வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 96

95. நிலவொளிர்காடு

flowerசுதீரனின் தோள்பற்றி புஷ்கரன் ஆலயமுகப்புக்கு வந்தபோது காரகன் நின்றிருந்த மேடையை தூக்கிவந்து போட்டு அதில் மரவுரி விரித்து நாற்களப் பலகையை விரித்திருந்தனர். அதனருகே காவலர் வேல்களுடன் நின்றனர். சிற்றமைச்சர்கள் நாற்களக் காய்களை பரப்பினர். கலியின் ஆலயச் சுவர்களின் மேலும் மரங்களின் கிளைகளிலும் எல்லாம் மக்கள் செறிந்திருந்தனர். அந்த மேடையைச் சுற்றி திரளுடல் கோட்டையென்றாகியிருந்தது.

அப்பால் நளன் கைகட்டி நின்றிருக்க அவனைச் சூழ்ந்து முதுபெண்கள் நின்று மூச்சிளைக்க கைகளை வீசி தலையை ஆட்டி அழுதும் கூச்சலிட்டும் பேசிக்கொண்டிருந்தனர். சிலர் நெஞ்சிலும் வயிற்றிலும் ஓங்கி அறைந்தபடி அலறி அழுதனர். சிலர் கால்தளர்ந்து நிலத்தில் அமர்ந்து தலையில் கைவைத்து கதறினர். சிலர் மண்ணில் முகம்புதைத்து ஓய்ந்து விழுந்து கிடந்தனர்.

புஷ்கரன் வருவதைக் கண்டதும் ஒரு முதுமகள் கைநீட்டி “பழிகாரா! இழிமகனே! கீழ்பிறப்பே!” என்று கூவினாள். அத்தனை பெண்களும் அவனை நோக்கி கைநீட்டி கூச்சலிட்டனர். காறித் துப்பினர். மண்ணை அள்ளி வீசினர். அவர்களை நோக்கியபடி தானறியாத ஏதோ என புஷ்கரன் நின்றான். நளன் அவர்களை கைநீட்டி தடுத்தான். அவன் வீரர்கள் அவர்களை வேலால் தடுத்து பின்னால் தள்ளினர்.

கலியின் ஆலயப்பூசகர் மூவர் வந்து நாற்கள மேடை அருகே நின்று கைதூக்கி “அமைக… ஒலியமைக!” என்று கூவினர். முரசுகள் முழங்கி ஓய கூட்டம் அமைதியடைந்தது. முதன்மைப் பூசகர் கைகளைத் தூக்கி “ஆன்றோர் மூத்தோர் அறிக! விண்ணுறை நீத்தோரும் தெய்வங்களும் அறிக!” என்று உரத்த குரலில் கூவினார். “இங்கே நிஷதகுடியின் மூத்த இளவரசர் நளனுக்கும் அவர் இளவலும் அரசருமாகிய புஷ்கரனுக்கும் நாற்களமாடல் நிகழவிருக்கிறது. இது களமுற்றாடல் முறை. இதன் நெறிகள் தொன்றுதொட்டு வருபவை.”

“முதன்மையானவை இவை. ஆட்டம் இடைநிற்கலாகாது. நோயாலோ இறப்பாலோ வேறெந்த ஏதுவாலோ ஆட்டம் நின்றால் நிறுத்தியவரே தோற்றவர் எனக் கருதப்படுவார். நோயுற்றால் ஆடுபவர் தன்பொருட்டு ஆட்டத்துணைவரை அமர்த்தலாம். அவர் எவரென முன்னரே அறிவிக்கவேண்டும். பிறிதெவர் சொல்லும் கையும் ஆட்டத்தில் நுழைவது மீறல்பிழையென்றே கருதப்படும். ஆட்டத்தில் எந்த நெறிப்பிழை நிகழுமென்றாலும் அவர் தோற்றவர் எனக் கருதப்படுவார். வென்றவருக்கே ஆட்டத்தை முடிக்கும் உரிமை உண்டு. இவற்றை ஒப்புக்கொண்டால் இருவரும் தங்கள் படைக்கலம் மீது கைவைத்து கலியின்மேல் ஆணையிடுக!” முதலில் புஷ்கரன்தான் கைதூக்கி “ஆணை! ஆணை! ஆணை!” என்றான்.

புஷ்கரனின் பதற்றமில்லாமை சூழ்ந்திருந்த மக்களை திகைக்கச் செய்தது. மெல்லிய முணுமுணுப்புகள் பரவி முழக்கமாயின. ஒரு முதுமகள் “இந்த இழிந்தோன் மாயத்தெய்வங்களை துணைக்கொண்டு வென்றான். இம்முறையும் அத்தெய்வங்கள் இங்கே அவனுக்கு துணைநிற்கக்கூடும். கலிதெய்வத்தின் குருதியமுது கொண்டுவரப்பட்டு அதன்மேல் கைவைத்து இருவரும் ஆணையிடவேண்டும், எந்த இருட்தேவும் விழிமாயமும் இங்கு இல்லை என்று” என்றாள். “ஆம், ஆணையிடவேண்டும்… ஆணையிட்டே தீரவேண்டும்” என்று கூச்சல்கள் எழுந்தன.

பூசகர் “ஆம், அவைவிழைவு அதுவென்றால் அவ்வாறே” என்றார். கலியின் குருதிக்குழம்பு ஒரு மரச்சிமிழில் கொண்டுவரப்பட்டது. முதலில் அதன்மேல் கைவைத்து “ஆணை! ஆணை! ஆணை!” என்று புஷ்கரன் சொன்னான். கூட்டம் ஏமாற்றத்துடன் கலைவோசை எழுப்பியது. பின்னர் அதன் நிறைவின்மை முழக்கமாகச் சூழ்ந்தது. சிறிய குச்சியை நட்டு நிழல்நோக்கி பொழுது கணித்த கணியர் “நற்பொழுது” என்றார். பூசகர் “தொடங்கலாம்” என ஆணையிட்டார். புஷ்கரன் சுதீரனை சுட்டிக்காட்டி “இவர் என் ஆட்டத்துணைவர்” என்றான். நளன் தன்னருகே நின்றிருந்த பீமபாகுவை சுட்டிக்காட்டி “இவர் என் துணைவர்” என்றான்.

