93. கருந்துளி
புஷ்கரன் அணியறையிலிருந்து கிளம்புவதை கையசைவு வழியாகவே வீரர்கள் அறிவிக்க முற்றத்தில் நின்றிருந்த சிற்றமைச்சன் சுதீரன் பதற்றமடைந்து கையசைவுகளாலேயே ஆணைகளை பிறப்பித்தான். அவனுடைய கைகளுக்காக விழிகாத்திருந்த ஏவலர் விசைகொண்டனர். ஓசையில்லாமல் அவர்கள் கைகளால் பேசிக்கொண்டபடி அங்குமிங்கும் விரைந்தனர். அரசன் செல்வதற்காக ஏழு புரவிகள் வாயிலில் கொண்டுவந்து நிறுத்தப்பட்டன. காவலர்கள் ஓசையில்லாமல் வேல்களை ஏந்தி விரைப்புகொண்டு நின்றனர்.
தலைமைப் படைத்தலைவன் ரணசூரனிடம் விழிகாட்டிவிட்டு சுதீரன் கிளைகளில் தாவும் குருவிபோல ஓசையிலாமல் படிகளில் தொற்றித்தொற்றி மேலே சென்றான். மூச்சிரைக்க, வாய்குவித்து காற்றை ஊதி அதை அடக்கியபடி காத்து நின்றான். புஷ்கரன் வெளிவந்ததும் அவனுக்காகக் காத்து நின்றிருந்த ஏவலர்கள் தலைவணங்கினர். அவன் சுதீரனிடம் “ம்?” என்றான். அவன் வாய்பொத்தி தலைதாழ்த்தி மிகத் தாழ்ந்த குரலில் “புரவிகள் சித்தமாக உள்ளன, அரசே. அமைச்சரும் படைத்தலைவரும் காத்திருக்கிறார்கள்” என்றான்.
அதை கேட்டதாகவே காட்டாமல் அவன் மெல்ல நடந்தான். அவனைச் சூழ்ந்து நடந்த வேளக்காரர்கள் மிகமெல்ல காலடிவைத்து ஓசையில்லாமல் நிழல்களைப்போல சென்றனர். படிகளில் அவர்கள் இறங்கியபோது எழுந்த நீர்வழிவதுபோன்ற மிகமெல்லிய ஒலியே அரண்மனை முழுக்க கேட்டது. அரண்மனை அச்சத்துடன் முணுமுணுப்பதுபோல அது ஒலித்தது.
புஷ்கரன் முற்றத்திற்குச் சென்றதும் அமைச்சரும் படைத்தலைவனும் தலைவணங்கினர். வேல்கள் ஒளியுடன் அலையசைவு என வளைந்து தாழ வீரர்கள் தலைவணங்கினர். அவர்களின் கவசங்களில் பந்தங்களின் ஒளிப்பாவை ஓசையின்றித் தழன்றது. புரவி ஒன்று சீறிய மெல்லிய ஒலி மட்டும் உரக்க கேட்டது. புஷ்கரன் இயல்பாக அத்திசை நோக்கித் திரும்ப பாகன் நடுங்கி அதன் விலாவைத் தட்டி ஆறுதல்படுத்தினான். அவன் சுதீரனை நோக்கி “கொட்டில் ஒருக்கமா?” என்றான். சுதீரன் “ஆம், அரசே” என்றபின் புரவிகளை அருகே கொண்டுவரும்படி கைகாட்டினான்.
புஷ்கரன் களைத்து தசைவளையங்கள் விழுந்த பழுத்த விழிகளும், வெளிறிய உடலும் கொண்டிருந்தான். வாயைச் சுற்றி விழுந்திருந்த அழுத்தமான கோடுகளால் அவன் துயர் கொண்டவன்போல, எதையோ எண்ணிக்கொண்டு தன்னை இழந்தவன்போலத் தோன்றினான். சில ஆண்டுகளுக்கு முன் தொடங்கி வலுத்துவந்த நரம்புநோய் ஒன்றினால் அவன் கைகளும் தலையும் மெல்ல நடுங்கிக்கொண்டிருந்தன. முகத்தின் வலப்பகுதி சற்று இறங்கி வாய் இழுபட்டுக் கோணியிருந்தது. கன்னத்தசை நீண்டு வலக்கண் தாழ்ந்து அகவைக்கு மிஞ்சிய முதுமையை காட்டியது.
