பணமதிப்பு நீக்கம், வரி, மோதி

modi

பெருமதிப்பிற்குரிய ஜெமோ. அவர்களுக்கு,

வணக்கம்.

இன்று செய்தி ஊடகங்களில் வந்துள்ள பணமதிப்பிழப்பு நடவடிக்கையை பற்றிய நமது ரிசர்வ் வங்கியின் அறிக்கையை படித்திருப்பீர்கள் அதில் “பணமதிப்பிழப்பு செய்யப்பட்ட ரூபாய் தாள்களில் 99 சதவீதம் வங்கிக்கு திரும்பியுள்ளதுஎன்ற செய்தியுள்ளது இது போதாதா நமது அரசியல் தலைவர்களுக்கும்,அரைகுறை பொருளாதார மேதைகளுக்கும் மோதியின் இந்த திட்டம் பெரும் மோசடி, மக்களை ஏமாற்றி தேவையே இல்லாத இன்னல்களுக்கு ஆளாக்கிவிட்டார் என்று குதிக்க ஆரம்பித்து விட்டார்கள் ஆனால் இத்திட்டத்தினால் கிடைத்துள்ள/இனி கிடைக்கப்போகும் பலன்களை பற்றி திருமலை மற்றும் ஜகன்னாத் ஸ்ரீனிவாசன் அவர்கள் தங்கள் முகநூல் பக்கத்தில் எழுதியுள்ள ஏற்கத்தகுந்த கருத்துக்களை “தமிழ் ஹிந்து” வலைத்தளம் வெளியிட்டுள்ளது.அதை தங்கள் பார்வைக்கு கொண்டுவருகிறேன்.மேலும் பொருளாதார மேதையும் முன்னாள் நிதிஅமைச்சருமான சிதம்பரம் அவர்கள் கூறியிருக்கும் கருத்திற்கான சுட்டியையும் கீழே கொடுத்திருக்கிறேன்.

இந்த நடவடிக்கை தொடங்கும் போதே இது பற்றிய தங்களின் நல்லெண்ணத்தை அழுத்தமாக எழுதியுள்ளீர்கள் எனவே இப்போதும் தங்களின் மேலான கருத்துக்களையும் எதிர்பார்க்கிறேன்.

பணமதிப்பு நீக்கத்தால் பயன் என்ன? – இரு பார்வைகள்

Demonetisation: Shame on RBI for recommending note ban says P Chidambaram

அன்புடன்,

அ .சேஷகிரி.

***

அன்புள்ள சேஷகிரி,

இன்றைய அரசியல் விவாதங்கள் மிகமிகத் தீவிரமாக துருவப்படுத்தப்பட்டு மிகையுணர்ச்சியின் உச்சத்தில் முன்வைக்கப்படுகின்றன. ஒருபக்கம் மோதி இந்தியாவை அழிப்பது தவிர வேறெந்த நோக்கமும் இல்லாத தீயசக்தி என்கிறார்கள். இன்னொருபக்கம் அவர் அவதாரபுருஷன் என்னும் நிலையில் பேசுகிறார்கள்.

மோதியின் பலம் எங்கிருக்கிறது என்றால் அவரை எதிர்த்து வெறுப்பைக் கக்குபவர்களில் கணிசமானவர்கள் அதே மூச்சில் இந்திய எதிர்ப்பையும், சிறுபான்மை மதவெறியையும், இந்து எதிர்ப்பையும் முன்வைப்பதில்தான். ஆகவே இந்தியதேசியத்தின். இந்துப்பண்பாட்டின் குரலாக மோடி தன்னை முன்வைக்கமுடிகிறது. மிக இயல்பாக அது அவருக்கு வாக்குகளாக ஆகிறது

இச்சூழலில் பொதுவாக நிதர்சனத்தை முன்வைப்பது எளிதல்ல. இருசாராரும் திரண்டுவந்து மட்டையடிபோடவே ஏதுவாகும். அதை முன்வைக்க அஞ்சவில்லை. ஆனால் அதைத்தொடரும் தெருச்சண்டை வேறெதிலும் சிந்தைகுவிக்கமுடியாதவனாக ஆக்கிவிடும். கடந்த பல ஆண்டுகளாக வேறெந்த சிந்தனையும் இல்லாமல் இந்தச் சண்டையையே மூர்க்கமாக போட்டுக்கொண்டிருக்கிறார்கள் இருசாராரும். அவர்களின் வாழ்க்கையின் ஏதேதோ உணர்வுத்தேவைகளை இது நிறைவேற்றுகிறதுபோல.