இருவரும் எதிரெதிரே அமர்ந்துகொண்டார்கள். துணைவர் இடக்கைப்பக்கம் அமர்ந்தனர். அவர்களுக்கு கலியின் காகச்சிறகுகள் அளிக்கப்பட அவற்றை தலையில் சூடிக்கொண்டனர். புஷ்கரனின் கைகள் நடுங்கிக்கொண்டிருந்தன. அவன் வலது விழிக்கீழ் தசைகள் திரைச்சீலை சுருக்கங்கள்போல மூன்று அலைவளையங்களாக இறங்கி கன்னத்தசை ஆழ்ந்த மடிப்புடன் மிகக் கீழிறங்கி முகம் அனல்வெம்மையால் உருகிவழியும் மெழுகுப்பாவைபோலத் தோன்றியது. அவனருகே அமர்ந்திருக்கையில் காற்றினூடாகவே அந்த நடுக்கத்தை சுதீரனால் உணரமுடிந்தது.

பூசகர் நளனிடம் “அரசே, அறைகூவியவர் நீங்கள். முதல் நகர்வு உங்களுக்கு” என்றார். நளனின் படைவீரன் கொடியுடன் முதல் நகர்வை நிகழ்த்தினான். சுதீரன் பெருமூச்சுடன் உடலை எளிதாக்கிக்கொண்டான். என்ன நிகழுமென்று தெளிவாகிவிட்டது. புஷ்கரன் அதை உணர்ந்ததுபோல திரும்பி அரைக்கணம் சுதீரனை பார்த்தான். ஒன்றையொன்று நோக்கி நின்ற படையும் தலைமைகளும் சுதீரனுக்கு அச்சமூட்டின. நாற்களச் சூழ்கையை நோக்குவது ஊழை விழிமுன் பெறுவதுபோல என எங்கோ படித்ததை நினைவுகொண்டான்.

ஆட்டம் தொடங்கிய கணம் முதலே நளனின் நகர்வுகள் முன்பு ஆடி வென்ற ஆட்டமொன்றின் மறுநிகழ்வுபோல கூர்மையும் முழுமுடிவும் கொண்டிருந்தன. புஷ்கரன் ஒவ்வொன்றாக இழந்துகொண்டிருந்தான். முதலில் புஷ்கரன் ஏதோ செய்யப்போகிறான் என்று திரள் எண்ணியது. அவன் தோற்று பின்னகர்ந்தபடியே இருக்கையிலும்கூட அவர்கள் அவன் கண்களையும் கைகளையும் ஐயத்துடனும் அச்சத்துடனும் நோக்கிக்கொண்டிருந்தார்கள். பின்னர் மெல்ல எளிதானார்கள். சிரிப்பொலிகளும் கேலிச்சொற்களும் எழத்தொடங்கின.

புஷ்கரனின் கைகள் காய்களை நகர்த்தமுடியாதபடி நடுங்கின. அவன் கை களம் மீது காயுடன் அலைபாய்ந்தது. ஆகவே அவன் என்ன செய்யப்போகிறான் என்பது பதற்றத்தை உருவாக்கியது. பின் ஒவ்வொருமுறையும் அவன் தோற்கடிக்கப்பட்டபோது அதுவே ஏளனத்திற்குரியதாகியது. அவன் காயை எடுத்ததுமே “அதோ அதோ… பருந்து சுற்றிப்பறக்கிறது… அதோ நிலம்பாய்கிறது” என்று கூச்சல்கள் எழுந்தன.

இறுதியாக அரசன் எஞ்ச நளனின் படை வலையென விரிந்து சூழ்ந்தது. அரசனை மேலும் பின்னகர்த்திய புஷ்கரன் மீண்டும் நகர்த்த கையெழாமல் தவித்தான். தேர் கடந்த நாகம் மரமேறத் தவிப்பதுபோல அவன் கை புளைந்தது. சுதீரன் “துணைவனாக நான் ஆடுகிறேன், அரசே” என்றான். “இன்னும் ஒரே நகர்வுதான் எஞ்சியிருக்கிறது” என்றார் பூசகர். “ஆம்” என்றான் சுதீரன். “ஆடுக!” என்று நளன் கைகாட்டினான்.

அரசன் மேல் கைவைத்த சுதீரன் நளன் விழிகளை நோக்கி “அரசே, நான் அந்தணன். சூதுக்காயை தொடுவதே குல இழுக்கு. ஆயினும் களவும் கற்றுமறந்தவன். இக்கணத்தில் தொடங்கி என்னால் உங்களை வெல்லக்கூடும் என்கிறேன். அதை மறுக்கிறீரா?” என்றான். அவன் விழிகளை நோக்கிய நளன் “இல்லை. நீர் நானறியா ஏதோ காய்சூழ்கையை எண்ணியிருக்கிறீர்” என்றான். “ஆம்” என்றான் சுதீரன். “அதை ஆடினால் எனக்கு பிறிதொரு எரிநரகம் ஒருங்கும்” என்றபின் “நான் அதை ஆடாதொழிவேன், நீங்கள் மூன்று சொல்லுறுதிகளை அளித்தால்” என்றான்.