அவன் உதடுகளை நோக்கியபடி அனைவரும் காத்து நின்றிருந்தனர். புஷ்கரன் குரல் தாழ்ந்து செல்லத்தொடங்கி நெடுநாட்களாகிவிட்டிருந்தன. நாளுக்குநாள் அவன் குரல் தணிந்து பல தருணங்களில் உதடசைவினூடாகவே அவன் சொற்களை பெற்றுக்கொள்ள வேண்டியிருந்தது. அவனைச் சூழ்ந்திருந்த ஒவ்வொருவரும் அவன் உதடுகளிலேயே விழிகளையும் செவிகளையும் சித்தத்தையும் நிறுத்தியிருந்தமையால் மட்டுமே அவை பொருள்கொண்டன. சினம்கொள்கையில் அவன் முற்றிலும் சொல்லடங்கினான். விழியிலும் இழுபட்டு அசையும் முகத்தசைகளிலும் மட்டுமே அது வெளிப்பட்டது.
குரல் தாழத் தொடங்கியபோது அவன் சூழொலிகளுக்கு ஒவ்வாமை கொண்டான். பேச்சுகள், கலக் குலுங்கல்கள், காலடிகள் அனைத்தும் அவனை அதிரச் செய்தன. கைதவறி ஏதேனும் விழுந்தால் உடல் விதிர்த்துத் துள்ள வாய் கோணலாக கழுத்துத்தசைகள் துடிக்க அவன் நிலையழிந்தான். அவ்வோசையை எழுப்பியவரை அக்கணமே காவலர் பிடித்துக் கொண்டுசென்று கொலைக்கூடத்திற்கு அனுப்பினர். ஓலைக்கட்டு ஒன்று அவன் கையிலிருந்து விழுந்த ஓசைக்கே இடக்கை இழுத்துக்கொள்ள வலிப்பு வந்து இறுகி பின் தளர்ந்தான்.
அவையில் அவன் உடலில் அவ்வலிப்பெழும்போது அவ்வண்ணம் ஒன்று நிகழாததுபோல் விழிசூடி நிற்க சூழ்ந்தோர் பயின்றிருந்தனர். விழிகளில் ஒரு சிறுமின்னலென ஏளனமோ ஆர்வமோ வந்து சென்றால்கூட அவன் அதை அறிந்தான். ஓரிரு நாட்களுக்குள் அவர்கள் கழுவிலேற்றப்பட்டனர். விழிகளில் இரக்கமோ பரிவோ வருமென்றால் அக்கணமே சீறிச் சினந்தெழுந்து ஏதேனும் பழிகூறி அவரை அங்கேயே வெட்டிவீழ்த்த ஆணையிட்டான்.
மாதத்திற்கு ஒருவராவது அவ்வண்ணம் அவன் அவையிலிருந்து காம்பிற்று இருளுக்குள் உதிர்ந்துகொண்டிருந்தனர். ஆயினும் அங்கு வந்துசேர கடுமையான போட்டி இருந்தது. ஏனென்றால் அங்கு வந்தவர்கள் நகர்மக்கள்மேல் தடையற்ற ஆதிக்கத்தை அடைந்தனர். நிஷதபுரியின் வரலாற்றில் அவ்வண்ணம் ஓர் ஆதிக்கத்தை எவரும் பெற்றிருந்ததில்லை. விழியசைவால் அவர்கள் எவரையும் கொலைமரத்திற்கு கொண்டுசெல்ல முடிந்தது. விரும்பிய செல்வத்தையும் பெண்ணையும் அடைய முடிந்தது. அனைத்துக்கும் அப்பால் பிறரை இழிவுசெய்வதன் பேருவகையில் இடைவிடாது திளைக்க முடிந்தது.
மேலிருப்பவர்களின் கோன்மை வலுப்பெற்றபடியே செல்ல கீழிருப்பவர்கள் புழுக்களென பாதங்களின் அளியால் உயிர் நெளிந்தனர். ஆகவே அங்கிருப்போர் ஒவ்வொருவரும் மேலேறத் தவித்தனர். பிறர்மேல் ஏறியே அங்கு செல்லமுடியும் என்பதனால் அவர்கள் அனைவரும் பிறரை கண்காணித்தனர், ஒடுக்கினர், அழித்து தங்களை மேலெடுத்துக்கொண்டனர். மேலும் மேலுமென பொருத்துக்களில் பற்றி விரிசல்களில் காலூன்றி ஏறிக்கொண்டே இருந்தனர். ஏறிக்கொண்டிருக்காதவர்கள் அழிக்கப்பட்டனர்.
அரண்மனையில் மரத்தரைகளெங்கும் மெத்தைவிரிப்பு போடப்பட்டது. கதவுக்குடுமிகள் வெண்கலமாக்கப்பட்டன. ஒவ்வொருநாளும் அவற்றில் ஆமணக்கு உயவு ஊற்றப்பட்டது. அத்தனை கலங்களும் மரவுரிகளால் உறையிடப்பட்டன. மென்தோல் காலணிகளை ஏவலரும் அணிந்தனர். வாள்களும் வேல்களும் ஒன்றுடனொன்று முட்டாமல் எப்போதும் கைகளால் பற்றப்பட்டிருந்தன. பேச்சுக்கள் ஒலியடங்கின. அவ்வாறு உருவான அமைதி ஒவ்வொரு குரலையும் பெருக்கிக் காட்டியமையால் அவர்கள் மேலும் ஒலியவிந்தனர். பின்னர் மூச்சொலிகளும் எழாமல் முற்றமைதியில் அரண்மனை புதைந்தது.
