வெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 4

ஒன்று : துயிலும் கனல் – 4

fire-iconஏவலன் அறைக்குள் வந்து “கணிகர்” என்றான். சகுனி காலை மெல்ல அசைத்து அமர்ந்துகொண்டு வரச்சொல்லும்படி தலையசைத்தார். ஏவலர் கணிகரை தூளியில் தூக்கிக்கொண்டுவந்து அவரருகே இடப்பட்ட தாழ்வான மெத்தைப்பீடத்தில் அமர்த்தினர். கணிகரின் வலிமுனகல்களையும் முகமாற்றத்தையும் கூர்ந்து நோக்கியபடி சகுனி முகவாயை தடவிக்கொண்டிருந்தார். கணிகர் பெருமூச்சுகளுடன் அமைதியாகி “மஞ்சம் மீண்டு சிவமூலியை இழுத்த பின்னர்தான் என்னால் மீளமுடியும். அவைநிகழ்வுகளைப்போல கொடியவை பிறிதில்லை” என்றார். பீடத்தில் சாய்ந்து அமர்ந்திருந்த துரியோதனன் கணிகர் வரும்வரை ஒரு சொல்லும் உரைக்காமலிருந்தான். மேலும் பேசாமலிருக்க முடியாதவனாக எழுந்து ஆற்றாமையுடன் “கணிகரே, நீங்கள் இருந்துமா இப்படி நிகழவேண்டும்?” என்றான். “நான் இதை எதிர்பார்த்தேன்” என்றார் கணிகர். “எப்படி?” என்றான் துரியோதனன். “இத்தனை பெரிய அரசியல்முடிச்சு இத்தனை எளிதாக அவிழ்க்கப்பட முடியுமா என்ன? அதைக்கொண்டுதான்” என்றார். “இதை யாதவ அரசி எண்ணியிருப்பார். இதற்கான மாற்றுரையையும் சூழ்ந்திருப்பார். அதை நான் நன்குணர்ந்திருந்தேன்.”

“பிறகு ஏன் இதை நாம் சொல்லப்போனோம்?” என்று துரியோதனன் சினத்துடன் கேட்டான். “அவைநடுவே சிறுமைகொள்வதற்கா?” கணிகர் “அரசே, இப்போது நாம் உணர்த்த விரும்பும் இரண்டு செய்திகள் வெளிப்பட்டுவிட்டன. நாம் அடையவேண்டிய இரு செய்திகள் வந்தடைந்துள்ளன” என்றார். “நாம் இந்நிலத்தை எளிதில் விட்டுக்கொடுக்கப் போவதில்லை. முடிந்த வழியிலெல்லாம் முயலவே செய்வோம் என்று அவர்களுக்கு சொல்லிவிட்டோம். பிதாமகரும் ஆசிரியர்களும் எதிர்த்தாலும் பேரரசரே தயங்கினாலும் நாம் நம் உரிமையில் உறுதியாக நிற்போம் என்பது நம் அவைக்கும் தெளிவாகிவிட்டது.”

“நமக்குத் தெரிய வந்தது இரண்டு செய்திகள். நம் பிதாமகரின் உளநிலை என்ன என்று. நம் குடிகளில் எவரெவர் நமக்கு ஆதரவானவர்கள் அல்ல என்று” என்று கணிகர் சொன்னார். துரியோதனன் “ஆம், ஆயர்குடி நம்மை எதிர்க்குமென எண்ணினேன். வேளிர்குலத் தலைவரும் மறவர்குலத் தலைவரும் அந்நிலை கொண்டது என்னை அதிர்ச்சியுறச் செய்தது” என்றான். “நீங்கள் நல்லாட்சி அளித்ததாக எண்ணிக்கொண்டிருக்கிறீர்கள். ஆகவே குடிகள் உங்களை ஆதரிப்பார்கள் என்று கனவு காண்கிறீர்கள். மெய்நிலை என்னவென்று அவை இன்று காட்டிவிட்டதல்லவா?” என்றார் கணிகர்.

