ஆலய அனுமதி -கடிதங்கள்

index

ஆலயத்தில் இந்துக்கள் அல்லாதவர்களுக்கு அனுமதி தேவையா?

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,

ஆலயத்தில் இந்துக்கள் அல்லாதவர்களுக்கு அனுமதி தேவையா?(http://www.jeyamohan.in/101766#.WakeUrIjHIU) என்ற கேள்விக்கு உங்கள் பதிலைப் படித்தேன். இதை எந்த மனநிலையில் நீங்கள் எழுதினீர்கள் என்று தெரியவில்லை. உங்களிடம் இருந்து இவ்வளவு ஒரு தலை பட்சமான பதில் வந்தது வருத்தத்திற்குரியதுதான். ஒரு பக்கத்தில் நின்று கொண்டு அதற்கான காரணங்களை சப்பைக்கட்டு கட்டுவது போலத்தான் தெரிகிறது. நீங்கள் சொல்வது, கோவிலில் நாகரீகமற்ற முறையில் நடந்து கொள்பவர்கள் அனுமதிக்கப்படக் கூடாது என்பதுதானே. கோவிலுக்கு வரும் இந்துக்கள் நாகரீகமானவர்கள் என்று நினைக்கிறீர்களா? நான் நம்பவில்லை.

இன்றைய காலத்தில் இப்படிப்பட்ட அறிவிப்புப் பலகை அவசியம் தானா? நீங்கள் சொல்லும் வரலாற்று, நடைமுறை காரணங்களை ஒத்துக்கொள்வதாகவே வைத்துக்கொள்வோம். உண்மையில் கோவிலில் அநாகரிகமான முறையில் நடந்து கொள்பவர்கள் இந்துக்களாகிய நாம் தான். நமக்கு கோவில் மேல் உள்ள உரிமையை பயன்படுத்தி முழுவதுமாக அநாகரீகமாக நடந்து கொள்கிறோம். இன்றைய எல்லா கோவில்களுமே இதற்கு உதாரணம். குப்பையாக நாற்றமடித்து காணப்படுகிறது. இதற்கு எந்த நாத்திகவாதியோ, இஸ்லாமியரோ, கிறிஸ்தவரோ காரணம் இல்லை. நாம் தான் தீபாராதனை காட்டும் போது செல்பேசியில் படம் பிடித்துக் கொண்டிருக்கிறோம்.

கிறிஸ்தவர்களும் இஸ்லாமியர்களும் இந்து கோவில்களுக்கு வருவதை நிறுத்தி வெகு காலமாகிறது. என்னதான் அவர்களுக்கு இந்து மதம் மேல் வெறுப்பு இருந்தாலும் கோவிலின் அவ்வளவு கூட்டத்தின் நடுவே சென்று இந்து ஆச்சாரத்தை அவமதிப்பார்கள் என்றால் கண்டிப்பாக அவர்கள் மனநிலை பாதிக்கப்பட்டவராகத்தான் இருப்பார்கள் .(இதையே நான் மசூதிக்கு சென்று செய்தால் என்ன நடக்கும் என்று யோசித்துப் பார்க்கிறேன்.)அதன் பின்விளைவுகளை நினைத்துப்பார்க்கமாட்டார்களா?

உண்மையில் அங்கு இருக்க வேண்டிய பலகை “கோவில் விதிமுறைகளை பின்பற்றுங்கள். இடையூறு விளைவிக்காதீர்கள். இல்லையேல் வெளியேற்றப்படுவீர்கள்”(யாராயினும்) என்பது தான்.

தாய்லாந்து,கம்போடியா போன்ற நாடுகளின் சில புத்த கோவில்களில் குட்டைப் பாவாடை அணிந்த வெளிநாட்டுப் பெண்களை அனுமதிக்க மாட்டார்கள். நான் நேரிடையாகக் கண்டது. ஆனால் வெளியே நீண்ட அங்கிகள் வைத்திருப்பார்கள். அதை அணிந்து கொண்டு உள்ளே சென்று வெளியே வந்தபின் அங்கேயே வைத்துவிட வேண்டும். இதைபோல், உண்மையில் எந்த காரணத்திற்காக உள்ளே அனுமதி மறுக்கப்படும் என்பதைத் தான் அறிவிப்பாக வைக்க வேண்டுமே தவிர பொத்தம் பொதுவாக “இந்துக்கள் அல்லாதவர்களுக்கு அனுமதி கிடையாது” என்பது அவரவர்கள் அவர்களுக்கு விருப்பப் பட்ட காரணங்களை திரித்துக் கொள்ள வழிசெய்துவிடும். அந்தக் காரணம் நியாயமாக தெரிந்தால் அதன் படி உள்ளே வரட்டும். இல்லையேல் வேண்டாம்.

