சமணமும் பாகன் மதங்களும்

socters

அன்புள்ள ஜெ,

நலமா? கடந்த இரண்டு வாரங்களாக இத்தாலியில் குடும்பத்தோடு சுற்றுப் பயணம். கடந்த நான்கு நாட்களாக ரோமில். இத்தாலிக்கு கிளம்பும் முன்பே உங்களை நினைத்துக் கொண்டேன். நீங்கள் வாடிகனில் இருந்து எனக்கு எழுதிய ஈமெயிலும் நினைவுக்கு வந்தது.

வரலாறைப் படிப்பதற்கும் அது நிகழ்ந்த இடங்களைப் பார்ப்பதும் வெவ்வேறு அனுபவங்கள். படித்து விட்டு வந்தால் பல இடங்கள் நமக்கு கூடுதல் பொருளுடையதாகிறது. மேரி பியர்ட் எழுதிய SPQR படித்துக் கொண்டிருக்கிறேன். கூடவே வேறு சில நூல்களும்.

கலிலேயோ திருச்சபையோடு மோதியது வரலாறு. ஆனால் அந்த கலிலேயோ புதைக்கப்பட்டிருப்பது ப்ளோரன்ஸ் நகரின் மிக முக்கிய தேவாலயத்தின் பிரதான் பகுதியில். ஐசக் நியூட்டன் லண்டனின் வெஸ்ட்மின்ஸ்டரில். திருச்சபையும் விஞ்ஞானமும் ஒரு சிக்கலான உறவைக் கொண்டன. இவ்விருவரும் தேவாலயங்களில் ஆஸ்தான இடத்தில் புதைக்கப்பட்டிருப்பது மிக ஆச்சர்யம்.

ப்ளோரன்ஸ் நகரில் ஞானஸ்நானம் செய்விக்கும் இடத்தின் (Baptistery) இரு கதவுகள் புத்துயிர்ப்பின் ஆரம்பமாக கருதப்படுகிறது. அக்கதவுகளின் புனரமைப்புக்கு உதவியோர் பட்டியலில் ஆச்சர்யமானப் பெயர். ஜம்நாலால் பஜாஜ்.

நீங்கள் அடிக்கடி ‘கிறித்தவம் பாகனியத்தை அழித்தொழிப்பு’ செய்தது என்பீர்கள். அது வேறு விவாதம். ரோமில் ஆச்சர்யப்படுத்துவது பாகனியம் திருச்சபையின் கலைகளில் பிரதானப் பங்கு வகிப்பது. போப்பின் தனியறையை அலங்கரிக்க ஓவியம் வரைந்த ரஃபேல் ஓர் அறையில் ஒரு பக்கத்தில் கிரேக்க அறிஞர்களான பிளேட்டோ (வான் நோக்கி விரல் நீட்டியவாறு), அரிஸ்டாட்டில் ( தரை நோக்கி கையை விரித்தவாறு), யூக்ளீட் இன்னொருப் பக்கம். இது ஒரு மிகப் பெரிய ஓவியம். அறிவுத் தேடலைச் சுட்டுவது. அதிலும் பிளேட்டோவின் தத்துவம் இவ்வுலக வாழ்வைக் கடந்ததை குறிக்கும் வண்ணம் மேல் நோக்கி சுட்டும் விரல். அரிஸ்டாட்டில் இவ்வுலக வாழ்க்கையை மையமாக கொண்ட தத்துவ ஞானி என்பதால் தரை நோக்கிய விரிந்த கை. இதன் எதிர் புறம் இயேசுவும் பக்தி மார்க்கமும். உங்கள் குறிப்பையும் இந்த அனுபவங்களையும் வைத்து பேஸ்புக்கில் ஒரு குறிப்பெழுதினேன். விவாதம் ஓடிக் கொண்டிருக்கிறது.

நண்பர்கள் பலரின் நினைவுகள் ஆங்காங்கே வந்தது. உங்கள் நினைவு பல இடங்களில்.

