இவர்கள் இருந்தார்கள் -கடிதங்கள்

 

ivarkal-iruntharkal-99913

அன்புள்ள ஆசிரியருக்கு,

 

தங்களின் “இவர்கள் இருந்தார்கள்” வாசித்தேன். மிக அருமையான பதிவுகள். இவற்றில் சிலவற்றை  உங்களின் தளத்தில் வாசித்துள்ளேன். ஒவ்வொரு பதிவும் ஒரு சிறுகதை போல இருந்தது. அதுவும் கடைசியாக தங்களின் இரண்டு மூன்று வரிகளின் அந்த மனிதர்களின் மொத்த பிம்பத்தையும் அளிப்பதாய் இருந்ததது. குறிப்பாக இந்த புத்தகம் தங்களின் புறப்பாடு, அறம் சிறுகதை தொகுப்பு, சுரா  நினைவின் நதியில், லோகி போன்ற புத்தகத்தின் தொடர்ச்சி போலவே அமைந்தது. யாரேனும் தங்களை பற்றி புரிந்து கொள்ள விரும்பினால் இந்த புத்தக தொகுப்பே போறும் என்பேன்.

 

எவ்வளவு தொடர்ச்சியான பயணங்கள், எத்தனை சந்திப்புகள், எத்தனை அவதானிப்புகள். சற்றே பிரமிப்பாக உள்ளது. அதுவும் தங்களின் தேடலில் பேதமே இல்லை. சோதிப்பிரகாசமும் வருகிறார் கா.நா.சு வும் வருகிறார். நாங்கள் கேள்வியே படாத மற்றும் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கியமான ஆளுமைகள். முக்கியமாக ஜெகன்னாத ராஜா அவர்களை பற்றி கூறியே ஆகவேண்டும். நீங்கள் இப்படி குறிப்பிட்டு இருந்தீர்கள் “உண்மையில் அவர் மறைவுடன் பாலியும், பிரகிருதமும் தெரிந்த கடைசித் தமிழரும் இல்லாமலாகிவிட்டார்”. உண்மையில் வியப்பாக உள்ளது அவருடைய பணியை கொஞ்சம் கூட நாம் பயன்படுத்த வில்லையே என்று. இதற்கும் தங்களின் பதில் “அஞ்ஞானத்தை மதில்கட்டி தேக்கி அதில் நம் குழந்தைகளை நீச்சல்கற்க விடுகிறோம். ஞானம் கையில் தோல்பையுடன் தெருவில் அமைதியாக நடந்து செல்கிறது.” மிகவும் நிதர்சனமான வார்த்தைகள்.

 

– திருமலை

 

 

ஜெமோ

 

உங்கள் கட்டுரைகளின் சிறப்பு என்பது அவை நல்ல சிறுகதைக்கான வாய்ப்பை கொண்டிருப்பவை என்பதுதான். மறைந்த ஆளுமைகளைப்பற்றிய குறிப்புகளான இவர்கள் இருந்தார்களை வாசித்தேன். பெரும்பாலான கட்டுரைகள் அற்புதமான சிறுகதைகளை வாசித்த அனுபவத்தை அளித்தன. ஆனால் என்ன நடந்தது என்று பார்த்தால் ஒன்றும் இல்லை. நீங்கள் ஒரு முக்கியமான ஆளுமையைச் சென்று பார்க்கிறீர்கள். ஓரிரு வார்த்தைகள் பொதுவாகப் பேசுகிறீர்கள். வந்துவிடுகிறீர்கள். அந்தக்காட்சியை நுட்பமாக வர்ணித்து அவரை கண்முன் நிறுத்துகிறீர்கள். அதன்வழியாக அவரை நாம் அருகே பார்க்கமுடிகிறது. அந்த அனுபவம்தான் கதையாக ஆகிறது. தமிழில் எழுதப்பட்ட மிகச்சிறந்த நினைவுக்குறிப்புகளில் ஒன்று என்று இவர்கள் இருந்தார்களைச் சொல்லலாம் என நினைக்கிறேன். மிகவிரும்பி வாசித்தேன்

 

ஆர். ராமச்சந்திரன்

முந்தைய கட்டுரைஈர்ப்பதும் நிலைப்பதும்
அடுத்த கட்டுரைவங்கடை கடிதங்கள்