கீழடி – நாம் பேசவேண்டியதும் பேசக்கூடாததும்

 

index

அன்புள்ள ஜெ

அரசியல் விவாதங்களில் ஈடுபடுவதில்லை என்ற உங்கள் எண்ணம் புரிகிறது. ஆனால் பண்பாட்டு விவாதமான கீழடி சர்ச்சைகளைப்பற்றிய உங்கள் கருத்தை எதிர்பார்த்தேன். அது இன்று முகநூலிலேயே பேசி முடிவெடுக்கவேண்டிய விஷயமாக ஆகிவிட்டது என்று தோன்றுகிறது.

ராஜன் சீனிவாசன்

kiiza

அன்புள்ள ராஜன்,

 நாம் நம் பண்பாட்டு அடையாளங்களைக்குறித்தும் தொல்லியல் தடங்களைப்பற்றியும் எந்த அக்கறையுமில்லாதவர்கள். நம் பெரும் சொத்து என்று சொல்லப்படத்க்க கலைச்சின்னங்களும் தொல்லியல் தடங்களும் கேட்பாரற்று அழியவிடப்பட்டிருக்கின்றன. மாபெரும் பண்பாட்டுக் கலைச்சின்னங்கள் புறக்கணிக்கப்பட்டும் திருப்பணி என்றபேரில் சீர்குலைக்கப்பட்டும் அழிந்துகொண்டிருக்கும் இந்தியா போன்று பிறிதொருநிலம் உலகளவிலேயே இருக்க வாய்ப்பு கிடையாது. இதைக்குறித்து எழுதும்போது வரும் எதிர்வினைகளும் மிகக் குறைவு. அவற்றில்கூட கணிசமானவர்கள் அவையெல்லாம் ‘பயன்படுத்தப்பட’வேண்டிய பொருட்கள் என்றே சொல்வார்கள்

 

இங்கு பொதுவெளியில் ஏதேனும் எழுதிக்கொண்டிருப்பவர்களில் அல்லது மேடையில் பேசுபவர்களில் எத்தனைபேருக்கு இதுவரையில் தமிழகத்தில் நிகழ்ந்த பண்பாட்டு ஆய்வுகளைக் குறித்தோ தொல்லியல் அகழ்வாய்வுகளைக் குறித்தோ அவை உருவாக்கிய விவாதங்களைக் குறித்தோ மேலோட்டமாகவேனும் சற்றுத் தெரியும்? இதற்குமுன் எத்தனைபேர் எதையேனும் எழுதியிருக்கிறார்கள்? எத்தனைபேர் அங்கெல்லாம் சென்று நோக்கியிருக்கிறார்கள்? தமிழின் தொல்லியல் ஆய்வாளர்கள், வரலாற்று ஆய்வாளர்கள் மிகப்பெரும்பாலானவர்கள் சூழலால் முற்றிலும் ஒதுக்கப்பட்டவர்கள்

 

இந்நிலையில் கீழடி மட்டும் ஏன் இவ்வளவு பெரிய விவாதத்தை உருவாக்குகிறது? மிக எளிது, இதில் ஒரு கற்பனை எதிரி இருக்கிறான். அவனை தங்கள் அரசியல்பூச்சாண்டிகளுக்குப் பயன்படுத்த முடியும். அரசியல்வாதிகளைப் பொறுத்தவரை ஒருபோதும் மக்களிடம் அவர்களின் குறைபாடுகளையும் பிழைகளையும் சுட்டிக்காட்டமாட்டார்கள். ‘நாம் நல்லவர்கள். நாம் மிகத் தொன்மையானவர்கள். மிகமிகச் சிறந்தவர்கள். இன்று வீழ்ந்துள்ளோம். அதற்குக் காரணம் இந்தந்த எதிரிகள்தான்’ இதுதான் சுருக்கமாக ஃபாஸிசத்தின் வரையறை. அரசியல்வாதிகள் எப்போதுமே இந்தப்பாதையில்தான் செல்வார்கள்

 