நாளடைவில் சூழலின் அமைதி ஒவ்வொருவர் உள்ளத்திற்குள்ளும் நுழைந்தமையால் இயல்பாகவே எவரும் பேசாமலானார்கள். தங்கள் தனியறைகளிலும் தோட்டங்களிலும்கூட அரண்மனை ஏவலரும் வீரரும் சொல்லின்மையில் மரங்களும் செடிகளும்போல அமர்ந்திருந்தனர். கிளையசைவால் இலையுலைவால் பேசிக்கொண்டனர். எப்போதேனும் பேசநேர்கையில்கூட நெஞ்சுக்குள் இருந்து சொற்களை நாக்கில் கொண்டுவருவதற்கு சித்தத்தால் உந்தவேண்டியிருந்தது. அவை உதிரிச் சொற்களாகவே எழுந்தன. சொற்கூட்டிப் பேசுவதையே பலர் முற்றிலும் மறந்துவிட்டனர்.
புஷ்கரன் மிக மெல்லிய குரலில் “அந்த வெண்புரவி” என்றான். சுதீரன் கைகாட்ட பாகன் அந்த வெண்புரவியை கொண்டுவந்து நிறுத்தினான். அதன் சேணத்தில் கால்வைத்து எழுந்து அமர்ந்து கடிவாளத்தைப் பற்றியபடி அவன் வானை நோக்கினான். “அங்கு செல்வதற்குள் விடிவெள்ளி எழுந்துவிடும், அரசே” என்றான் சுதீரன். அவன் அதை கேட்டதாக காட்டவில்லை. அவனிடம் பேசப்படும் சொற்களுக்கு அவன் எந்த எதிர்வினையையும் காட்டுவதில்லை. அது அவனுக்கு விளங்கிக் கொள்ளமுடியாத ஒரு அழுத்ததை அளித்தது. தெய்வங்களைப்போல.
அவர்கள் அவனுடைய அசைவுகளுக்காக விழியூன்றி காத்திருந்தனர். அவனிடம் அவ்வப்போது சிலைத்தன்மை ஒன்று கூடிவிடும். இமைகள்கூட அசையாமல் இருக்கும் அவனை நோக்குகையில் அவன் இப்புவியிலிருப்பவன் அல்ல, இங்கு வந்த ஏதோ அறியாத தெய்வம் என்ற உணர்வு மீண்டும் மீண்டும் வலிமைகொண்டது. இத்தனை குருதியை மானுடர் கோரமுடியாது. அன்னைமுலை உண்டவர் இத்தனை துயரங்களுக்குமேல் ஏதுமறியாமல் அமர்ந்திருக்க முடியாது.
அவன் புரவி கிளம்பியபோது பிற புரவிகளும் உடன்சென்றன. அவன் குரல் கேட்கும் தொலைவில் ஆனால் அவனுக்கு இணையென்றாகாத அகலத்தில் அவை சீர்நடையிட்டுச் சென்றன. கவசக்காவலர்களும் அகம்படியினரும் சூழ்ந்துவர முழுமையான தனிமையில் புஷ்கரன் சென்றான். புலரியின் குளிர்ந்த காற்று அவர்களைச் சூழ்ந்து வீசி சுழன்று சென்றது. அவனைச் சூழ்ந்து எப்போதும் கடுங்குளிரே இருக்கிறது என சுதீரன் எண்ணிக்கொண்டான்.
நளன் கானேகியபோது முதன்மையமைச்சர் கருணாகரர் அவனுடைய தந்தை நாகசேனரை அமைச்சராக்கிவிட்டு கான்தவம் புகுந்து நாற்பத்தோராம் நாள் உயிர்துறந்தார். நாகசேனர் மூன்றாண்டுகள் அமைச்சராக இருந்தார். ஒருநாள் அவரை நெற்றியிலும் தோள்களிலும் இழிமங்கலக் குறிகள் பொறித்து நாடுகடத்த புஷ்கரன் ஆணையிட்டான். விழிநீருடன் தந்தையைத் தொடர்ந்த சுதீரனின் தோளில் கையை வைத்து நாகசேனர் “குலமுறைப்படி நீயே இங்கு அமைச்சன். அது நம் முன்னோர் நமக்களித்த கொடை. தவத்தின்பொருட்டு உலகு துறக்கையில் அன்றி வேறெவ்வகையிலும் அதை விலக்க நமக்கு உரிமையில்லை” என்றார்.
