வங்கடை கடிதங்கள்

அன்புள்ள ஜெயமோகன்,

 

 

முருங்கைக்காய் வங்கடை குழம்பின் வாசமும் , மீன் வறுவலும் நாகர்கோவிலில் துவங்கி உலகம் முழுவதும் பரவி தெறிக்க விட்டுவிட்டீர்கள். உங்கள் கட்டுரைகளில் மீன் சமையல் பற்றிய வர்ணனைகள் வரும்பொழுதெல்லாம் மீன் பிரியர்களுக்கு நிச்சயம் நாக்கு சப்பு கொட்டும். சமீபத்தில் நெத்திலி மீனை வாங்கி வந்து தலையை ஆய்ந்து நீங்களே சமைத்ததாக எழுதியிருந்தீர்கள். சைவமான சுந்தர ராமசாமி ஒரு ஆட்டோ டிரைவர் வீட்டில் மீன் உண்டதை பதிவு செய்துள்ளீர்கள். கோதாவரி மீன்களுக்கு கொழுப்பு ஜாஸ்தி என்று முகங்களின் தேசத்தில் ஒரு குறிப்பு வரும். கேரளாவில் நெய் சோறும் வறுத்த மீனும் கொடுத்த டீக்கடை இலக்கியவாதி. இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்.

 

 

நான் புதுவையில் வளர்ந்தவன். புதுவையில் பெரும்பான்மையான மக்கள் மீனோடு பிறந்து, மீனோடு வளர்ந்து, மீனோடு மரிப்பவர்கள். ரத்த அழுத்தம், கொலஸ்ட்ரால் உள்ளவர்க்கு மருத்துவர்கள் உணவு கட்டுப்பாடு சொன்னால், “போற உசுரு .. மீன் சப்பிட்டே போகட்டும்” என்று  வறுத்த மீனை தேடுவார்கள். சளி பிடித்தால் காரப்பொடி மீன் குழம்பு , தாய்ப்பால் அதிகம் சுரக்க சுறா புட்டு என அவர்களே மீன் வைத்தியம் பார்த்து கொள்வார்கள். மீன், நண்டு, இறால் என்று எதையும் பார்த்திராத வெளியூர் பெண்கள் கல்யாணமாகி புதுவை வலையில் மாட்டினால் வெகு சீக்கிரம் அனைத்தையும் கற்று கொள்ள வேண்டும். குழம்பு மீனை குழம்புதான் வைக்க வேண்டும். வறுக்க, பஜ்ஜி போட, புட்டு வைக்க  என்று பல வகை விதிகள். பல வகை ருசிகள். பல வகை மீன்கள். பல வகை மனிதர்கள். விதியை மாற்றி சமைத்தால், வீடுகளில் உணவு தட்டுகள் பறக்கும். கலவரமே உண்டாகும்.

 

 

பிரபஞ்சனின் “மீன்” சிறுகதை தமிழின் மிக முக்கியமான சிறுகதை என்பேன். கிட்டத்தட்ட தங்களின் அறம் வரிசையில் சேரும் கதை. மீன் சந்தை , மீன் விற்பவர்களின் மொழி, மீன்களை பற்றி விலாவரியாக எழுதியிருப்பார். கடைசி மீன் கூறு ஒன்றை நடுத்தர வர்க்கம் விலை பேசிக்கொண்டிருக்க, குறுக்கே புகும் பணக்காரன் ஒருவன் அதிக பணம் கொடுத்து அதை வாங்க முயல, ஒரு நொடியில் மீன் விற்பவள் பத்ரகாளியாக மாறுவாள். அவளது வசையை தாங்க முடியாமல் பணக்காரன் ஓடி விடுவான். மீன் விற்பவர்களின் அந்த அன்பும், அறமும் இன்றைய கால கட்டத்தில் கொஞ்சம் குறைந்து விட்டது என்றுதான் சொல்லவேண்டும். மீன் பிரியர்கள் அவசியம் படிக்க வேண்டிய சிறுகதை.

 

 

நகரங்களில் இணையம் வழி மீன் வர்த்தகம் வந்துவிட்டது. தொலைசிபேசியில் சொன்னால் போதும், கதவு தட்டி கொடுக்கிறார்கள். மீன் கழுவி சுத்தம் செய்வதற்கு தனி கட்டணம். தொழில்நுட்பம் வளர வளர மீனின் வாசமும், அதை விற்கும் மனிதர்களின் மனதின் வாசமும் நம்மை விட்டு விலகி ஒரு இடைவெளி விழுந்து விட்டது. customer database, loyalty card, campaign program, customer analytics என்று பல விஷயங்கள் இன்று உள்ளன. ஆனால் இது எதுவுமே இல்லாமல் எளிய மனிதர்கள் அன்று உறவாடியது ஆச்சரியம்தான். வெளியூர் விருந்தாளிகள் வந்து விட்டால், குடும்பத்தில் கர்ப்பிணி இருந்தால் அதை தங்கள் வீட்டு விசேஷமாக கருதி, கொசுறு/இலவச/அம்மா மீன்கள் வந்து குவியும். வீதியில் மீன் கூவி விற்கும் பெண்கள் பல சமயம் காசு வாங்குவதேயில்லை. குடிகார கணவன் குடித்தே அழித்து விடுவான் என்பதால், தேவையின் பொழுது மட்டும் வாங்கி கொள்வார்கள். வீடே வங்கி. மனிதர்களின் வாக்கு மூலதனம்.