“ஆம், அத்துடன் அவையில் இன்று நான் முற்றிலும் தனித்துவிடப்பட்டதாக உணர்ந்தேன்” என்றான் துரியோதனன். கைகளால் பீடத்தின் கைப்பிடியை அடித்து “இனி நாம் செய்வதற்கொன்றுமில்லை” என்றபின் எழுந்து சென்று சாளரத்தருகே நின்றான். வெளியே திகழ்ந்த அந்தியொளி அவன் முகத்தில் விழுந்தது. திரும்பி “நான் எந்நிலையிலும் இந்நாட்டை பிளக்கப்போவதில்லை. அது என்றேனும் நிகழுமென்றால் அதற்கு முன் உயிர்விடுவேன். மறுசொல்லே வேண்டியதில்லை” என்றான்.

காவலன் உள்ளே வந்து விதுரரின் வரவை சொன்னான். வரச்சொல்லும்படி துரியோதனன் கைகாட்டினான். விதுரர் உள்ளே வந்து தலைவணங்கி “ஓலைகள் எழுதப்படவேண்டும். அவற்றின் சொற்றொடர்களை எழுதியிருக்கிறேன்” எனத் தொடங்க துரியோதனன் உரத்த குரலில் “நீங்கள் என்ன எழுதியிருப்பீர்கள் என்று அறிவேன், அமைச்சரே. அது நிகழப்போவதில்லை. இந்நாட்டை பிரிக்கவோ இதில் ஒரு துளி மண்ணை அளிக்கவோ நான் சித்தமாக இல்லை… அப்படி ஒரு வரியோ உட்குறிப்போ இருக்குமென்றால் அதில் நான் கைச்சாத்திடப் போவதில்லை” என்றான்.

விதுரர் “ஆனால் அதுவே அவைகூடி…” எனத் தொடங்க “அப்படியென்றால் அவை சார்பில் ஓலை செல்லட்டும். நான் என் சொல்லால் அதை அளிக்கமாட்டேன்” என்று துரியோதனன் கூவினான். “இது ஒப்புக்கொள்ளப்பட்டது” என்றார் விதுரர். “நான் ஒப்புக்கொள்ளவில்லை…” என்று துரியோதனன் கூவினான். “நான் ஒரு சொல்லும் உரைக்கவில்லை.” விதுரர் “பேரரசரிடம் பேசி ஒப்புக்கொண்டது இது” என்றார். “அவ்வண்ணமென்றால் அவரே கைச்சாத்திடட்டும்… நான் ஒப்பமாட்டேன்.” விதுரர் தவிப்புடன் சகுனியை நோக்கி “உங்கள் சொல் என்ன, காந்தாரரே?” என்றார். “நான் இதில் சொல் நுழைக்க விழையவில்லை” என்று சகுனி சொன்னார்.

விதுரர் தலைவணங்கி வெளியே சென்றார். துரியோதனன் நெஞ்சு ஏறியிறங்க சற்றுநேரம் சாளரத்தருகே நின்றபின் மீண்டும் வந்து அமர்ந்துகொண்டு “அங்கன் எங்கே? அவைக்கும் வரவில்லை” என்றான். “அவர் கிளம்பும்போதே குடித்திருந்தார். வழியில் திரும்பிச்சென்று மீண்டும் குடித்திருக்கிறார். கால் குழைந்து இடைநாழியில் ஒரு பீடத்தில் அமர்ந்தவர் அப்படியே படுத்துவிட்டார். என்னிடம் வந்து சொன்னார்கள். திரும்ப அறைக்கு கொண்டுசெல்லும்படி சொல்லிவிட்டேன்” என்றார் கணிகர். “மூடன்…” என்று துரியோதனன் தன் தொடையில் அறைந்தான். நிலையழிந்தவனாக எழுந்து சாளரத்தருகே சென்று நின்றான்.

பின்னர் திரும்பி உரத்த குரலில் “சொல்லுங்கள், நான் என்ன செய்யவேண்டும்?” என்றான். “இப்போது கொந்தளிப்பதில் பொருளில்லை. இன்னும் எவரும் முழுமையாக வெளிப்படவில்லை” என்றார் கணிகர். “இனி என்ன வெளிப்படுவதற்குள்ளது? அத்தனைபேரும் பிழைநிகர் செய்ய விழைகிறார்கள். நாட்டை பிரித்துக்கொடுத்து அங்கே சென்று விருந்துண்டு வாழ்த்துரைத்து வர எண்ணுகிறார்கள்” என்றான் துரியோதனன்.