அவன் என்ன பேசுகிறான் என்று அறியாமல் மக்கள்பெருக்கு கொந்தளித்தது. முரசு முழங்கி அமைதி அமைதி என ஆணையிட்டது. நளன் இருவரையும் மாறிமாறி நோக்கியபின் “அளிக்கிறேன்” என்றான். “என் அரசனின் உயிர் அளிக்கப்படவேண்டும். முதற்சொல் இது” என்றான் சுதீரன். நளன் பெருமூச்சுடன் “ஆம், அளித்தேன்” என்றான். “அவர் உங்கள் குடியென காக்கப்படவேண்டும். உங்கள் நகரில் அவர் நுழையமாட்டார். கானிலிருப்பார். அங்கு உங்கள் கோல் அவருக்கு துணைநிற்கவேண்டும்.” நளன் “ஆம், அது என் கடமை” என்றான். சுதீரன் “உங்கள் நெஞ்சிலும் உங்கள் மைந்தர் நெஞ்சிலும் துளியேனும் வஞ்சமோ விலக்கோ இருக்குமென்றால் அவை இக்கணமே முற்றாக களையப்படவேண்டும். உங்களுக்குள் முன்பிருந்த இளையோன் என அவர் ஆகவேண்டும். அவர் மனைவியரும் மைந்தரும் அவ்வண்ணமே இங்கு திகழவேண்டும்” என்றான்.

நளன் உதடுகளை அழுத்தி தொண்டை ஏறியிறங்க சில கணங்கள் அமர்ந்திருந்தான். பின்னர் “மூன்றாவது சொல் அவனுக்கானது அல்ல அந்தணரே, என் மீட்புக்கானது” என்றான். “அளித்தேன்…” என்று கைகூப்பினான். சுதீரன் அரசனிலிருந்து கையை எடுக்காமல் “என் விழிகளை நோக்குக… அவை தொட்டுச்செல்லும் காய்களை எண்ணுக! நான் கருதிய சூழ்கை எதுவெனப் புரியும். அரசன் அதை அறிந்திருக்கவேண்டும். அவன் முன் எந்தப் படைக்கலமும் கரந்துறையலாகாது” என்றான். நளன் அவன் விழிகளையே நோக்கினான். பின்னர் “ஆம்” என்றான். பெருமூச்சுடன் கைகளை களத்திலிருந்து விலக்கிக்கொண்டான்.

கைகூப்பி வணங்கிய சுதீரன் புஷ்கரனிடம் “மூத்தவரை வணங்கி நற்சொல் பெறுக, அரசே” என்றான். அதற்குள் அச்செய்தி பரவ கூட்டம் கொந்தளிக்கத் தொடங்கியது. “கொல்லவேண்டும் அந்தக் கீழ்மகனை… அவன் குருதி வீழவேண்டும்” என ஒரு முதியவர் கூவினார். “கொல்க… கொல்க!” என கூட்டம் கூச்சலிட்டது. நளன் எழுந்து சினந்த விழிகளுடன் “மறுசொல் எடுப்போர் எவராயினும் அரசாணையை மீறுகிறார்கள்” என்றான். அச்சொல்லை முரசு தாளம்பெருக உரைத்ததும் கூட்டம் அமைதிகொண்டது. அதன் முனகல்களும் ஓய்ந்தன.

புஷ்கரன் சுதீரனின் தோள்களை பற்றிக்கொண்டு எழுந்தான். அவன் கை துள்ளிக்கொண்டிருக்க வலக்கால் மரக்கட்டைபோல நீண்டு விரைத்திருந்தது. அதை இழுத்தபடி சென்று குனிந்து நளனின் கால்களைத் தொட்டான். நளன் அவனை தோள்சுற்றி இழுத்து நெஞ்சோடு அணைத்துக்கொண்டான். “இளையோனே, என்றும் நீ என் நெஞ்சின் மைந்தனே… என்னுடன் இரு. நீ விழைந்த நிலத்தை எடுத்துக்கொள்…” என்றான். புஷ்கரனின் கண்களில் எந்த உணர்வும் இருக்கவில்லை. “என்னுடன் இரு, இளையோனே” என்று நளன் உடைந்த குரலில் சொன்னான். “அவர் துறந்துவிட்டார், அரசே” என்றான் சுதீரன்.

புஷ்கரன் சுதீரனை நோக்க “ஆடை களைக… அணிகளும் மிதியடியும் எதுவும் எஞ்சலாகாது…” என்ற சுதீரன் புஷ்கரனின் கையிலிருந்த கங்கணங்களையும் அணிவளைகளையும் உருவினான். அருகே நின்றிருந்த வீரனிடம் புஷ்கரனின் கால்களில் இருந்து கழல்களை கழற்ற ஆணையிட்டான். காதுகளில் இருந்து குண்டலங்களையும் கழற்றி மேடையிலிருந்த நாற்களம் மீது வைத்தான். அவன் இறுதிச் சிற்றாடையுடன் நிற்க சுதீரன் பின்னர் திரும்பி அப்பால் நின்றிருந்த ஒரு முதியவரிடம் “மூத்தவரே, அந்த மரவுரியை இந்த இரவலனுக்கு அளியுங்கள்” என்றான். மரவுரியை தோளிலிட்டிருந்த அவர் “நானா?” என்றார். அவர் கைகால்கள் நடுங்கத் தொடங்கின. “ஆம், அந்த மரவுரி… முதல் நோக்கில் அதுவே விழியில் பட்டது. இல்லத்திலிருந்து கிளம்பி அது இதன்பொருட்டே இங்கு வந்துள்ளது” என்றான் சுதீரன்.

