கீழடி ஆதிச்சநல்லூர் எதிர்வினைகள்

kiizaகீழடி – நாம் பேசவேண்டியதும் பேசக்கூடாததும் 

அன்புள்ளஜெ

தங்கள் “கீழடி- நாம் பேசவேண்டியதும் பேசக் கூடாததும்” பதிவிலிருந்துதான் வரலாற்றுக் காலகட்டங்களைத் தெளிவாகப் புரிந்துகொள்கிறேன். அதில் முதல் காலகட்டம் பத்தாயிரம் ஆண்டுத் தொன்மங்களையும் ஏழாயிரம் ஆண்டுத் தொன்மங்களையும் உள்ளடக்கியுள்ளது. இரண்டாவது காலகட்டம் நான்காயிரம் ஆண்டுத் தொன்மங்களை உள்ளடக்கியது. மூன்றாவது காலகட்டம் மூவாயிரம் ஆண்டு தொன்மை வாய்ந்தது. இதுவரை தெளிவாக புரிகிறது.
“மறைக்கப்பட்ட இந்தியா” வில் எஸ். ராமகிருஷ்ணன் அவர்கள் ராபர்ட் ஃப்ரூஸ் ஃபுரூட் பற்றி எழுதியுள்ளார். அந்த நூலில் முதன்முதலில் கற்கருவி கண்டுபிடிக்கப்பட்ட கதையை மிகவும் சுவாரஸ்யமாக எழுதியிருந்தார். யுவான் சுவாங், பாஹியான் என ஒரு தெளிவில்லாமல் பள்ளிக்காலங்களில் மனப்பாடம் செய்து வைத்திருந்தேன். யுவான் சுவாங்கின் நீண்ட மீசையுடைய உருவம் இந்நூலை வாசிக்கும்போது அப்படியே மனக்கண்முன் தோன்றியது. அவர் அறிதலின் பொருட்டு இந்தியாவுக்கு வருவதற்கு எவ்வளவு துன்பப்பட்டார் என்றும் சிரத்தையுடன் தான் அறிந்துகொண்ட இந்திய வரலாற்றையும் தத்துவங்களையும் நூல்வடிவமாக்கி தன் நாட்டுக்கு கொண்டு செல்வதற்கு மீண்டும் எவ்வாறு கஷ்டப்பட்டார் என்பதையும் எஸ்ரா அவர்கள் விவரித்திருந்த விதம் எனக்கு தேடலின் தீவிரத்தை உணர்த்தியது.

பலமுறை சிறுவகுப்பு வரலாற்றுப் புத்தகங்களை என் பையனிடம் வாங்கி கற்காலம் முதல் தற்காலம் வரை புரிந்துகொள்ள முயன்றேன். ஆனால் ஒரு எளிதாக தெளிவாக காலங்களை வரையறுத்துக் கொள்ள முடியவில்லை. இந்த இப்போது நான் எது குறித்து தெளிவான ஒரு வரலாற்றறிவு பெற வேண்டும் என தேடிக்கொண்டிருந்தேனோ அது இதோ தஙகள் “கீழடி” பதிவில் என் கைகளில் தவழ்ந்து கொண்டிருக்கிறது. கீழடி நகரை நான்காம் காலகட்டத்துடன் கொண்டு பொருத்திக் கூறியது கீழடி பற்றி நான் குழப்பிக்கொண்டிருந்ததை அழித்து ஒரு தெளிவான மனநிலையையும் வரையறையையும் கொடுத்தது. மிக்க நன்றி
இப்படிக்கு
தங்கள் அன்புள்ள
கிறிஸ்டி.

***

அன்புள்ள கிறிஸ்டி

டி.எஸ்.எலியட் ஒரு அறிவுஜீவிக்கு இருக்கவேண்டிய அடிப்படைத் தகுதிகளில் ஒன்று வரலாற்றுணர்வு என்கிறார். அது ஒட்டுமொத்தமாக தன் சமூகத்தை, மானுடகுலத்தை அறிந்துவைத்திருப்பது. நமக்கு உலகவரலாற்றைப் பற்றியும் இந்திய வரலாற்றைப் பற்றியும் தமிழ் வரலாற்றைப்பற்றியும் நம் ஊர் வரலாற்றைப்பற்றியும் ஒரு பொதுவான வாசிப்பும் புரிதலும் வேண்டும்.

ஆனால் அது ‘தூய’ வரலாற்றுப் புரிதலாக இருக்கக் கூடாது. சமூகப்பரிணாமம், பண்பாட்டு வளர்ச்சி, இலக்கியமரபு ஆகியவற்றுடன் இணைந்து உருவாகிவரும் முழுச்சித்திரமாக இருக்கவேண்டும். உண்மையில் அந்தச்சித்திரம் பெரும்பாலும் வரலாற்றாய்வாளர்களிடம் இருப்பதில்லை. இந்தப்பொதுச் சித்திரம் ஒரு அடித்தளம்போல நம் சிந்தனைகளை தாங்கி நிற்கவேண்டும். இது இல்லாவிட்டால் குத்துமதிப்பான எண்ணங்களே நமக்கு உருவாகும். இதில் சில சுயகட்டுப்பாடுகள் நமக்குத்தேவை. ஒன்று,

வரலாற்றாசிரியர்கள், ஆய்வாளர்கள் போன்றவர்களின் முறைமைகள், ஆய்வுக்கருவிகள் நம்மிடமில்லை. ஆகவே பொதுவாசகர்கள் வரலாற்றாய்வில் புகுந்து தங்களுக்குத் தோன்றும் முடிவுகளை, ஊகங்களைச் சொல்லக்கூடாது.

