கி.ரா – தெளிவின் அழகு

kiraa

கேரள இலக்கிய விமர்சகரும் கவிஞருமான கல்பற்றா நாராயணனின் விமர்சன நூலொன்றைப்படித்துவிட்டு அவரிடம் நீண்ட தொலைபேசி உரையாடல் ஒன்றில் ஈடுபட்டேன். அத்தொகுப்பில் மூன்று கட்டுரைகள் வைக்கம் முகம்மது பஷீர் பற்றியவை. சொல்லப்போனால் தொகுப்பில் மூன்றில் ஒருபகுதி பஷீரைப்பற்றியது. பஷீரின் தரிசனத்தையும் கவித்துவத்தையும் அழகிய சொற்றொடர்களினூடாக முற்றிலும் எதிர்பாராத கோணங்களில் கல்பற்றா நாராயணன் தொட்டுக்காட்டுகிறார்.

விமர்சனம் என்பது தன்னளவில் ஒரு கலைப்படைப்பாக அமையமுடியும் என்பதற்கான சான்றுகள் அக்கட்டுரைகள் கேரளபண்பாட்டின் ஒரு பகுதியான மாப்ளா பண்பாட்டின் பல்வேறு நுட்பங்களை அறிந்து வாசித்து எடுக்கவேண்டியவை பல வரிகள். முற்றிலும் புதிய சொல்லாட்சிகள். புன்னகைக்க வைக்கும் மொழி விளையாட்டுகள். ஒவ்வொரு வரியும் முழுமை கொண்ட நடை சில தலைப்புக்களே கவிதைகள். ‘ஏதிலையும் மதுரிக்குந்ந காடுகளில்’ [எல்லா இலைகளும் இனிக்கும் காட்டில்] முதல் வரி இப்படித் தொடங்குகிறது. ‘பெரிய பசி கொண்டவள் பாத்துமாவின் ஆடு. அத்தனை பசியிருந்தால் உலகமே இனிய உணவுதான்’ பேரன்பு என்பது ஒருவகை பசிதான் என்று விரிகிறது அக்கட்டுரை.

ஆனால் ஓர் எளிய வாசகன் முதலில் கல்பற்றா நாராயணனின் இக்கட்டுரைத்தொகுப்பை படித்துவிட்டு பஷீரை வாசிப்பான் என்றால் உடனடியாக ஏமாற்றத்தை அடைவான். பஷீரின் படைப்புகள் மிக எளிமையானவை, சாதாரணமானவை என்று அவன் நினைக்கக்கூடும். பஷீர் எழுதிய காலத்திலேயே அன்றிருந்த முட்டத்து வர்க்கி போன்ற வணிக எழுத்தாளர்கள் ஒர் எட்டாம் வகுப்பு மாணவனின் அளவுக்குத்தான் பஷீரின் எழுத்து உள்ளது என்று சொல்லியிருக்கிறார்கள். உண்மையில் எளிய எழுத்துவேறு எளிமையான இலக்கியம் வேறு. இலக்கியத்திலுள்ள அந்த ஆழத்து எளிமை ஒரு கனிவு. ஒரு தரிசனம் அன்றாட வாழ்க்கைநோக்காக ஆனதன் விளைவு. மிக அரிதாகவே படைப்பாளிகளில் அது நிகழ்கிறது.

அதைப்பற்றி பேசும்போது கல்பற்றா நாராயணன் உலக அளவில் பஷீரைப்போல் மிக எளிமையான இலக்கியங்களைப்படைத்தவர்கள் பங்களிப்பு என்ன என்பதைப்பற்றி பேசினார். நட் ஹாம்சன், ஹான்ஸ் கிறிஸ்டியன் ஆண்டர்ஸன், அந்த்வான் சந்த் எக்ஸுபரி, அக்ஸெல் முந்தே  போன்று பல எழுத்தாளர்கள் உலக இலக்கிய அரங்கில் பெரும்படைப்பாளிகளாக கொண்டாடப்படுகிறார்கள். ஆனால் எந்த வெளிச்சிக்கலுமற்றவையும் பலசமயம் நாட்டுப்புறக் கதைத்தன்மையோ தேவதைக்கதைத் தன்மையோ கொண்ட படைப்புகள் அவர்களுடையவை. அவர்களின் எளிமையைக்குறித்தே நிறைய எழுதப்படுகிறது.

நவீன எழுத்து உலக அளவில் மேலும் மேலும் சிக்கலாகிக்கொண்டே செல்கிறது என்ற ஒரு மனப்பதிவு உண்டு. உண்மையில் அது சரியானதல்ல. சிக்கலான படைப்புகள் கல்வித்துறை வட்டாரத்தால் புகழப்பட்டு முன்வைக்கப்படுகின்றன. அவை ஒர் அறிவார்ந்த சவாலை விடுப்பதனால் எளிய விமர்சகர்கள் பொதுவாக அவற்றைக் கொண்டாடுகிறார்கள். ஒவ்வொரு காலகட்டத்திலும் அவ்வாறு மிகச்சிக்கலான சில படைப்புகள் விமர்சகர்களால் முன்வைக்கப்பட்டதுண்டு. ஆனால் ஒரு காலகட்டம் கடக்கையில் அவ்வாறு வடிவம் சார்ந்தும் மொழி சார்ந்தும் பார்வை சார்ந்தும் சிக்கலாக கருதபப்ட்ட படைப்புகள் அப்படியே காலத்தில் அமிழ்ந்து போய்விடுகின்றன. ஏனென்றால் ஒரு தலைமுறைக்குச் விசித்திரமாகவும் புதியதாகவும் சிக்கலாகவும் தெரிவது அடுத்த தலைமுறைக்கு அப்படித்தெரிவதில்லை.

அதேசமயம் எளிமையும் நேரடித்தன்மையும் கொண்ட படைப்புகள் தலைமுறைகளைக்கடந்து வருவதையும் காண்கிறோம். எளிமையின் அழகியலை எப்படி புரிந்துகொள்வது? இலக்கியத்தை அவ்வாறு ஒற்றை வரியில் வரையறுத்துவிட முடியாது. இவ்வாறாக ஒருவினாவை எழுப்பிக்கொண்டு ஒவ்வொரு எழுத்தாளரிடமிருந்தும் ஒவ்வொரு விடையையே நாம் பெற்றுக்கொள்ள முடியும்.

எனது வாசிப்பில் பொதுவாக இப்படி சொல்வேன். ஒன்று எத்தனை எளிய நேரடியான சித்தரிப்பிருந்தாலும் அரிதானதும் அசலானதுமான வாழ்க்கைத் தரிசனமும் வரலாற்றுத்தரிசனமும் பொதுவிவேகமும் ஒரு படைப்பாளியிடம் வெளிப்படுமென்றால் மட்டுமே அது இலக்கியம். இரண்டாவதாக மிக எளிமையான கதை சொல்லலுக்குள்ளேயே எண்ண எண்ண விரியும் குறியீட்டுத்தன்மையும் காலம் கடந்து நிற்கும் கவித்துவத்தையும் அப்படைப்பு கொண்டிருக்குமென்றால் அது இலக்கிய முக்கியத்துவம் உடையதாகிறது.