“ஆனால் இவ்விழிமகன்…” என அவன் சொல்லத்தொடங்க “இன்றும் அவர் உன் அரசர். நீ இந்நகரை இன்னமும் துறக்கவில்லை” என கூரிய சொற்களால் அவனை நிறுத்தினார் நாகசேனர். “உன் பணியை செய்! இது சுட்டுப்பழுத்த கலம். இதில் நீர் விட்டுக்கொண்டே இருப்பதே உன் அறம் என்றாகுக!” சுதீரன் “எத்தனை நாள், தந்தையே?” என்றான். “நெடுங்காலம் அல்ல. அறமன்றி ஏதும் மண்ணில் நிலைத்து வாழாது. ஏனென்றால் அது தெய்வங்களுக்கு உகந்தது அல்ல. அன்னையரால் ஏற்கப்படுவது அல்ல. வேதத்துடன் ஒப்புவது அல்ல” என்றார் நாகசேனர்.
பின்னர் சற்று உதடுகோடிய புன்னகையுடன் “அத்தனைக்கும் மேலாக அது உலகியல் நலனுக்கே உகந்ததும் அல்ல” என்றார். அவன் “மக்களை நான் நம்பவில்லை, தந்தையே… இன்றுவரை அவர்களின் அச்சமும் மிடிமையும் சிறுமதியும் மட்டுமே வெளிப்பட்டுள்ளது” என்றான். “நம்பியாகவேண்டும். மானுடம் அறத்தில் அமைந்தது. இல்லையேல் இவர்களின் மொழியில் வேதம் எழுந்திருக்காது” என்றார் நாகசேனர். “ஒரு துளியென அறம் எஞ்சியிருக்கும். எங்கோ அதை நாம் அறியும் தருணம் அமையும். மைந்தா, அது விதையெனும் துளி. அச்சூழலின் அழுத்தத்தால் செறிவுகொண்டு வைரம் என்றானது. அதைக் கண்டடைக.” அவன் தலைமேல் கைவைத்து “வைரம் என்பது என்ன? தெய்வங்களின் ஒளியும் கூர்மையும் நஞ்சும் கொண்டெழுந்த கூழாங்கல்” என்றார்.
கசப்புடன் “இந்த நெறியின்மைகளுக்கு நான் துணைநின்றாக வேண்டுமா என்ன?” என்றான் சுதீரன். “ஆம், வந்து பிறக்கும் சூழலுக்கு நாம் எவ்வகையிலும் பொறுப்பல்ல. அது முன்வினை. அதை வெல்க, நிகழ்வினையை கடந்து நல்வினையை ஈட்டுவதொன்றே நாம் செய்யக்கூடுவது. இன்று விழித்துக் காத்திருப்பதே உன் கடன். தாக்குப்பிடித்து அங்கிரு. முடிந்தவரை உயிர்களைக் காப்பதே உன் நாள்பணி என்று கொள். அதன்பொருட்டு எதையும் செய்… தெய்வங்களும் மூதாதையரும் உடனிருக்கட்டும். வேதச்சொல் துணையாகட்டும். ஆம், அவ்வாறே ஆகுக!” என அவன் தலையில் கைவைத்து வாழ்த்திவிட்டு நடந்தகன்றார்.
அவன் மீண்டு வந்து தன் சிறிய இல்லத்தின் திண்ணையில் தோள்தளர்ந்து தலைகுனிந்து அமர்ந்திருந்தான். எதிர்த்திண்ணையில் நூற்றகவை முகிழ்ந்த முதியவரான சாந்தர் அமர்ந்திருந்தார். வெண்கூழாங்கல் விழிகளால் வெறும் நிழலாட்டமெனத் தெரிந்த தெருவை நோக்கிக் கொண்டிருந்தார். ஒரு காகம் வந்தமர்ந்து ஐயத்துடன் அவரை நோக்கியபின் எழுந்தகன்றபோது முகம் மலர்ந்து தலையாட்டி நகைத்தார். அது மீண்டும் அருகணைந்தபோது கைவீசி “வா! வா!” என்றார்.
சுதீரன் எழுந்து தந்தையின் தூக்குபீடத்திற்கு அடியில் இருந்த சிறுபேழையில் இருந்து பனங்கற்கண்டுத் துண்டுகளை எடுத்துக்கொண்டு தெருவைக் கடந்து அவரை அடைந்தான். அவர் அவன் கையைத்தான் நோக்கினார். கற்கண்டுகளை அளித்ததும் இரு கைகளாலும் வாங்கி இரு கன்னங்களிலும் அதக்கிக்கொண்டு கண்களை மூடி அச்சுவையில் மெய்மறந்தார். அவர் கண்முனைகளில் இருந்த பீளையையும் வாய்விளிம்புகளில் இருந்த நுரைக்கோழையையும் அவன் துடைத்தான். பல்லில்லாத வாய் சுருங்கி விரிந்தது.
