இருத்தலியல் கசாக் –மேலும் கடிதங்கள்

இருத்தலியலும் கசாக்கின் இதிகாசமும் – கஸ்தூரிரங்கன்
 
076-Venmurasu_Pictures_Meet-075
சௌந்தர்

அன்புள்ள ஜெயமோகன்,
முதலில் இந்த கஸ்தூரி ரங்கன் அவர்களுக்கு வாழ்த்துக்களும்,என் அன்பும்.

தத்துவ சித்தனைக்கோ, விவாதத்திற்க்கோ, அனைத்து சாளரங்களளையும் அடைத்து விட்ட இன்றைய தமிழ் சூழலில், இன்று உங்கள் தளம் மட்டுமே ஒரே ஆறுதல்,  அதில் கஸ்தூரி ரங்கனின் இந்த கட்டுரை மிக முக்கியமான ஒன்று.
தத்துவத்தில் முதல் பாடமே , ஏன், எப்படி, மற்றும் நான் யார்? பிரபஞ்சம் என்ன? என்கிற கேள்வியில் இருந்து தான் தொடங்கப்படவேண்டும் என்பது ஒரு மரபார்ந்த முறை, ஆனால், நாம்  கடந்த ஐந்து, ஆறு நூற்றாண்டுகளாக முடக்கி வைத்திருக்கும் , தேங்கிய தத்துவ சிந்தனை, “ஏன் “என்பதையும், “எப்படி “என்பதையும், எதிர்ப்பு, மற்றும் மறுப்பு என்றே புரிந்து வைத்துள்ளது.

 
சார்தரின் இருத்தலியல் கருக்களை, முக்கியமானதாக கருதும்,ஓரளவு தத்துவ பரிச்சயம் உள்ள வாசகர்களுக்கும், இன்றைய இருத்தலியல் சிந்தனைகள் அனைத்திற்கும், ஆணிவேராக,கூர்தீட்டப்பட்ட, ஒரு தத்துவத்தை ஹெடெகர் நிறுவி வைத்துள்ளார் என்பதும், அவரிலிருந்து எழுந்தது தான் பின்னால் தோன்றிய நவீன இருத்தலியல் சிந்தனைகள் என்பதும், கஸ்தூரிரங்கனின் கட்டுரையை படிக்கையில், வியப்பையும்,தெளிவையும் தருகிறது.
தத்துவத்தில் அனைத்தையும் சொல்லாட்சிகளாக தொகுத்து வைத்து கொள்வது ஒரு, பாலபாடம். அவ்வகையில் கஸ்தூரிரங்கன். சரியான சொல்லாட்சியாகவும், சூத்திர வடிவிலும், கட்டுரையில் அமைத்தது சிறப்பு.

//அங்கென இருப்பது அவ்வுலகில்(Welt/World) எறியப்படுகிறது. இந்த “எறியப்பட்டதன்மை”(Geworfenheit/Thrownness) ஹெடெகரின் தத்துவத்தில் மிகவும் முக்கியமானது.//

கீழை சிந்தனையில்” தத் த்வமசி” க்கு இணையாக ஹெடேகர் பயன் படுத்தும் இந்த  சொல்லாட்சி  அதற்கு அவர் காட்டும் நூல்கள்/ உவமானங்கள் , சிறப்பும் வியப்பும் வாய்ந்தது.

சூத்திரம் ஒன்றில் இருத்தலின் நிலை பற்றி பேசுகையில், “தத்” என்றும் “அது” என்றும் நாம் சுட்டும், ஒட்டுமொத்த பிரபஞ்ச சக்தியின் ஒரு துளி புறவய இருப்பை, பற்றி பேசும் நமது தத்துவத்திற்கு மிக அருகில் வருகிறார். எனினும் மேலும் முன்னகர்ந்து  இருத்தலின் இயல்பை பேசுகையில்,  தச்சன் ஏன் ஆணி அடிக்கிறார்? என்கிற கேள்வியில் தொடங்கி உவமானங்கள் வழியாக முன்னே சென்று விட்டார்.
நாம் தத்வமசியை என்ன செய்தோம் என்று பார்க்கையில் ,உவமானங்கள் வழியாக முன்னகர தவறி, அய்யப்ப சன்னிதி கருவறை முகப்பில் வெறும் எழுத்தாக பதிட்டை செய்து பக்தி மட்டுமேயான  ஒற்றை நோக்கோடு நிறுத்தி விட்டோமா?
அல்லது என் புரிதல் பிழையா?