உதாரணமாக, நட் ஹாம்ஸனின் விக்டோரியா என்னும் நாவல். மிக எளிமையான காதல்கதை அது. இழந்தகாதலின் மெல்லுணர்வுகளால் ஆனது. ஆனால் இத்தனை ஆண்டுகளுக்குப்பின்னரும் வாழ்க்கை மீது ஆழ்ந்த நம்பிக்கையையும் இப்பிரபஞ்சநெசவு குறித்த நேர்மறையான பார்வையையும் கொண்டுள்து என்று அது நிலைகொள்கிறது. அவருடைய பசி [தமிழில் க.நா.சு] இன்றைய வாசகனுக்கு மிக எளிமையான ஒரு நாவல். ஆனால் சமூகத்தால் வெளியேதள்ளப்பட்ட ஒருவன் அச்சமூகம்மீது கொள்ளும் பேரன்பின் சித்திரம். அனேகமாக உலகெங்கிலுமுள்ள கவிஞர்கள் உடனடியாக அந்நாவலின் கதாநாயகன் தாங்களே என உணர்வார்கள்.

நட் ஹாம்ஸனைப்பற்றிய விமர்சனமொன்றில் ’ஒரு கிராமத்துப் பாதிரியாரின் நல்லியல்புள்ள வாழ்க்கை நோக்கு என்று முதல் பார்வையில் தோன்றுவது அவருடைய தரிசனம். ஆனால் ஒரு கிராமத்துப் பாதிரியாரின் நல்லியல்புள்ள வாழ்க்கை நோக்கு இரண்டாயிரம் வருடங்கள் வரலாற்றினூடாக ரத்தமும் கண்ணீருமாக உருவாகித் திரண்ட ஒன்று என்று பார்க்கையில் அதன் மகத்துவம் நமக்குப்பிடி கிடைக்கும்’ என்று வாசித்தது நினைவுள்ளது.

ஹான்ஸ் கிறிஸ்டியன் ஆண்டர்சனின் நவீன தேவதைக்கதைகளின் குறியீட்டு அமைப்பு இத்தனை காலத்திற்கு பிறகும் முற்றிலும் புதிய விளக்கங்களுக்கு இடமளிப்பதாக உள்ளது. இந்த எளிய கதைகளின் மிகச்சிறந்த அம்சம் ஒன்றில் அக்கதைகள் எழுதப்பட்ட கதைகள் என்பதைக்கடந்து சொல்லப்பட்ட கதைகளாக மாறிவிடுகின்றன. அவற்றின் குழந்தைக்கதை வடிவங்கள், வாய்மொழி வடிவங்கள் மக்களிடையே புழங்கத்தொடங்குகின்றன. அவ்வாறு ஒரு கதை மக்களிடையே புழங்கத்தொடங்குமென்றால் மக்கள் அதில் காலகாலங்களில் ஏற்றும் அத்தனை அர்த்தங்களும் அதில் படிகின்றன. அந்தக் கதை பெரிதாகிக்கொண்டே செல்கிறது. ஒரு கட்டத்தில் எழுதிய ஆசிரியனையும் கடந்து விஸ்வரூபம் எடுத்து நிற்கிறது. ஹான்ஸ் கிறிஸ்டியன் ஆண்டர்சனின் கதைகள் இன்று வளர்ந்த தொட்டியை கிளையில் தூக்கி வைத்திருக்கும் மாபெரும் மரம்போல அவரைக் கடந்து நம் நூற்றாண்டின் தொன்மங்களாக ஆகிவிட்டிருக்கின்றன.

ஐரோப்பிய இலக்கியத்தின் பிற்காலத்து இலக்கிய மேதைகளில் சிலர் நட் ஹாம்சனை தங்களுடைய முன்னோடிகள் என்று சொல்லியிருக்கிறார்கள். விந்தை என்னவென்றால் அவர்களில் சிலர் மிகச் சிக்கலான படைப்புகளை எழுதியவர்கள். சொல்கிறார்கள். சந்த் எக்ஸூபரியின் குட்டி இளவரசனில் உள்ள குழந்தைத்தன்மை அக்ஸல் முந்தேயின் சான் மிஷேலின் கதையில் உள்ள மானுடப்பற்று போன்றவை தலைமுறைகள் தோறும் வாசகர்களைப் பெற்று வளர்ந்துகொண்டிருக்கின்றன.

*

kiraa

எளிமையின் கலைப்பெறுமதி என்ன? எளிமையின் கலைக்கும் எளிய எழுத்துக்கும் உள்ள வேறுபாடு என்ன? இந்த வினாவுடன் தான் கி.ராஜநாராயணனை நாம் அணுக வேண்டியிருக்கிறது. இன்று மூன்றாம் தலைமுறை வாசகனை வந்தடைந்திருக்கின்றன. அவருடைய படைப்புகள். தன்னுடைய மூளைத்திறன் மேல் அசாதாரண நம்பிக்கை கொண்டு அதை கூர்தீட்டிப் பார்ப்பதற்கென்றே இலக்கியப்படைப்புகளை தேடும்வாசகன் கி.ராவின் படைப்புலகத்திற்கு வரும்போது சார்லி சாப்ளின் படக்காட்சி போல வாசலில் நுழைந்து அக்கணமே கொல்லைப்பக்கம் வழியாக வெளியேறிவிட்ட உணர்வை அடைகிறான். அவன் பிரித்து அடுக்குவதற்கு. அகழ்ந்து எடுப்பதற்கு. சூதாடிப்பார்ப்பதற்கு இப்புனைவுலகுக்குள் ஒன்றுமில்லை.

ஆனால் கி.ராஜநாராயணன் போன்ற ஒரு படைப்பாளியை இலக்கிய நுண்ணுணர்வுள்ளவர்களும், உலகப் பேரிலக்கியங்களைப்படித்தவர்களும், மிகச்சிக்கலான புனைவுகளைக் கடந்து வந்தவர்களுமான தேர்ந்த வாசகர்களில் ஒருசிலர் தமிழின் முதன்மை படைப்பாளியாக தொடர்ந்து முன்னிறுத்திக்கொண்டும் இருப்பார்கள்.

கி.ராஜராஜநாராயணனின் புனைவுலகத்தின் சிறப்பு அம்சம் என்று நான் எண்ணுவது மேலே குறிப்பிட்ட இரு கூறுகளும்தான். ஒன்று ஆசிரியனின் வாழ்க்கைத் தரிசனமும் வரலாற்றுத்தரிசனமும் கனிந்த உலகியல்நோக்கும் வெளிப்படுவது. இரண்டு அவை இப்புனைவில் வெளிப்படும்போது உருவாகும் கவித்துவமும் குறியீட்டுத்தன்மையும்.

ஒரு படைப்பை அது உருவான வரலாற்றுப்புலத்திலிருந்து மேலும் பண்பாட்டுக்கூறுகளை எடுத்துக்கொண்டு கற்பனையால் நிரப்பியும் மேலதிக வினாக்களை எழுப்பிக்கொண்டும் வாசிக்கும்பொதே முழுமையான வாசிப்பை அளிக்க முடியும். கிராவின் படைப்புகள் அத்தகையவை. அவை தென்தமிழ்நாட்டின் வரண்டநிலப் பின்னணி கொண்டவை. முன்னூறாண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்த குடியேற்றம் வழியாக உருவாகி வந்த கிராமங்கள் அவை. பெரும்பாலும் தெலுங்கு மொழி பேசும் ஒரே சாதிப்பின்னணி கொண்ட மக்களால் ஆனவை. தங்களுக்குள்ளேயே உறவுகள் ஏற்படுத்திக்கொண்டு ஒன்றுக்கொண்டு முட்டி மோதி வாழும் ஒரு சிறு வட்டம்.