“தந்தையே, அந்தணன் தன் குலநெறியின்பொருட்டு மறத்திற்குத் துணை நின்றால் பழி சேருமா?” என்றான் சுதீரன். அவர் “ஏன்?” என்றார். அவன் நாலைந்துமுறை கேட்டபின்னர்தான் அவர் உள்ளம் அக்கேள்வியை உணர்ந்தது. கல்கண்டுகளை வாயில் இருந்து எடுத்து மேலாடையால் துடைத்து மடியில் வைத்துவிட்டு “ஆம், வேள்வியின் பொருட்டென்றாலும் தெய்வங்களின் ஆணைக்கிணங்க என்றாலும் அறமிலாதது பழி சேர்ப்பதே” என்றார்.
சுதீரன் பெருமூச்சுவிட்டு தன்னை எளிதாக்கிக் கொண்டான். மீண்டும் எதையாவது கேட்பதா என்று தயங்கியபின் “ஓர் உயிரைக் கொன்ற பழியை எத்தனை உயிரைக் காத்தால் நிகர்செய்ய முடியும்?” என்றான். அவர் “கற்கண்டு?” என்றார். அவன் அவர் மடியிலிருந்தே எடுத்து நீட்ட அவர் முகம் மலர்ந்து அதை பிடுங்குவதுபோல வாங்கி வாயிலிட்டு மென்றார். கண்கள் சொக்கின. அவன் அவர் தொடையைப் பிடித்து உலுக்கி “சொல்லுங்கள்” என மீண்டும் கேட்டான். அவர் “ஆயிரம்கோடி உயிர்களைக் காத்தாலும் நிகர்செய்ய முடியாது. பசித்த ஒருவனின் அன்னத்தை தட்டிவிட்டவன் நூறுபிறவியில் அன்னக்கொடை செய்தாலும் நிகர்செய்தவனாக மாட்டான்” என்றார்.
அவன் எழப்போனான். அவர் கற்கண்டை எடுத்து கூர்ந்து நோக்கி பின்னர் வாய்க்குள்போட்டு “ஆற்றாது சொட்டிய ஒரு துளி விழிநீருக்கு மூன்று தெய்வங்களும் பொறுப்பேற்க வேண்டும்” என்றார். அவர் ஒரு ஓவியத் திரைச்சீலைபோலவும் அப்பாலிருந்து வேறெவரோ பேசுவதுபோலவும் தோன்றியது. நெடுநேரம் தயங்கியபின் “தந்தையே, எதன்பொருட்டு ஒருவன் தந்தையின் ஆணையை மீறலாம்?” என்றான். அவர் “எதன்பொருட்டும் அல்ல” என்றார்.
அவன் நெஞ்சு திடுக்கிட்டு பின் ஓசையுடன் உருண்டு சென்றது. மூச்சைத் திரட்டி “அதனால் பழி சேர்ந்தால்?” என்றான். “அது ஊழ். அப்பழியை தானே முழுதேற்றுக்கொள்ளவேண்டும். துறந்து கானேகி தவம்செய்து அதை வெல்லவேண்டும். அல்லது பிறந்து பிறந்து கரைக்கவேண்டும்” என்றபின் “கற்கண்டு?” என்றார். அவன் இன்னொரு கற்கண்டை அவர் மடியிலிருந்தே எடுத்து நீட்டியபின் எழுந்துகொண்டான். அவர் அதை வாங்கி கண்ணெதிரே கொண்டுசென்று கூர்ந்து நோக்கி தலையசைத்து புன்னகைத்தார். வாய்க்குள் போட்டுக்கொண்டு கண்களை மூடி மோனத்திலாழ்ந்தார். அவன் நெடுந்தொலைவென தெருவைக் கடந்து தன் திண்ணையை அடைந்தான்.
தலைப்பாகையுடன் மறுநாள் அவன் புஷ்கரன் முன் நின்றபோது தனியறையில் உணவருந்திக்கொண்டிருந்தவன் நிமிர்ந்து “தந்தையின் ஆணைப்படி வந்தீரா?” என்றான். “ஆம் அரசே, இது குலநெறி” என்றான் சுதீரன். அவனை சிலகணங்கள் நோக்கி நின்றபின் “நீர் என்னை அழிப்பீர். இக்கணம் அதை நன்குணர்கிறேன். அந்தணன் எடுத்த வஞ்சினத்துடன் போரிட்டு வென்ற அரசர்கள் இல்லை” என்றான். சுதீரன் பேசாமல் நின்றான். “வேதத்தின்மேல் ஆணையாக சொல்லும்… நான் எண்ணுவது மெய் அல்லவா?” சுதீரன் “ஆம் அரசே, அறத்தின்பொருட்டு உங்களை அழிப்பேன்” என்றான்.