பொதுச்சித்திரத்தை உருவாக்கிக்கொள்வதற்காக மட்டுமே வாசிக்கவேண்டும். நுண்விவரங்களை விவாதிக்கப் புகக்கூடாது. அது பொதுவான புரிதலில் இருந்து நம்மை விலக்கிவிடும். உதாரணமாக ஆதிச்சநல்லூரின் எழுத்துருக்களுக்கு ஹரப்பா நாகரீகத்துடன் தொடர்புள்ளது என ஐராவதம் மகாதேவன் சொல்கிறார். அதை வலுவாக மறுப்பவர்கள் உள்ளனர். இதில் நான் எதையும் சொல்லக்கூடாது. அந்த விவாதம் என்ன என்று மட்டுமே தெரிந்துகொள்ளவேண்டும். என சொல்லப்படுகிறது என்று மட்டுமே மேற்கோள்காட்டவேண்டும்

வரலாற்றை வரலாற்றாசிரியர்கள் எங்கோ ஒரு புள்ளியில் வெறும் தகவல்சரிபார்ப்பு ஆக மாற்றிவிடுவார்கள். அது நம் இடம் அல்ல. நாம் வரலாற்றை ஒரு பெரிய ஒட்டுமொத்தப்பரப்பாக வரைந்துகொள்ளவே முயலவேண்டும். அதை மானுடவாழ்க்கையின் ‘கதை’ ஆக ஆகிக்கொள்ளவேண்டும். அதில் வாழ்க்கைக்கான கேள்விகளும் பதில்களுமே நமக்கு முக்கியமானவை
ஜெ

***

index

அன்புள்ள ஜெ

கீழடி குறித்து எழுதியிருந்தீர்கள். முன்பு ஆதிச்சநல்லூர் குறித்த கட்டுரை ஒன்றை எழுதியிருந்தீர்கள். அதில் சிலவற்றைச் சொல்லியிருந்தீர்கள். ஆதிச்சநல்லூரின் வரலாறு ஹரப்பாவுக்கு முந்தைய காலமாக இருக்கலாம், ஆதிச்சநல்லூரில் அருங்காட்சியகம் வைக்கப்படவேண்டும்—அதெல்லாம் கீழடி கட்டுரையுடன் முரண்படுவதுபோல எனக்குத்தோன்றியது. விளக்கமுடிந்தால் மகிழ்வேன்

சுந்தர் நாச்சியப்பன்

ஆதிச்சநல்லூர் சிதம்பரம்

அன்புள்ள சுந்தர்,

ஆதிச்சநல்லூர் நான் 2009 ல் அங்கே நண்பர்களுடன் சென்றபோது எழுதப்பட்ட பயணக்குறிப்பு. அது ஆதிச்சநல்லூரைப்பற்றி பொதுவாக சூழலில் என்ன சொல்லப்படுகிறது என்பதையும், அங்கிருந்த சிதம்பரம் என்பவரின் ஆர்வத்தையும் காட்டும் ஒரு நிகழ்வுக்குறிப்பு மட்டுமே. அதையொட்டியே ஆய்வாளர் நா.கணேசன் அவர்களிடம் நீண்ட உரையாடல் நிகழ்ந்தது உண்மையில் எனது பிற்காலத் தெளிவுகள் பல அவரிடமிருந்து உருவானவை.

கீழடி ஒரு நகரம். மாறாக ஆதிச்சநல்லூர் ஓர் இடுகாடு. அடுக்கடுக்காக கீழே செல்வது அது. பல ஆயிரமாண்டுகளாக அது பயன்படுத்தப்பட்டுள்ளது. அதன் மேல் அடுக்கு இரும்புக்காலகட்டத்தைச் சேர்ந்தது. கடைசி அடுக்குகள் பெருங்கற்காலத்தைச் சேர்ந்தவையாக இருக்கலாம் என்கிறார்கள். அவை இன்றைய தமிழ்ப்பண்பாட்டின் பல புதிர்களை விளக்கக்கூடியவை. அவை சார்ந்த விவாதங்கள் நிகழ்ந்து வருகின்றன நுட்பமான கைவினைப்பொருட்களும், தானியங்களும் அந்த இடுகாட்டின் தாழிகளுக்குள் இருந்தன . எனது அக்குறிப்பு வெளியாகி ஐந்தாண்டுகளுக்குப்பின்னரே ஆதிச்சநல்லூரின் பல தகவல்களுக்குள் வெளிச்சம்பாய்ச்சும் ஐராவதம் மகாதேவனின் Early Tamil Epigraphy : From the Earliest Times to the Sixth Century A.D. (Harvard Oriental Series, 62) (2003) வெளிவந்து மேலும் சில ஆண்டுகளுக்குள் சர்வதேச அளவில் பொதுவிவாதங்களுக்கு வந்தது.