மேலும் பேச முனைந்து, செவி கூர்ந்து “தந்தை!” என்றான். சகுனி “ஆம், அவரது காலடிகள்” என்று மெல்ல காலை ஊன்றி பீடத்தைப்பற்றி எழுந்து நின்றார். கதவைத் திறந்து திருதராஷ்டிரர் தன் பேருடலைக் குனித்து உள்ளே வந்தார். துரியோதனன் “தந்தையே, தாங்கள் இங்கே வரவேண்டுமா? ஆணையிட்டிருக்கலாமே?” என்று சொல்லி முன்னால் சென்று கால்தொட்டு தலைசூடினான். சகுனி “நான் காந்தாரன். பணிகிறேன், அரசே” என்று வணங்கினார். “கணிகரை வணங்குகிறேன்” என்ற திருதராஷ்டிரர் “விதுரன் சொன்னான் நீ மறுத்துவிட்டாய் என்று. நான் அவைசொன்ன சொல்லை மறுக்குமளவு வளர்ந்துவிட்டாயா என்று பார்க்கவே வந்தேன்…” என்றார்.

அவருடைய தோள்தசைகளும் புயங்களும் இறுகிநெகிழ்ந்து அலையிளகின. “இனி உன்னிடம் ஆணைபெற்று இங்கே நான் வாழவேண்டுமா?” என்றார். இரு கைகளையும் விரித்து “நான் வாழும்வரை என் சொல்லே இங்கு திகழும். மறுப்பவன் எவனாயினும் என் முன் தோள்விரித்து வருக!” என்று கூவினார். துரியோதனன் “நான் மறுக்கவில்லை, தந்தையே. உங்கள் சொல் திகழட்டும் என்று மட்டுமே சொன்னேன். நீங்கள் ஆணையிடுங்கள். நாட்டை முழுதுமாகவேகூட அவர்களுக்கு அளியுங்கள்” என்றான் துரியோதனன்.

“என்ன சொல்கிறாய், மூடா? பசப்புகிறாயா?” என்று கூவியபடி துரியோதனன் கழுத்தைப் பிடித்து அப்படியே தூக்கி சுவருடன் ஓங்கி அறைந்தார். அறை நடுங்கி காரை உதிர்ந்தது. சகுனி கைகளைக் கட்டியபடி அசையாமல் நோக்கிநின்றார். விதுரர் “அரசே…” என்று கூவினார். துரியோதனன் “என்னை நீங்கள் கொல்லலாம்… அதுவே இனி எனக்கு விடுதலை” என்று திக்கினான். அவர் அவனை தரையில் வீசி “மூடா… அறிவிலி” என்று பற்களைக் கடித்தபடி இரு கைகளையும் நெரித்தார்.

“உங்கள்மேல் நம்பிக்கையிருந்தால் நீங்களே ஓலை அனுப்புங்கள், தந்தையே. நான் என் உளச்சான்று ஒப்பாத ஒரு சொல்லை ஓலையில் பொறிக்கமாட்டேன். அதைத்தான் நான் சொன்னேன். நீங்கள் என்னை கொல்லலாம். கொல்லாமல் நிலத்தை அளித்தீர்கள் என்றால் நிலம் பிளவுபடுவதற்குள் என் வாளால் என்னை பிளந்துகொள்வேன். இது என் மூதாதையர்மேல் ஆணை…” என்று துரியோதனன் உறுதியான குரலில் சொன்னான். “தெய்வங்கள்மேல் ஆணை… இந்நிலம் பிளவுபட நான் உயிருடன் இருக்கமாட்டேன்.”

“அவ்வண்ணமெனில் நீ செத்தொழி…” என்று திருதராஷ்டிரர் அவனை மிதிப்பதற்காக காலைத் தூக்கி முன்னால் செல்ல விதுரர் “மூத்தவரே…” என்று கூவினார். திருதராஷ்டிரர் காலால் தரையை ஓசை வெடிக்க ஓங்கி மிதித்தார். தரையில் உடலியல்பால்கூட அசைவெழாமல் அமர்ந்திருந்த துரியோதனன் “தந்தையே, என் சொல்லை நான் மாற்ற முடியாது. நீங்கள் என்னையும் என் இளையோரையும் கொல்லலாம். எங்களில் ஒருவர் எஞ்சும்வரை இந்நிலம் இவ்வாறே இருக்கும்.வேறு எந்த வழியும் இல்லை” என்றான். திருதராஷ்டிரரின் பெரிய கைகள் தளர்ந்து தொடைமேல் உரசி ஒலியெழுப்பியபடி விழுந்தன. தோள்கள் தளர “விதுரா…” என்றார். விதுரர் அவர் முழங்கையை பிடித்தார். சகுனி வந்து திருதராஷ்டிரரின் கையைப் பற்றி “அமர்ந்துகொள்க, பேரரசே” என்றார்.