சிஸ்டின் சேப்பல் மனித சிருஷ்டித் திறமையின் உச்சம். அங்கே வரும் பல்லாயிர கணக்கானவர்கள் மைக்கேலேஞ்சலோவின் கை வண்ணத்தையும் மேதமையையும் தான் காண வருகிறார்கள். எத்தனையோ இடங்களுக்கு போயிருக்கிறேன் ஆனால் அந்த அறையினுள் நுழைவதற்கு உடல் சிலிர்த்தது. மனித ஆற்றலின் மகோன்னதத்தை காணும் படபடப்பு. ஒரு பாதிரியார் வந்து ஏதோ ஜெபம் செய்தார் என் மனம் உத்தரத்தில் இருக்கும் ஓவியத்தில் (பாகனிய பாரம்பர்யங்களை பிரதானமாகச் சித்தரித்த ஓவியங்கள்) லயித்திருந்தது.

அன்புடன்

அரவிந்தன் கண்ணையன்

***

socretes

அன்புள்ள அரவிந்தன் கண்ணையன்

ஏறத்தாழ ஓராண்டுக்கு முன்பு நான் ரோம் சென்றிருந்தேன். பிரியத்திற்குரிய லண்டன் நண்பர்களுடன். அற்புதமான பயணம் அது. நினைவுகள் மேலும் மேலும் ஒளி கொள்கின்றன. நான் என்றும் புத்துணர்ச்சிகொள்ளும் ஐரோப்பியக் கலைமரபை கண்முன் காணும் அனுபவமாக இருந்தது அது. மீண்டும் ஒருமுறை செல்லமுடியும் என்றால் முதலில் தேர்வுசெய்யுமிடம் ரோம்தான்.

நீங்கள் சொன்ன பாகன் பண்பாட்டுச் சின்னங்களை நானும் ரோமின் புகழ்பெற்ற தேவாலயங்களில் பார்த்தேன். நீங்கள் குறிப்பிடுவதுபோல நேரடியாக அவை பதிவுபெற்றுள்ளன. கூடவே கலைநுட்பங்களாகவும் அவற்றைக் காணலாம். உதாரணமாக கிறித்தவப்புனிதர்களின் உடல்கள் வடிவமைக்கப்பட்டிருக்கும் விதத்திலும் தோற்றச்சாயலிலும் பாகன் மதங்களின் கலையும் அதில் உள்ளடங்கியிருக்கும் பண்பாடும் உள்ளது. உருண்டு திரண்ட தசைகள், வலுவான உடற்கட்டுகள், சுருள்தாடிகள்.

ரோமில் நான் பார்த்துக்கொண்டே சென்றபோது குத்துமதிப்பாக ஓர் எண்ணம் ஏற்பட்டது. பெரும்பாலான புனிதர்களும் தேவதைகளும் எழுத்துச்சுருள்களை விரித்துக் காட்டுகின்றனர்.நேரடியாகப் பார்த்தால் அவர்கள் தெய்வீக ஆணைகளை அறிவுறுத்துகின்றனர். குறியீட்டுரீதியாகப் பார்த்தால் அவை எழுத்து என்னும் செயலின் முதன்மையைக் காட்டுகின்றன. வாய்மொழி மரபிலிருந்து எழுத்து மரபுக்கான ஒரு மாறுதல் அது என்று தோன்றியது. சொல்லப்பட்டதை விட எழுதப்பட்டது மேலும் அழுத்தமானது, மாறாதது என்ற எண்ணத்தை அவை கொண்டுள்ளன.

பொதுவாக மதங்களின் போர் குறித்த கருத்துக்களை ஒருவர் எப்படிப்பார்க்கிறார் என்பது அவரது முன்முடிவுகளைச் சார்ந்தது. இந்தியாவின் மதச்சூழலை எழுதவந்த ஐரோப்பியரில் சிலரும், அவர்களை ஒட்டி எழுதுபவர்களும் ஓர் அழித்தொழிப்புப்பின் கதையை எழுத விழைகிறார்கள். ரொமீலா தாப்பர் ஒரு நூலில் இந்துமதம் ஒரு பூதம் போல பௌத்தமதத்தை தோளில் ஏறி அமர்ந்து கொன்று அழித்தது என எழுதுகிறார்.

இந்தியாவில் சமணத்தின் எழுச்சி வீழ்ச்சியை எழுதியவர்களில் பலர் அது வன்முறையால் ஒழிக்கப்பட்டது என திரும்பத்திரும்ப பதிவுசெய்கிறார்கள். அவர்கள் அதற்கு ஆதாரமாகக் காட்டுவது இந்தியாவின் ஒட்டுமொத்த வரலாற்றிலேயே ஓரிரு வரலாற்று அடிப்படை ஏதுமில்லாத தொல்கதைகளை மட்டுமே – திருஞானசம்பந்தர் எட்டாயிரம் சமணர்களை கழுவேற்றினார் என்பதுபோல.