அவர் அளித்த மரவுரியை இடைசுற்றி நின்ற புஷ்கரனை நோக்கி “உங்கள் குடியை இறுதியாக வணங்கி விடைகொள்க, அரசே… இனி இவர் எவருமல்ல உங்களுக்கு” என்றான். அவன் மரவுரி அணியக் கண்டதும் சூழ்ந்திருந்த நிஷாதர்கள் முற்றமைதிகொண்டிருந்தனர். நளன் கண்களில் நீர்வழிய கைகூப்பி நின்றான். புஷ்கரன் தடுமாறும் கால்களுடன் மூன்றடி எடுத்து வைத்து கைகூப்பியபோது முன்னால் நின்றவர்களின் கண்களிலிருந்து நீர்வழியத் தொடங்கியது. சுதீரன் “மண்டியிட்டு சென்னி நிலம்தொட மும்முறை” என்றான்.

புஷ்கரன் இடக்கையை ஊன்றி இடக்காலை மடித்து மண்ணில் மண்டியிட்டான். அவன் வலக்கால் நீட்டி நின்று அதிர்ந்தது. மும்முறை அவன் நெற்றி நிலம்தொட வணங்கினான். நிஷாதர்களிலிருந்து விசும்பல்களும் விம்மல்களும் ஒலித்தன. சுதீரன் அவன் கையைப்பற்றி தூக்கினான். அவன் சுதீரன் தோளைப்பற்றியபடி நின்றான். பார்வையற்றவன் போலிருந்தன அவன் விழிகள். கூட்டத்திலிருந்து எவரோ “இளவரசே, செல்லவேண்டாம்” என்று கூவினர். காத்திருந்ததுபோல கூட்டம் “இளவரசே, வேண்டாம் இளவரசே” என்று கூச்சலிட்டது. அவ்வொலி திரண்டு முழக்கமெனச் சூழ்ந்தது.

சுதீரன் தன் தலைப்பாகையையும் குண்டலங்களையும் கச்சையையும் மேலாடையையும் கழற்றி மேடைமேல் வைத்தான். கணையாழிகளைக் கழற்றி வைத்துவிட்டு நிமிர்ந்து நளனிடம் புன்னகையுடன் “விடை கொடுங்கள், அரசே” என்றான். “நீங்கள்?” என்றான் நளன். “அவருடன் இறுதிவரை இருப்பேன் என்பது என் சொல்” என்றான் சுதீரன். “அந்தணரே, கைவிடப்பட்டோரிடம் காட்டும் கருணையின் வழியாகவே தெய்வம் தன் இருப்பை அறிவிக்கிறது” என்றான் நளன். சொல்திணற தயங்கி பின் “நன்று, முற்றிழந்து கைவிரிப்பவனே அக்கொடையை பெறமுடியும் போலும்” என்றான்.

சுதீரன் புன்னகையுடன் மும்முறை வணங்கி “அரசே, என் தந்தையர் சொல்லால் வாழ்த்துகிறேன். உங்கள் கோல் சிறக்கட்டும். குடி பெருகட்டும். நாடு செழிக்கட்டும். ஆம், அவ்வாறே ஆகுக!” என்றபின் “வருக, துறந்தோரே” என புஷ்கரனின் தோளைப் பற்றினான். அவர்கள் நடக்க நீர்ப்பரப்பு கிழிபடுவதுபோல கூட்டம் பிளந்து வழிவிட்டது. அவர்கள் மெல்ல நடந்து குன்றிறங்க சூழ்ந்திருந்தோர் கைகூப்பி விழிநீருடன் நின்றனர். பின்னர் எங்கிருந்தோ “நிஷதகுலத்தரசர் புஷ்கரர் வாழ்க! தவத்தோர் வாழ்க!” என்னும் வாழ்த்தொலி எழுந்தது. பல்லாயிரம் முரசுகள் என அப்பெருந்திரள் அதை ஏற்று முழங்கியது.

flowerஅவர்கள் கலிதேவனின் ஆலயத்திலிருந்து நடந்தபோது வானில் ஓர் ஊளையோசை கேட்டது. மரக்கிளைகளில் இருந்து அத்தனை காகங்களும் கலைந்து பறந்தெழுந்து வானில் சுழன்றன. காட்டின் விளிம்பை அவர்கள் அடைந்தபோது எதிரே காட்டுக்குள் இருந்து கரிய காளை ஒன்று தோன்றியது. புஷ்கரன் அதைக் கண்டு கைகூப்பியபடி நின்றார். அது உறுமியபடி அருகணைந்தது. அதன் எடைமிக்க உடல் நடையில் ததும்ப புள்ளிருக்கை அதிர்ந்தது. வளைந்த கொம்புகளைத் தாழ்த்தி மதத்தில் புதைந்த விழிகளால் அவர்களை நோக்கி சுரைமாந்தி நின்றது.

சுதீரர் “புஷ்கரரே, இதை நீர் முன்னரே அறிவீரா?” என்றார். “ஆம், என்னை ஆளும் தெய்வம் இது” என்றார் புஷ்கரர். “அடிபணியுங்கள். அது கோருவது எதையோ அதை கொடுங்கள்” என்றார் சுதீரர். புஷ்கரர் தலையை மண்ணில் சாய்த்து உடல் படிந்துவிழுந்தார். அவர் அருகே வந்து உறுமியபடி நின்றது எருது. அதன் மீசைமுட்கள் சிலிர்த்தன. பிடரியும் புட்டமும் விதிர்த்தன. பின்னர் அது பின்னடி வைத்து காட்டுக்குள் மறைந்தது.