Ezhuthazhal _EPI_04

தளர்ந்த காலடிகளுடன் சென்று அமர்ந்துகொண்டு தலையை உருட்டுவதுபோல அசைத்தபடி திருதராஷ்டிரர் முனகினார். இரு கைகளையும் சேர்த்து இறுகப்பற்றி பிசைந்தார். சகுனி கையை விலக்க அவரை பற்றிக்கொண்டு “மைத்துனரே, நீங்கள் ஒரு வழி சொல்லுங்கள்… என் கண்முன் நான் எதை காணப்போகிறேன்?” என்றார். சகுனி அவர் கைமேல் தன் கையை வைத்து “அனைத்தும் நன்றாகவே நிகழும்…” என்றார். மேலும் ஏதோ சொல்ல அவர் வாயெடுத்தபோது திருதராஷ்டிரர் “எத்தனை காலம்… இரண்டு தலைமுறைகளாகின்றன, இக்குருதிப்போர் தொடங்கி… எனக்கு ஏன் இந்தத் துயரம்?” என்றார்.

விதுரர் “நெறியில் நிற்போருக்கும் துயருண்டு, ஆனால் அது பொருள் உள்ள துயர்” என்றார். “நெறியில்லாதவனா? நானா…? விதுரா, மூடா… என்ன சொல்கிறாய்?” என்றார் திருதராஷ்டிரர். கணிகர் “அரசே, இப்போது ஏன் உடனடியாக ஒரு முழுச்சொல் ஓலை? பாண்டவர்கள் அஸ்தினபுரிக்கு மீளட்டும். நெறிமுறைகளின்படி ஆவன செய்யப்படும் என்று ஒரு சொல் மட்டும் ஓலையில் இருந்தால் போதும் அல்லவா?” என்றார். திருதராஷ்டிரர் விழித்தசைகள் உருள “விதுரா, என்ன இது?” என்றார்.

விதுரர் “ஆனால் அந்த ஓலையால் என்ன பயன்? நாம் அனைத்தையும் மீண்டும் ஒத்திப்போடுகிறோம்” என்றார். “இல்லை, அவர்கள் கோரியது அவர்களின் உரிமையை. அவ்வுரிமையை நாம் ஓலை வழியாக அளிக்கப்போகிறோமா என்ன? அனைத்தும் இங்கே குடியவையில்தானே முடிவாகப்போகின்றன? குடியவையில் அனைத்தையும் பேசுவோம் என்பதன்றி வேறு மறுமொழி என்ன?” விதுரர் “ஆனால்…” என்று சொல்லத் தொடங்க “அவ்வாறு மறுமொழி செல்லட்டும்… அதுபோதும் இப்போது” என்றபின் திருதராஷ்டிரர் எழுந்தார். “என்னை இசைக்கூடத்திற்கு கொண்டுசெல்…” என கையை நீட்டினார். விதுரர் அவர் கையை பற்றிக்கொண்டார்.

அவர்கள் அறைநீங்க துரியோதனன் பெருமூச்சுடன் எழுந்து ஆடையை சீரமைத்துக்கொண்டான். திரும்பி சகுனியையும் கணிகரையும் நோக்கினான். ஏதோ சொல்ல வாயெடுத்தாலும் அவனால் மொழிதிரட்ட முடியவில்லை. “அரசே, அந்த ஓலை செல்லட்டும். நாம் அனைத்தையும் பின்னர் பேசுவோம்” என்றார் கணிகர். “பின்னர் ஏதும் பேசுவதற்கில்லை. இனி எப்போதும் என் சொல் ஒன்றே” என்றான் துரியோதனன். “ஆனால் இந்த ஓலையால் ஆவதென்ன? அவர்கள் நெறிப்படி கடன் முடித்துவிட்டார்கள். கோருவதைப் பெற உரிமைகொண்டிருக்கிறார்கள். அதன்முன் பொழுது ஈட்டுவதில் பொருளென்ன?”