கீழடி முதற்கட்ட ஆய்வுக்குப்பின் தற்காலிகமாக மூடப்பட்டது. அங்கே பணியாற்றும் சிலர் அங்குள்ள உள்ளரசியலால் அது நிரந்தரமாக மூடப்படுகிறது என்ற செய்தியைக் கசியவிட்டனர். உலகில் இன்றுநிகழும் அகழ்வாய்வுகள் எவையும் அந்தந்த நாடுகளின் அரசுகளால் முழுக்கக் கட்டுப்படுத்தப்படுவன அல்ல. ஆய்வு என்பது இன்று உலகளாவியது. ஆய்வாளர்கள் உலகெங்குமிருந்தும் வருபவர்கள். ஆய்வுகளின் நிதிகூட பெரும்பாலும் உலகப்பொதுநிதியிலிருந்து வருகிறது. உண்மையிலேயே எவரேனும் விரும்பினால்கூட எந்த அகழ்வுத்தலத்தையும் நிரந்தரமாக மூடிவிட முடியாது. எந்த ஆய்வுத்தகவலையும் மறைத்துவிடவும் முடியாது. இந்த எளியசெய்தியைக்கூடத் தெரிந்துகொள்ளாமல் உள்ளூரில் பேசத்தொடங்கிவிட்டனர்.

 

பண்பாட்டு விவாதம் என்பதை ஒருவகை தெருச்சண்டை என்று மட்டுமே புரிந்துகொண்டிருக்கும் ஒரு பெரும் கும்பலுக்கு இன்று கீழடி ஒரு வாய்ப்பாக அமைந்தது. பண்பாட்டைக்காப்பது பண்பாட்டு எதிரிகளுடன் போராடுவது என்று இரண்டு கோஷங்களும் பாசிசத்தின் அடிப்படை அது இந்து ஃபாசிசமோ தமிழ் ஃபாசிடமோ எதுவாக இருந்தாலும். தமிழ் பாசிஸ்டுகள் உடனடியாக கீழடியைக் கையிலெடுத்துக்கொண்டார்கள். வழக்கமான தங்கள் கோஷங்களை அதில் இணைத்துக்கொண்டார்கள்.

 

உலகத்தின் முதல்மொழி தமிழ், உலகப்பண்பாட்டில் தொன்மையானது தமிழ்ப்பண்பாடு, அதற்கான சான்றுகள் கீழடியில் புதைந்துள்ளன,கீழடி ஆய்வுகள் வெளிவந்தால் உலக வரலாற்றையே மாற்றி எழுதவேண்டியிருக்கும், இந்திய பாடபுத்தகங்களை திருத்தி எழுத வேண்டியிருக்கும், ஆகவே கீழடியை எதிரிகள் அழிக்கிறார்கள். உடனே கீழடியைக்காக்க வேண்டும் — என்றெல்லாம் கொப்பளிக்க ஆரம்பித்தனர். அசட்டுத்தனமாக கீழடியில் மண்ணெடுத்து பதியம் போடுவது, மண்ணை எடுத்து நெற்றியில் விபூதியாகத் தரித்துக்கொள்வது என்று பலவகையான அரசியல் நாடகங்கள் இங்கு அரங்கேறின.

 

உண்மையில் கீழடியில் என்ன நிகழ்கிறது? கீழடியைப்புரிந்துகொள்வது எப்படி? கீழடியைப் பற்றி இன்று பெரிய அளவிலான விவாதம் ஏதும் நிகழ்த்தமுடியாது. ஏனென்றால் அந்த ஆய்வு துறைசார் அறிஞர்களைக் கடந்து பொதுவான பண்பாட்டுத்தளத்திற்கு வருவதற்குரிய காலம் ஆகவில்லை. நான் எந்த தொல்லியல் ஆய்வையும் பொதுவான அறிவுத்தளத்தில் செயல்படுபவர்கள் எப்படிப்பார்க்கவேண்டும் என்று மட்டும் சொல்ல விரும்புகிறேன்

 