புஷ்கரன் குருவியின் ஓசையுடன் மிகமெல்ல நகைத்து “நன்று… எனக்கு அனைத்தும் சலித்துவிட்டது. நச்சு பூசிய அம்பையும் அரசநாகத்தையும் அருகே போட்டு துயில்வதைக்கூட செய்து பார்த்துவிட்டேன். நீர் என் அமைச்சராக இரும். உம்மை வென்றால் அதன்பின் நான் விண்ணளந்தோனை மட்டுமே அறைகூவவேண்டும்” என்றான். “ஆம் அரசே, இது ஓர் ஆடலென அமைக! ஒன்றுமட்டும் நான் உறுதி அளிக்கிறேன். வென்று வாழமாட்டேன், உங்களுடன் நானும் அழிவேன்” என்றான் சுதீரன். புஷ்கரன் திடுக்கிட்டவன்போல விழிதூக்கி நோக்கினான். முற்றிலும் அயலான ஒன்றை நோக்குவதுபோல விழிநிலைத்தான். பின்னர் கலைந்து பெருமூச்சுடன் உண்ணத்தொடங்கினான்.
அரண்மனைமுகப்பில் முந்தையநாள் கழுவேற்றப்பட்ட எழுவர் முகவாய் மார்பில் படிந்திருக்க முடி விழுந்து முகம் மறைக்க அமர்ந்திருந்தனர். வேலுடன் காவல் நின்றவர்கள் தலைவணங்கினர். கழுவர்களின் கால்களை மட்டும் சுதீரன் நோக்கினான். அவை தொங்குபவைபோல இழுபட்டு நீண்டு விரைத்திருந்தன. புஷ்கரன் அவர்களை அறிந்ததாகவே காட்டவில்லை. சாலையை அடைந்ததும் குளிர்காற்று சுழன்றடித்து ஆடையை பறக்கச் செய்தது. புழுதிமணம் நிறைந்திருந்த காற்றுக்கு மேலாடையால் முகத்தை மூடிக்கொண்டான் சுதீரன்.
சாலைகளின் ஓரங்களில் நடப்பட்ட மூங்கில் தூண்களில் தூக்கிலிடப்பட்டவர்கள் கைகள் பிணைக்கப்பட்டு தொங்கி நின்றனர். தரையிலிருந்து அரையடி உயரத்தில் அவர்களின் கால்கள் நின்றிருக்கவேண்டும் என்பது புஷ்கரனின் ஆணை. சற்று அப்பாலிருந்து நோக்கினால் அங்கே ஒருவர் தலைகுனிந்து நிற்பதாகவே தோன்றும். வழிப்போக்கர் தோள்முட்டிக்கொள்ளவும் நேரும். திடுக்கிட்டு நோக்கினால் குனிந்து தங்களை நோக்கும் அசைவற்ற விழிகளையும் வலித்துச் சிரிக்கும் வாயின் பற்களையும் காண்பார்கள்.
தூக்கிலிடப்பட்டவர்களை கடந்து சென்றுகொண்டே இருந்தனர். அவர்கள் அனைவருமே தலைகுனிந்து நின்றனர், பெரும்பிழை ஒன்றைச் செய்தவர்கள்போல. பிழைசெய்யாத எவரேனும் இந்நகரில் இன்று உள்ளனரா என சுதீரன் எண்ணிக்கொண்டான். ஒவ்வொரு கழுவேற்றத்தின்போதும் தூக்கின்போதும் அந்த எண்ணம் எழுந்து வந்தது. ஒவ்வொருவரும் பிறரை காட்டிக்கொடுத்திருந்தனர், கழுவேற்றியிருந்தனர், வஞ்சமும் சூழ்ச்சியும் கொண்ட முகத்துடன் தன் இறப்பை மட்டுமே அஞ்சி இறுதிக் கணத்தில் நின்றிருந்தனர். இந்நகரில் கொலையாளிகளை கொலையாளிகள் கொல்கிறார்கள். கொலையாளிகள் நாளும் பெருகிக்கொண்டிருக்கிறார்கள்.
கொட்டில்முன் வந்து நின்றதும் ஏவலர் அருகே வருவதற்காக புஷ்கரன் காத்திருந்தான். ஒருவன் வந்து முதுகைக் காட்டியதும் அதை மிதித்து கீழிறங்கி திரும்பிப்பார்க்க சுதீரன் அருகே வந்து “ஒருங்கிவிட்டது என்று சொன்னார்கள், அரசே” என்றான். புஷ்கரன் கைநீட்ட பரிவலன் அருகே வந்து சவுக்கை நீட்டினான். அவன் குறுபீடத்தில் அமர்ந்ததும் இருவர் காலணிகளை அணிவித்தனர். எழுந்து கைவிரிக்க இடைப்பட்டையை இறுக்கினர். அவன் களமுற்றத்தில் சென்று நின்றான்.