கணிகர் “அரசே, இது உங்கள் குடிப்பூசல் அல்ல. அஸ்தினபுரியின் முடியுரிமைக்கான போர் அல்ல. கௌரவரே, இது நிலத்திற்கான போரே அல்ல” என்றார். துரியோதனன் புரியாமல் சகுனியை நோக்க அவரும் குழப்பத்துடன் கணிகரை நோக்குவது தெரிந்தது. “இது எதன்பொருட்டான போரோ அது எழுந்துவராமல் இது எவ்வகையிலும் முடிவுகொள்ளாது. அது திரளட்டும்” என்றார் கணிகர். சகுனி “இளைய யாதவனுக்கும் ஓலை சென்றிருக்கும்” என்றார். “ஆம், இப்பூசலின் மையம் அவனே. அவன் இன்று கூட்டுப்புழுவென தவமிருக்கிறான். அவன் திறந்து வெளிவரட்டும்…” என்றார்.

fire-iconசகுனி பின்னிரவில் உளம்விழித்துக்கொண்டார். அதற்கு முந்தைய கணம் அவர் அடர்காட்டுக்குள் புதர் மூடிக்கிடந்த சிற்றாலயம் ஒன்றின் முன் நின்றிருந்தார். அதைச் சூழ்ந்திருந்த புதர்களை வாளால் சீவி அகற்றி மரக்கிளைகளை வெட்டி சருகுகளைப் பெருக்கி ஆலயத்தை காட்டுக்குள் இருந்து அகழ்ந்தெடுத்தார். அதன் சிறிய கருவறைக்குள் இடையளவு உயரமான பீடத்தில் சுதையால் செய்யப்பட்ட ஜடராதேவியின் சிலை அமர்ந்திருந்தது. நான்கு கைகளிலும் வாள், வில், சக்கரம், கோடரி என படைக்கலங்கள் ஏந்தி காலை மடித்து அமர்ந்திருந்தாள் அன்னை. ஓநாயின் நீள்முகத்தில் வாய் திறந்து சிவந்த நாக்கு தொங்கியது. வெண்ணிறக் கூழாங்கற்கள் பற்களாக அமைக்கப்பட்டிருந்தன. செந்நிறமான படிகக் கற்கள் விழிகளாக சுடர்விட்டன.

அந்நோக்கு மெல்ல ஒளிகொண்டு உயிர்கொண்டு சொல்கொண்டு வந்து நின்றது. சகுனி தன் முதுகெலும்பு வழியாக ஓடிய மெல்லிய குளிரை உணர்ந்தார். மங் மங் மங் என மெல்லிய ஒலி கேட்டது. குனிந்து நோக்கியபோது சிலைக்கு அப்பாலிருந்து சிறிய ஓநாய்க்குட்டி ஒன்று நான்கு கால்களையும் பரப்பி கூர்மூக்கை நீட்டியபடி தள்ளாடி வருவது தெரிந்தது. வயிறு தரையை தொட்டது. விழி திறந்திருக்கவில்லை. அவர் உடலின் மணத்தை மூக்கு நீட்டி பெற்று தலையைத் தூக்கி வெண்முள் பற்கள் தெரிய வாயைத் திறந்து மங் மங் மங் என்றது.

அதற்குப் பின்னால் இன்னொரு ஓநாய்க்குட்டி வந்து நின்றது. பிறிதொன்று அதன் இரு கால்களுக்கிடையே தலைவைத்து தவழ்ந்து வந்தது. அவர் முன்னோக்கிச் செல்லலாமா என்று எண்ணியபோது தனக்குப் பின்னால் நோக்குணர்வை அடைந்து திரும்பிப் பார்த்தார். அங்கே புதருக்குள் இரு செவிகள் புதர்ப்பூக்கள்போலத் தெரிந்தன. அவை மடிந்து திரும்பி மீண்டும் மடிந்தன. அவர் விழிகளை கண்டுவிட்டார். கூர்மூக்கின் கருமையையும். அன்னை ஓநாய் ர்ர்ர்ர் என முனகியது.