புஷ்கரர் எழுந்து பெருமூச்சுவிட்டு “செல்வோம்” என்றார். அவர்கள் காட்டுக்குள் சென்றதும் “புஷ்கரரே, அது உரையாடியது என்ன?” என்று சுதீரர் கேட்டார். புஷ்கரர் “உனக்கு என்ன கொடை வேண்டும் என்றது. நான் எதையும் விழையவில்லை என்றேன். நீ இழந்த அனைத்தையும் மீட்டளிக்கிறேன், இது என் ஆணை என்றது. மீள்வதற்கேதும் இல்லை எனக்கு என்றேன். உன் உளம்நோக்கி மீண்டும் ஒருமுறை சொல், நீ விழைவதற்கு ஏதேனும் எஞ்சியிருக்கிறதா? இவ்வாய்ப்பு பிறிதொருமுறை அமையாது என்றது. நான் என் உள்ளத்தைத் துழாவி இல்லை தேவே, ஏதுமில்லேன் என்றேன்” என்றார்.

சுதீரர் புன்னகைத்தார். புஷ்கரர் தொடர்ந்தார் “நீ இனிமேல் விழைவது எது? ஓர் அழகிய குடில்? அருகே ஒரு ஆறு? நீ விழைந்தால் உன்னை தவத்தோன் என ஆக்குகிறேன். உன் குலமும் குடியும் குருதிவழியினரும் வந்து உன் அடிபணிவர். அவர்களின் ஆலயங்களில் நீ தெய்வமென அமர்ந்திருப்பாய் என்றது. மெய்யாகவே அப்படி எவ்விழைவும் என்னில் இல்லை என்றேன். உன்னுள் எழும் வினாக்களுக்கு விடை சொல்கிறேன். இவையெல்லாம் ஏன் என்று விளக்குகிறேன் என்றது. நீ தேடும் மெய்மையை நான் அளிக்கிறேன் என்று கூறியது. தேவே, என்னுள் எவ்வினாவும் இல்லை. நான் எதையும் தேடவில்லை. இக்கணத்திலிருந்து முன்னும்பின்னும் நான் செல்ல ஓர் அடியும் இல்லை என்றேன்.”

“பிறகு ஏன் இங்கே செல்கிறாய் என்று கேட்டது. வெறுமனே இருப்பதற்கு மட்டுமே என்றேன். விழியும் குரலும் கனிந்து நீ எனக்கு இனியவன். நான் வைத்த தேர்வைக் கடந்தவன். இரண்டின்மை என்றும் வீடுபேறு என்றும் சொல்லப்படுவதொன்றுண்டு. அடைதலும் ஆதலும் ஆன ஒன்று. அதை உனக்குப் பரிசளிப்பேன் என்றது. நான் சொன்ன சொல்லே என்னுள் எழுந்தது, இறைவடிவே. நான் விழைவதற்கொன்றும் இல்லை என்றேன். விலகி உருமாறி விலங்கென்றாகி மறைந்தது” என்றார் புஷ்கரர். சுதீரர் “அமருமிடம் தவச்சாலையென்றாகும் தகைமைகொண்டுவிட்டீர்” என்றார்.

flower“நிஷதநகரியை நளனும் தமயந்தியும் நெடுநாட்கள் ஆண்டனர். மீண்டும் இந்திரகிரியின் உச்சியில் இந்திரனுக்கு ஆலயம் அமைந்தது. ஆனால் கலிதேவன் அங்கிருந்து விலக்கப்படவில்லை. இந்திரன் ஆலயத்திற்குள்ளேயே வடகிழக்கு மூலையில் தனி ஆலயத்தில் கலிதேவன் நிலையமைக்கப்பட்டான். இன்றும் முதற்பூசனை கலிக்குரியது. அங்கே வணங்கிய பின்னரே நிஷதமன்னர்கள் இந்திரனை வணங்குவது வழக்கம்” என்றார் முதிய காவலராகிய கிரணர்.

கஜன் மார்பில் கைகளை கட்டிக்கொண்டு கரவுக்காட்டை நோக்கிக்கொண்டிருந்தான். மாலை வெயில் நிறம் மாறிக்கொண்டிருந்தது. “நளன் எதிரி நாடுகளையெல்லாம் இரண்டு ஆண்டுகளில் வென்றார் என்கிறார்கள். அது இயல்வதே. புஷ்கரனின் ஆட்சியில் நிஷதர்கள் இறப்பின் மீதான அச்சத்தை கடந்திருந்தனர். தன்னலமும் வஞ்சமும் எல்லை கண்டு மீண்டிருந்தனர். ஆகவே அவர்கள் ஓநாய்க் கூட்டம்போல ஒற்றையுடல்கொண்ட திரளாக இருந்தனர். மீண்டும் முடிசூடியபின் ஏழாவது ஆண்டில் தமயந்தி மீண்டும் பரிவேள்வியையும் அரசக்கொடைவேள்வியையும் நடத்தி சத்ராஜித் என அமர்ந்தார்” கிரணர் சொன்னார்.

“கணவனாலும் தம்பியராலும் மைந்தராலும் சூழப்பட்ட அவர் பேரன்னை எனத் திகழ்ந்தார். அறத்தின் வெம்மின்னலை ஒருகையிலும் அளியின் தண்மலரை மறுகையிலும் ஏந்தி அரசாண்ட அவரை இந்திரனின் பெண்வடிவம் என்று குடிகள் வணங்கினர். இன்று விராடபுரியின் தென்மேற்கு மூலையில் மூதன்னை வடிவில் அவரை நிறுவி வழிபடுகிறார்கள். இந்திரை என்றும் இந்திராணி என்றும் அவரை அழைக்கிறார்கள். பெண்குழந்தை பிறந்தால் நாற்பத்தொன்றாம்நாள் அங்கே கொண்டுசென்று நாவில் தேனும் வேம்பும் கலந்த துளியை தொட்டுவைத்து அவர் காலடியில் இட்டு வணங்கி எடுத்துக்கொள்ளும் வழக்கம் உள்ளது. ஓராண்டு நிறைவில் முதல் முடி களைதலையும் அங்குதான் இயற்றுவார்கள். படைக்கலப்பயிற்சி பெறும் ஷத்ரியப்பெண்கள் இரும்புதொட்டு எடுக்கும் நாளை அங்கு கொண்டாடுகிறார்கள்.”