மேலும் சினிமா, அரசியல் குறித்த பேச்சுக்களையும் சமகால அரசியல் விவாதங்களையும் ஏன் தவிர்க்க நினைக்கிறேன் என்றால் நான் என் தளத்தில் எவ்வளவோ விஷயங்களைப் பேசியிருப்பேன். இலக்கிய அழகியல் குறித்து, இலக்கியவரலாறுகுறித்து, வரலாறு குறித்து, பண்பாடு குறித்து. எதற்கும் பரவலாக எதிர்வினைகள் வராது நாளிதழ்களிலும் தொலைக்காட்சிகளிலும் பேசிக்காயப்போட்ட விஷயங்கள் என்றால் உடனே நூறுபேர் பாய்ந்து எதிர்வினையாற்றுவார்கள். இங்கே பேசப்பட்ட பிற விஷயங்கள் அனைத்தும் மறைந்துபோகும்

நீங்கள் பெரும்பாலும் இந்த அன்றாட அரசியல் சார்ந்தே அதிகமும் கேட்கிறீர்கள். மேலே சொன்ன காரணத்தால் நான் பெரும்பாலும் அவற்றைத் தவிர்த்தே வருகிறேன். இந்தத் தளத்தில் பணமதிப்புநீக்க நடவடிக்கை குறித்து நான் ஏற்கனவே எழுதியிருந்தமையால் மட்டும் என் இன்றைய உளப்பதிவை எழுதவிழைகிறேன். என் தரப்பை மட்டும். இதன்மேல் ஒரு விவாதம் என் தளத்தில் நிகழ இடமளிப்பதாக இல்லை.

*

பணமதிப்பு நீக்க நடவடிக்கை அறிவிக்கப்பட்டபோது அவ்வறிவிப்பு வெளிவந்த பத்தாவது நிமிடம் முதல் அது இந்தியப்பொருளியலை அழிப்பதற்கென்று மட்டுமே திட்டமிடப்பட்டது என்று இங்கே மோதி எதிர்ப்பாளர்கள் கூச்சலிடத் தொடங்கினர். அவர்கள் ஏற்கனவே மோதியின் அத்தனைசெயல்பாடுகளையும் எதிர்த்தவர்கள். அதன்பொருட்டு தேசவிரோத வன்முறைகளைக்கூட ஆதரிக்கமுற்பட்டவர்கள்.

இவர்கள் பணமதிப்பு நீக்கம் அறிவிக்கப்பட்ட முதல் நாட்களிலேயே அதைத் தோற்கடிப்பதற்கான அனைத்துவகைப் பிரச்சாரங்களையும் மேற்கொண்டனர். அப்பட்டமான பொய்வதந்திகளைப் பரப்பினர். தேசப்பொருளியலே அழிந்துவிடும், வரும்நாட்களில் பொருளியல்பேரழிவு இருக்கும் என்றெல்லாம் பீதியைக் கிளப்பினர். இன்று இவற்றை எவரும் இணையத்தில் பின்னால் சென்று வாசிக்கலாம். உண்மையிலேயே ஆச்சரியமாகவும் எரிச்சலாகவும்தான் இருக்கும்

அவ்வெழுத்துக்களின் நோக்கம் என்ன? தேசநன்மையா? பொருளியல் மேம்பாடா? இல்லை. மக்களின் அச்சத்தை செயற்கையாக மிகைப்படுத்துவது, அதன்விளைவான அராஜகத்தை உருவாக்குவது, அதனூடாக அத்திட்டத்தைத் தோற்கடிக்க முயல்வது. தோற்றால் அதன் பழியை மோடிமேலேயே போட்டு அவரை அரசியல்ரீதியாக வெல்வது. கிடைத்தது ஒரு பிடி என்றவகையிலேயே அந்தப்பேச்சுக்கள் இருந்தன.