ஆரிய சமாஜத்தில் சான்றிதழ் வேறு வாங்கி வரச் சொல்கிறீர்கள். அடுத்து என்ன ஆதார் அட்டையா? விட்ட பத்மஸ்ரீயை வாங்கி விடுவீர்கள் போலத்தான் தெரிகிறது.

(பின் குறிப்பு: அந்த கட்டுரை படித்த முடித்த உடனே ஏற்பட்ட ஏமாற்றத்தில் எழுதியது இந்த கடிதம். அதனால் சீண்டல் தொனி இருக்கத்தான் செய்கிறது. மன்னிக்கவும். இப்போது அவ்வளவு இல்லை. )

நன்றி,

ஞானசேகர்.

https://naaneli.wordpress.com

***

அன்புள்ள ஞானசேகர்

நடுநிலைப்பதில் என ஒன்று இருக்கமுடியாது. நடைமுறைப்பதில்தான் இருக்க முடியும். அது நான் சொன்னது. அந்த பலகை அங்கே வைக்கப்படவேண்டுமா வேண்டாமா என்பதை அங்கே வழிபடுகிறவர்கள்தான் முடிவெடுக்கவேண்டும். அவர்கள் அவ்வறிப்பை வைப்பதற்கான நடைமுறைக் காரணமே நான் சொன்னது.

இந்து ஆலயங்கள் பெரும்பாலும் சுற்றுலாத்தலங்களும்கூட என்பதிலிருந்து வந்த நடைமுறை இது. மிக எளிய விஷயம். இதைவைத்துக்கொண்டு அரசியல்சரிகளைப் பேசி நம்மை முற்போக்காக கற்பனைசெய்து மகிழவேண்டியதில்லை என்பதே என் எண்ணம்

ஜெ

***

அன்புள்ள திரு ஜெயமோகன் அவர்களுக்கு ,

தங்கள் கட்டுரைகளை விடாமல் படிக்கும் ஒரு வாசகன்.

இந்த கட்டுரையில் தங்கள் கருத்தில் இருந்து வேறுபடுகிறேன் ;

ஒரு கோவிலில் கருவறைக்குள் “;பக்தியுடன் வழிபட மட்டுமே செல்ல வேண்டும்”

or “Worship Area – not for sight-seeing or photograhy. Please enter only for prayers”

இப்படி எழுதலாமே .

நன்றியுடன்,

ஞானவீரன்

***

அன்புள்ள ஞானவீரன்,

ஆம் அவ்வாறு எழுதினால் அது விதண்டாவாதத்திற்கு இடம் அளிக்காமல் பயன் தருமென்றால் எந்தச் சிக்கலும் இல்லை

ஜெ

***

அன்புள்ள ஜெயமோகன் ஐயா அவர்களுக்கு,

இன்று உங்கள் மேற்க்கண்ட பதிவை வாசித்தேன் மிகச்சிறந்த விளக்கம் மிக எளிதாக புரிந்து கொள்ளக்கூடியதாகவும் இருந்தது குறிப்பிட்ட பலகை வாசகங்கள் என்னை பலமுறை காயப்படுத்தியதுண்டு நான் இலங்கையை சேர்ந்தவன் இங்கே பௌத்த விஹாரைகளுக்குள்ளும் கிறிஸ்தவ தேவாலயங்களுக்குள்ளும் எந்தவிதமான தடைகளும் இன்றி பிரவேசித்து வழிபட்டுள்ளேன் அங்கெல்லாம் இவ்வாறான கட்டுப்பாட்டு வாசகங்களை கண்டதில்லை ஆனால் நீங்கள் கூறிய பின்தான் கூர்ந்து நோக்கினால் அவை ஓர் காரணத்துடனே வைக்கப்பட்டுள்ளன என்று புரிகிறது தங்கள் விளக்கத்துக்கு மிக்க நன்றி.

அன்புடன்,

பே.ஜதுர்ஸ்சனன்

***

முந்தைய கட்டுரைஎழுத்து பிரசுரம் அலெக்ஸ் மறைந்தார்
அடுத்த கட்டுரைவங்கடையும் ஓர் அறிவுரையும்