காவலர்தலைவனாகிய நிகும்பன் “அன்னையின் சிலையை நீ பார்க்கவேண்டும். நூறு முதிர்ந்த முதுமகள். கன்னங்கள் வழிந்து, பல்லில்லா வாய் உள்ளொடுங்கி, மூக்கு வளைந்து கூனுடல் கொண்டு அமர்ந்திருக்கிறார். ஆனால் இரு நீல வைரங்கள் பதிக்கப்பட்ட விழிகள் முலையூட்டும் அன்னையுடையவை எனக் கனிந்தவை. நான்கு கைகளில் மலரும் மின்னலும் அஞ்சலும் அருளலும்” என்றான். தீர்க்கன் “ஆம், நாகர்களின் கதையில் அவர் சூக்திமதியில் நூறாண்டு கண்ட முதுமகளாக இருந்தார் என்று கேட்டேன்” என்றான். கிரணர் “அது எண்ணியது காட்டும் ஆடி. அவர் என்றும் அவ்வாறே இருந்தார்” என்றார். தீர்க்கன் “ஆனால் நளமாமன்னர் அனைத்து ஆலயங்களிலும் முதிரா இளைஞனாகவே புரவியுடன் நின்றிருக்கிறார்” என்றான்.

கஜன் “புஷ்கரரைப்பற்றி சொல்லிக்கொண்டிருந்தீர்கள்” என்றான். “ஆம், தடம் மாறிவிட்டேன். இந்தக் கரவுக்காட்டைப்பற்றி சொல்லிக்கொண்டிருந்தேன். புஷ்கரரும் சுதீரரும் வந்து சேர்ந்த இடமே இந்தக் கரவுக்காடு. அன்று இது தப்தைக்கும் ஊர்ணைக்கும் நடுவே இருந்த வெறும் புதர்க்காடு. இங்கு அரவுகள் மிகுதி என்பதனால் வேட்டைக்காரர்களும் மூலிகைநாடிகளும்கூட வருவதில்லை. இங்கே ஓர் ஆலமரத்தடியில் நாணலால் ஒரு குடில் கட்டி அதில் புஷ்கரரும் சுதீரரும் குடியேறினர். அவர்கள் இங்கே நாற்பத்தோராண்டு தவம் செய்ததாக சொல்கிறார்கள்” என்றார் கிரணர்.

“ஆண்டுக்கு ஒருமுறை அரசரும் அரசியும் மைந்தரும் வந்து அவர்களைப் பணிந்து படையலிட்டு மீள்வார்கள். மானுடர் எவரென்றே அறியாதபடி அவர்கள் இருவரும் அப்பாலெங்கோ விழிகொண்டிருந்தனர். அவர்கள் குடியிருந்த குடில்மேல் சரிந்த விழுதுகளே குடிலென்றாகிவிட்டிருந்தன. அதற்குள் சடைத்திரிகள் குழலென்றும் தாடியென்றுமாகி வழிந்து நிலம்தொட மெலிந்த உடலில் செதில்களென தோல் பரவியிருக்க அமர்ந்திருந்தனர். ஆடை மட்கி உதிர்ந்தபின் எவ்வண்ணமோ அவ்வண்ணம் எஞ்சினர்.”

“நாற்பத்தோராம் ஆண்டு அரசனும் அரசியும் வந்து நோக்கியபோது அவர்கள் அங்கில்லை. அவர்களை தேடிச்சென்றவர்கள் காட்டின் அடர்புதர்களில் வழிதவறி மீண்டனர். நிமித்திகர் கணித்து அவர்களிருவரும் சித்திரை முழுநிலவில் விண்ணெழுந்துவிட்டார்கள் என்றனர். அவர்களுக்கு குருபூசனை நிகழ்த்தவோ கோயிலமைக்கவோ உடலென எச்சமென ஏதும் கிடைக்கவில்லை. ஆகவே இக்காட்டையே அவர்களின் ஆலயமென்றாக்கினர். தப்தைக்கும் ஊர்ணைக்கும் நடுவே ஓடைகளை வெட்டி இணைத்து நீர் வலை ஒன்றை நெய்தார் நளன். அதன்பின் காடு நுரையெனப் பெருகி வானிலெழுந்தது” கிரணர் சொன்னார்.

“இது தவத்தின் காடு என்றனர் நூலோர். எளியோர் இங்கு நுழையலாகாதென்பதனால் இதை கரவுக்காடு என வகுத்தனர். கரந்த இடங்களில் பெய்து நிறையும் தெய்வங்கள் இங்கு நிறைந்தன. இது கந்தர்வக் காடென்றும் யக்‌ஷ வனமென்றும் சொல்கொண்டது” என்று கிரணர் சொன்னார். “பேரரசி தமயந்தி நூறாண்டு அகவை நிறைந்ததும் தன் மைந்தன் இந்திரசேனனுக்கு முடியளித்துவிட்டு நளனுடன் இக்காட்டுக்குள் புகுந்து மறைந்தார். தப்தையின் அருகே தமயந்தியும் ஊர்ணையின் அருகே நளனும் இறுதி நிறைவை அடைந்தனர். அவர்களுக்கு அங்குதான் அறைக்கல்லும் நடுகல்லும் நிறுவப்பட்டுள்ளன.”