ஐரோப்பியப் படைப்புகள் பலவற்றில் இத்தகைய சமூக வட்டங்களை கற்பனையாக உருவாக்கி அதற்குள் மொத்த வரலாற்றையும் பண்பாட்டு வளர்ச்சியையும் உருவமாக சொல்வதற்கு முயன்ற படைப்பாளிகள் உண்டு. உதாரணமாக வில்லியம் கோல்டிங்கின் To the Ends of the Earth போன்ற கடல்நாவல் தொகுதி. சொல்லப்போனால் கி.ராஜநாராயணனின் கரிசல்காடு கப்ரியேல் கார்சியோ மார்க்யூசின் கற்பனை நகரமான மாக்கெண்டாவுக்கு பலவகையிலும் சமானமானது.

இவ்வுலகை கிராவின் ஒரு புனைவு என்றே எடுத்துக்கொள்ள வேண்டியிருக்கிறது. படைப்பாளி புனைவுலகில் உருவாக்கும் ஒரு வாழ்க்கையை உண்மையில் அந்த மண்ணில் தேட முடியாது. அவனுடைய தெரிவுகளும் அவனுடைய அழகியலும் அவனுடைய கற்பனையின் விரிவும் இணைந்து அதை அவனுடைய தனி உலகமாக மாற்றிவிடுகிறது. கிரா உருவாக்கிகாட்டும் கரிசல்காடு முழுக்க முழுக்க கிராவால் புனையப்பட்டது.

இவ்வுலகுக்குள் இந்திய- தமிழ்ப் பண்பாட்டின் ஒரு வளர்ச்சிப் பரிணாமத்தை, இந்திய வரலாற்றின் ஒரு அணுநகர்வை. மானுட உறவுகளின் பல்வேறு சாத்தியங்களை, இந்தியாவின் சமகால அரசியலின் வெவ்வேறு காலகட்டங்களை ஒரு நல்ல வாசகன் கண்டுபிடிக்க முடியும். இந்த அணுவைப்பிறந்து உலகைக் காட்டும் காரணத்தால்தான் கிரா தமிழின் முதன்மையான படைப்பாளியாக மாறுகிறார்.இவ்வாறு இப்புனைவுலகில் உள்ள சாத்தியங்களை வளர்த்தெடுக்கும் கற்பனையோ பண்பாட்டுஅறிவோ அற்ற வாசகனுக்கு அவை வெறும் நவீன நாட்டுப்புறக் கதைசொல்லலாகவே நின்றுகொண்டிருக்கும்.

*

kiraa

கிராவின் இந்த நிகர் உலகத்தை நவீன வாசிப்பு முறைகளின் உதவி கொண்டு முழுமையாக ஆராய்ந்து எழுதப்பட்ட கட்டுரைகளை தமிழில் தேடிப்பார்த்தால் ஒன்றிரண்டு கூட சிக்க வாய்ப்பில்லை. அவ்வாறு ஒரு விரிவான வாசிப்பை அளிப்பதற்கான பயிற்சியோ ரசனையோ நம்மிடம் இல்லை. இங்கு இலக்கிய கோட்பாடுகள் பயின்று ஒப்பிப்பதற்கான பாடங்களாகவே அறிமுகமாகின்றன. அவற்றைக்கொண்டு இலக்கியப்படைப்புகளை அணுகும் ரசனை கொண்டவர்கள் மிக அரிதானவர்கள். இக்குறைபாடு நம்முடைய ஒட்டுமொத்த வாசிப்பிலும் இருப்பதனால் அவ்வாறு தரமான வாசிப்பினால் கௌரவிக்கப்பட்டவர்கள் என்ற பெருமை புதுமைப்பித்தனிலிருந்து நாஞ்சில் நாடன் வரைக்கும் நம்முடைய மூன்று தலைமுறை படைப்பாளிகள் எவருக்கும் அளிக்கப்படவில்லை என்றே சொல்லத்தோன்றுகிறது.

கிராவின் இந்த புனைவு பரப்பு ஒர் இந்தியவரலாற்றுச் சித்திரத்தை நமக்களிக்கிறது. அது கோபல்ல கிராமத்தின் முகப்புக் காட்சியிலிருந்து தொடங்குகிறது என்று சொல்லலாம். ஒரு புது நிலத்தை கைப்பற்றி அங்கு ஒரு மேய்ச்சல் சமுதாயத்தை அமைப்பதற்கான முயற்சியின் விவரிப்பு அது. ஒரு பசு பிடிக்கப்படும்போது அந்த பண்பாடு தொடங்குகிறது. மேய்ச்சலிலிருந்து விவசாயம் எழுகிறது. மேய்ச்சலும் விவசாயியும் இணைந்து அங்கு ஒரு சமுதாயத்தைக் கட்டி உருவாக்குகின்றன. அவர்களுக்குள் நுட்பமான முரண்பாடுகள், ஒத்திசைவுகள். ஐந்தாயிரமாண்டுக்கால இந்திய வரலாற்றின் ஒரு கடுகுச் சித்திரம் என்று இந்த பகுதிகளை எளிதில் சொல்ல முடியும்.

இந்தப்பார்வையுடன் விரித்தெடுக்கத் தொடங்கினால் எழுந்து வரும் ஒவ்வொரு நுண்ணிய உருவகங்களும் தகவல்களும் நம்மை மேலும் மேலும் வியப்பில் ஆழ்த்துகின்றன. மேழி அந்தப்பண்பாட்டில் அடையும் இடம், அந்தப்பண்பாட்டில் ஆண்களுக்கும் பெண்களுக்குமான உழைப்புப் பாகுபாடு உருவாகும் விதம், மண்ணுக்கும் அவர்களுக்குமான உறவு, அவர்கள் மேய்ச்சல் பண்பாட்டிலிருந்து விவசாயப்பண்பாட்டுக்கு வரும்போது மாறுகின்ற உளவியல்நுட்பங்கள் என்று ஒருவகையில் இந்தியப்பண்பாட்டையே இந்தச் சிறுவட்டத்துக்குள் விரிவாக நம்மால் வாசித்துவிட முடியும்.

கிராவின் வரலாற்றுத் தரிசனத்தை வெவ்வேறு கதைகளை ஒன்றுடன் ஒன்று அடுக்குவதன் மூலம் நாம் எளிதில் சென்றடைய முடியும். உதாரணமாக நான்கு கதைகள் ’கரிசல் காட்டில் ஒரு சம்சாரி’ ’நிலை நிறுத்தல்’ ‘கிடை’ ‘கொத்தைப்பருத்தி’.