தொல்லியல் சான்றுகளை விவாதிப்பதற்கு அதற்கான முறைமை ஒன்று உண்டு. முதலில் தொல்லியல் சான்றுகள் அதற்குரிய தனி அறிவுத்துறைகளுக்குள்தான் செல்கின்றன. வேதியல் போன்ற துறைகளின் உதவியோடு அவற்றின் காலமும் பல்வேறு இயல்புகளும் கணிக்கப்படுகின்றன. முழுக்க முழுக்க அறிவியலாளர்களின் துறை அது. இன்றைய சூழலில் பெரும்பாலும் அது சர்வதேச அளவிலான நிறுவனங்களால் செய்யப்படுவது. சர்வதேச அறிஞர்கள் ஈடுபடுவது. முழுக்கமுழுக்க புறவயமான தரவுகளின் அடிப்படையில் செய்யப்படுவது. அங்கு பொதுஅறிவுஜீவிகளுக்கு எந்த இடமும் இல்லை.

 

தொல்லியல் சான்றுகள் தோண்டி எடுக்கப்பட்டு அவற்றின் காலமும் இயல்புகளும் அறிவியல்ரீதியாக வரையறை செய்யப்பட்டு வெளிவருவதற்கு ஒரு குறிப்பிட்ட காலஅவகாசம் தேவை. அதன்பின்னர்தான் அது வரலாற்றாய்வாளர்களின் விவாதத்திற்கே வருகிறது. அப்போதும் அது பொது அறிவுத்தளத்தில் பேசுபவர்களின் இடம் அல்ல.

 

வரலாற்றாய்வாளர்கள் பொதுவாக ஒன்றுக்கு மேற்பட்ட கோணங்கள் கொண்டவர்கள். தங்களுக்குரிய கோட்பாடுகள், வரலாற்று முன்வரைவுகளின் அடிப்படையில் வரலாற்றைப் பார்ப்பவர்கள். அவர்கள் தங்கள் வரலாற்று முன்வரைவுகளுக்கேற்ப இந்த தடயங்களை எடுத்துக்கொண்டு விவாதிக்கிறார்கள். அவ்விவாதத்தின் விளைவாக ஏறத்தாழ ஒருசில பொதுக்கருத்துக்கள் எட்டப்படுகின்றன. அதன் பிறகுதான் அதைப் பொது வாசகன் சென்று சேரமுடியும். அதற்கு முன்னரே சென்று உட்கார்ந்து அவர்களை வழிநடத்தவும் வசைபாடவும் ஆரம்பிப்பது மடமை

 

வரலாற்று ஆய்வில் உண்மையையோ பொய்யையோ வகுத்துச் சொல்லுமிடத்தில் பொது வாசகன் இல்லை. நீங்களோ நானோ. அதை எவ்வகையிலும் வழிநடத்தவோ கண்டிக்கவோ உரிமை கொண்டவர்கள் அல்ல. நாம் மேற்கோள் காட்டி மட்டுமே பேசவேண்டியவர்கள். அதில் என்னென்ன தரப்புகள் பேசப்பட்டிருக்கின்றன என்று பார்ப்பது, எது ஒப்பு நோக்க தெளிவாகவும் அழுத்தமாகவும் உள்ளது என்பதைக்கவனிப்பது, நம்முடைய வரலாற்றுப்பார்வைக்கேற்ப அதை ஏற்றுக்கொள்வது மட்டுமே நாம் செய்யக்கூடியது.

 

கீழடியைக் குறித்தவரை இவ்விவாதம் உருவாவதற்கு இன்னும் நெடுங்காலம் ஆகும். அங்கு இன்னும் ஆய்வே முறையாகத் தொடங்கப்படவில்லை. கிடைக்கும் பொருட்களைக் கொண்டு ஆய்வாளர்கள் ஒருவிவாதத்தை தங்களுக்குள் இப்போதுதான் தொடங்கியிருக்கிறார்கள். அதற்குள்ளாகவே இங்கே மேடைப்பேச்சாளர்களும் சினிமாக்காரர்களும் அரசியல்வாதிகளும் – அதாவது தொல்லியலாளர்கள் வரலாற்றாய்வாளர்கள் தவிர்த்த அத்தனைபேரும் – எப்படி ஆய்வு செய்ய வேண்டும் என்னென்ன முடிவுகளுக்கு வரவேண்டும் என்று சொல்ல ஆரம்பித்திருக்கிறார்கள்.