ஆனால் அதற்கு மாறான ஆதாரங்கள் குவிந்து கிடக்கின்றன. உதாரணமாக, சிலப்பதிகாரத்திலும் மணிமேகலையிலும் இல்லறத்தார் இந்து தெய்வங்களையும் சமண பௌத்ததெய்வங்களையும் ஒரேசமயம் வழிபடும் சித்திரங்கள் உள்ளன. அத்தனை மதப்பிரிவுகளும் பங்கெடுத்து விவாதிக்கும் அறிவரங்குகளைப்பற்றியும் சந்தைகளில் நிகழும் பொது அரங்குகளைப்பற்றியும் விவரிக்கப்பட்டுள்ளன.

அனைத்துக்கும் மேலாக இந்தியாவில் இன்றும் பல்லாயிரம் சமணத்தலங்கள் உள்ளன. சொல்லப்போனால் இங்கே கட்டப்பட்ட அனேகமாக எல்லா சமண ஆலயங்களும் இன்றும் வழிபாட்டுநிலையில் உள்ளன. அவற்றின் வரலாறுகள் சமணர்களால் விரிவாக எழுதப்பட்டுள்ளன. அவை அவ்வப்போது இஸ்லாமிய ஆட்சிக்காலத்தில் இடிக்கப்பட்டன என்றும் அப்போது மட்டுமே அங்கே வழிபாடுகள் நிகழவில்லை என்றும் அவை பதிவுசெய்கின்றன.

தமிழகத்திலேயே முக்கியமான சமண ஆலயங்கள் என இருபதையாவது சுட்டிக்காட்டமுடியும். பெரும்பாலானவற்றைச் சென்று பார்த்திருக்கிறேன். அவற்றில் பல ஆலயங்கள் பதினாறு, பதினேழாம் நூற்றாண்டுகளில் இந்துக்களான நாயக்கமன்னர்களால் கட்டப்பட்டவை, அல்லது விரிவாக்கம் செய்யப்பட்டவை. இந்தியாவின் பெரும்பாலும் அத்தனை சமண ஆலயங்களிலும் இந்து அரசர்களின் கொடைகள், திருப்பணிகள் நிகழ்ந்ததன் கல்வெட்டுச்சான்றுகள் உள்ளன. அவர்கள் அளித்த சிலைகளையும் பொருட்களையும் அவ்வாலயப் பதிவுகள் ஆவணப்படுத்தியிருக்கின்றன. சமணர்கள் பொதுவாக சீராக வரலாற்றுப்பதிவுகளைப் பேணும் வழக்கம் கொண்டவர்கள்.

பதினேழாம்நூற்றாண்டில் அச்சுதப்ப நாயக்கரின் காலகட்டம்வரைகூட பௌத்தப் பள்ளிகளுக்கு நிலம் அளிக்கப்பட்டதன் சான்றுகள் இங்குள்ளன. பக்தியார் கில்ஜியால் நாளந்தா அழிக்கப்படும்வரை வடஇந்தியாவில் பௌத்தம் ஒரு வலுவான மதமாகவே இருந்துள்ளது. ஔரங்கசீபின் கடும் தாக்குதல்களுக்குப்பின்னரும் சமணம் அழுத்தமாக நீடிக்கிறது. ஆனால் மேலே சொன்ன வரலாற்றாய்வாளர்கள் அவற்றை எல்லாம் கருத்தில்கொள்ள மறுப்பார்கள்.

இங்கே மதப்பூசல் நிகழவில்லை என்று சொல்லவில்லை. மதம் என்றாலே உறுதியான நம்பிக்கைதான். ஆகவே மதப்பூசல் நிகழ்ந்திருக்கும். இந்து மதத்திற்குள்ளேயே சைவ வைணவப்பூசல்கள் புகழ்பெற்றவை. தாந்த்ரீக மரபுகள் பக்திமரபால் அழித்தொழிக்கப்பட்டமையும் வரலாறே. பூசல்கள் வன்முறை நோக்கிச் செல்வதும், மதவழிபாட்டிடங்கள் அழிக்கப்படுவதும் கண்டிப்பாக ஆங்காங்கே நிகழ்ந்திருக்கும். அரசர்கள் மதநிலையங்களை சிதைத்த கதைகளும் சில உள்ளன. சோழர்கள் கர்நாடகத்தில் ஆலயங்களை இடித்துள்ளனர். கர்நாடக வீரசைவர்கள் குஜராத் வரைச்சென்று வைணவ ஆலயங்களை இடித்துள்ளனர். அவற்றை நானே விரிவாக எழுதியிருக்கிறேன்