ஆனால் அந்த இடுகாடு காட்டும் பண்பாட்டுக்கும் சங்ககாலப் பண்பாட்டுக்கும் நடுவே பெரிய இடைவெளி ஒன்று இன்னமும் இருக்கிறது. சங்ககாலம் மேலும் ஆயிரமாண்டுக்காலம் கழித்து உருவானது. அது வளர்ந்த நகரநாகரீகம். அதன் இலக்கியச்சான்றுகளுக்கும் ஆதிச்சநல்லூருக்கும் நேரடித் தொடர்பு இல்லை. அந்தப்புதிர் இன்றும் ஆய்வாளர்களால் விளக்கப்படாததாகவே உள்ளது. சங்ககாலத்தின் வளர்ந்த நகர நாகரீகத்தைக் காட்டும் தொல்லியல் சான்று என்பதால்தான் கீழடி முக்கியமானது.

ஆதிச்சநல்லூர் போன்ற மேலும் சில புதைகுழிகள் மைசூர், ஆந்திர பகுதிகளில் சென்ற சில ஆண்டுகளில் தோண்டி எடுக்கப்பட்டுள்ளன. ஆனால் இவற்றை எல்லாம் ஒருங்கிணைத்து ஓர் இந்தியவரலாற்றுச் சித்திரம் இதுவரை உருவாக்கப்படவில்லை என்பதே பொதுவாசகனாக என் மனப்பதிவு. ஆதிச்சநல்லூர் போன்ற இடுகாடுகளின் மிகத்தொடக்ககால தாழிகள் ஹரப்பா நாகரீகத்தை விளக்குவதாக அமையக்கூடும். ஐராவதம் போன்றவர்கள் அதற்காகவே முயல்கிறார்கள்

இதில் ஓரு புறக்கணிப்புஅம்சமும் இருக்கலாம் என்றே நான் நினைக்கிறேன். இதுவும் என் முடிவு அல்ல, ஆய்வாளர்கள் எழுதியதுதான். ஆதிச்சநல்லூரில் தொல்லியல்துறையாலும் விட்டுவிட்டு நீண்டகால அளவில்தான் அகழ்வுகள் நிகழ்த்தப்பட்டன. சத்யார்த்தி போன்றவர்களின் ஆய்வுமுடிவுகள் பொதுவரலாற்று விவாதங்களில் பேசப்பட்டு வரலாற்றுச்சித்திரம் மாற்றமடையவுமில்லை. ஆனால் ஆய்வுத்தளத்தில் அரசியல் முன்முடிவுகள், கோட்பாட்டு முன்முடிவுகள் போன்றவை மிகச்சாதாரணம்.

ஆதிச்சநல்லூர் அகழ்வுகள் பல கட்டங்களாக நடந்து ஏறத்தாழ முடிந்து ஒரு தலைமுறைக்காலம் ஆகிறது. அவற்றைக்கொண்டு அங்கேயே ஓர் அருங்காட்சியகம் அமைப்பதும் மாணவர்கள் அங்கே சென்று அப்பொருட்களை பார்த்துவருவதும் முக்கியமானது என நினைக்கிறேன். கீழடி அகழ்வுகள் முடிந்தபின்னர் அங்கும் அருங்காட்சியகம் அமைக்கப்படவேண்டும்

ஜெ

*** 

ஆதிச்சநல்லூர்

அன்புள்ள ஜெ

தென்னிந்தியாவில் வெண்கலக்கால நாகரீகங்கள் அகழ்ந்தெடுக்கப்படவில்லை என்று சொல்லியிருந்தீர்கள். அது ஏன் என்று நினைக்கிறீர்கள்? அந்தக்கூற்று ஒரு பாலிடிக்ஸ் என்று என் நண்பர்கள் இங்கே சொன்னார்கள்

ராபின்

அன்புள்ள ராபின்,

அது அரசியல் என்பவர்கள் அகழ்ந்து எடுக்கப்பட்ட தகவல்களைச் சொல்லவேண்டும், உண்மையில் எனக்குத் தெரியாமலும் இருக்கலாம்.

கற்காலத்தில் இருந்து தொடர்ச்சியான பண்பாட்டுப்பரிணாமம் தென்னகத்தில் உள்ளது. ஆனால் ஏராளமான வெண்கலக்கால நகரங்கள் வடமேற்கின் அரைப்பாலைகளில் அகழ்வு செய்யப்பட்டதுபோல தெற்கே கிடைக்கவில்லை என்பதும் உண்மை.

அது ஏன் என்பதற்கு நூல்களில் காணக்கிடைக்கும் நம்பகமான காரணங்கள் இரண்டு, ஒன்று அடர்காடுகள் இல்லாமலிருக்கும் நில அமைப்பு. இரண்டு, செம்புத்தாது அகழ்வுசெய்யாமல் மேலேயே ஆற்றுப்படுகைகளில் கிடைப்பது.

ஜெ

***