 

ஓரளவுக்கு வரலாற்றிலும் தொல்லியலிலும் ஆர்வமும் அறிவியல் சார்ந்த நம்பிக்கைகளும் கொண்ட பொதுவாசகருக்காக ஒரு பின்னணிச் சித்தரிப்பை அளிக்க விரும்புகிறேன் பண்பாட்டு ஆய்வை அன்றாட அரசியலின் ஒரு பகுதியாக எண்ணாதவர்களுக்கு மட்டுமே இது எவ்வகையிலேனும் பயன்படும். கீழடி விவாதத்தை மட்டுமல்ல பொதுவாக தொல்லியல் சான்றுகளை எந்த பகைப்புலத்தில் பொருத்தி அறியவேண்டும் என்று மட்டும் சொல்லவிரும்புகிறேன். வரலாற்றாய்வாளனாக அல்ல, முப்பதாண்டுக்காலம் வரலாற்றாய்வை கவனிக்கும் பொதுவாசகனாக, எழுத்தாளனாக.

 

இந்தியப் பெருநிலத்தில் கிடைக்கும் தொல்லியல் சான்றுகளை பொதுவாக ஐந்து காலகட்டங்களைச் சேர்ந்தவையாகப் பிரிக்கலாம். முதற்காலகட்டம். கற்காலத் தொல்லியல் சான்றுகள் கொண்டது. முதல்கற்காலக் கற்கருவிகள் இரண்டாம் கற்காலக் கற்கருவிகள் பெருங்கற்கால கற்கருவிகள் என மூன்று வகையான காலகட்டங்கள் அதற்குள் உள்ளன. தமிழகத்தில் ராபர்ட் ஃப்ரூஸ் ஃப்ரூட் அவர்கள் 1863-ல் செங்கல்பட்டு கொத்தாளத்தாறு கரையில் முதற்கற்காலக் கற்கருவிகளை கண்டுபிடித்தார்.இவை சென்னை அருங்காட்சியகத்தில் இன்று காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் கற்கால மனிதர்கள் வாழ்ந்ததற்கான முதல் சான்றுகளாக அவை கருதப்படுகின்றன. பிற்காலக் கற்கருவிகள் புதுக்கோட்டை திருநெல்வேலி போன்ற பல பகுதிகளில் கண்டடையப்பட்டுள்ளன.  தோராயமாக பத்தாயிரம் ஆண்டு தொன்மை கொண்டவை இவை.

 

தமிழகத்தில் பெருங்கற்கால நாகரிகம் மிகப்பரந்த அளவில் இருந்ததற்கான சான்றுகள் ஏராளமாக உள்ளன. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கல்வளையங்கள் ,கோவை கொடுமணல் பகுதிகளில் உள்ள நிலைக்கற்கள், குருவாயூர்பகுதிகளிலும் முதுமலை பகுதிகளிலும் உள்ள குடைக்கற்கள், கொல்லிமலையிலும் கோத்தகிரியிலும் உள்ள கல்அறைகள் போன்றவை பெருங்கற்காலத்தைச் சேர்ந்தவை. இந்தியா முழுக்க அனேகமாக அனைத்து பகுதிகளிலும் பெருங்கற்காலத் தொல்சான்றுகள் கிடைக்கின்றன. இவை தோராயமாக ஏழாயிரம் ஆண்டு தொன்மை கொண்டவையாக இருக்கலாம்.