ஆனால் இந்து மதத்தின் மூன்று அம்சங்கள் காரணமாக அது உலகின் பிற பகுதிகளில் காணப்படும் மதஒழிப்பைச் செய்ததில்லை. ஒன்று அதிலுள்ள மூன்றடுக்கு வழிபாட்டுமுறை. குலதெய்வ வழிபாடும் பெருந்தெய்வ வழிபாடும் தத்துவத்தெய்வ வழிபாடுமாக மூன்று முறைமைகளையும் ஒரேசமயம் கடைப்பிடிப்பவர்கள் இந்துக்கள். இங்கே சமணம் வந்தபோது அது முதன்மையாக தத்துவத்தெய்வவழிபாடாகவே இருந்தது. அதை ஏற்றுக்கொண்டபோதே கூடவே கிருஷ்ணன் போன்ற பெருந்தெய்வத்தையும் குலதெய்வங்களையும் மக்கள் வழிபட்டனர். ஒன்றைக் கைவிட்டு இன்னொன்றை தழுவும் முறை அன்று இருக்கவில்லை. ஆகவே ஒன்றுக்காக பிறிதொன்றை அழிக்கவேண்டிய தேவை இல்லை.

இரண்டாவதாக நாடுமுழுக்க பரவிய ஒற்றை நிறுவன அமைப்பு இந்துமதத்திற்கு இல்லை. கிளைகளாகப்பிரிந்து பரவும் அமைப்பு கொண்டது அது. ஆகவே ஒரு மதத்தையோ நம்பிக்கையையோ நெடுங்காலம் திட்டமிட்டு அழிப்பது அதற்குச் சாத்தியமில்லை.

மூன்றாவதாக அதன் அடிப்படைக்கொள்கையிலேயே ஏகம் சத்விப்ரா பஹுதாவதந்தி [ உண்மை ஒன்றே அணுகும்வழிகள்தான் மாறுபடுகின்றன] என்ற தரிசனமும் ஆறுகள் பல கடல் ஒன்றே போன்ற உவமைகளும் உள்ளன. அத்தனை மதஞானிகளும் வெவ்வேறு சொற்களில் அதைச் சொல்லியிருப்பார்கள். ஆகவேதான் பிறிதொரு மதத்தை உள்ளிழுக்கவே எப்போதும் இந்துமதம் முயல்கிறது. ஏசுவைக்கூட.

பெலவாடி என்ற ஆலயத்தின் கருவறையில் உள்ள வீரராகவப்பெருமாளின் மேல் உள்ள வளைவில் செதுக்கப்பட்டிருக்கும் பத்து அவதாரங்களில் பத்தாவதாக இருப்பவர் புத்தர். ஒவ்வொருநாளும் வழிபடப்படுபவர். கணிசமான இந்து ஆலயங்களில் அருகர்களின் சிலைகளைக் காணலாம். [அதைவைத்துக்கொண்டே அவை சமண ஆலயங்களை இடித்து கட்டப்பட்டவை என ஒரு கோஷ்டி எழுதுகிறது. அத்தனை சமண ஆலயங்களிலும் கிருஷ்ணனும் விஷ்ணுவும் இருக்கிறார்களே என்று கேட்டால் மறுமொழி இருக்காது.]

ஆனால் மொத்த ஐரோப்பாவிலும் இன்று பாகன் வழிபாட்டிடங்கள் ஏதுமில்லை. பாகன் வழிபாட்டிடங்களை கிறித்தவ மரபோ அரசர்களோ பேணியமைக்கோ கட்டியமைக்கோ ஒரு சான்றுகூட இல்லை. பாகன் மரபை தொடர்ச்சியாகப் பின்பற்றுபவர்களும் அங்கே இல்லை. இதைத்தான் மதஅழிப்பு என்கிறேன்

நடுக்காலகட்டத்தில் ஐரோப்பாவில் நிகழ்ந்த குரூரமான மதவிசாரணைகளின் வரலாற்றை எவரும் மறைத்துவிடமுடியாது. அவற்றை அவர்களே விரிவாகப் பதிவுசெய்திருக்கிறார்கள். இன்றும் ஐரோப்பாவின் மனசாட்சியை வேட்டையாடும் இருண்ட காலம் அது. ஏராளமான இலக்கிய ஆக்கங்கள் அதை ஒட்டி இன்றும் எழுதப்படுகின்றன.

