களா? உங்கள் படைப்புகளை முதலில் படிப்பவர் யார்? அவர் கருத்துகளுக்காக எதையாவது மாற்றியிருக்கிறீர்களா? எனில் அது அந்த ‘X‘ க்குச் சம்மதமான படைப்பாகிவிடாதா?
— ஜெயஸ்ரீ கோவிந்தராஜன்.
கனவை மீண்டும் எண்ணிக் கொள்ளாதவர்கள் உண்டா என்ன? தன்னுள்ளே இருந்து வந்ததாயினும் கனவு தானல்ல என அனைவரும் அறிவார்கள். என் படைப்புகளை நான் மீண்டும் மீண்டும் படிப்பதுண்டு. சில பகுதிகளைக் குறிப்பாக. காரணம் அவை எழுதியவனுக்கே ஆழமான அனுபவத்தை புதிய விஷயங்களை ஒவ்வொருமுறையும் அளிக்கக் கூடியவை. விஷ்ணுபுரத்தில் பிங்கலன் தனிமையை உணரும் பகுதி, அஜிதன் தியானம் செய்யும் பகுதி, பின் தொடரும் நிழலின் குரலில் கெ.கெ.எம் எழுதிய கடிதம், கிறிஸ்து வரும் பகுதி, ‘காடு’ நாவலில் முதலில் காடு தரிசனமாகும் பகுதி, புலிவரும் காட்சி போலப் பல உதாரணங்கள். வாசித்து குறைகண்ட பகுதிகளும் பல உண்டு.
என் முதல் வாசகி அருண்மொழிநங்கைதான். எழுத எழுதப் படிப்பவள். அவளுக்குப் பிடிக்காத பகுதிகள் உடனடியாக அகற்றப்பட்டுவிடும். விஷ்ணுபுரத்தில் குறைந்தது 200 பக்கம் அப்படி வெட்டிவீசப்பட்டது. ஆம், அவளது ஆளுமையால் கட்டுப்படுத்தப்பட்ட ஆக்கமாக அது ஆகிவிடும்தான். இருந்துவிட்டுப் போகட்டுமே, நானே அவளது ஆளுமையால் கட்டுப்படுத்தப்பட்டவன்தான்.
எம்.எஸ், வசந்தகுமார் ஆகியோர்க்கென ஆக்கங்களைப் படித்து சிலபகுதிகளை எடுக்கச்சொல்வதுண்டு. அவற்றை உடனே எடுத்துவிடுவேன். அவை பெரும்பாலும் எழுத்து எல்லைமீறிய இடங்களாக இருக்கும். சரியாக வரவில்லை என மீண்டுமெழுதிய பகுதிகளே என் நாவல்களில் இல்லை. வராவிட்டால் வரவில்லை, அவ்வளவுதான். ஒன்றுமே செய்ய இயலாது. கரும்பாறையில் முட்டிக் கொள்ளவேண்டியதுதான்.
-*-
உங்கள் தனிமனித ஒழுக்கம் பற்றிய அறிதலும், எழுத்துடனான அதன் ஒப்பீடும் எனக்குத் தேவை என்று ஏன் சொல்கிறீர்கள்? வாசகனுக்கு எழுத்துகளுடனான பரிச்சயம் மட்டும் போதாதா? உங்கள் தனிமனித ஒழுக்கம் அதில் எந்தவித பிம்பத்தை மாற்றி அமைக்கப் போகிறது?
— ஜெயஸ்ரீ கோவிந்தராஜன்.
என் தனிமனித ஒழுக்கத்தை நீங்கள் பரிசீலித்தே ஆகவேண்டும் என்று நான் எங்கும் சொன்னது இல்லை. அது படைப்புக்கு வெளியே உள்ள விஷயம். படைப்பை வாசிப்பதற்கும் மதிப்பிடுவதற்கும் அதற்கும் நேரடியாகவோ மறைமுகமாகவோ எந்தத் தொடர்பும் இல்லை. படைப்பு எழுத்தாளனின் அந்தரங்கத்திலிருந்து வந்ததாயினும் அவனது அந்தரங்கத்தின் நேரடியான பிரதிநிதி அல்ல.
ஆனால் எழுத்தாளன் என்பது ஒரு சமூகப்பொறுப்பு என்றும் ஆகவே எழுத்தாளன் ஓர் எழுத்தாளுமையாகவும் தன்னை வைத்துக்கொள்ளவேண்டும் என்றும் எண்ணுகிறேன். எழுத்தை மட்டும் பார்க்க வேண்டும், எழுத்தாளனின் தனிவாழ்வைப் பார்ப்பது அநாகரிகம் என்ற நோக்கில் தனிப்பட்ட முறையில் எனக்கு உடன்பாடில்லை என்றும் ஆகவே என் தனிப்பட்ட வாழ்க்கை பரிசீலனைக்குரியதே என்றும் எழுதினேன் அவ்வளவுதான்.