//இருத்தலியல் தத்துவத்தில் பிரம்மம் எனும் கொள்கைக்கு இடமில்லை, ஏனெனில் அதில் எந்த பதிலுக்கும், கட்டமைப்புக்கும் இடமில்லை. ஆனால் இருத்தலியலின் இன்றியமையாத கடைசி கேள்வியான ஏன் பிறக்கிறோம், ஏன் இறக்கிறோம்? //

என்கிற கேள்வியை தொடர்ந்து,  நம் மரபு தேடி கண்டடைந்து வைத்திருக்கும் பொக்கிஷமான “பிரம்மம்” எனும் கொள்கை ,நமக்கு மிகப்பெரிய ஆறுதலையும், இந்த மண் அடைந்த உச்சக்கட்ட ஞானத்தையும் எண்ணி மனம் நிறைகிறது.

//
பிரம்மம் என்பது இந்திய நிலத்துக்கு மட்டுமான ஓர் கொள்கையல்ல, தொல்மதங்கள் பலவற்றில் அதன் வெவ்வேறு வடிவங்களை காணலாம். ஆனால் இம்மண்ணிலேயே அது அதன் முழு தத்துவ வளர்ச்சியை அடைந்துள்ளது. அது இருத்தலியல் என்ற வரலாற்றால் உந்தப்பட்ட கேள்விசார் தத்துவத்தை எவ்வாறு சந்திக்கிறது என்பதையே இந்நாவலில் காண்கிறோம்.//

//ஒவ்வொரு தெரு சந்திலும் பெருங்கருணயுடன் குழந்தைகளுக்கு உடல்நலம் அருளும் அம்மன்களை பிரம்ம ரூபமாக அல்லாமல் எவ்வாறு புரிந்துகொள்வது?// என்று முடிகிறார்.
மேற்கண்ட இரண்டு கருத்துக்களும் தரும் சிலிர்ப்பு அளவீடுகளுக்கு அப்பாற்பட்டது.

இன்று இந்தியாவில் தூய தத்துவம் பயில, ஏதேனும் கல்வி சாலை இருக்குமா என்பது, என்  சந்தேகம்? பெரும்பாலும் அனைத்து தத்துவ கல்வி நிலைகளும் ஏதேனும் வடிவில் ஒரு , சார்பு தன்மை கொண்டதாகவோ, (பக்தி,கர்ம, ஞான) எதோ ஒரு மார்கத்தை முன்னிருத்தியோ,  அல்லது நூற்றாண்டு களுக்கு முன் எழுதப்பட்ட உரைகளை வாசித்து காட்டுதல் வழியாகவே இங்கே தத்துவம் புழங்குகிறது,
விதிவிலக்காக, நாராயண குருவும்,நடராஜ குருவும், குரு நித்யாவும்,  தூய அத்வைதிகளாக, தத்துவ பயிற்சியை பயில வழி அமைத்து கொடுத்து சென்று உள்ளனர்,  நமது நண்பர் கிருஷ்ணன் எழுதிய (சுவாமி வ்யாச பிரசாத் வகுப்புகள்) பற்றிய கட்டுரையை நினைவு கூறுகிறேன்.
//
http://www.jeyamohan.in/95943#.WZqnPfNN1Ds//

கஸ்தூரி ரங்கனின் முந்தைய கட்டுரையும் என்னை கவர்ந்த மிக முக்கியமான கட்டுரைகளில் ஒன்று.  பெரும் உழைப்பை செலுத்தி இலக்கியத்தையும், தத்துவத்தையும் பயின்று தெளிந்த,   கஸ்தூரிரங்கன்  போன்றவர்கள் தொடர்ந்து எழுத வேண்டும்.

” ஆதித்த்ய வர்ணம் தமசஸ்து பாரே” என்கிற ஸ்லோக வரி போல,  அறியாமை இருளில் இப்போது நாம் இருந்தாலும்,  ஆதித்யன் போல இங்கொன்றும் ,அன்கொன்றுமாக இவர்கள் மிளிரட்டும்,  அதில் நாமும் இருளை கடப்போம்.

என்றும் அன்புடன்
செளந்தர்.G

O__V__Vijayan

அன்புள்ள ஜெ

 

கஸ்தூரிரங்கன் எழுதிய கட்டுரையை நாளெடுத்து ஒன்றுக்கு இரண்டுமுறை வாசித்துப் புரிந்துகொள்ளவேண்டியிருக்கிறது.  முதல் இரண்டு பகுதிகளில் இரண்டு முக்கியமான கருதுகோள்களை அவர் வரையறை சொல்கிறார். அவற்றைக்கொண்டே விஜயனை மதிப்பிடுவதற்கு முயல்கின்றார்.