“ஆண்டு பலிக்காகவும் பொதுமக்கள் வணங்குவதற்காகவும் நகருக்குள் வேறு ஆலயங்கள் அமைக்கப்பட்டன. இங்கே அரசகுடியினர் மட்டும் ஏழு ஆண்டுகளுக்கு ஒருமுறை வந்து முதிர்ந்தமைந்த பேரன்னைக்கும் மூவா இளமைகொண்ட தாதைக்கும் பலிகொடுத்து வணங்கி மீள்வதுண்டு” என்றார் கிரணர். “ஆனால் அம்முறைமைகள் எல்லாம் நிஷதகுலத்தின் வீழ்ச்சியுடன் நின்றுவிட்டன. இப்போது உத்தரர் அவற்றை மீண்டும் தொடங்கியிருக்கிறார்.”

அந்திச் செம்மை பரவத் தொடங்கியது. தீர்க்கன் எழுந்துகொண்டு “கிரணரே, தாங்கள் ஓய்வெடுக்க வேண்டுமென்றால் வருக! நகரிலிருந்து சிறந்த பாக்கு கொண்டுவந்துள்ளேன்” என்றான். கிரணர் எழுந்துகொண்டு “ஆம், பகல் கடுமையானது” என்றார். நிகும்பன் “அந்தியில் அரசர் வருவார் என்றனர். ஆனால் அதற்குரிய எந்த ஏற்பாடுகளையும் காணமுடியவில்லை” என்று ஆடை திருத்தியபடி எழுந்தான். “இன்று முழுநிலவு. வானம் ஒளிகொண்ட பின்னர் வருவார்கள் போலும்” என்றார் கிரணர். “நாம் செய்யவேண்டியதொன்றும் இல்லை. நாம் இதன் எல்லைக் காவலர்கள் மட்டுமே” என்று தீர்க்கன் சொன்னான். “ஓய்வெடுக்க பொழுதிருக்கிறது.”

பேசியபடியே அவர்கள் இறங்கிச்சென்றனர். கஜன் காவல்மாடத்தின்மேல் தனித்தமர்ந்திருந்தான். காற்றில் காடு மெல்ல ஆடியது. மரக்கலம்போல. பெருந்திரைச்சீலைபோல. அவன் கால்களை நீட்டி வேலை மடியில் வைத்துக்கொண்டான். அவன் புண் ஆறிவிட்டிருந்தாலும் அசைவுகளில் இருப்புணர்த்தியது. அதை மெல்ல தொட்டபோது இனிய குறுகுறுப்புணர்வு ஏற்பட்டது. அதை அழுத்தி நோக்குவது ஓர் இசைக்கருவியை மீட்டுவதுபோல என்று எண்ணிக்கொண்டு அவனே புன்னகை செய்துகொண்டான்.

கீழே கொம்பு ஒலித்தது. அதைக் கேட்டதும் காவல் மாடங்களின் முரசுகள் முழங்கத் தொடங்கின. கஜன் எழுந்து நின்று கீழே நோக்கினான். காவலர்தலைவன் நிகும்பனும் கிரணரும் பிற காவலரும் ஓடிச்சென்று நிரைகொண்டு காத்துநின்றனர். அத்தனை விரைவில் எளிமையாக அரசவருகை நிகழுமென அவர்கள் எதிர்பார்க்கவில்லை எனத் தெரிந்தது. கிரணர் நின்றுகொண்டே தன் தலைப்பாகையை சுற்றினார். தீர்க்கன் இடைக்கச்சையை கட்டினான்.

கொடிவீரன் ஒருவன் புரவியில் முன்னால் வர அவனுக்குப் பின்னால் காரகன்மேல் ஏறி உத்தரன் வந்துகொண்டிருந்தான். கடிவாளத்தை தளர்வாகப் பற்றி தன்னுள் ஆழ்ந்து விழி தாழ்த்தியிருந்தான். அவன் உள்ளத்தால் இயக்கப்பட்டதாக காரகன் வந்து முற்றத்தில் நின்றது. அவன் இறங்கி அதன் கழுத்தில் தட்டிவிட்டு நிகும்பனிடம் ஓரிரு சொற்கள் உரைத்தபின் கைகளை நீட்டி சோம்பல் முறித்தான். பின்னர் தனியாக கரவுக்காட்டுக்குள் புகுந்து மறைந்தான்.

காவலர் முகப்பு முற்றத்தில் காத்து நின்றிருந்தனர். காரகன் தலைதாழ்த்தி சிலைபோல அசையாமல் நின்றது. முகில்கள் ஒன்றிலிருந்து ஒன்றென ஒளிகொண்டன. அவன் அசையாமல் நின்று எழுநிலவை நோக்கிக்கொண்டிருந்தான். நிலவொளி அருவியெனப் பெய்ய அதில் நீராடுபவன்போல கைகளை விரித்து முகம் தூக்கி நின்றான். அவன் வழியாகப் பொழிந்து பெருகிப்பரவி வெண்நுரை எழுந்து கரவுக்காட்டை மூடியது. அவன் உடல் சிலிர்த்துக்கொண்டே இருந்தது.

உடல் குளிர்ந்து நடுக்கத்தை உணர்ந்தபோது அவன் தன்னிலை கொண்டான். நிலவு நன்கு மேலேறியிருந்தது. இலைகள் சுடர்களென ஒளிர நின்ற மரம் ஒன்று அவனருகே காற்றில் குலுங்கியது. அவனைத் தவிர எவரும் விழித்திருப்பதாகத் தோன்றவில்லை. அவன் சரடேணி வழியாக கீழிறங்கி நிலத்தில் நின்றான். காவல் மாடத்தின் ஆட்டத்தை வாங்கிக்கொண்டிருந்த உடல் அலைபாய்ந்து அவனை ஒரு பக்கமாகத் தள்ளியது. சிறிய மரம் ஒன்றைப் பற்றியபடி நின்று நிலைமீண்டான்.