அவர் விலகி இலஞ்சி மரத்தின் அடியில் சென்று நின்றார் அன்னை பூக்குலை வாலை சிலிர்த்தபடி நின்று அவரை நோக்கியபின் ஓடி ஆலயத்திற்குள் நுழைந்தது. குட்டிகள் மங் மங் மங் என ஓசையிட்டன. அன்னை ஒருக்களித்துப் படுக்க அவை முட்டிமோதியபடி பால் குடித்தன. அன்னைமேல் ஏற முயன்று புரண்டு விழுந்து மீண்டும் எழுந்தன. அவர் நோக்கியபடி நின்றார்.

கண் விழித்தெழுந்தபோது அறைக்குள் இருந்து நிழல் ஒன்று விலகிச்செல்வதுபோல் தோன்றி மெய்ப்பு கொண்டார். கையூன்றி எழுந்தார். ஏவலனை அழைத்து குடிக்க நீர் கொண்டுவரச்சொல்ல எண்ணினார். ஆனால் சொற்களாக உள்ளத்தை மாற்றமுடியாதென்று தோன்றியது. மஞ்சத்தைப் பற்றிக்கொண்டு எழுந்து மெல்ல நடந்து சுவரைப்பற்றிக்கொண்டு நின்றபோது அவர் அந்த ஊளையை கேட்டார். செவிமயக்கா என எண்ணியபோது தெளிவாக அது ஒலித்தது.

மெல்ல நடந்து உப்பரிகைக்கு வந்து கீழே நோக்கினார். நகரம் துயிலில் மூழ்கியிருந்தது. அவரது இல்லத்தின் முற்றத்தில் காவலர்கள் பந்தஒளி மின்னும் வேல்களுடன் தோல்கவசங்களுடன் நின்றிருந்தனர். தொலைவில் சாலையில் கல்தூண்களில் எரிந்த மீன்நெய் விளக்குகளின் ஒளி பரவிய வட்டங்கள் தெரிந்தன. மீண்டும் அந்த ஊளை கேட்டது. அவர் சுற்றிலும் நோக்கி ஊன்றுகோலை கண்டார். அதை எடுத்துக்கொண்டு மெல்ல நடந்து படிகளை அடைந்தார். படிகளில் ஊன்றுகோல் எழுப்பிய ஓசையில் ஏவலன் பின்னால் வந்து நின்றான். அவர் அழைக்காததனால் அணுகவில்லை.

கீழே ஏவலர்கள் எழுந்து காத்து நின்றனர். விலகும்படி கைகாட்டிவிட்டு முற்றத்தை அடைந்தார். சூதன் தலைவணங்க புரவியை சுட்டிக்காட்டினார். அவன் புரவியை கொண்டுவந்து நிறுத்தியதும் அதில் ஏறிக்கொண்டு சவுக்கை வாங்கிக்கொண்டார். புரவி சாலையில் ஏறி விளக்கொளி வட்டங்களில் ஒளிர்ந்தும் அணைந்தும் சென்றது. அவருடைய நிழல் எழுந்து கட்டடங்களிலும் மரங்களிலும் ஆடிச்சரிந்தது.

மேற்குக்கோட்டை வாயிலை அடைந்தபோது ஓசை நின்றுவிட்டிருந்தது. இடப்பக்கம் ஏரி நீரலைகள் வானொளியில் நெளிவுமின்ன விரிந்து கிடந்தது. கோட்டைக் காவல்மாடத்தில் இருந்த காவலர் அவரை பார்த்துவிட்டிருந்தனர். திரும்புவதா என அவர் எண்ணியபோது மிக அருகே என மீண்டும் ஓநாயின் ஒலியை கேட்டார். கதவருகே சென்றதும் காவலன் திட்டிவாயிலைத் திறந்தான். குதிரை உடல்குறுக்கி அப்பால் செல்ல அதன் கழுத்தோடு ஒட்டி அமர்ந்திருந்தார்.

வெளியே சாலை சற்று எழுந்துசென்று காட்டுக்குள் மறைந்தது. காவலர் பின்னால் அவருடைய சொல்காத்து நிற்க தொடரவேண்டாம் என கைகாட்டிவிட்டு குதிரையை நடக்கவிட்டார். செவிகள் ஓநாயின் ஒலிக்காக கூர்ந்திருந்தன. கோட்டை பின்னால் மறைந்த பின்னரும் ஒலி கேட்கவில்லை. அவருடைய குதிரையின் குளம்படியோசை மட்டும் கேட்டுக்கொண்டிருந்தது. மேற்குக்காட்டுக்குள் பெரும்பாலும் எவரும் செல்வதில்லையாதலால் புதர்கள் செறிந்து பாதையில் கிளைநீட்டியிருந்தன. குதிரை தலையால் அவற்றைத் தள்ளியபடி முன்னால் சென்றது.

