அன்புள்ள ஜெயமோகன்,
உங்கள் தீவிரமான அனுபவக்கட்டுரைகளை ஒவ்வொருநாளும் படித்து வருகிறேன். உறவுகளை நீங்கள் சரியாக எடுத்துக் கொள்கிறீர்களா அல்லது அவை உங்களுக்கு மட்டும் சரியாக அமைகிரதா என்று தெரியவில்லை. என் மனமார்ந்த வாழ்த்துக்கள்
செல்வம்
அன்புள்ள செல்வம், புன்னகையுடன் க்டந்து வர முடியுமென்றால் எல்லா உறவுகளும் நல்ல உறவுகளே
ஜெ
****
அன்புள்ள ஜெயமோகன்,
தங்கள் எழுத்துக்களை மிகவும் ரசித்து படிக்கும் அன்பன் என என்னை உவப்புடன் அறிமுகம் செய்து கொள்கிறேன்.
சிறிது காலத்திற்கு முன்பு தொடர்ச்சியாக ஓய்வு கிடைத்தபோது, உயிர்மை பதிப்பகம் வெளியிட்டுள்ள தங்களின் சிறுகதை தொகுப்பை படிக்க ஆரம்பித்தேன். கிடைத்த அவகாசத்தில் ஓரே மூச்சில் படித்துவிட வேண்டுமென்ற ஆவலில் இருந்த எனக்கு ஒரு சிறுகதையை முடித்த பின்னர் தொடர்ச்சியாக அடுத்த கதையை ஒருபோதும் படித்திட இயலவில்லை.
ஓரு சிறுகதையை படித்த பின்னர் அதன் தாக்கத்திலிருந்து விடுபட்டு அடுத்த கதைக்குள் நுழைய எனக்கு அதிக கால அவகாசம் தேவைப்பட்டது. மேலும் தனக்கு மிக அரிதிலும் அரிதாக கிடைத்த திண்பண்டம் ஒன்றை நகக்கண் அளவுள்ளதாக பிட்டு தீர்ந்து விடுமோ என்று கவலையுடன்
சுவைக்கும் சிறுகுழந்தைகள் போன்ற மனநிலையிலும் பலநாட்களுக்கு வைத்துப் படித்துள்ளேன்.
அது எப்படி தங்களுக்கு மட்டும் வாழ்க்கையில் ஏற்பட்ட அனுபவங்களை இந்த அளவுக்கு இவ்வளவு சுவையாக எழுத முடிகின்றதோ அறிகிலேன். ஒரு மனிதருக்கு இவ்வளவு அனுபவங்களா?
ஆண்டவன் தங்களுக்கு நீண்ண்ண்ட ஆயளையும் மிக அதிகமாகவும் ஆழமாகவும் தொடர்ந்து எழுதுவதற்கான ஊக்கத்தையும் சூழ்நிலையையும் உடல் நலத்தையும் வழங்கட்டும். வணக்கம்.–
sivakumar subramanian
அன்புள்ள சிவகுமர் சுப்ரமனியம்
தகள் கடிதத்துக்கு நன்றி. ஏன்னுடைய பல அனுபவங்களைப் பார்த்தால் அனுபவமாக அவை சாதாரணமானவையே. அவற்றை ஒட்டி எழும் எண்ணங்கள், பிற அனுபவங்களுடன் அவற்றை நான் இணைக்கும் விதம் மற்றும் கொடுக்கும் விளக்கம் மூலமே அவை பெரிதாகின்றன. ஆனல் என் வாழ்க்கையில் கசப்புகள் நிறைந்த ஒரு காலகட்டம் இருந்தது என்பது உண்மைதான். ஆதுவே என் அடித்தளம் என இப்போது படுகிரது
ஜெ