அவன் முற்றத்தை அடைந்தபோது காட்டுக்குள் இருந்து உத்தரன் தனியாக நடந்துவருவதை கண்டான். தன்னுள் ஆழ்ந்த நடை. ஆனால் கால்கள் நிலத்தையும் உடல் சூழலையும் நன்கறிந்திருந்தது. அவன் மணம் கிடைத்ததும் தலையசைத்து பிடரி குலைத்து காரகன் உறுமியது. அதனருகே நின்றிருந்த நிகும்பனும் தீர்க்கனும் இரு காவலர்களும் தலைவணங்கினர்.

உத்தரன் நிகும்பனிடம் ஒரு சொல் உரைத்துவிட்டு புரவிமேல் சிறுகுருவிபோல் தொற்றி ஏறிக்கொண்டான். கொடிக்காரனும் அகம்படி வந்த இரு காவல்வீரர்களும் தங்கள் புரவிகளில் ஏறிக்கொண்டார்கள். உத்தரன் காரகனின் கழுத்தைத் தட்டி அதை செலுத்தினான். வால் சுழல பெரிய குளம்புகள் மண்ணை அதிரச்செய்ய அது பாய்ந்தோடி புதர்களுக்கு அப்பால் மறைந்தது. அப்புரவிகளின் ஓசை காட்டுக்குள் துடித்து அடங்கியது. அவற்றால் எழுப்பப்பட்ட பறவைகளும் மெல்ல அமரத் தொடங்கின.

மெல்லிய குரலில் பேசியபடி நிகும்பனும் தீர்க்கனும் செல்ல காவலர் வேல்களை தோளில் வைத்தபடி சலிப்புடன் நடந்துசென்றனர். அவன் மரத்திற்குப் பின்னால் மறைந்துகொண்டான். அவர்கள் கடந்துசென்ற பின்னர் வேலியிலிருந்த சிறிய இடைவெளியினூடாக கரவுக்காட்டுக்குள் புகுந்தான். இருமுறை பெருமூச்சுவிட்டு தன் உள்ளத்தை எளிதாக்கிக் கொண்டான். வெளியுலகை விலக்கிக்கொள்ளும் பொருட்டு அடிகளை எண்ணியபடி நடந்தான். மரங்களை எண்ணி மேலும் சற்று நடந்தான்.

நிலவொளியும் நிழல்களும் கலந்து காடு அலைததும்பிக் கொண்டிருந்தது. நிழலென்றும் ஒளியென்றும் உருமாறி உருகி வழிந்து பரவி அவன் அதற்குள் சென்றுகொண்டிருந்தான். தரையில் குரங்குகள் விழுந்து கிடந்தன. பொன்னிற நாகங்கள் மிக மெல்ல வழிந்து சென்றன. தொலைவில் ஓடையின் ஓசை. தலைக்குமேல் காற்றோசை. அடிமரங்கள் மெல்லிய ஒளிமினுப்பு கொண்டன. ஒரு மரத்தைச் சூழ்ந்து குரங்குகள் உதிர்ந்த பலாப்பழங்கள் என கிடந்தன. அவன் அந்த அடிமரத்தில் கையை உரசினான். விரித்து நோக்கியபோது வெள்ளித்தூள் படிந்தது போலிருந்தது கை. அதை மூக்கில் வைத்து உறிஞ்சினான். மென்தசை அதிர்ந்தது. கண்களில் நீர் கோத்தது.

காற்றில் மிதந்து அவன் செல்ல அவன் உடல் உருகி நீண்டு இழுபட்டு எஞ்சிய பகுதிகள் நின்றிருந்த இடங்களில் எல்லாம் படிந்திருந்தன. சருகுகளில் கூழாங்கற்களில் வேர்களில் அவன் பரவியிருந்தான். அவன் உடலைத் தொட்ட இலைகளெல்லாம் அவன் துளித்துச் சொட்ட அசைந்தன. காற்றில் அவன் உடல் புகையென ஆடியது. மரங்களினூடாக மிதந்த நீண்ட செந்நிறப் புகைத்திரிகள் போன்ற கந்தர்வர்களை அவன் கண்டான். பிரிந்தும் கலந்தும் முகம்கொண்டு நகைத்தும் அவர்கள் சென்றனர். ஒளிரும் சிறகுகளுடன் யட்சர்கள் மலர்கள்மேல் அமர்ந்து ஆடினர்.

அவன் உடலே விழியென்றாகியது. மரங்கள் கைகள் கொண்டு நடமிட்டன. அருவியெனப் பெய்து எழுந்த வெள்ளியுடல் கந்தர்வன் ஒருவன் கைவிரித்துப் பெருகி ஐந்து கன்னியர் என்றும் ஆனான். அவர்களைத் தழுவியபடி மரங்களில் ஊடுருவிச் சென்றான். ஒளியெனப் பெருகிச்சென்ற தப்தையின் கரையில் அவன் ஒருவனை கண்டான். நடை அவன் அறிந்திருந்தது என்பதனால் விழிகூர்ந்தான். அவன் இளஞ்செந்நிற ஒளி கொண்டிருந்தான்.

கஜன் அவன் பெயர் முக்தன் என நினைவுகூர்ந்தான். அல்லது வேறேதுமா? அந்த நடை பிருகந்நளைக்குரியதல்லவா? அதைத்தானே சற்றுமுன் உத்தரனிடம் கண்டேன்? முக்தனுடன் சென்ற பெண்ணை அவன் இலைகள் மறைய மறைய தெளிவற்று கண்டான். நிழலென்றும் ஒளியென்றும் உருக்கொண்டு மாறிக்கொண்டே சென்றாள். அவள் சுபாஷிணி என்று ஒரு நிலவுக்கீற்று காட்டியது. அல்ல என்றது இருள்கீற்று.

முந்தைய கட்டுரைவங்கடை
அடுத்த கட்டுரைவெண்கடல் -கடிதம்