நான் அந்த மனநிலைக்கே எதிர்வினையாற்றினேன். அச்செயலில் இருந்த நன்னோக்கத்தை இன்றும் நம்புகிறேன். அதன்வழியாக இவர்கள் சொன்ன பேரழிவெல்லாம் இங்கே உருவாகவில்லை. அரசைப்பொறுத்தவரை அதன் வழியாக நன்மைகளே விளைந்தன. வரிவசூலில் ஏற்பட்ட வளர்ச்சி கண்கூடானது. நம்மைச்சுற்றி கள்ளப்பண வணிகம் எந்த அளவுக்குக் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது என்பதை உண்மையில் அறியாத எவரும் இருக்கக்கூடும் என நான் நம்பவில்லை

ஆனால் பணமதிப்புநீக்க நடவடிக்கை தோல்வி என்றே நான் நினைக்கிறேன். அதை முன்னரே எழுதிவிட்டேன் அதைக்குறித்து இங்கே பொருளியலின் பல்வேறு தளங்களில் செயல்படுபவர்களிடம் விரிவாகப் பேசவாய்ப்பு கிடைத்தது. பணமதிப்பு நீக்க நடவடிக்கை தோல்வியடைந்தது குறித்து நாம் வருத்தம் கொள்ளவேண்டும். அதற்கு மோதியோ பாரதிய ஜனதாவோ முதன்மைக் காரணம் அல்ல. நம் அமைப்பின் சீர்கேடுதான் முழுமுதற் காரணம். வங்கிகள், தணிக்கையாளர்கள், அரசதிகாரிகள்,வரிஏய்ப்பாளர்கள் அனைவரும் ஒருதரப்பாகச் சேர்ந்துகொண்டு அதை முழுமையாகத் தோற்கடித்தனர். குறிப்பாக இரண்டு அயல்நாட்டுமூலதன வங்கிகளுக்கு இதைத் தோற்கடித்ததில் மிகப்பெரிய பங்குள்ளது என்கிறார்கள்.

அவர்கள் மேல் ஒப்புக்குச் சில நடவடிக்கைகளே எடுக்கமுடிந்தது இந்த அரசால். பணமதிப்புநீக்க நடவடிக்கை தோல்வியடையவும் அரசுக்கு இழிபெயர் வரவும் காரணமாக அதிகாரிகளும் வங்கிகளும் இருந்தது அரசுக்கு தெரியும். ஒரு நூறுபேரைக்கூட கைதுசெய்து விசாரிக்கும் துணிவோ அமைப்புவல்லமையோ இல்லை என்றால் இந்த அரசு இந்நடவடிக்கையை எடுக்கத் துணிந்திருக்கக் கூடாது என்றே இன்று படுகிறது

இப்போதுள்ள ஜிஎஸ்டி வரிகுறித்தும் இதையே சொல்லத் தோன்றுகிறது. அது புதுவரி அல்ல, பழைய வரிகளின் தொகுப்புதான். உண்மையில் பல தளங்களில் விலைகள் குறையவேண்டும். ஆனால் எல்லா இடங்களிலும் விலைகள் ஏறின. ஒரு தொழிலதிபரிடம் இதைப்பற்றிக் கேட்டேன். ஜிஎஸ்டியால் பத்துசதவீதம் வரை விலைகள் குறையவேண்டும் என்பதே முறை என்றார். ஆனால் ஏன் குறையவில்லை? ஏனென்றால் இது எப்படி வசூலிக்கப்படும், எவருக்கு என்னென்ன அளிக்கப்படவேண்டும், வரிகட்டியவர்களின் கணக்குகள் உரியமுறையில் கைமாறப்பட்டு வரவேண்டிய வரிசிட்டைகள் வருமா எதுவும் தெரியாது. ஆகவே விலையை கூட்டிவைப்போம் என கூட்டாக முடிவெடுக்கிறார்கள். வரிகட்டிய சிட்டைகள் வந்து பணம் மிச்சமாகுமென்றால் அது லாபம்.