அதற்குக் காரணம் இரண்டு. ஒன்று கிறிஸ்தவத்தின் ஒற்றைத்தரிசனம். பிறவற்றை பொய் என மறுக்கும் அதன் மைய உறுதி. அது இப்போதும்கூட அப்படித்தான். இரண்டு அது அதிகாரம்கொண்ட ஒற்றை அமைப்பாக உருவாகி வந்தமை.

பாகன் மதங்களுக்கு எதிராகவே கிறிஸ்தவம் ஐரோப்பாவில் பரவியது. பாகன் மதங்களை மறுத்தும் வென்றும் நிலைகொண்டது. பன்னிரண்டாம் நூற்றாண்டுமுதல் முந்நூறாண்டுக்காலம் தொடர்ச்சியாக நிகழ்ந்த ஐரோப்பிய மதவிசாரணைகளின் விளைவாகவே [Medieval Inquisition] பாகன் மதங்கள் சுவடில்லாமல் அழிக்கப்பட்டன.

அத்தகைய ஒரு மாபெரும் மதவிசாரணையும் ஒழிப்புச்செயல்பாடுகளும் இந்தியாவில் நிகழவில்லை. வரலாற்றை நோக்கினால் அப்படி நிகழவும் வாய்ப்பில்லை. இல்லை, ஐரோப்பாவில் மதவிசாரணைக்காலம் நிகழவேயில்லை, இந்தியாவில்தான் அது நிகழ்ந்தது என்று வாதிடமாட்டீர்கள் என நம்புகிறேன்.

உண்மையில் இந்தியாவில் பெரிய அளவில் மதஅழிப்பு நிகழ்ந்தது என்றால் பக்தி இயக்கத்தால் தாந்த்ரீக மதங்கள் அழிந்ததைத்தான் சொல்லவேண்டும். பக்தி மரபின் ஆசிரியர்களால் தாந்த்ரீகமரபுகள் கடுமையாக மறுக்கப்பட்டன. சமூகமாகவே மக்கள் அவற்றை புறக்கணித்தனர். அவை காலப்போக்கில் குறுங்குழுக்களாக மாறி அழிந்தன

ஆனால் அவ்வாறு அழிக்கப்படும்போதே உள்ளிழுத்தலும் நிகழ்ந்தது. பக்தி மரபால் உருவாக்கப்பட்ட ஆலயங்களில் சிற்பங்களாக, வழிபாட்டுச் சடங்குகளாக தாந்த்ரீகமரபு உருமாறி நீடிக்கிறது.

இந்தியாவில் பௌத்தம் உயர்நிலை மதமாகவே இருந்தது. அது போதிசத்வ வழிபாட்டை மட்டுமே மக்களுக்குரியதாக முன்வைத்தது. ஆகவே அது எளிதில் அழிந்தது. சமணம் மேலும் தீவிரமாக நீடித்தது. பத்தாம் நூற்றாண்டுக்குப்பின் பக்தி இயக்கத்தால் மெல்லமெல்ல அது வெல்லப்பட்டது. அவ்வாறு சமணம் வெல்லப்பட்டதன் சித்திரத்தை மிக விரிவாகவே எழுதியிருக்கிறார்கள். கலைகள், பெரிய திருவிழாக்கள், பேராலயங்கள், அத்தனை சாதிகளையும் உள்ளிழுத்து ஆலயவழிபாட்டின் பகுதிகளாக ஆக்கும் மண்டகப்படி முதலிய வழிமுறைகள் ஆகியவையும் ஆலயங்களை நம்பி நிலநீர் நிர்வாகம் உருவானதும் சமணம் பின்னகரக் காரணமாக அமைந்தது.

ஆனால் பதினேழு பதினெட்டாம் நூற்றாண்டுகளில்கூட சமணம் இருந்திருக்கிறது. மிகமெல்ல சமண ஆலயங்கள் கைவிடப்படுவதை எச்.சி.பேட்ஸ் போன்ற வெள்ளை ஆட்சியாளர்கள்கூட பதிவுசெய்திருக்கிறார்கள். இன்றும்கூட தமிழகத்தில் சமணர்களின் ஊர்கள் பல உள்ளன.