கரிசல் காட்டில் ஒரு சம்சாரி ஓர் எளிய வாசிப்பில் ஒரு நிலப்பிரபுத்துவ காலகட்டத்து விவசாயி மெல்ல மெல்ல தன் நிலங்களை எப்படி பெருக்கிக் கொள்கிறான் என்பதன் சித்திரமாக மட்டுமே ஒரு பொதுவாசிப்புக்கு பொருள்படும். அவருடைய சிக்கனம், அசராத உடைப்பு, சூழ்ச்சி போன்றவை நகைச்சுவையுடன் சொல்லப்பட்டுள்ளன. ஆனால் சென்ற நூறாண்டுகால இந்தியப் பொருளியலை கூர்ந்து கவனித்தவர்களுக்கு ஒன்று தெரியும், விவசாய உபரியிலிருந்துதான் இந்தியாவின் தொழில்முதலீடு திரட்டப்பட்டது. அதிலிருந்துதான் இந்திய முதலாளித்துவம் உருவாகி வந்தது.

உதாரணம், கொங்கு மண்டலத்தின் தொழில்முதலீடு பெரும்பாலும் கொங்கு மண்ணின் விவசாய மிச்சமே. அவர்களின் மிகக்கடுமையான உழைப்பும் அதற்கிணையான சிக்கனமும் கூடவே சுதந்திரத்தை ஒட்டிய காலகட்டங்களில் அணைக்கட்டுகள் மூலம் வந்த நீர்வளமும் கோவையின் தொழில்முதலீட்டு திரட்சியின் மிக முக்கியமான காரணிகள். கரிசல் காட்டில் சம்சாரி என்ற ஒரு கதையைக்கொண்டு கோவை நாமக்கல் சேலம் பகுதி தொழில் வளர்ச்சியின் ஒரு வரைபடத்தை உருவாக்கிவிட முடியும். அதன் கதாநாயகன் மிகமுக்கியமான ஒரு மாதிரி மனிதர். அவரைப்புரிந்துகொண்டால் தமிழகத்தின் தொழில்வளர்ச்சியின் பரிணாமத்தையே விளக்கிவிடமுடியும்

ஒவ்வொரு நாணயமாக சேர்த்து நிலத்தை முதலீடாக மாற்றிக்கொண்டே இருக்கிறார் கரிசல் காட்டு சம்சாரி. எழுந்து வரும் ஒரு நவமுதலீட்டியத்தின் முதல் புள்ளி அவர். நிலம் அவருக்கு அன்னை அல்ல. தெய்வம் அல்ல. வட்டி ஈன்றாகவேண்டிய முதலீடு. ஒட்டக்கறக்கவேண்டிய பசு. தேயும்வரை உடைக்கவேண்டிய இயந்திரம். அந்தக்கிராமத்தில் அவர் மட்டுமே அப்படி ‘எழுந்து’ வருகிறார். மூன்று அம்சங்களை அந்தக் கதை சுட்டிக்காட்டுகிறது. ஒன்று அவருக்கு அந்தக்கிராமத்தில் எது நடந்தாலும் ஒரு பொருட்டாக இல்லை. நிலத்தை முதலீடாக மாற்றும் ஒரு செயல் தவிர அவருக்கும் அந்தக் கிராமத்தின் பண்பாட்டுக்கும் ஆன்மீகத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை. தன்னை நிலப்பிரபுத்துவ பெரும்பண்பாட்டின் தொடர்ச்சியிலிருந்து முழுமையாக துண்டித்துவிட்ட பிறகுதான் அவரால் நிலத்தை ஒட்டக் கறந்து பணமாக மாற்ற முடிகிறது. இரண்டாவதாக மூவாயிரமாண்டு நிலப்பிரபுத்துவ பண்பாட்டு உருவாக்கிய சகவாழ்வு ஒத்துழைத்து முன்செல்லும் பகிர்தல் என்ற அம்சங்களை முழுக்கவே அவர் தவிர்த்துவிடுகிறார். மிக எளிதாக இன்னொருவரை சுரண்டுகிறார் – சொல்பொருளிலேயே இன்னொருவருடைய நிலத்தை சுரண்டி சுரண்டி எடுத்துக்கொள்கிறார். இன்னொருவரை அழித்து தன்னுடைய வருமானத்தை பெருக்குகிறார்.

விவசாயம் என்று தொன்று தொட்டு வந்த தொழில் மூலதனச் சேமிப்பு என்ற அடையாளத்தை அடையும்போது திமிங்கலம் போல வாய் திறந்து சிறிய மீன்களை விழுங்க ஆரம்பிக்கும் சித்திரம் இந்தக் க்தையில் உள்ளது. இந்தக் கதையில் தனது நிலத்தின் வழியாக இயல்பாக உருவாகிவரும் காலடிப்பாதையை தவிர்ப்பதற்காக இரவு முழுக்க பக்கத்து நிலத்தில் நடந்து நடந்து புதிய ஒரு பாதையை உருவாக்குகிறார் கரிசல் காட்டு சம்சாரி. உண்மையில் அவர் உருவாக்கிக்கொண்டிருப்பது ஒரு புதிய பாதை அவருக்குப்பிறகு இந்திய வரலாறு ஒட்டுமொத்தமாகவே மாறிவிட்டது.

இந்தச் சித்திரத்துடன் சென்று இணையும் கதை நிலை நிறுத்தல். மாசாணம் அனாதையாக அயலூர் விவசாயக்கூலியாக கரிசல் காட்டில் குடிவருகிறான். திருமணம் செய்து கொண்டு மாசாணத்தியையும் கூட்டி வருகிறான். அவன் கடுமையான உழைப்பாளி. உழைப்பினூடாக ஒரு நல்லெண்ணத்தை ஈட்டுகிறான். அந்த நிலத்தில் மெல்ல அவன் கால் பதிப்பது கதையில் இயல்பாக விரிகிறது. ஒரு கட்டத்தில் அவர்கள் அனைவரின் பொருட்டும் மழைக்காக உண்ணா நோன்பிருக்கிறான். மழைத்துளி விழுந்ததும் அந்த நோன்பை முடிக்கிறான். அதுவரை அவனை அடிமையென்றும் கீழானவனென்றும் எண்ணியிருந்த அந்த மொத்தக் கிராமமே வந்து அவனுக்கு கஞ்சியூட்டுகிறது, அந்த ஊரில் அவன் தன்னை நிலைநிறுத்திக்கொண்டுவிட்டான்.

தமிழக வரலாற்றின் மிக முக்கியமான ஒரு குறியீடாக இந்தக் கதையை வாசிக்க முடியும். நிலப்பிரபுத்துவ காலத்தில் விவசாயக்கூலிகள் என்ற அடையாளம் மட்டுமே கொண்டிருந்த தமிழகத்தின் மிகப்பிற்படுத்தப்பட்டிருந்த சாதியினர் அவர்களின் தீவிரம் வழியாக, நிலத்துடனான உறவு வழியாக, சமூக அதிகாரத்தை கைப்பற்றும் ஒரு சித்திரத்தை இதில் ஒருவர் வாசிக்க முடியும்.