காட்டின் நடுவே நின்று செவிகூர்ந்தார். ஓசையின்மையாக உளமயக்கு காட்டிய பல்லாயிரம் கானோசைகள். திரும்பிவிடலாம் என்னும் எண்ணம் எழுந்தாலும் திரும்பப்போவதில்லை என்று தெரிந்திருந்தது. திரும்பிவிடுவேன் என எவரிடமோ சொல்வது அது. அவர் ஓநாயின் செவியடிப்பொலியை கேட்டார். திரும்பியதும் மிக அருகே அதை கண்டார். மெல்ல இறங்கி கடிவாளத்தை சேணத்திலேயே மாட்டி சவுக்கை அதில் பொருத்தினார். ஓநாய் அவரை நோக்கிக்கொண்டு அமர்ந்திருந்தது. அவர் அதை நோக்கி நடக்கக்கண்டு அதன் செவிகள் முன்கோட்டின.

அவர் அணுகியபோது அது எழ முயல்வதுபோல அசைவு காட்டியது. அதன் பின்னங்கால்கள் உருகி தரையுடன் ஒட்டி வழிந்தவைபோலிருந்தன. அழுகும் ஊனின் நாற்றம் எழுந்து வலுத்தது. அது இருமுறை எழ முயன்று விழுந்தது. அதன் பின்னங்காலை யானையோ காட்டெருமையோ மிதித்துச் சிதைத்திருக்கலாம். அல்லது புலியின் அறை விழுந்திருக்கலாம். புண் அழுகி கால்கள் முழுமையாக சிதைந்திருந்தன. திறந்த வாயிலிருந்து நாக்கு தொங்கியது.

மேலும் அணுகியபோது அவர் அதன் விழிகளை நன்றாகக் கண்டார். அவை இருளில் மணியொளி கொண்டிருந்தன. இன்னும் அணுகியபோது அவர் விழிகளை அவை சந்தித்தன. சகுனி அசைவற்று நின்றார். “நீயா?” என்றார். “ஆம், முற்பிறப்புகளிலொன்றில் என் பெயர் ஜரன்” என்றது ஓநாய். உன்னை நான் ஒரு பாலையில் சந்தித்தேன்.” சகுனி “உன் நஞ்சை என் உடலில் ஒவ்வொரு கணமும் சுமந்துகொண்டிருக்கிறேன்” என்றார். “நீ இளமையிலேயே எங்களுடன் உரையாடத் தொடங்கிவிட்டவன். உன்னுள் ஓடும் அத்தனைச் சொற்களும் பாலைவனங்களில் பசித்தலைந்து நாங்கள் கண்டடைந்து சேர்த்துக்கொண்டவை” என்றது ஓநாய்.

“என் பெயர் இப்போதும் ஜரன்தான். அது மாறுவதே இல்லை. பிறவிகளென அலையடிக்கிறோம்” என்றது ஜரன். “நான் இறந்துகொண்டிருக்கிறேன். என்னை புலி ஒன்று தாக்கியது.” சகுனி “ஆம், தெரிகிறது” என்றார். “நான் பசித்திருக்கிறேன். எங்கள் வயிறுகளுக்குள் வாழும் ஜடரை என்னும் அனலரசி இரக்கமற்றவள். ஆயிரம் சிவந்த நாக்குகளும் திசைமூடும் கருங்குழல் அலைகளும் கொண்டவள். அவளுக்கு நாங்கள் அவியிட்டபடியே இருக்கவேண்டும். ஊனும் குருதியுமாக நாளும் ஒழியாதது எங்கள் அனற்குழி.”

“அவி நிறையாவிட்டால் அவள் என்னை அவியாக்குவாள். என் உடலை அவள் உண்டுகொண்டிருக்கிறாள். நேற்று என் வாலை, அதற்கு முன் என் உடலில் எழுந்த குருதியையும் நிணத்தையும். இதோ எஞ்சும் சொற்களையும் உண்கிறாள்” என்றது. “சென்ற இரு நாட்களாக நான் உன் குரலை இரவில் கேட்டுக்கொண்டிருக்கிறேன். அது என் கனவில் காந்தாரத்தின் செம்புலத்தையும் எரிவெயிலையும் கொண்டுவந்து நிறைத்தது” என்று சகுனி சொன்னார். “முன்னரும் பலமுறை நான் உன் துயிலறைக்கு வெளியே வந்து நின்று குரலெழுப்பியதுண்டு… உன் கனவில்தான் அதை கேட்டிருப்பாய்.”

