தன்னை அறியும் கலை -கடிதம்

nath

அன்புடன் ஆசிரியருக்கு

தன்னை அழிக்கும் கலை வாசித்தேன். ஒரு பெருஞ்சோர்வு மனதை அப்பியது. நான் தீவிரமாக இலக்கியம் வாசிக்கத் தொடங்கி மூன்றாண்டுகள் ஆகின்றன. நவீன இலக்கியத்தின் மீறலும் துடுக்குமே “மரபான” மனக்கட்டமைப்பு உடையவர்களை இலக்கியம் நோக்கி ஈர்க்கிறது. ஒரு படைப்பின் வழியாக தன்னை மீள் பரிசீலனை செய்து கொள்ள நினைப்பவர்கள் மட்டுமே மேலதிகமாக வாசிப்பைத் தொடர்கிறார்கள் என நினைக்கிறேன். போரும் வாழ்வோ பின் தொடரும் நிழலின் குரலோ தரும் மாபெரும் வரலாற்றுத் தரிசனத்தின் பிரம்மாண்டத்தை உணர்ந்து விழி விரிப்பவர்கள் மிகக்குறைவு. அதிக பாத்திரங்களைக் கொண்டு சொல்லப்படும் மார்க்கேஸின் தனிமையின் நூறாண்டுகள் சொல்ல உத்தேசிப்பது எது என்பதே பெரும்பாலும் கணக்கில் கொள்ளப்படுவதில்லை.  அதன் மாய யதார்த்தத்தை பற்றியும் வித்தியாசமான கதையமைப்பு பற்றியுமே பெரும்பாலும் விவாதிக்கிறார்கள்.
வெண்முரசுக்கும் அதேதான் நடக்கிறதோ என்று தோன்றுகிறது. வெண்முரசு அளிக்கும் கால தரிசனம் மிகப்பிரம்மாண்டமானது. இன்று தொன்மமாக மாற்றப்பட்டுவிட்ட ஒரு காலத்தை நிகர்களதத்தில் நிறுத்தி அதற்கு முந்தைய காலகட்டத்தை அது ஊகிக்க முயல்கிறது. தொடர வேண்டிய மாறா விழுமியங்களை மட்டுமே வெண்முரசு முதற்கனல் முதல் முன்னிறுத்தி வருகிறது. குலங்களின் இணைப்பு அதிகார உருவாக்கம் அரசுகளுக்கு இடையேயான மோதல் என நிகழும் பெருஞ்செயல்களுக்கு முன் தத்தளிக்கும் தனி மனிதர்களின் அகங்களையும் அவற்றின் சஞ்சலங்களையும் கணக்கில் கொள்கிறது. ஆகவே  கூர்மையான நெருக்கடிகளுக்கு உள்ளாகும் தனிமனிதர்களின்  அகம் நோக்கிச் செல்லும் போதே அந்த நெருக்கடிகளின் பிரம்மாண்டத்தையும் அதை உருவாக்கிய வரலாற்றுப் பின்னல்களையும் சுட்டி விடுகிறது. சமீபத்திய உதாரணம் நளனும் தமயந்தியும் நகர் நீங்கும் காட்சி.
suresh
ராஸ்கோல்நிகாஂபை ரஷ்யப் போர்களத்தில் நிறுத்துவது போல் எனச் சொல்லலாம். வெண்முரசு நாளைய எழுத்து முறைக்கான முன்மாதிரி. எழுத்தாளன் மொத்த வரலாற்றையும் தன் அகத்தைக் கொண்டு நிகழ்த்திப் பார்த்தாக வேண்டும். அவன் எவ்வளவு பிரம்மாண்டமான வாழ்க்கைச் சித்திரத்தை அளித்தாலும் அவன் தன்னைத்தான் அளிக்கிறான். ஆகவே பௌராணிகனை விட நவீன எழுத்தாளனின் பணி சிக்கலாகிறது.  அவன் தன் புராணத்திற்கு தர்க்க அடிப்படையை உருவாக்க வேண்டி இருக்கிறது. இந்த தர்க்க அடிப்படை உருவாக்கத்திற்கு பயந்து தான் நம் எழுத்தாளர்கள் தங்களால் தர்க்க ரீதியாக நிறுவ முடிந்த ஒரு களத்தை எடுத்துக் கொண்டு ஒரு நம்பகமான ஆட்டத்தை ஆடுகிறார்கள் போல. ஆனால் விஷ்ணுபுரத்திற்கு பிறகு நிலைமை மாறியிருக்கிறது என்றே நம்புகிறேன். காவல்கோட்டம் யாமம் என பெரும் காலத்தை கணக்கில் கொள்ளும் படைப்புகள் வரத்தான் செய்கின்றன. “நவீனத்துவ” மனநிலை முழுதாக நீங்கும் போது எழுத்தாளன் தான் எவ்வளவு சிறியவன் என உணர்வான். அப்படி உணரும்போதே அவன் வளரத் தொடங்கி விடுவான் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. மிக இருண்ட ஒரு வரலாற்று காலத்தில் வெண்முரசு ஒளிபாய்ச்சி இருக்கிறது.  ஆகவே வரலாற்றை தன் கருவிகளைக் கொண்டு எழுதிப் பார்க்கும் உந்துதல் எழும் என்று நம்புகிறேன். ஆனால் முக்கால் நூற்றாண்டாக அப்பணி விடுபட்டுக் கிடக்கிறது என்பது பதற்றத்தையே அளிக்கிறது.
அன்புடன்
சுரேஷ் பிரதீப்

 

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 93
அடுத்த கட்டுரைஇருவர் – கடிதங்கள்