ஈர்ப்பதும் நிலைப்பதும் பற்றி…

KJAgmail

[கே.ஜே.அசோக்குமார்]

ஈர்ப்பதும் நிலைப்பதும்

அன்புள்ள ஜெ. அவர்களுக்கு

ஈர்ப்பதும் நிலைப்பதும் கட்டுரையை வாசித்தேன். ஒரு கதை குறித்தும் அதன் கூறல் முறை/கோணம் குறித்தும், அதன் நேர்/எதிர்மறை அம்சங்கள் குறித்தும் எழுதுபவர் தமிழகத்தில் நீங்கள் ஒருவர் தான். எல்லா கட்டுரையாளர்களும் தங்கள் சாதக அம்சங்கள் அதில் உள்ளன‌வா என்பதை மட்டுமே மனதில் கொண்டு எழுதுகிறார்கள் என நினைக்கிறேன். கதைக்கு ஒரு சின்ன எதிர்மறை விமர்சனம் வந்தாலும் எழுதியவர் சூழலுக்கு எதிரானவராக பார்க்கப்படுகிறார். எதிர் கொள்ள தைரியமுள்ளவர்கள் மட்டுமே அதை எழுதமுடியும்.
மற்றொன்று சிறுகதையாசிரியன் எதை எழுதவேண்டும் என்கிற தீர்மானத்தை மற்றவர்கள் தான் செய்கிறார்கள் என்பது. அனுபவ கதைகளும், விளிம்புநிலை கதைகளும் மட்டுமே பத்திரிகைகளில் பிரசுரிக்கும் நிலை இன்று இருக்கிறது. அதையும் கதையில் பல்வேறு மாற்றங்களுக்கு அவர் உட்பட்டுதான் எழுத வேண்டியிருக்கிறது. தான் ‘கண்டு’பிடித்த உண்மைகளை அவர் எழுத பிரசுரிக்க முடியாத நிலை. ஆரம்பநிலை/முதல்நிலை எழுத்தாளர்களுக்கு பிரச்சனை இல்லை, அவர் கொஞ்சம் சாதாரணமாக எழுதினால் பிரசுரமாகிவிடுகிறது. பிரச்சனை அடுத்த கட்டத்தை கொஞ்சம் மேலதிகமாக/தத்துவார்த்தமாக அவர் யோசிக்கும்போது தான் ஆரம்பமாகிறது. இதழ்கள் எதிர்பார்க்கும் அதே ஆரம்பநிலை எழுத்துக்களை அவர் கொடுக்க முன் வராதபோது அவர் கதைகள் பிரசுரமாவதில்லை.
ஆகவே எழுத்தாளர்கள் குழப்பமடைகிறார்கள், மீண்டும் அதே மாதிரியான கதைகளை எழுதுகிறார்கள். எனக்கு தெரிந்த சிறுகதையாசிரியர்களை சிலரை அப்படி குறிப்பிடமுடியும். முகநூல் நிலைதகவல்கள் தெளிவாக எழுத்தாளர்களுக்கு ‘தேவையானவைகளை’ முன்பே அறிவுறுதிவிடுகின்றன.
தேவையான பொருட்கள் இருக்கும்போது பிரிதொன்றை நாடவேண்டிய அவசியமும் இல்லை தானே!. அத்தோடு, போட்டியில் வென்ற கதைகள் ஒன்றுபோல இருப்பதை காணலாம். அதன் பேசுபொருள்களும் ஒன்றே. பரிசுகளைப் பெற்ற நூல்களும் அதன் வடிவஅமைப்புகள் ஒன்றுதான். சிறுகதையாளர்கள் எதை தேர்வு செய்யமுடியும்.

நன்றி,
கே.ஜே.அசோக்குமார்

****

அன்புள்ள ஜெ

ஈர்ப்பதும் நிலைப்பதும் ஒரு கூரிய விமர்சனம். ஒர் வளரும் எழுத்தாளன் தன்னை வலிமையாக அடையாளம் காட்டிக்கொள்ளவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறான். ஆனால் இதிலுள்ள சிக்கல்கள் நிறைய. ஏராளமாக எழுதினால்மட்டும்தான் கைபழகி நடை வருகிறது. ஆனால் எழுதியவை பிரசுரமாகி எவரேனும் படிக்காமல் மேலும் எழுதவும் தோன்றுவதில்லை. இணையம் இருப்பதனால் உடனே பிரசுரமாகிவிடுகிறது. என்னதான் விமர்சனம் உதவியானது என்றாலும் ஒரு பாராட்டு இருந்தால்மட்டும்தான் தொடர்ந்து எழுதமுடிகிறது

அதோடு இன்றைய இதழ்களின் தேவையும் ஒரு சிக்கல். இன்றைக்கு எழுத்தை உடனடியாக விறுவிறுப்பாக இருக்கவேண்டும் என்று இதழ்கள் நினைக்கின்றன. பாலுறவு பற்றியோ வன்முறை பற்றியோ அடித்தளவாழ்க்கையின் உள்ள குரூரங்கள் ஆபாசம் பற்றியோ எழுதினால்தான் அழுத்தமாக இருக்கிறது என நினைக்கிறார்கள். இன்றைக்கு இதழ்களுக்கு ஏற்பத்தான் இவையெல்லாம் எழுதப்படுகின்றன என்பதுதான் உண்மை.

ஆகவே வேறுவழியில்லை. ஒரு இளம் எழுத்தாளனின் முத்திரை உள்ள நல்ல கதைகள் வரும்போது அதை உங்களைப்போன்றவர்கள் சுட்டிக்காட்டி அதைப்பேசவைக்கவேண்டும். நீங்கள் போதி படுகை மாடன்மோட்சம் எழுதியபோது அசோகமித்திரன் சுஜாதா இந்திராபார்த்தசாரதி போன்றவர்கள் உங்களைப்பாராட்டி எழுதி கவனிக்கவைத்தார்கள். இன்றைக்கு பார்த்தால் நீங்கள் எழுதிய வெற்றி தான் பேசப்படுகிறது. இப்போது திடீரென்று எல்லாரும் நீங்கள் எழுதிய கெய்ஷா பற்றிப்பேசுகிறார்கள். நீங்கள் அதேபோல இளம் எழுத்தாளர்களைப்பற்றிப் பேசலாம் அல்லவா? சுரேஷ் பிரதீப் பற்றி பேசியது நல்ல விஷயம். இது தொடரட்டும்

அமர்நாத்

முந்தைய கட்டுரைநவகாளி யாத்திரை வெளியீடு
அடுத்த கட்டுரைஇலக்கியத்தின் பல்லும் நகமும்