 

தரிசனம் என்றால் என்ன? என்பது முதற்கேள்வி. அதற்கு அவர் சொல்லும் பதில் பிற்காலத்தைய மெடஃபிசிக்கல் தத்துவவாதிகளுடையதாகும். ஒருகாலகட்டத்தின் பொதுவான சிந்தனையாக உருவாகி வருவது. ஆகவே நிரூபணங்கள் ஏதுமில்லாமலேயே சரியாக சொல்லப்பட்டதனாலேயே பரவலாக ஏற்றுக்கொள்ளப்படுவது. அதாவது விட்கென்ஸ்டீன் சொல்வதுபோல ஒரு அணிச்சொற்றொடராக [ஃபிகரெட்டிவ் ஸ்பீச்] வெளிப்படுவதனாலேயே சிந்தனையாக நீடிப்பது. அந்தத்தரிசனமானது தர்க்கபூர்வமாக விளக்கப்படும்போதுதான் தத்துவமாக ஆகிறது.

 

இன்னொரு கருத்து என்பது வரலாறு இரண்டுவகை. புறவயவரலாறு, அகவயவரலாறு. புறவய வரலாறு என்பது வெளியே நிகழ்பவற்றை அடுக்கி உருவாக்கப்படுவது. புறவய வரலாற்றை முழுமையாக நிராகரிக்கும் நீட்சே போன்றவர்கள் சொல்வதுதான் அகவய வரலாறு. அது மனித அகம் எப்படியெல்லாம் மாற்றமடைகிறது என்பதைச் சார்ந்து உருவகிக்கப்படுவது. புறவயவரலாற்றிற்கு இலக்கியத்தில் இடமில்லை என்பதுபோல ஒரு சித்திரம் வருகிறது. அது உண்மை அல்ல. பெரும்பாலான எழுத்துக்கள் புறவயவரலாற்றைச்சார்ந்து அகவய வரலாற்றை உருவாக்குபவை மட்டுமே. எழுத்தாளன் என்பவன் தத்துவத்தின் தர்க்கமுறைகளை நம்புபவன் அல்ல. புறவய வரலாற்றை நம்புபவன் அல்ல.அகவய வரலாற்றை நம்பி எழுதுபவன்.

 

இதைச்சொல்லிவிட்டு கட்டுரை இருத்தலியம் எப்படி அக்காலகட்டத்தின் பொதுவான தரிசனமாக உருவாகி வந்து மார்ட்டின் ஹிடெகர் வழியாக தத்துவத்தர்க்கமுறையைப் பெற்றது என்று விளக்குகிறார். ஹிடெகரின் தர்க்கத்திற்குள் அந்த தரிசனம் கவித்துவமாக இருப்பதை காட்டுகிறார். ஹிடெக்கர் அகவயவரலாற்றின் வழியாக அந்தத்தர்க்கத்தைக் கட்டமைப்பதையும் காட்டுகிறார்.

 

ஆனால் இக்கட்டுரையின் குறைவு என்னவென்றால் இவை எப்படி ஓ.வி.விஜயன் நாவலில் செயல்படுகின்றன என்பது சொல்லப்படவில்லை. அந்தப்பகுதி தனியாகவே இருக்கிறது. விஜயனின் நாவலில் அகவயவரலாறு மட்டுமே உள்ளது என்பதற்கு என்ன ஆதாரம்? அதில் ரவியின் பார்வை வழியாக சமகால வரலாறு வந்துகொண்டிருக்கிறது. விஜயன் அவருடைய சமகாலத்திலிருந்த இருத்தலியல் சிந்தனைகளுக்கு ஆட்பட்டிருந்தார் என்றும் நாவலின் நிறையவரிகள் காட்டுகின்றன

மகேஷ் சிவராமன்

 

ஜெ

 

கஸ்தூரிரங்கனின் கட்டுரை செறிவான மொழியில் ஹைடெக்கரின் கருத்துக்களை தொகுத்துச் சொல்கிறது. நான் கல்லூரியில் படிக்கும்போது சில ஒற்றைவரிகளாக தத்துவங்களை நினைவில் வைக்கலாம் என்று எங்கள் பேராசிரியர் சொல்லிக்கொடுப்பார். அதாவது ’சிந்திக்கிறேன் ஆகவே இருக்கிறேன்’ [“I think, therefore I am] என்ற வரிக்கு எதிரானதே இருத்தலியம். அதைச் சுருக்கமாக இக்கட்டுரையில் கண்டேன்.