 

நாகர்கோவில் அருகே குமாரகோயில் சாலையில் எனது குலதெய்வ ஆலயத்தில் மூன்று பெருங்கற்கால நிலைக்கற்கள் உள்ளன. அங்கிருந்து தொடங்கி காஷ்மீர் வரை பெருங்கற்கால சின்னங்கள் இல்லாத இடமே அனேகமாக இந்தியாவில் இல்லை. இவை அனைத்திற்கும் இருக்கும் பொதுத்தன்மையும் ஆச்சரியத்திற்குரியது. வடகிடக்கே பெருங்கற்கால நிலைக்கற்கள் பெருமளவில் உள்ளன

 

பெருங்கற்காலத்தையும் அதற்கு பிறகு வந்த வெண்கலக் காலத்தையும் சேர்ந்த ஏராளமான குகைஓவியங்கள் இந்தியா முழுக்க உள்ளன. தமிழகத்தில் கீழ்வாலை ,கருக்கியூர் போன்ற இடங்களில் உள்ள குகை ஓவியங்கள் மிக முக்கியமான தொல்லியல் சான்றுகள். தமிழனின் பெருமை மிகுந்த சின்னமான கருக்கியூர் குகை ஓவியம் சமீபத்தில் அங்கு சென்ற எவராலோ புகை போட்டு அழிக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் எவ்வகையிலும் இது உணர்வு அலைகளை எழுப்பவில்லை.

 

இரண்டாவது தொல்லியல் காலகட்டம் என வெண்கல யுகத்தை சொல்லலாம். வெண்கலம் பயன்பாட்டுக்கு வந்துவிட்ட காலகட்டத்தை சேர்ந்தவை மொகஞ்சதாரோ ஹரப்பா புதைநகரங்கள். இன்று இவற்றின் காலகட்டத்தையும், இவற்றுக்கு முந்தைய காலகட்டத்தையும் சேர்ந்த ஏறத்தாழ ஆயிரம் புதைநகரங்கள் அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன. இன்றைக்கு தோராயமாக நான்காயிரம் வருடங்களுக்கு முந்தையவை இவை.  பெரும்பாலும் இந்தியாவில் ராஜஸ்தான், குஜராத்தின் கட்ச் பகுதி போன்ற அரைப்பாலை நிலங்களிலேயே காணக்கிடைக்கின்றன.  லோத்தல், காலிபங்கன் முதலிய நகரங்களின் அகழ்வுமையங்கள் முக்கியமானவை

 

இந்த நகரங்கள் அனைத்தும் இன்று அரைப்பாலை நிலங்களாக இருக்கும் இடத்தில் ஏன் உருவாகின என்பதற்கான காரணங்கள் பல. ஆய்வாளர்கள் சொல்லும் முதன்மையான் காரணம் அன்று இரும்பு இல்லை என்பதனால் அடர்காடுகளை அழிப்பது மிகக்கடினம். ஆகவே மிகக்குறைவாக மழைபெய்யும் பகுதிகளிலேயே நகரங்களும் குடியிருப்புகளும் உருவாகமுடியும் , ஏனென்றால் அங்கே அடர்காடுகளை அழிக்க வேண்டியதில்லை. அவை புல்வெளிகளாக இருந்தன. குறைவான மழையுள்ள ஆனால் நதி வழியாக நீர் கிடைக்கும் பகுதிகளிலேயே வெண்கலக்கால நாகரிகம் உருவாகிவந்தது.

 

மூன்றாவது காலகட்டம் இரும்பு யுகத்தை சார்ந்தது. தோராயமாக மூவாயிரம் ஆண்டுகள் தொன்மையானது. காடுகளை அழிக்கும் ஆற்றலை அளித்தது இரும்புதான் அதன் பின்னரே அடர்காடுகளுக்குள் மனிதன் குடியேறவும் குடியிருப்புகளை உருவாக்கவும் தொடங்கினான். தமிழகத்தில் ஆதிச்சநல்லூர் ,கொடுமணல் முதலிய பகுதிகளில் இரும்புக் காலகட்டத்தை சார்ந்த தொல்லியல் சான்றுகள் கிடைத்துள்ளன இவை பெரும்பாலும் முதுமக்கள் தாழிகளாக உள்ளன. அத்தாழிகளில் உள்ள எழுத்துருக்கள் அதன் உள் புதைக்கப்பட்டிருந்த எலும்புகளுடன் புதைக்கப்பட்டிருந்த பொருட்கள் ஆகியவற்றைக்கொண்டு இந்த பண்பாடுகளைப்பற்றிய ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகின்றன.

