வெ.அலெக்ஸ்

IMG_2288

இன்று நண்பர் வெ.அலெக்ஸை பார்க்க மதுரை சென்றுவந்தேன். அலெக்ஸ் கடந்த ஓராண்டாகவே சிறுநீரகப் பிரச்சினையால் அவதிப்பட்டுவருகிறார். கடுமையான பொருட்செலவில் தொடர் சிகிழ்ச்சையில் இருந்து வருகிறார்.சென்ற சிலமாதங்களாக மோசமாக நோயுற்று இப்போது சற்று அபாயகரமான நிலையில் இருக்கிறார்

அலெக்ஸ் தன் எழுத்து பிரசுரம் வழியாக வெள்ளையானை நாவலை வெளியிட்டவர். அதற்குமுன்பு  தலித் ஆய்வுநூல்வரிசையை வெளியிட்டநாள் முதல் எனக்கு நெருக்கமானார். அன்றுமுதல் மிக அணுக்கமான நண்பர்களில் ஒருவர். அவருடைய இயல்பு எனக்கு அவரை மேலும் மேலும் அருகே கொண்டுவந்தபடியே இருந்தது. கறாராக எக்கருத்தையும் சொல்பவர். அதேசமயம் நெஞ்சின் அனைத்து வாசல்களையும் திறந்திட்டு மனிதர்களை அணுகுபவர். சமீபகாலத்தில் அவருக்கு நானும் அவ்வகையில் முதன்மையான நண்பராக இருந்தேன்

அலெக்ஸுக்கு முன்னரே சிலசிறுநீரகப்பிரச்சினைகள் இருந்தன. கடுமையான சர்க்கரை நோயும் இருந்தது. ஆனால் உடலைப்பேணிக்கொள்பவர் அல்ல. எப்போதும் ஏதேனும் தீவிரச் செயல் விசையுடன் இயங்கிக்கொண்டிருப்பவர். சிலநாட்களுக்கு முன் சற்று நினைவுமீண்டு என்னிடம் பேசும்போது ”எழுத்துக்கு ஒரு ஆபீஸ் திறக்கணும் ஜெ” என்றுதான் சொன்னார். “எம்.சி.ராஜாவோட எல்லா அசெம்ப்ளி உரைகளையும் சேத்து பிரசுரிக்கணும், அய்யன்காளி புத்தகம் புரூஃப் பாத்தாச்சு உடனே கொண்டுவரணும்”

நீண்டதூரம் அமர்ந்து பயணம்செய்யமுடியாதபடி முதுகுவலி. ஆகவே காலையில் குருவாயூர் எக்ஸ்பிரஸில் கிளம்பி 11 மணிக்கு மதுரை சென்றேன். நண்பர் அ.முத்துக்கிருஷ்ணன் ரயில்நிலையம் வந்தார். இருவருமாகச் சென்று அலெக்ஸைப் பார்த்தோம். தீவிரக் கண்காணிப்பு பகுதியில் தன்னினைவில்லாது படுத்திருக்கிறார். மூக்குவழியாக உணவு. செயற்கைமூச்சு. என்னைப்பார்த்ததும் சற்று நிலையழிந்தார். ஏதோ கருவி முனகியது. என்னை விலகிப்போகச்சொன்னார் தாதி

திரும்பி வீட்டுக்குவந்து சேரும்வரை ரயிலில் தூங்கினேன். தூக்கத்தில் அலெக்ஸ் எந்தப்பிரச்சினையும் இல்லாமல் அவர் சமாளிக்கவேண்டிய சமூகச்சவால்களைப்பற்றி ,,தலித்தியக்கம் பற்றிப் பேசிக்கொண்டிருந்தார்

முந்தைய கட்டுரைசொல்லி முடியாதவை
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 95