ஐரோப்பியச்சிந்தனையிலே ’தனிமனிதன்’ என்ற தத்துவச்சொல் மிகுந்த முக்கியமானது. அது மதத்திற்கு எதிரான கலகக்குரலாகும். மதம் தனிச்சிந்தனையை மறுத்தபோது அதற்கு எதிராக இதை முன்வைத்தனர். உண்மையை உணரவும் அறியவும் சொல்லவும் திறன்கொண்ட ஒரு தனிமனித பிரக்ஞை உண்டு என்று வாதிட்டனர். ரேஷனல், ரீசனிங் போன்ற எல்லாமே இங்கிருந்து ஆரம்பிப்பதுதான். ஆனால் அப்படி ஒரு தனிமனிதன் உண்டா, அது வெறும் உருவகம்தானே என்றகேள்வியுடன் இருத்தலியல் ஆரம்பிக்கிறது

“அறியும் உயிர்” அல்லது “அறியும் இருப்பு”  (Knowing Being)  என்பதைப்பற்றிய விவாதமே இருத்தலியலாகும். அதிலுள்ள “இருப்பு”(Being)  என்பது வெறுமே இருப்பதுதான். அல்லது இருப்பதற்கான போராட்டத்தால்தான் அது compose ஆகிறது. அதன் இயல்பான செயல்பாடு அறிவது அல்ல. அது இருப்பதற்காகவே அறிகிறது. இந்த இடத்திலிருந்தே இருத்தலியலின் பிரச்சினைப்படுத்தல் தொடங்குகிறது. அதிலிருந்து கட்டுரையை எழுதி இருத்தலியத்தை நன்றாக விளக்கியிருக்கிறார்

 

ஸ்ரீனிவாசன்

 

ஜெ

கஸ்தூரிரங்கனின் கட்டுரை நல்ல கட்டுரை. அதற்குவந்த பதில்களும் நல்ல முறையில் எழுதப்பட்டிருந்தன. இவர்கள் தத்துவம் மேல்படிப்பு படிப்பவர்கள் என நினைக்கிறேன். நான் தத்துவம் அறியாதவன் என் துறைவேறு. ஆனால் ஒரு விஷயத்தைக் கவனித்திருக்கிறேன். இந்தத்தத்துவ மாணவர்கள் தத்துவத்தின் ஏதேனும் ஒருதரப்பை எடுத்துக்கொண்டு அதன் வக்கீல்களாகவே பேசுவார்கள். அவர்கள் தர்க்கத்தைக் கற்றுக்கொள்வதே இப்படித்தான். ஆனால் இந்த நிலைபாடுக்கு எப்படி வந்திருப்பார்கள் என்றுபார்த்தால் அவர்களின் கைடு அந்த நிலைபாட்டில் இருப்பார். ஏனென்றால் அவருடைய கைடு அந்த நிலைபாடு கொண்டிருப்பார். அதில் அவர்கள் டாக்டரேட் செய்வார்கள். மற்ற தரப்பை ஏளனம் செய்வார்கள், கடித்துக்கிழிப்பார்கள். ஆனால் அது வெளியே உள்ள அரசியலையோ அல்லது சமூகஎதார்த்தத்தினையோ கற்று அடைவதாக காணப்படாது. அல்லது சுயானுபவம் சார்ந்ததாகவும் இருக்காது. ஏனென்றால் சின்னவயதிலேயே இதற்குள் வந்துவிடுவார்கள். அரசியல் மற்றும் சமூகவியல் எல்லாம் உதவாதவை என்ற நம்பிக்கையும் இருக்கும். கடைசியில் என்ன மிச்சம் என்றால் தர்க்கம் மட்டும்தான்

 

ஆர்.சுவாமிநாதன்

 

இருத்தலியல்,கசாக் -கடிதங்கள்
கசாக்,இருத்தலியல்,ஹைடெக்கர் -கடிதம்
இருத்தலியல்,கசாக் -கடிதங்கள்
முந்தைய கட்டுரைஇருவர் – கடிதங்கள்
அடுத்த கட்டுரைவள்ளுவரும் இறைவாழ்த்தும்