“ஆம்” என்றார் சகுனி. “அப்போதெல்லாம் என் கனவில் ஓநாய்முக அன்னை எழுந்தாள். நேற்றுமுன்நாள் காலையில் கிளம்பி காட்டுக்குள் எங்கோ இருக்கும் ஜடரை அன்னையின் ஆலயத்திற்குச் சென்றேன். காந்தார வீரர்களால் அமைக்கப்பட்ட ஆலயம் அது. ஆண்டுக்கொருமுறை அவர்கள் அங்கே குருதிபலி கொடுத்து வழிபடுகிறார்கள்.” ஜரன் “அங்கே அன்னையை பார்த்தாயா?” என்றது. “ஆம், குருளைகளுக்கு அமுதூட்டினாள்.” ஜரன் பல் தெரிய சீறியது. “அது அனல்… அவர்களுக்குள் என்றும் வாழ்வது.”

சகுனி அதன் விழிகளை நோக்கி நின்றார். அவை கனலொளி கொண்டன. “என் அன்னை என்னிடம் சொன்னாள், குட்டிஉயிர்களைக் கிழித்து உண்க, மைந்தா. அவற்றின் எஞ்சிய காலம் உன்னிடம் வரட்டும். இளையவற்றைத் துரத்தி உண்டு அவற்றின் ஆற்றலை அடைக. முதியவரை வீழ்த்தி உண்டு அவற்றின் மாளாப் பொறுமையை பெற்றுக்கொள்க. நீ உண்ணத்தகாதது என இங்கு ஏதுமில்லை. நீ இயற்றுவதனைத்தையும் என் முலைப்பால் இயல்பென்றாக்கும்…” அதன் விழிகள் பளிங்குருளைகள் என அசைவிழந்து நிலைகுத்தின.

“நான் செய்யவேண்டுவதென்ன?” என்றார். ஓநாய் மெல்ல முனகியது. “எங்கோ ஐயுறுகிறேனா? எள்ளளவேனும் கனிந்திருக்கிறேனா?” ஓநாய் மெல்ல பக்கவாட்டில் சரிந்து விழுந்தது. அதன் நாக்கு தழைந்தாடியது. தலை மண்ணில் பதிந்தபோது நாக்கு தரையை தொட்டது. “வெறுக்கப்படுவதை எண்ணி தயங்குகிறேனா?” அவர் குரலை அவரே கேட்டார். “சொல், தனிமையை அஞ்சுகிறேனா?” என்றார் சகுனி. ஓநாயின் ஒற்றை விழி நீர்மணி என ததும்பி நின்றது. “சொல், நான் ஒரு சொல்லையேனும் இழந்துவிட்டேனா?”

பெருமூச்சுடன் நோக்கி நின்றபின் தன் இடையிலிருந்து வாளை எடுத்து உள்ளங்கையை கிழித்தார். வழிந்த குருதியை ஓநாயின் நாவில் விட்டார். விழிகள் கல்லித்திருக்க நாவு மட்டும் நெளிந்துவந்து குருதியை நக்கியது. சுவையுடன் துழாவிக்கொண்டே இருந்தது. ஈரத்தழல் என நினைத்துக்கொண்டார். பின்பக்கம் குதிரை கனைத்தபோதுதான் தன்னுணர்வுகொண்டார். ஓநாய் இறந்திருந்தது. அதன் நீள்நாக்கு குருதியுடன் அசைவிழந்து தொங்கியது.

இடைக்கச்சையை எடுத்து கையைச் சுற்றிக்கட்டியபின் திரும்பியபோது புதருக்குள் மூச்சொலியை கேட்டார். விழிபழகிய இருளில் இரு ஓநாய்களின் விழிகள் தெரிந்தன.

முந்தைய கட்டுரைகேரளக் கம்யூனிசம், இடதுசாரி இலக்கியம், பினராய் விஜயன்
அடுத்த கட்டுரைஆலய அழிப்பு – கடிதங்கள்