மறுமுனையிலிருந்து காரகனை இருவர் கடிவாளம் பற்றி அழைத்துவந்தனர். பரிவலரை சிறுவர்களென தோன்றச்செய்யுமளவுக்கு உயரம் கொண்டிருந்த கரிய புரவி இருளில் மென்முழுப்பாகவே உருத்தெரிந்தது. தலைதூக்கி பெரிய மூக்குத்துளைகள் நெளிய விழிகளை உருட்டியபடி தயங்கிய கால்களை எடுத்துவைத்து வந்தது. “இன்று எந்த உளநிலையில் இருக்கிறான்?” என்று புஷ்கரன் கேட்டான். பரிவலன் அதை கேட்கவில்லை. சுதீரன் “நேற்று மாலையில் மூவர் பயிற்சி அளித்திருக்கிறார்கள். பரிவலர் பதினெண்மர் மேலேறி சுற்றி வந்திருக்கிறார்கள். ஒவ்வொருமுறை சுற்றி வந்ததும் இன்னுணவு தரப்பட்டமையால் மகிழ்ந்து பிறர் ஏறும்பொருட்டு குரல் கொடுக்கிறது” என்றான்.
புஷ்கரன் முகத்தில் எந்த மாறுதலும் தெரியவில்லை. ரணசூரன் அருகே வந்து “நானே நேற்று மூன்றுமுறை சுற்றிவந்தேன், அரசே. அது மிக எளிதாகிவிட்டது” என்றான். பரிவலன் கார்த்தன் “என் மைந்தர் மூவரும் நேற்று இதன்மேல் சுற்றிவந்தனர். இளையவன் பரிப்பயிற்சி பெற்றவன்கூட அல்ல” என்றான். கொண்டுவரும்படி புஷ்கரன் கைகாட்டினான். காரகனை அவர்கள் அவனருகே கொண்டுவந்து நிறுத்தினர். அதன் பெரிய குளம்புகள் மண்ணில் விழும் ஓசை நின்றவர்களின் கால்களில் அதிர்வாகத் தெரிந்தது.
காரகனின் சேணமணிந்த முதுகு பரிவலனின் தலைக்குமேல் மேலும் இரண்டடி உயரத்திலிருந்தது. மேலும் மூன்றடி உயரத்தில் அதன் தலை நிமிர்ந்து வானில் எனத் தெரிந்தது. தாடையிலிருந்து வளைந்து தொங்கிய கடிவாளம் விழுது போலிருந்தது. அதன் விலாவும் புட்டமும் சிலிர்த்துக்கொண்டிருந்தன. மூக்குவிரித்து புஷ்கரனின் மணத்தை அறிந்ததும் தலையைச் சிலுப்பி அசைத்து மெல்லிய குரலில் உறுமியது. பரிவலன் “தாங்கள் ஏறலாம், அரசே” என்றான்.
புஷ்கரன் அதை ஐயத்துடன் நோக்கியபடி சிலகணங்கள் நின்றான். பின்னர் சேணத்திலிருந்து தொங்கிய தோல்பட்டையை பிடித்துக்கொண்டு கால்வளையத்தில் மிதித்து மேலேற முயன்றான். காரகன் உறுமியபடி இரும்புக்கூடம்போன்ற குளம்புகளை எடுத்துவைத்து அவனை விலக்க முயன்றது. கடிவாளத்தை இருபுறமும் பற்றியிருந்த பரிவலர் அதை அசையாமல் நிறுத்தினர். அதன் விழிகள் உருண்டன. மூக்கு சுருங்கி விரிந்தது. குளம்புகளை பொறுமையிழந்து எடுத்து வைத்தது.
சேணத்தின்மேல் புஷ்கரன் அமர்ந்துகொண்டதும் கடிவாளத்தை அவனிடம் வீசினர். அவன் அதை பிடித்துக்கொண்டு புரவியின் கழுத்தை மெல்ல தொட்டான். அவன் தொட்ட இடங்கள் சிலிர்த்துக்கொண்டன. அதன் விழிகள் உருள்வதைக்கண்ட ரணசூரன் மெல்ல அசைந்தான்.
சுதீரன் திரும்பியதும் நோக்கை நிலைக்கச்செய்து உறைந்தான். பரிவலர் பிடி விட்டதும் காரகன் உரக்கக் கனைத்தபடி துள்ளிச் சுழலத் தொடங்கியது. சவுக்கால் அதை அறைந்தபடி புஷ்கரன் ஓசையிட்டான். முன்னங்கால்களைத் தூக்கி காற்றில்வீசி மண்ணில் அறைய ஊன்றி பின்னங்கால்களை உதறிக்கொண்டது. புஷ்கரன் தூக்கி வீசப்பட்டவனாக காற்றில் எழுந்து மண்ணில் மல்லாந்து விழுந்தான். அவனை நோக்கி சீறியபடித் திரும்பிய காரகனை இரு பரிவலரும் தாவிப் பற்றிக்கொண்டார்கள். அவர்களைத் தூக்கியபடி அது சுழல அவர்கள் கால்கள் காற்றில் வீச சுற்றிவந்தனர். ரணசூரன் புஷ்கரனைப்பற்றி இழுத்து அப்பால் கொண்டுசென்றான். காவலர்கள் வேல்களுடன் புரவியை சூழ்ந்துகொண்டனர்.