 

இவற்றில் இரும்பு பயன்படுத்தப்பட்டுள்ளது என்பதே இக்காலகட்டத்தை வகுப்பதற்கான முக்கியமான அடையாளமாக உள்ளது. தமிழகத்தில் வெண்கலக் காலகட்டத்தை சார்ந்த தொல்லியல் சான்றுகள் எவையும் இதுவரை கண்டெடுக்கப்படவில்லை. விரிவான ஆய்வுகள் நிகழுமென்றால் ஒருவேளை செங்கல்பட்டு போன்ற வரண்டநிலங்களில் அவ்வாறு வெண்கலக்கால தடையங்களை இனிமேல் கண்டெடுக்கவும்கூடும்

 

தமிழகத்தின் இரும்புக் காலகட்டத்தை சேர்ந்த் தொல்லியல் பொருட்களுக்கும் எழுத்து வடிவில் நமக்குக்கிடைக்கும் சங்ககாலப் பண்பாட்டுக்கும் இடையே நேரடி தொடர்பென ஏதும் இல்லை. இந்த விடுபடலைக்குறித்து ஆய்வாளர்கள் இன்று பலகோணங்களில் பேசிக்கொண்டிருக்கிறார்கள்.

 

நான்காவது காலகட்டத்தில்  எழுத்து வடிவப் பதிவுகளும் கூடவே தொல்பொருட்களும் கிடைக்கின்றன. இவற்றையே வரலாற்றுக் காலகட்டம் என்கிறார்கள். கிபி 1500 முதல் கிமு 500 வரையிலானது இக்காலகட்டம். தமிழகத்தில் சங்ககாலத்தைப்பற்றிய ஒரு சித்திரத்தை அக்கால இலக்கியங்கள் அளிக்கின்றன. அக்காலகட்டத்தைச் சேர்ந்தவை என்று பல் கல்வெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. புகளூர் கல்வெட்டு போன்றவை உதாரணங்கள்   .

 

இக்காலகட்டத்தைச் சேர்ந்த வெவ்வேறு தொல்லியல் தடயங்கள் இந்தியா முழுக்க கிடைக்கின்றன. மௌரியப்பேரரசின் தொல்நகரங்களின் இடிபாடுகள், அகழ்வுச்சான்றுகள் இவற்றில் முக்கியமானவை. இந்தியாவைப் பொறுத்தவரை அசோகரின் தர்மத்தூண்களில் எழுதப்பட்டிருந்த பிராமி மொழி அறிவிக்கைகள் வாசிக்கப்பட்டது ஒரு பெரிய திருப்புமுனை. அந்த எழுத்துக்களைக்கொண்டு ஓரளவு தெளிவாகவே அசோகரின் காலகட்டம் வரையறைசெய்யப்படுகிறது. அதிலிருந்து முன்னும்பின்னும் சென்று இந்தியவரலாறு கணிக்கப்படுகிறது அசோகரின் ஆட்சி காஞ்சிபுரம் வரைக்கும் இருந்ததற்கான தடயங்கள் உள்ளன.

 

ஐந்தாவது காலகட்டம் என்பது ஓரளவுக்கு தெளிவாகவே காலவரையறை செய்யப்பட்டுவிட்ட புதுவரலாற்றுக்காலகட்டம். அரசர்களின் செய்திகள் நேரடியாக பொறிக்கப்பட்ட கல்வெட்டுகள், தொல்சான்றுகள், கூடவே தெளிவான வரலாற்று மொழிப்பதிவுகள் ஆகியவை கிடைக்கும் காலம். இந்தியவரலாற்றில் இது கிபி ஐந்தாம் நூற்றாண்டில் குப்தர் ஆட்சிக்காலம் முதல் தொடங்குகிறது.

