வங்கடை

vangkadai

வங்கிக்குப் போய் திரும்பி வரும் வழியில் மீன் வாங்கினேன். இங்கெல்லாம் மீன்வாங்குவதற்கு வாழும்கலைப் பயிற்சி தேவை. “வா வா வா துள்ளுத மீனு, துடிக்குத மீனு… தெறிக்க விடலாமா?” என ஆவேசக்கூச்சல். “லே கண்ணாடி அங்க எங்கியாம் போயி விளாதே… வா இங்கே… வா ராசா வா… கபாலிடா !நெருப்புடா ! நெருங்குடா பாப்பம்”

நான் ஈனஸ்வரத்தில் “இது என்ன மீனு?” என்று கேட்பதற்குள் “ஆ, கண்ணாடி சாரு வாங்குதாரு… துள்ளுத மீனு துடிக்குத மீனு…வங்கட வங்கட வங்கட தின்னா சங்கடம் தீரும்…வா வா வா” நான் “இல்ல நான் வெலதான் கேட்டேன்…” என்பதற்குள் என் பையை வாங்கி படபடவென மீனை அடுக்கி கையில் தந்து “இந்தா எடு நூறு… நூறுரூபா எடு… இனாம் !இலவசம்! கொண்டுபோ… அம்மா மிக்ஸி, அம்மா டிவி, அம்மா மீனு… கொண்டுபோ தின்னு தின்னு…வெல கெடயாது. வெறும் நூறுரூபா…போனாவராது..”

நம்மூரில் கல்யாணங்கள் முடிவாவதுபோல எல்லாம் எல்லாவற்றையும் மீறி ஊழென நடந்தேறிவிட்டது. என் கையில் நூறுரூபாய்க்கு வங்கடை மீன். நன்றாக இருக்குமா? செதிலை விலக்கிப் பார்த்தாலென்ன? ஆனால் வாங்கியாகிவிட்டது. திரும்பக்கொடுக்க முடியாது. கல்யாணமேதான், இனி ஒன்றும் செய்யமுடியாதென்ற நிலையில் இதை விரும்பவேண்டியதுதான்

ஒரு பாதுகாப்புக்காக ஐம்பதுரூபாய்க்குச் சூரைமீன் துண்டும் வாங்கிக்கொண்டேன். வீட்டிற்குக் கொண்டுவந்து குளிப்பாட்டி குளிர்ப்பெட்டிக்குள் வைத்துக்கொண்டிருந்தேன். செல்பேசியில் மேலிட அழைப்பு “மீன் வாங்கியாச்சா?” நான் ஈனஸ்வரத்தில் “ஆமா” என்றேன். “என்ன மீனு?” இன்னும் தாழ்ந்து “சூரை” என்றேன். “அதுமட்டுமா?” நான் துணிவு திரட்டி “இன்னொரு மீனும் வாங்கினேன்”

ஆழ்ந்த அமைதி. பின் “என்ன மீன்?” நான் “கபாலி, இல்ல நெருப்பு” என்றபின் நிதானமாகி “வங்கடை” என்றேன். “அய்யே வங்கடையா? வாயில வைக்கமுடியுமா? குட்டிவங்கடையா இருக்கும். மளுமளுன்னு …எவ்ளவு வெலை?” உண்மையைச் சொன்னேன். “பத்துமீன் நூறுரூபா”.

“நூறுரூபாய்க்கு பத்து குடுத்திருக்கான்னாலே தெரிஞ்சுக்கிடவேண்டாம்? நூறுரூபா வேஸ்ட்…” நான் பெருமூச்சுவிட்டேன். “கன்யாகுமரி ஜில்லாலே பிறந்திருக்கேன்னுதான் பேரு .மீனு வாங்கத்தெரியாது. அஜி போனா எப்டி மணிமணியா வாங்கிட்டுவருவான் தெரியுமா?” அனேகமாக மீன் வாங்கத்தெரியாத ஒரே நாயராக நானே இருப்பேன் என தோன்றியது. எம்.டி.வாசுதேவன்நாயர்கூட சிறப்பாக மீன் வாங்கிவருவார் என்று வாசித்திருக்கிறேன். “சரியான கஞ்சிவெள்ளம்” என்று சொல்லி ஃபோன் வைக்கப்பட்டது

மாலையில் குளிர்ப்பெட்டியைத் திறக்கும்போதே “வங்கடையை நினைச்சாலே கடுப்பா இருக்கு. வாயில வைக்கமுடியாது. ஒருமாதிரி சப்புன்னு இருக்கும். வங்கடைன்னா கொஞ்சம் வளரணும் தெரிஞ்சுக்கோ… இதப்பாரு அயிலை சைசிலே இருக்கு” கழுவும்போது அதற்கும் வசை “… வந்து வலையில மாட்டு…அறிவிருந்தாத்தானே?”

ஆனால் மீன்கறி சுவையாக இருந்தது. இல்லை மனப்பிராந்தியா? “கொஞ்சம் ஒருமாதிரி சுமாரா இருக்கும்போல இருக்கே?” என்றேன். அணிசேர்க்கலாம் என்றால் வீட்டில் நாங்கள் இருவர்தான். டோரா எப்போதும் அருண்மொழியின் தரப்பு.“நல்லாத்தான் இருக்கு. ஏன்னு சொல்லு” நான் மையமாக “சொல்லு” என்றேன்

“சாந்தி சொன்னா மீன் ருசியா இல்லேன்னா குழம்பிலே முருங்கைக்காய் போட்டாப்போரும், ருசியா ஆயிடும்னு. அதான் போட்டேன்” நான் “ஓ” என்றேன். “இல்லேன்னா வாயில வைக்க முடியாது. தண்டம்” கடைசிச்சொல் என்னையா வங்கடையையா குறிக்கிறது என்னும் ஐயத்தால் அதற்கும் “ஓ” என்றேன். “பொரிச்சா பாரு சுத்தமா நல்லாவே இருக்காது”

ஆனால் மாலையில் பொரித்தபோதும் நன்றாகத்தான் இருந்தது. வங்கடைகள் மனம்திருந்தியிருக்கலாம். அல்லது வங்கடைகளுக்கும் நெய்மீன் போன்ற உயர்தர மீன்களுக்கும் ஏதாவது கலப்பு ஆகிவிட்டதா? இதுவும் ருசியாகத்தானே இருக்கிறது என்று சொல்லலாமா? யோசித்தபின் நமக்கெதற்கு என்று தவிர்த்தேன்

“இயற்கை அங்காடியிலே வாங்கின தேங்காயெண்ணை… மரச்செக்கிலே ஆட்டினது…. மீன்பொரிச்சா சூப்பரா இருக்குல்ல?” நான் “ஆமாம்” என்றேன். “நல்ல மீனா இருந்தா ரொம்ப நல்லா இருந்திருக்கும். இது இன்னும் கொஞ்சம் வளந்திருக்கணும்” . முட்டாள் வங்கடைகள், இப்படி வளர்வதற்கு முன்னரே மாட்டி பேச்சுகேட்கவேண்டியிருக்கிறது.

முந்தைய கட்டுரைசின்ன அண்ணாமலை ‘சொன்னால்நம்பமாட்டீர்கள்’
அடுத்த கட்டுரைவெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 96