இதன் மூன்றாவது சித்திரமாக கிடை குறுநாவல் வருகிறது. அங்கு தமிழகத்தின் தலித் சாதியை பலவகையிலும் பிரதிநிதித்துவப்படுத்தும் கதாபாத்திரமாக அந்தப்பெண் வருகிறாள். பொய்யான வாக்குறுதிகளால் ஏமாற்றப்படுகிறாள். பாலியல் ரீதியாக சுரண்டப்பட்டு கைவிடப்படுகிறாள். அவளில் அவளுடைய புராதனமான தெய்வம் சன்னதம் கொண்டு எழுந்து நின்று ஆடும்போது அந்தக் கதை முடிகிறது. தலைமுறை தலைமுறைகளாக வரலாறு முழுக்க தோற்கடிக்கப்பட்ட அத்தனை தெய்வங்களும் அவளில் வந்து ஆவேசம் கொள்கின்றன. மீண்டும் மீண்டும் மண்ணுக்கு அடியில் செலுத்தப்பட்டு தீராத வஞ்சத்துடனும் வெறியுடனும் நின்றிருக்கும் பாதாள தெய்வங்களின் உலகம் என்று அதைச் சொல்ல முடியும்.

நான்காவது கதை கொத்தப்பருத்தி. இரும்பு பட்டைபோட்ட களஞ்சியங்கள் கொண்ட மாபெரும் விவசாயக்குடும்பம் நிலத்தை இழக்காமலேயே தேய்ந்து சுருங்குகிறது. அந்தக்குடும்பத்திற்கு பெண்தரமாட்டேன் என்று சொல்லிவிடுகிறார்கள். ஏனென்றால் வேளாண்மை பொருளிழந்துவிட்டது. தொழிலும், அரசை அண்டிவாழும் வேலையுமே முதன்மையாக கருதப்படும் சமூகம் அமைந்துவிட்டது. விவசாயி கொத்தப்பருத்தியாக அர்த்தமிழந்துவிட்டான்

இந்நான்கு கதைகளையும் ஒன்றுடன் ஒன்று சேர்க்கும் போது கிரா உருவாக்க விரும்பும் கரிசல் காட்டு சித்திரம் மட்டும் அல்ல, சமகாலத் தமிழ்நாட்டின் வரலாற்றுச் சித்திரமும் பண்பாட்டுச் சித்திரமும் உருவாகி வருகிறது. ஒரு மாதிரியுலகுக்குள் தன் மொத்த வரலாற்று, பண்பாட்டுத் தரிசனத்தையும் தொகுத்துச் செறித்துவைக்கும் இந்த அடர்த்தியாலெயே கி.ராவின் புனைவுலகு முதன்மையானதாக ஆகிறது.

கி.ராவைப்போலவே கரிசல்காட்டை, அதே மொழியில் எழுதிய பிற்கால படைப்பாளிகள் தமிழில் இருக்கிறார்கள். சூரங்குடி முத்தானந்தம், லட்சுமமணப் பெருமாள் போன்ற சிலரைச் சுட்டிக்காட்ட முடியும் அவர்களில் எவருமே சென்றடையாத உயரம் என்பது கிராவின் படைப்புகளில் உருவாகி வரும் இந்த பண்பாட்டு – வரலாற்றுச் சித்திரம் இதை அவர் எளிதில் சென்றடைய வில்லை. பிற எவருக்குமில்லாத பெரியதோர் அறிவுலகப் பயிற்சியுடையவர் கிரா. அவருடைய இலக்கியப் பயிற்சியின் பின்புலங்கள் இரண்டு. மரபிலக்கியங்களில் டி.கே.சியின் ரசனைப்பள்ளியின் மாணவர். கிராவின் இளமைப்பருவம் என்பது டி.கே.சியின் வட்டத்தொட்டியில் இளைய ரசிகராக அமர்ந்திருப்பதில் தொடங்கியது. ஜஸ்டிஸ் மகராஜன் மீ.ப சோமு, ஆ.சீனிவாசராகவன் போன்ற பலருடன் அவருக்கு நேரடித் தொடர்பிருந்தது. அவர்களினூடாக தமிழ் மரபிலக்கியத்தை ஆழ்ந்து அறிந்திருக்கிறார்.

நாட்டாரிலக்கியத்தில் நா.வானமாமலை போன்றவர்களினூடாக உருவாகி வந்த பார்வை அவருடையது. அவர் பிறந்து வளர்ந்த சூழலில் இயல்பாகவே நாட்டுப்புறவியலில் அவருக்கு அறிமுகமும் பயிற்சியும் இருந்தது. நாட்டுப்புறவியலை எப்படி நவீன அறிவியல் பார்வையில் அணுகுவது என்ற பயிற்சியை நா.வானமாலையிடமிருந்து அவர் பெற்ற்றுக்கொண்டார் என்று சொல்லலாம். இதைத் தவிர ஒட்டுமொத்தமாக இந்திய வரலாற்றையும் பண்பாட்டையும் ஆராயும் ஒரு மார்சியப் பார்வைக்கோணத்தை அவர் ஆரம்பகால கம்யூனிஸ்ட் தலைவர்களிடமிருந்து பெற்றுக்கொண்டார். அவருடைய ஆசிரியரென்று எஸ்.ராமகிருஷ்ணன், ஆர்.கே.கண்ணன், வழக்கறிஞர் வானமாமலை போன்ற பலர் இருந்திருக்கிறார்கள்.

கிரா இவ்வளவு பெரிய ஒன்றுக்கொன்று முரண்பட்ட மூன்று வெவ்வேறு பண்பாட்டு அரசியல் இயக்கங்களிலிருந்து முளைத்து உருவாகி வந்தவர். அதிலிருந்து உருவானதுதான் அவருடைய இந்த முழுமை நோக்கு. எவ்வகையிலும் அது தற்செயலானதல்ல. அதேசமயம் அது பயின்று ஆராய்ந்து ஏற்றுக்கொண்ட ஒன்றும் அல்ல இந்தப்பார்வை கலைஞனுக்கே உரிய நுண்ணுணர்வுடன் தன்னைச் சூழ்ந்து இந்த கிராமிய வாழ்க்கையிலிருந்து அடைந்த ஒன்று.தெளிவுறுத்திக்கொள்ளவும் வகைப்படுத்திக்கொள்ளவுமே இந்த அறிவுசார்ந்த பயிற்சிகள் கிராவுக்கு உதவியிருக்கின்றன.

உண்மையில் கிராவுக்கு அடுத்த தலைமுறை எழுத்தாளர்கள் ஒருவகையில் பெரும் துரதிஷ்டசாலிகள். கிராவுக்கோ ஜெயகாந்தனுக்கோ சுந்தர ராமசாமிக்கோ கிடைத்த அத்தனை விரிவான அரசியல்,பண்பாட்டுப் பயிற்சிகள் அவர்களுக்குக் கிடைக்கவில்லை. அவர்கள் அன்றைய இலட்சியவாத வீழ்ச்சியின், வேலையில்லாத் திண்டாட்டத்தின், வணிகக்கேளிக்கைக் கலைகளின் பிரம்மாண்டத்தின் எளிய இரைகள். அதில் அல்லாடி முட்டி மோதி எங்கோ ஓரிடத்தில் பற்றிக்கொண்டு தங்கள் வாழ்க்கையை அமைத்துக்கொண்டு அதனூடே தங்கள் இயல்பான கலைத்திறமையால் அவதானிக்கும் திறமையால் ஓரளவுக்கு எழுத முற்பட்டவர்கள்.