இதை எவர் கட்டுப்படுத்தவேண்டும்? அதிகாரிகள். அரசு. ஆனால் அரசால் எவ்வகையிலும் தன் அதிகார அமைப்பைக்கொண்டு இதைச் செய்யமுடியவில்லை. அமைப்பே ஒட்டுமொத்தமாகச் சீரழிந்து கிடக்கிறது. இவ்வாறு அரசமைப்பு முற்றாக ஊழலில் கிடக்கையில் அதை பயன்படுத்திச் சீர்திருத்தங்கள் செய்வதென்பது வெறும் துக்ளக் தர்பாராகவே சென்று முடிகிறது. மோதிக்கு துணிவும் நல்லெண்ணமும் இருந்தால் இந்த அதிகாரவர்க்கத்தை கட்டுப்படுத்தவேண்டும், திருத்தியிருக்கவேண்டும். மூன்றாண்டுகளில் அதைச்செய்யவில்லை என்பதுடன் செய்வதற்கான எண்ணத்தையும் வெளிப்படுத்தவில்லை. அங்கேதான் முழுமுதல்தோல்வி இருக்கிறது என நினைக்கிறேன்

மோதி அரசால் ஏன் நிர்வாகத்தைச் சீரமைக்க முடிவதில்லை என்றால்அதை தடாலடிகள் வழியாகச் செய்யமுடியாது, உறுதியாகவும் சீராகவும் செய்யவேண்டும் என்னும் யதார்த்தத்தால்தான். வண்டி ஓடிக்கொண்டிருக்கையிலேயே அதைப் பழுதுபார்ப்பதுபோன்றது அது. அதைச்செய்ய நிபுணர்கள் தேவை. நீண்டகால உறுதியான முயற்சிகள் தேவை. கூடவே அதிகாரப் பரவலாக்கமும் தேவை. மோதி அரசு அதிகாரத்தை மையப்படுத்துகிறது. மையப்படுத்தப்படும் அதிகாரம் அதைச்செயல்படுத்த அரசு இயந்திரத்தையே நம்பியிருக்கவேண்டியிருக்கிறது. அவ்வியந்திரம் ஆள்வோர் சொல்வதைக் கேட்கவேண்டும் என்றால் அது ஊழல்செய்ய அனுமதிக்கவேண்டும்

இந்திராகாந்தி நெருக்கடி நிலைக்காலத்தில் பல பொருளியல் சீர்திருத்தங்களைக் கொண்டுவந்தார். உபரிநிலம் மீட்பும் கொத்தடிமை ஒழிப்பும் பதுக்கல்வணிக ஒழிப்பும் உண்மையிலேயே நல்ல முயற்சிகள். ஆனால் அவருடைய அரசை தாங்கிநின்ற அதிகாரிகளின் அமைப்பால் அவை தோற்கடிக்கப்பட்டன. அந்நடவடிக்கைகள் வெறும் வன்முறையும் ஊழலுமாகவே எஞ்சின. அவருடைய வீழ்ச்சிக்கும் அவையே காரணமாயின.ஆனால் அவரால் அந்த அமைப்பை எவ்வகையிலும் கட்டுப்படுத்த முடியவில்லை. ஏனென்றால் அதன்மீதுதான் அவர் தன் சமையலறைநிர்வாகத்தை நிறுவியிருந்தார். அதுவே இன்றும் நிகழ்கிறது.

இவ்வரசின் அடுத்த தோல்வி பெரிய கனவுகள் ஏதுமில்லாமல் வாய்ச்சவடாலிலேயே மூன்றாண்டுகள் சென்றன என்பது. நான் மோதி ஆட்சிக்கு வருவது குறித்த பெரிய எதிர்பார்ப்புகள் ஏதும் கொண்டிருக்கவில்லை. தேர்தலின்போதும் அதற்கு முன்னரும்கூட ஒருவரிகூட அவருக்கு ஆதரவாக, ஏன் எதிர்பார்ப்பாகக்கூட எழுதவுமில்லை. வேறு அரசியல்கட்சிகள் பற்றியும் எந்த எதிர்பார்ப்பும் இல்லை என்பதைச் சொல்லிவிடுகிறேன். ஆனால் புதிய அரசொன்றை ஏற்பவர் ஏதேனும் செய்யவேண்டும் என்ற கனவைக்கொண்டிருக்கக்கூடும் என நினைத்தேன்.