 

 

புதுவையில் மணக்குள விநாயகர் கோவில் மிக பிரபலம். மனம் எனும் குளத்தில் எண்ணங்கள் எழுவதால் அலைகள் உண்டாகி மனம் அலைபாய்ந்து கொண்டேயிருக்கும். இந்த விநாயகரை கும்பிட்டால் , மனக்குளம் அமைதியாகி ஞானம் பிறக்கும் என்பார்கள். தங்களின் வங்கடை பதிவால், நிசப்தமாய் இருந்த எனது மனதின் குளத்தில் தற்பொழுது பல வகை மீன்கள் துள்ளிக் கொண்டிருக்கின்றன.

 

நன்றி.

அன்புடன்,

ராஜா.

 

 

அன்புள்ள ஜெ

 

வங்கடை அருமையான பகடி. ஆனால் பகடி எதைப்பற்றி எங்கே உள்ளது என்று கண்டுபிடிக்க கொஞ்சம் தாமதமாகியது. பாவம் வங்கடை என்ன ஏது என்று தெரிவதற்குள் எல்லாம் முடிவாகி வலையில் மாட்டிவிடுகிறது. கொஞ்சம் வளர்ந்து அறிவும் இருந்தால் அது ஏன் வலைப்பக்கம் வரப்போகிறது?

 

ரமேஷ் வைத்தியநாத்

 

சார் வணக்கம்
மாதத்தின் கடைசி ஞாயிறானதால் நேற்று சரணை அவன் பள்ளி விடுதியில் சென்று சந்திக்க சேலம் சந்திப்பில் கோவை செல்லும் சபரி விரைவு ரயிலுக்காக அதிகாலை 4.30கு காத்திருக்கையில் ‘வங்கடை’’ வாசித்தேன். சரண் அப்பாவும் அருகில் இருந்ததால் அதிகம் . சிரிக்கக்கூடாது என எனக்கு நானே கட்டுப்பாடெல்லாம் விதித்துக்கொண்டுதான் வாசிக்க துவங்கினேன் எனினும் ’லே கண்ணாடி’’ யிலேயே துவங்கி, பின்னர் கபாலி, நெருப்புடாவிலிருந்து ,கல்யாணமேதானுக்கும், கடைசிவரைக்கும் சிரித்துக்கொண்டே இருந்தேன்.எதிர்பார்த்தபடியே திட்டு கிடைத்தது. ’’நேரங்காலமில்லாம வாசிக்கவும் சிரிக்கவும் தொடங்கியாச்சா’’ என்று

 

பின்னர் ரயிலில் பயணித்த 3 மணி நேரமும் மனசிற்குள் சிரித்துக்கொண்டே வந்தேன்.பள்ளியில் சரணைப்பார்த்து வழக்கமான கட்டிப்பிடித்தல் நலம் விசாரிப்புகளுக்கு பின்னர் கார் நிறுத்துமிடத்திற்கு வருமுன்னரே இரண்டுபேருமாய் மீண்டும் இந்த பதிவை வாசித்து சிரித்துக்கொண்டும், முக்தனின் இறப்பிற்கு துக்கப்பட்டுக்கொண்டும் வந்தோம்

 

கவனித்துக்கொண்டே வந்த அவர் ,நாங்கள் பல வருட பயிற்சியில் தேறி இருந்ததால் எதிர்பார்த்தபடியே காரில் ஏறினதும் ’’ 12 ஆம் வகுப்பில் இருக்கேன்னு நினைவிருக்கா, இல்ல உங்கம்மா இ மெயிலில் அனுப்பற மகாபாரதம் கதையைத்தான் பரிட்சையில் கேட்பாங்கன்னு நினச்சுட்டு இருக்கியா?என்ற் கேள்வியை எதிர்கொண்டொம்

 

‘’ அப்பா என் மார்க்கெல்லாம் உங்களுக்கு மெயில் வரலை? எல்லாத்திலயும் A + , மூணு பாடத்தில் டாப்பர் நானு’’ என்னும் பதிலுக்கு அந்தப்பக்கம் மயான அமைதி நிலவியது .
பின் வழக்கம் போல பின் சீட்டில் நாங்கள் நடத்தும் ரகசிய உடன்படிக்கைகளில் ஒன்றாக, சரண் அப்பாவிற்கென நாங்கள் மூவருமாய் தயாரித்து வைத்திருக்கும், ஒப்பன்ஷியா ஸ்ட்ரிக்டா, தெவசியா நெரிஃபோலியா, அவிரோ அசிடா போன்ற லத்தீன் கலைச்சொற்கள் அடங்கிய மந்தண குறியீட்டு வசைச்சொல்லகராதியில் ‘ வங்கடை’’ யையும் சேர்த்துக்கொண்டோம். இரவு மீண்டும் விடுதியில் அவனைக்கொண்டு சேர்ப்பதற்குள் சில முறை’’ வங்கடையை’’ பயன்படுத்தியும் மகிழ்ந்தோம். சந்தொஷமாயிருந்தது சார்

 

கொங்கு வட்டார வழக்கில், வாழ்வின் இயங்கியலில் சாமார்த்தியமும் பரிச்சயமும் இல்லாதவரகளை குறிப்பிட மற்றும் திட்ட ‘’ வேங்கடை’’ என்னும் ஒரு சொல் புழக்கத்தில் இருக்கிற்து சார். வங்கடைக்கும் வேங்கடைக்கும் மொழியியலில் தொல்தொடர்பு இருக்கலாம்

 

கால்பந்து போட்டிக்கென சென்னை சென்றிருக்கும் தருண் வந்தவுடன் வங்கடை பற்றி சொல்ல காத்துக்கொண்டிருக்கிறேன்.
அன்புடன்
லோகமாதேவி

 

முந்தைய கட்டுரைஇவர்கள் இருந்தார்கள் -கடிதங்கள்
அடுத்த கட்டுரைகீழடி – நாம் பேசவேண்டியதும் பேசக்கூடாததும்