கிராவின் இந்த அறிவுப் பின்புலம்தான் பிறகுவந்த அத்தனை படைப்பாளிகளிமிருந்தும் அவரை ஒரு படிமேலே கொண்டு நிறுத்துகிறது. மிக எளிமையான ஒரு கதையில் கூட ஒட்டுமொத்தமான வரலாற்றுப்பார்வையும் பண்பாட்டுப்பார்வையும் வெளிப்படும் ஆழம் கி.ராவின் தலைமுறைக்கு இயல்பிலேயே அமைகிறது, அடுத்த தலைமுறையினர் ஒன்று என்றால் அது ஒன்றேதான். ஓராயிரமாகப் பெருகமுடியாது. அன்றாடவாழ்க்கையின் எளிய நுட்பங்களை மட்டுமே அவர்களால் எழுதமுடிந்தது.

கிராவின் படைப்புகளின் ஆழத்தின் அடுத்தமுகம் அதில் மானுட உறவுகள் வெளிப்படுவதன் இயல்பான அழகும் நுட்பமும். உதாரணமாக சென்ற ஐம்பதாண்டுகளில் ஆண்-பெண் உறவு பல கட்டங்களிலாக மாறிவரும் சித்திரத்தை கன்னிமை, கனிவு ஒரு காதல்கதை என்னும் மூன்று கதைகளை ஒன்றுடன் ஒன்று அடுக்கி நோக்குவதனூடாகச் சொல்லமுடியும்.

கன்னிமை நாச்சியார் என்ற இளம் பெண்ணின் இயல்பைச் சொல்லும் கதையாக ஒரு வாசிப்பில் தோன்றும். கன்னியாக இல்லத்தில் இருக்கையில் தாய்மையின் வடிவாக. கனிந்த அழகுடன் அவள் இருக்கிறாள். கதை முழுக்க அவள் ’கன்னிமை காத்த’ அழகு சொல்லப்படுகிறது. இல்லத்திற்கு வரும் ஒவ்வொருவருக்கும் அவர்களுக்குப்பிடித்தமான ஒன்றைச் செய்து உபசரிக்க அவளால் முடிகிறது. ஒவ்வொருவருக்குமான புன்னகை அவளிடம் இருக்கிறது. பிறகு அவள் திருமணம் செய்து கொள்கிறாள். மொத்த அன்புமே அவர்களுடைய குழந்தைகளுக்காக ஒதுக்கப்பட்டுவிடுகிறது. பேரன்னையாக இருந்தவள் வெறும் அன்னையாக மாறுகிறாள். கன்னிப்பருவம் எவ்வளவு அற்புதமானது அதை ஒரு தெய்வமாக்கி குமரி முனையில் நிறுத்தியவன் எவ்வளவு பெரிய கலைஞன் என்று கிரா ஒரு பேட்டியில் சொல்கிறார். ஆகவேதான் கதைக்கு கன்னிமை என்று பெயரிட்டிருக்கிறார்.

மனித உறவுகளின் ஒரு கதையாக இதை வாசிக்கும்போதே அக்கால சமூக வாழ்க்கை சித்திரம் அதிலிருந்து எழுகிறது. அந்தக் கன்னி புறவாழ்க்கையிலிருந்து அன்றைய சமூகத்தின் இற்செறிப்புமுறையால் பாதுகாக்கப்பட்டவள். புறவாழ்க்கையின் வஞ்சமோ கோபங்களோ எதுவுமே அறியாத வீடு என்னும் களத்தில் வாழ்பவள். அவள் பார்த்த மரங்களெல்லாம் பூத்திருக்கின்றன. அத்தனை மலர்க்ளிலும் தேனிருக்கிறது. இன்றைய பெண் அப்படி அல்ல. மிக இளம் வயதிலேயே போட்டி மிக்க ஒரு வாழ்க்கையில் தள்ளப்படுகிறாள். வஞ்சங்களையும் சூழ்ச்சிகளையும் அறிமுகம் செய்து கொள்கிறாள். தன்னலமாக இருந்தாலொழிய வெற்றி பெற முடியாதென்ற செய்தி அவளுக்கு குழந்தமையிலிருந்தே வந்துவிடுகிறது. இன்று ஒரு நாச்சியார் இருக்க முடியாது. கன்னி அன்னையாகும் மாற்றம் மட்டும் அல்ல, ஒரு பெரிய காலமாற்றமே இந்தக் கதைக்குள் வருகிறது.

அக்கதையின் இன்னொரு நீட்சிதான் ‘கனிவு’ திருமணம் செய்து கொண்டு பெண்ணை வீட்டுக்கு கூட்டிவந்தவுடன் காளை முன்னால் பசுவை கொண்டு நிறுத்துவது போல பெண்ணைக்கொண்டு நிறுத்தக்கூடாது என்ற நம்பிக்கை அந்த பெரியவர்களிடம் இருக்கிறது. ஆகவே ஆணும் பெண்ணும் பழகி தாங்களாகவே ஒருவரை ஒருவர் கண்டடைந்துகொண்டு அந்த முதல் உறவை அவர்கள் நிகழ்த்த வேண்டும் என்று நினைக்கிறார்கள். படிப்படியாக அந்த உறவு நிகழும் விதம் தான் அந்தக் கதையில் சொல்லப்படுகிறது. ஒவ்வொரு முறையும் கொண்டையா மல்லாம்மாவை நோக்கிக் கையை நீட்டுகிறான். அவன் கையெல்லாம் அவள் நகம் கிழித்த வடுக்கள். முறைத்துக்கொண்டிருப்பது பெண்ணின் பெருமையாகவும் முடிந்தவரை கீழிறங்குவது ஆணின் இயல்பாகவும் இருக்கிறது. உயிரினங்கள் அனைத்திலும் இருக்கும் அந்த தீராத விளையாட்டு அங்கு நிகழ்கிறது.

பின்னர் அவள் நோயுறுகிறாள். ஆணும் பெண்ணும் கொள்ளும் உறவென்பது பாலுறவு மட்டுமல்ல, ஒருவரை ஒருவர் சார்ந்து நெருக்கடிகளை சந்திப்பது கூடத்தான் என்று புரிந்துகொள்கிறார்கள். அவன் தோளில் சாய்ந்து அவன் அளித்த முதல் உருண்டை சோறை அவள் பெற்றுக்கொண்டாள் என்று அந்தக் கதை முடிகிறது. ஏறத்தாழ வைக்கம் முகம்மது பஷீரின் பூவன்பழம் என்ற கதைக்கு சமானமானது இக்கதை. பூவன்பழம் என்ற கதையைப்பற்றி மலையாளத்தில் முக்கியமான விமர்சகர்கள் எவ்வளவு நுட்பமாகவும் அழகாகவும் எழுதியிருக்கிறார்கள் என்று பார்க்கும்போது கனிவு பற்றி தமிழில் எங்காவது பொருட்படுத்தும்படியான நான்கு வரிகள் எழுதப்பட்டிருக்கிறதா என்ற ஏக்கம் தான் ஏற்படுகிறது.