வாஜ்பாய் அரசுக்காவது தங்கநாற்கரச்சாலை போன்ற பெரிய கனவுகள் இருந்தன. அவற்றை செய்துமுடிக்கவும் முடிந்தது. இந்த அரசில் இந்த மூன்றாண்டுகளில் அப்படிப்பட்ட எந்தக்கனவும் வெளிப்படவில்லை. வரும் இரண்டாண்டுகளில் செய்துமுடிக்கப்படத்தக்க எந்த பெரிய திட்டமும் அறிவிக்கப் படவுமில்லை. அதைக்குறித்துக் கேட்டால் அன்றாட நடவடிக்கையாக ஓர் அரசு செய்துகொண்டிருக்கும் செயல்களின் புள்ளிவிவரங்களைத் தொகுத்து சாதனையாக அளிக்கிறார்கள். கண்கூடாக எதுவுமே தென்படவில்லை வரிவசூல் பலமடங்கு கூடியிருக்கிறது என்கிறார்கள், ஆனால் அதைக்கொண்டு என்ன செய்கிறார்கள் என்பதே கேள்வி. சாமானியனின் உளப்பதிவு அப்படி ஏதுமில்லை என்பதே.

ஒருவகையில் இன்றைய வரிவசூல்கெடுபிடிகள் நன்று என நினைக்கிறேன். முன்பெல்லாம் வரிவசூல் முதலாளிகளிடம் நடைபெறும், நாம் விலையாக அதைக் கட்டிக்கொண்டிருப்போம். வரி கண்ணுக்கே படாது. ஆகவே ஊழல் என்பது அரசுப்பணம் கொள்ளையடிக்கப்படுவது என்ற நம்பிக்கை இருந்தது. இன்றுதான் சாமானியர் வரிவசூல் குறித்துப் பேச ஆரம்பிக்கிறார்கள்.அரசு திரட்டுவது தங்கள் பணம் என உணர்கிறார்கள். கிட்டத்தட்ட தங்கள் வருமானத்தில் பாதியை அரசு வரியாக பெற்றுக்கொள்கிறது என பரவலாகவே பேச்சு இருக்கிறது. அதைக்கொண்டு தங்களுக்கு என்னதான் அளிக்கிறது இந்த அரசு என்ற கேள்வி ஓரளவு எழுகிறது. சாலைகள் இல்லை, மின்சாரம் இல்லை, ரயில்வசதி இல்லை. இலங்கை போன்ற ஓர் அரசின் அடிப்படைக் கட்டுமானத்தைக்கூட உருவாக்கித்தரமுடியாத அரசு இத்தனைகோடிகளை எந்த நியாயத்தின் அடிப்படையில் திரட்டுகிறது என்னும் வினா எழுகிறது

இன்று மோதி அரசு எதையும் பெரிதாகத் திட்டமிடவோ செய்யவோ வேண்டாம் என்ற எண்ணத்தை அடைந்துவிட்டது. இரண்டு ஆண்டுகளுக்குள் வரும் அடுத்தத் தேர்தலில் எதிர்க்கட்சிகள் இணையப்போவதில்லை, ஆகவே வெல்வது உறுதி என நினைக்கிறார்கள்.மோடியை தாறுமாறாக ஏசுபவர்கள்கூடவே இந்துமதத்தையும் இந்தியதேசியத்தையும் வசைபாடி அதனூடாக அவரை மீண்டும் வெல்லவும் செய்துவிடுவார்கள்.கொஞ்சம் கொஞ்சமாக எழுபதுகளின் இந்திரா அரசை நோக்கி நாம் செல்கிறோம். சமையல்கட்டு நிர்வாகம், வெற்றுக் கோஷ அரசியல், தனிமனிதசர்வாதிகாரம்

ஜெ

***

மோடி, கருப்புப்பண ஒழிப்பு, ஊடகங்கள்
கருப்புப்பணம் -எதிர்வினைகள்
தாள்பணம் இல்லா பொருளியல் -கடிதங்கள் 2

முதலாளித்துவப் பொருளியலும் விஜய் மல்லையாக்களும்

முந்தைய கட்டுரைஇரவு – நாவல் குறித்து.
அடுத்த கட்டுரைவயக்காட்டு இசக்கி