 

தமிழக வரலாற்றில் கிபி 7-ம் நூற்றாண்டில் மகேந்திரவர்மன் காலகட்டத்திலிருந்துதான் மறுக்க முடியாத கல்வெட்டுச் சான்றுகள் நமக்குக்கிடைக்கின்றன.  பல்லவ மன்னன் சிம்மவிஷ்ணுவின் சிலை நமக்குக்கிடைக்கும் தமிழ் மன்னனின் முதல் தோற்றம் என்று சொல்லலாம் அதன் பிறகு பிற்காலச்சோழர்கள், பிற்காலப் பாண்டியர்களின் ஏராளமான கல்வெட்டுகள் நமக்கு கிடைத்துள்ளன

 

இவ்வைந்து காலகட்டங்கள் இந்தியா முழுக்க ஏறத்தாழ சமானமாகவே இருந்துள்ளன. இதில் கீழடி எங்கு வருகிறது ?  ஆதிச்சநல்லூருக்கும் கொடுமணலுக்கும் பிறகு , சங்ககாலம் தொடங்கியபோது, அதாவது நான்காவது காலகட்டத்தில் இருந்த ஒரு நகரம் அது என்று இன்று கிடைக்கும் தகவல்கள் சொல்கின்றன. இரண்டாயிரம் முதல் இரண்டாயிரத்து ஐநூறு ஆண்டுகள் தொன்மையான ஒரு சிறியநகர் அது எனப்படுகிறது.

 

அதன் முக்கியத்துவம் என்ன? சமீபகாலம் வரைக்கும் சங்ககாலத்தைச் சார்ந்த உதிரியான சில கல்வெட்டுகள் அன்றி பெரிய தொல்சான்றுகள் எதுவும் நமக்குக் கிடைக்கவில்லை. ஆதிச்சநல்லூரோ கொடுமணலோ சங்ககாலத்திற்கும் முந்தைய இடுகாடுகள். அங்கிருக்கும் பண்பாடுகள் சங்ககாலத்தில் தொடர்கின்றனவே ஒழிய சங்ககாலம் காட்டும் ஒரு நகர்ப்பண்பாட்டின் தடயங்கள் எதுவும் அங்கில்லை.

 

சங்ககாலம் காட்டும் நகர்ப்பண்பாட்டுக்கு ஆதாரமாகக் கிடைத்துள்ள முதல் தொல்சான்று கீழடி. அது சங்ககாலத்தில் இருந்த ஒரு சிறிய நகரத்தின் மாதிரியை நமக்கு அளித்திருக்கிறது. இன்னமும் இது போல பல சிறிய நகரங்கள் தமிழகத்தில் இருக்கக்கூடும். இது ஏற்கனவே எழுத்து வடிவில் நாம் கொண்டுள்ள சங்ககாலம் குறித்த சித்திரத்தை தொல்லியல் ரீதியாக உறுதிப்படுத்துகிறது. சங்ககாலம் என்பது சிறிய நகரங்களின் பண்பாடு என்பது ஏற்கனவே இலக்கிய ரீதியாக உறுதிப்படுத்தப்பட்ட ஒன்று. கீழடி அதற்கொரு தெளிவான ஆதாரத்தை சேர்க்கிறது. அந்த வகையில் அது மிக முக்கியமானது.

 

ஆய்வாளர்கள் கூறுவதை வைத்து நோக்கினால் கீழடி சங்ககாலம் என்பது வளர்ந்த நகரப்பண்பாடு இருந்தமைக்கான சான்று. சாதவாகன பேரரசுடன் அந்நகரத்திற்கு வணிகத் தொடர்பு இருந்துள்ளது. அது ஒரு வணிகமையமாகத் திகழ்ந்துள்ளது. அங்கே பயன்படுத்தப்பட்ட எழுத்துரு என்பது இந்தியா முழுக்க பயன்பாட்டில் இருந்த பிராமி. அதில் தமிழை எழுதியிருக்கிறார்கள். அதாவது ஏற்கனவே ஊகங்களாகச் சொல்லப்பட்ட செய்திகளை தொல்லியல்ரீதியாக உறுதிப்படுத்துகிறது கீழடி. இன்றைய வரலாற்றாய்வில் அனைத்துமே சர்வதேச விவாதக்களத்திற்குச் சென்றாகவேண்டும். அங்கே எந்த ஊகங்களும் தொல்லியல்ரீதியாக நிறுவப்பட்டாகவேண்டும். கீழடி அதற்கு உதவியானது.