இந்த உளவியல் நாடகம் அதிலுள்ல விளக்க முடியாத தித்திப்பு அதன் இனிய முடிவு. ஆணும் பெண்ணும் விலங்குகள் போல இருப்பதன் விடுதலையை அந்தக் கதை கொண்டாடுவதாகத் தோன்றுகிறது. பல பகுதிகள் தூய வனக்களியாட்டம் என்றே சொல்லலாம். கதை முதிர்வடையும்போது விலங்கிலிருந்து மனிதர்களாகி மனிதர்களுக்குரிய உச்சம் ஒன்றை அடைகிறார்கள். நெடுங்காலமாக சிவசக்திலயம் என்ற ஒன்றை இங்கே பேசிக்கொண்டிருக்கிறோம். அது வெளிப்பட்ட அபூர்வ கதைகளில் ஒன்று கனிவு.

ஆனால் அதன் நேரடியான உலகியல்தன்மையை நோக்கிச் செல்கிறது ஒரு காதல்கதை. கொண்டையாவுக்கும் மல்லம்மாவுக்குமான உறவின் முதன்மையான அம்சம் அவர்கள் காலூன்றி நின்றிருக்கும் சூழல்தான். சாதி, மதம், தொழில், ஊர் என. அதைக் கடந்து செல்லும்போது அந்த ‘தித்திப்பு’ ஓரிரு ஆண்டுகளுக்குக் கூட நிற்பதில்லை. ராகவன் ராணிமேரியை காதலித்து திருமணம் செய்துகொண்டு தங்களுக்குள் உறையும் பண்பாட்டு வேறுபாடுகளால் முரண்கொண்டு அற்றுப்போவதைக் காட்டும் கதை கி.ராஜநாராயணனிடம் எப்போதும் இருக்கும் லௌகீகமுதிர்ச்சியை வெளிப்படுத்துகிறது. மானுட உறவுகளை இலட்சியப்பின்புலத்தில் வைத்து அவர் அணுகுவதில்லை. அவை மண்ணுடனும் சமூகத்துடனும் பிணைந்தவை , பொருளியல் அடித்தளம் மீது எழுபவை என்பதே அவருடைய அணுகுமுறை.

*

Tamil_Literati_Rajanarayanan_KiRa

பள்ளிக்கூடத்தில் ஒன்றும் ஒன்றும் எவ்வளவு என்று கேட்டபோது குட்டி வைக்கம் முகமது பஷீர் இன்னும் பெரிய ஒன்று என்று பதில் சொல்கிறார். பிற்பாடு ஓ.வி. விஜயனின் கதையொன்றில் ஆசிரியரும் மாணவர்களுமாக ஒரு பெரிய பாலத்தின் மேல் ஏறி நின்று இரண்டு பெரிய ஆறுகள் இணைந்து இன்னும் பெரிய ஆறாக மாறி செல்வதைக்கண்டு பஷீரின் மெய்ஞானத்தை உணர்ந்து கொள்கிறார்கள். மிக எளிய ஒரு நகைச்சுவை துணுக்கு போல தோன்றும் இந்த வரி கேரள இலக்கியத்தில் பின்னர் கவித்துவமாகவும் தத்துவார்த்தமாகவும் பகடியாகவும் எப்படியெல்லாம் பயன்படுத்தப்பட்டுள்ளது என்று பார்ப்பது ஒரு சுவாரசியமான அனுபவம். நாட்டுப்புறக் கதை மரபிலிருந்து பௌராணிக மரபிலிருந்தும் சூஃபி முதலிய ஆன்மீக மரபுகளில் இருந்தும் வரும் இத்தகைய ஒருவரி தனிமனிதனின் எளிய மூளை மின்னல் அல்ல. ஒரு பண்பாடு தனக்குத் தானே கண்டுபிடித்த ஒரு தரிசனம் அது.

அத்தகைய மகத்தான வரிகள் இலக்கியத்தில் இடம் பெறுவதற்கு மரபை நன்கறிந்து இலக்கிய அழகியலுக்குள் அவற்றை மாற்றம் செய்யும் பெரும்படைப்பாளி தேவை. தனது சிறிய அன்றாட உணர்வுகளுக்குள் சிக்கி அலைவுண்டு அவற்றையே சலிக்கச்சலிக்க எழுதிக்கொண்டிருக்கும் எழுத்தாளர்களிடமிருந்து ஒருபோதும் வரலாற்றை, பண்பாட்டை மானுடத்தை நோக்கி விரியும் அத்தகைய வரிகளை எதிர்பார்க்க முடியாது. எழுத்தாளன் ஒரு மிகச்சிறந்த ஆற்றல் கடத்தி என்று டி.எஸ்.எலியட் சொல்கிறார். அவனொரு ஏரியின் மடைபோல. ஊற்றென அவன் பொங்கி பெருக்கெடுப்பது அவனுக்குப்பின்னால் தேங்கி இறுகி நிற்கும் வரலாற்றின். பண்பாட்டின் அறிதல் தான்

நாட்டார் கதைகளில் இருந்தும் கிராமிய வாழ்க்கையிலிருந்தும் கிராவுக்கு வந்து சேர்ந்திருப்பது அத்தகையதோர் விவேகம். அது வெளிப்படும் தருணங்கள் இயல்பிலேயே கவித்துவமாக அமைகின்றன. நட் ஹாம்சனிடம் ஹான்ஸ் கிறிஸ்டியன் ஆண்டர்சனிடமும் தொன்மையான கிறிஸ்தவ மரபின் அழகுகள் எப்படி வெளிப்படுகின்றனவோ பஷீரில் சூஃபி மரபின் மெய்யியல் எப்படி வெளிப்படுகிறதோ அதே போல. ஒருபோதும் அவ்வெளிப்பாடு எளிமையான புனைவாக இருக்க முடியாது. அந்த மரபிற்கு ஒரு சொல்லாட்சியும் வடிவமும் உண்டு. அவற்றை தவிர்த்துவிட்டு அது நிலைகொள்ள முடியாது. ஆகவே தான் அவருடைய புனைகதைகளில் தொடர்ச்சியாக வாய்மொழி கதை மரபையும் நிகழ்ந்ததை சற்று வித்தாரமாக சொல்லிச் செல்லும் நாட்டுப்புற கதை சொல்லியின் பாணியும் உள்ளது.

ஆனால் நாட்டுப்புறக் கதைவெளி என்பது அனுபவங்களும் வெறும் உளப்பதிவுகளும் உணர்வுகளும் அவ்வவ்வாறே பதிவான ஒன்று அல்ல. அவ்வெளியிலிருந்து நான் கி.ரா எதைத் தொட்டெடுக்கிறார் என்பதுதான் அவரை நவீன எழுத்தாளராக்குகிறது. அவ்வாறு தொட்டு எடுக்கும் பகுதிகள் அனைத்துமே நுட்பமான கவித்துவத்துடன் உள்ளன் என்பது தான் அவரை பெரும் படைப்பாளியாக்குகின்றது.

