இருவர்
அன்புள்ள ஜெ,
‘இருவர்’ கட்டுரையை வாசித்தபின், நன்கு கனிந்த ஐந்து தலைமுறை பிரதிநிதிகளுடன் சில மணி நேரம் பயணித்த, பயண அனுபவத்தை அடைத்தேன்.
மாமா தூங்காத தூக்கத்தில் விழுந்து அடிபடாமல் இருக்க, தரையில் தலையணை அடுக்கிய முன்ஜாகிரதை நம்மில் தலைமுறைகளாகத் தொடர்ந்து கொண்டுதான் உள்ளது. மாமா மாமியுடன் குடும்பவிஷயமாக உரையாடுவது, பிக் பாஸ் நிகழ்ச்சியில் வரும் சம்பவங்கள் (!?) என நினைக்கின்றேன். வாழ்க்கையில் எதற்கு என்று தெரியாமல், எதற்கும் நேரமில்லாமல் வேகமாக ஓடிகொண்டிருக்கும் என்னைப்போல் சிலருடன், மாமாவும் மாமியும் பிக் பாஸ் போன்ற நாட்டு நடப்புகளில் உள்ள ஆர்வம் சிறிய புன்னகையை வரவழைத்தது.
மாமியின் வாசிப்பு பழக்கமும், மாறுதல்களைத் தெளிவாகக் கண்டு உணர்வது, எளிய நம்பிக்கையான வாழ்க்கை, பெண்கள் என்றுமே முன்னாள் சென்றுகொண்டு இருப்பதை, மாற்றம் இவர்களில் இருந்துதான் தொடங்குகிறது என நினைக்கத் தோன்றுகிறது. மாமாவின் ஆதிக்கத்தை, அவர் மீது உள்ள அன்பால் சில கிண்டல்களுடன் கடந்து செல்கிறார்.
கட்டுரையை வாசித்தபின் மாமியை போல வாழ்க்கையை எளிதாக வாழ, வருவதை நம்பிக்கையுடன் எதிர்கொள்ளக் கற்றுக்கொள்ள வேண்டும் என ஆசைப்படுகிறேன். நான் மாறினால் என் தொடர்ச்சியும் மாறும்.
அன்புடன்,
விஜய்.
அன்புள்ள ஜெ
இருவர் ஓர் அருமையான கதை. அதை ஏன் சிறுகதை என்று சொல்லக்கூடாது. சிறுகதை என்றபேரில் இங்கே எழுதப்படும் மைக்ரோ நெரேஷன்ஸ்களுக்கு பலமடங்கு மேலானது இது. உண்மையில் நீங்கள் அனுபவம் என்ரு எழுதும்பல கட்டுரைகள் சிறுகதைகளின் உருவ அமைதிகொண்டிருக்கின்ரன. இதிலே உள்ள எமெர்ஜென்ஸி எக்ஸிட், அல்வாமீதான ஆசை, தலையணைகள் வைக்கும் எச்சரிக்கை எல்லாமே பல வகைகளில் குறியீடாக கவித்துவமாக விரியக்கூடியவை. தமிழில் அன்றாடவாழ்க்கைச்சித்திரங்களை எழுதும் எழுத்தாளர்களின் கதைகளில் இந்தத்தரத்தில் பிரகாசமான நுட்பமான கதைகளை மிக அரிதாகவே காணமுடியும் என நினைக்கிறே
ராஜ்குமார்
இருவர் – கடிதங்கள்