பதினைந்தாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் மதவிசாரணைகளின் கொடுங்காலம் முடிந்து ஐரோப்பாவில் பண்பாட்டு மறுமலர்ச்சி உருவானது. கிறிஸ்தவம் மெல்ல தன்னை மாற்றுருவாக்கம் செய்துகொண்டது. ஐரோப்பாவின் மறுமலர்ச்சி மட்டும் அல்ல அது கிறிஸ்தவத்தின் மறுமலர்ச்சியும்கூட. நீங்கள் சொல்லும் அத்தனை ஏற்புகளும் அப்போது நிகழ்ந்தவை. மைக்கேலாஞ்சலோவும் ராஃபேலும் அந்த மறுமலர்ச்சியின் முகங்கள்.

அப்போது இருவகைகளில் பாகன் பண்பாடு மீட்டு எடுக்கப்பட்டது. ஒன்று கிறிஸ்தவத்திற்குள்ளேயே கலைமரபாக அது வந்தமைந்தது. ஓர் எல்லைக்குள் அறிவியலிலும் தத்துவத்திலும் பாகன் மரபு ஏற்கப்பட்டது.

கிறிஸ்தவம் பாகன் மரபுகளை அழித்தது என்பது எவ்வளவு உண்மையோ அதேயளவு உண்மை அது பிற்காலத்தில் பாகன் மரபுகளை உள்வாங்கிக்கொண்டது என்பது. நேரடியாகவும் மறைமுகமாகவும். தொன்மையான கிரேக்க கலை, தத்துவ மரபுகளை அது தன்னுள் வளர்த்தெடுத்தது. இறையியலின் தர்க்க அடிப்படைகள் கிரேக்க தத்துவமரபிலிருந்து பெறப்பட்டவை. கிறிஸ்தவத்தின் வளமான கலைமரபு பாகன் மரபின் மறு உருவாக்கம்.

நான் என் வரலாற்று உருவகத்தை உருவாக்கிக்கொள்ளவே இவற்றைப் பேசுகிறேன். நேற்றை திரும்பி நோக்கி இது தவறு, இது இதைவிட மேல் என்று சொல்வதற்காக அல்ல. இந்துமதத்தை நம்புகிறவன் என்பதனால் அதை ஒருபடி மேலே வைக்கும் நோக்கம் எனக்கில்லை என உண்மையிலேயே சொல்ல விரும்புகிறேன். அதை கறாராக அணுகவே விரும்புவேன். ஏனென்றால் அந்த கண்மூடித்தனமான பற்று காரணமாகவே அதில் தேவையற்றவை நீடிக்கவும் வளரவும் இடமளிப்பவர்களாக நாம் ஆகக்கூடாது என்பதே என் எண்ணம்.

அதேபோல நான் உலகப்பண்பாட்டுக்கு கிறிஸ்தவத்தின் கொடையை ஒருபோதும் மறுப்பவனும் அல்ல.அப்படியென்றால் ஏன் இதைச் சொல்கிறேன்? ஒரு சிந்தனை ஒற்றைப்படையாக, நிறுவனமாக ஆகும்போது அது பண்பாட்டின் இயல்பான பன்மைத்தன்மையை அழிக்கிறது என்றும் பன்மைத்தன்மையினூடாகவே பண்பாடு வளரமுடியும் என்றும் நம்புகிறேன். ஆகவே ஒற்றைமையமாக்கம், நிறுவனமாக்கம் ஆகியவற்றை நான் ஏற்பதில்லை. அதை வரலாற்றில் சுட்டவே மத்தியகால ஐரோப்பிய மதவிசாரணைகளைச் சுட்டிக்காட்டுகிறேன். இந்துமதத்தை மத்தியகால கிறித்தவம்போல ஆக்கவிரும்பும் குரல்களை நிராகரிக்கவே அதைச் காட்டுகிறேன். நாம் முன்னுதாரணமாகக் கொள்ளவேண்டியது ஐரோப்பிய மறுமலர்ச்சியை என்றும் சொல்கிறேன். இவற்றை பலமுறை பல்வேறு சொற்களில் எழுதியிருப்பேன்.

ஜெ

***

முந்தைய கட்டுரைமதுரையில் ஒரு சந்திப்பு…
அடுத்த கட்டுரைஅலெக்ஸ் – கடிதங்கள்