உதாரணமாக அவருடைய புகழ் பெற்ற கதையாகிய ஜடாயு. தாத்தைய நாயக்கர் நள்ளிரவில் குற்றவாளிக் கும்பலால் கடத்திச்செல்லப்படும் ஒரு பெண்ணைக்காப்பதற்காக போராடி வெட்டுண்டு தரையில் கிடந்து துடிக்கும் காட்சியுடன் உச்சம் பெறும் கதை அது. இருகைகளை இழந்த பிறகும் தலையால் முட்டி மோதி அவர்களைத் தடுக்க முயல்கிறார். தன்னால் தடுக்க முடியவில்லையே என்று ஏங்கி இறக்கிறார். சீதையை ராவணன் கடத்திச் சென்ற போது அவனிடம் மோதி சிறகொடிந்து விழுந்த ஜடாயு எனும் பௌராணிக இழையைக்கொண்டு வந்து இந்த நிகழ்கதையின் அடியில் நிறுத்துவதினூடாக அதற்கொரு குறியீட்டு ஆழத்தை கிரா அளிக்கிறார். அக்கதைகூறல்முறையில் உள்ள நாட்டுப்புறத் தன்மை காரணமாக அதை ஒரு செவிவழித் தொன்மமாக மாற்றுகிறார்.

ஒரு நவீன வாசகன் வரலாற்றுடன் இணைத்துப் படிக்கும்போது மேலும் பல அர்த்தங்களுக்கு நகரும் கதை. நீதி என்பது கிராமிய அலகுகளுக்குள், மூத்தவர்களின் விவேகத்தால் தீர்மானிக்கப்பட்டிருந்த ஒரு காலத்திலிருந்து அவர்களை மீறிய பிறிதொரு காலம் உருவாவதைக் காட்டுகிறது அக்கதை. கணவனிடம் கோபித்து வந்த ஒரு பெண்ணை கூந்தலைப்பிடித்து இழுத்துச் சென்று பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கும் ஒரு குற்றவாளிக்கு எதிராக பழைய அமைப்பும் அதன் அறவுணர்வும் ஒன்றும் செய்ய முடியாது செயலற்று நிற்பதைக்காட்டுகிறது. ’கையறு நிலை’ என்று நேரடியாகவே சொல்லலாம்.

இன்னும் ஒரு விரிந்த தளத்தில் இக்கதை எழுதப்பட்ட சூழலை கிரா சொல்வதைக் கணக்கில் கொண்டு பார்க்கலாம். கம்யூனிஸ்ட் இயக்கம் தடை செய்யப்பட்டிருந்த காலத்தில் அப்போராட்டங்களில் ஈடுபட்டமைக்காக தலைமறைவாக கிரா ஒரு காட்டுக்கொட்டிலில் தங்கியிருக்கும்போது இவ்வாறு ஒரு பெண்ணின் அலறலைக்கேட்கிறார் அன்று எழுந்து சென்று அவர்களிடம் மோதவோ அப்பெண்ணைக்காப்பாற்றவோ உடல் ஆற்றல் கொண்டவரும் அல்ல. காசநோயால் மெலிருந்திருந்த காலம். “நான் ஒன்றும் செய்ய முடியாமல் இருந்தேன். ஆகவே கதையில் தாத்தைய நாயக்கராகச் சென்று கையறுபடுகிறேன்” என்று ஒரு பேட்டியில் கிரா சொன்னார்.

கண்ணெதிரே தனதுமதிப்புக்குரியவை சூறையாடப்படுவதைக்கண்டு கைகள் அற்று முட்டி மோதி இறக்கும் தாத்தைய நாயக்கரை அதன் பின் இந்தியாவின் அரசியலின் பல்வேறு தருணங்களில் நான் அடையாளம் கண்டுகொண்டதுண்டு. இன்று நமது மாமனிதர்கள் அனைவருமே கையற்று துடிக்கும் ஜடாயுக்கள் தான்.

கிராவின் கதைகளின் இலக்கியமதிப்பை இறுதியாக நிறைவூட்டுபவை இவ்வாறு தொடத்தொட விரியும் கவித்துவச் சாத்தியங்கள்தான். பிறிதொரு உதாரணம் அவருடைய புகழ்பெற்ற கதையான பேதை. பைத்தியக்காரி கருவுறுகிறாள். குழந்தை இறக்கிறது. விலங்குபோல இறந்த குழந்தையை கையிலேந்தியபடி அலைகிறாள். காணாமலாகிவிட்டு மீண்டும் ’ஆமாம் அப்படித்தான் பிள்ளைபெற்றுக்கொள்வேன்’ என்று வயிற்றைத்தூக்கிக்கொண்டு நடந்துசெல்கிறாள். அந்தக்கதையின் கவித்துவம் அவள் பெயரிலிருந்து தொடங்குகிறது. பேச்சி ஒரு நாட்டார்தெய்வம். காளியின் மறுவுருவும்கூட. மயானத்தில் வேகும் பிணத்தை எடுத்து தின்னும் பேச்சியை சாக்தத்தின் பெரும்பின்புலத்தில் ஒரு தொன்மம் போல விரித்தெடுக்கமுடியும்.

கிராவின் படைப்புலகம் நாட்டாரியலில் இருந்து தன் கூறுமுறையை பெற்றுக்கொண்டது. ஈராயிரம் ஆண்டு தொன்ம வரலாறு கொண்ட வேளாண்மை பண்பாட்டிலிருந்து மரபான உலகியல்விவேகம் ஒன்றை பெற்றுக்கொண்டது. மார்க்சியத்திலிருந்து அது தன் வரலாற்றுப்பார்வையை செவ்வியல் இலக்கியத்திலிருந்து தனது நுண்ணிய அழகுணர்வையும் பெற்றுக்கொண்டது. தமிழில் அதற்கிணையான புனைவுலகம் மிக குறைவாகவே உள்ளது. உலக இலக்கியத்திலும் அரிதான ஒன்றாகவே அது கருதப்படும் இங்கே ஒவ்வொரு கதையும் அச்சூழலின் பல்லாயிரம் பண்பாட்டு உட்குறிப்புகளைப் பெற்றுக்கொண்டு விரிகிறது. அவ்வாறு விரியவைக்கத்தெரிந்த வாசகர்களுக்குரியது – அவன் தமிழ்ச்சூழலையே அறியாதவனாகக்கூட இருக்கலாம், இலக்கியத்தின் இயங்குமுறைதெரிந்தவனாக இருந்தால் மட்டும் போதும்.

லடாக்கின் பாங்கோங் ஏரிக்கரையில் நின்றிருக்கையில் ஒரு பெரும் வியப்பை அடைந்தேன். மலைப்பனி உருகிய நீர் ஆதலால் முற்றிலும் மாசு இல்லாமல் மிகமிகத் தூய்மையான நீர் அது. ஆகவே ஆழமற்றது என்ற விழிமயக்கு ஏற்படும். ஓரிரு அடி கால்வைத்தால் அதன் ஆழம் திடுக்கிடச்செய்யும். கலங்கலால் ஆழத்தை மறைக்கும் படைப்புகள் உண்டு. தெளிவால் ஆழத்தை மறைப்பது ஒரு படி மேலான கலை.***

[ 2017 ல்கி . ராஜநாராயணனின் 95 ஆண்டு அகவைநிறைவை ஒட்டி வெளியிடப்பட்ட விமர்சனத் தொகைநூலுக்காக எழுதப்பட்ட கட்டுரை ]

முந்தைய கட்டுரைகி.ரா.என்றொரு கீதாரி
அடுத்த கட்டுரைவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 8