 

இதற்குமேல் கீழடியில் உள்ள பொருட்களைக்கொண்டு சங்ககாலத்தைப்பற்றி மேலும் எவ்வகையில் தெளிவுகளை அடையமுடியும் என்பதை தொல்லியலாளர்களும் வரலாற்றாய்வாளர்களும் விரிவான ஆய்வுக்கட்டுரைகள் வழியாக விவாதித்தபின்னர்தான் நாம் முடிவுக்கு வரமுடியும்.

*

 

இதில் ஒரே ஒரு விஷயம் அரசியலுடன் தொடர்புடையது. அந்த எல்லைக்குள் நின்று அதைப்பேசுவது உகந்தது.

 

இத்தகைய தொல்லியல் ஆய்வுகள் சென்ற கால்நூற்றாண்டாக இந்திய அரசால் புறக்கணிக்கப்பட்டு வருகின்றன. பொதுவாகவே இத்துறைக்கான நிதி ஒதுக்கீடு குறைந்து கொண்டே வருகிறது. இது ‘பயனற்ற’ ஒரு துறை என்ற எண்ணம் கொள்கை வகுப்பாளர்களிடையே உள்ளது. தமிழகத்தில் மட்டுமல்ல ராஜஸ்தான் குஜராத்தில்கூட பெரும்பாலான தொல்லியல் அகழ்வுகள் நிதியின்மையால் ஆங்காங்கே நிறுத்திவைக்கப்பட்டுள்ளன. இன்றைய அரசின் மனநிலையே முழுக்கமுழுக்க வணிகம் சார்ந்ததாக உள்ளது.  இது எதிர்க்கப்பட்டாகவேண்டும்

 

தொல்லியல்துறைக்குள்ளேயே வட இந்தியாவின் மீது அக்கறையும் தென்னகம் மீது அலட்சியமும் உடையவர்கள் இருக்கிறார்கள். அரசியல் சார்ந்து பொறுப்பில் வருபவர்களுக்கும் இந்த முன்முடிவுகள் இருக்கலாம். இந்த மனநிலை எதிர்க்கப்பட்டு தோற்கடிக்கப்படவேண்டும் சில ஆண்டுகளுக்கு முன் கொடுங்கல்லூரில் அகழ்வாய்வுகள் இவ்வாறு தாமதப்படுத்தப்பட்டபோது கேரளத்தில் எழுந்த எதிர்ப்பை நினைவுகூர்கிறேன்

 

இந்த அளவில் கீழடி ஆய்வுகள் தொடர்ந்து நிகழவும் போதிய நிதி ஒதுக்கீடு செய்யப்படவும் தமிழகத்திலிருந்து அரசியல் அழுத்தம் அளிக்கப்படவேண்டும்.

 

ஆய்வுமுடிவுகளை அரைவேக்காட்டு அரசியல்வாதிகள் மேடைகளில் முடிவெடுப்பதும் அரசியல் உணர்ச்சிக்கொந்தளிப்புகளாக இதை ஆக்குவதும்  நம்மை மூடர்களாகவே காட்டும்.

 

ஜெ

கருக்கியூர் முதல் தெங்குமராட்டா வரை – 1

கீழ்வாலை, பள்ளூர், சத்தியமங்கலம்

பாறை ஓவியங்களுக்காக…

வலசைப்பறவை 7: இரு அகழிகள்

ஆழத்தின் முகங்கள்

அருகர்களின் பாதை 26 – பிக்கானீர்

கொடுமணல் அகழாய்வு

சூரியதிசைப் பயணம் – 15

 

முந்தைய கட்டுரைவங்கடை கடிதங்கள்
அடுத்த கட்டுரைம்ம்ம்பி!!