காரகன் சிம்மம்போல முழங்கியபடி பரிவலரை தூக்கிச் சுழற்றியது. மேலும் மேலுமென பரிவலர் வந்து அதன் கடிவாளத்தையும் சேணத்தையும் பற்றிக்கொண்டனர். “பரிஅரசே, அடங்குக! பொறுத்தருள்க தேவே… பிழைபொறுத்தருள்க…” என பரிவலர் கூவினர். மெல்ல அது அடங்கி தலை தாழ்த்தியது. மூச்சு சீற கண்களை உருட்டியபடி உடல் விதிர்த்து நின்றது. அதன் கால்கள் மிதிபட்ட மண் பன்றிகிளறியிட்டதுபோலக் கிடந்தது.
புஷ்கரன் இரு வீரர்கள் பற்ற எழுந்துகொண்டு கைகளை நீட்டியபடி “கொல்லுங்கள் அதை… அதை வெட்டித் துண்டுகளாக்குங்கள்… அதன் ஊனைப் பொரித்து எனக்கு இன்று உணவென கொண்டுவாருங்கள்” என்று மூச்சொலியுடன் சொன்னான். இறுதிச் சொற்கள் வெறும் இளைப்பாகவே எழுந்தன. கோணல் முகமும் உடலும் துள்ளித்துடித்தன. வீரர்கள் வேல்களுடன் காரகனை நோக்கி பாய சுதீரன் புஷ்கரன் அருகே சென்று “அரசே, வேண்டாம். அதைக் கொல்வது நாமே ஒப்புக்கொள்வது” என்றான். புஷ்கரன் வீரர்களிடம் நிற்கும்படி கைகாட்டி புருவத்தால் ஏன் என்றான். “அரசே, யவனர்களிடமிருந்து இப்புரவியை நாம் வாங்கியதை ஷத்ரிய அரசர்கள்கூட இன்று அறிவார்கள். இதை நாம் கொன்றால் இதை வெல்லமுடியவில்லை என்று நாமே அறிவிப்பதுபோல” என்றான் சுதீரன்.
புஷ்கரன் சில கணங்களுக்குப்பின் கையசைக்க புரவியை பரிவலர் கொண்டுசென்றார்கள். “இது நீங்கள் விழைந்து வாங்கியது. மூன்று ஆண்டுகளாக இங்கே வளர்கிறது. இன்னமும் இது தங்களை ஏற்றுக்கொள்ளவில்லை என்பது நாம் வெளியே தெரிவிக்கவேண்டிய செய்தி அல்ல” என்றான் சுதீரன். புஷ்கரன் தன் புரவியை கொண்டுவரும்படி கையசைத்தான். “இது இங்கிருக்கட்டும். இப்புரவிமேல் தாங்கள் செல்வதைப்பற்றிய பாடல்களை சூதர்கள் புனையட்டும். ஓவியர்கள் தாங்கள் இதன்மேல் இருப்பதைப்போல வரையட்டும்” என்றான் சுதீரன்.
“ஆனால் நாளை கலிபூசனை நிகழ்வு. நம் நகரின் முதன்மை அரசப்பெருவிழவு அது. குடிகள் முன் இப்புரவியில் தோன்றுவதைத்தான் திட்டமிட்டேன்” என்றான் புஷ்கரன். “ஆம், அது மிக எளிது. நீங்கள் யானைமேல் ஆலயத்திற்குச் செல்லுங்கள். புரவி அங்கே வரட்டும். நீங்கள் அதில் நகருலா செல்லக்கூடுமென அனைவரும் எண்ணட்டும்.” புஷ்கரன் அவனை நோக்க “நகருலா செல்லமுடியாதபடி ஏதேனும் நிகழட்டும்” என்ற சுதீரன் “பின்னர் கலிபூசனை நிகழ்வை கவிதையாக்குபவர்கள் நீங்கள் அப்புரவியில் அரண்மனைக்கு மீண்டதாகவோ நகரில் ஓடி படைகளை நடத்தியதாகவோ எழுதட்டும்” என்றான்.
புஷ்கரன் விழிகளில் மிக மெல்லிய அசைவு ஒன்று வந்தது. அதை சுதீரன் புரிந்துகொண்டான். தன் புரவியில் புஷ்கரன் ஏறிக்கொள்ள அருகே வந்த ரணசூரன் மெல்லிய பதற்றத்துடன் சுதீரனை நோக்கினான். சுதீரன் புன்னகையுடன் தலைவணங்க புஷ்கரன் நோக்கை விலக்கிக்கொண்டான்.