விஸ்வநாத நாயக்கர் அடைப்பக்காரரா?

visvanatha
விஸ்வநாத நாயக்கர்

அன்புள்ள ஜெ

மதுரை நாயக்க அரசை உருவாக்கிய விஸ்வநாத நாயக்கர் அடைப்பக்காரராக இருந்தவர் என நீங்கள் ஒரு கட்டுரையில் குறிப்பிடுகிறீர்கள். அவர் ஒரு படைத்தலைவர், நாகமநாயக்கரின் மகன் என்றுதான் வரலாற்றில் வாசித்திருக்கிறேன். இதுபற்றி ஒரு விவாதம் நண்பர்களுக்குள் வந்தது. ஆகவே இக்கடிதம்
நா.ராமசாமி

*
அன்புள்ள ராமசாமி,
விஸ்வநாதநாயக்கர் கிருஷ்ணதேவராயரின் அடைப்பக்காரராக இருந்தவர் என்பது அனேகமாக எல்லா நூல்களிலும் குறிப்பிடப்படுவதுதான். நாயக்கர் வரலாறுகள் எழுதப்பட்ட எந்த முக்கியமான நூலிலும் அச்செய்தியை நீங்கள் காணலாம்

அடைப்பக்காரர் என்பது அரசருடனேயே இருந்து தாம்பூலம் மடித்துக்கொடுக்கும் பதவி. நாயக்கர் ஆட்சிமுறையில் அது எளிய சேவகனின் பணி அல்ல. அது அரசனுடனேயே இருந்து அனைத்து ரகசியங்களையும் தெரிந்துகொண்டு மந்திராலோசனைகளில் இடம்பெறுப்வரின் பொறுப்பு கொண்டது.

ஆகவே பெரும்பாலும் நாயக்கர்களில் பிரபுகுடும்பத்தில் பிறந்தவர்களும் அரசின் உயர்பொறுப்புகளை வகிப்பவர்களின் மைந்தர்களுமே அப்பதவிக்குத் தெரிவுசெய்யப்பட்டனர். அதேசமயம் அவர்கள் இளவரசர்கள் அல்ல. நாயக்கர் வரலாற்றில் கைப்பற்றப்பட்ட  பகுதிகளின் அரசர்களான பலர் அடைப்பக்காரர்கள்தான்.

உதாரணமாக தஞ்சை நாயக்கர் மரபின் முதல்நாயக்கரான சேவப்ப நாயக்கர் விஜயநகர மன்னர் அச்சுதப்பநாயக்கரின் அடைப்பக்காரராக இருந்தவர்தான். தன் மனைவி திருமலாம்பாவின் தங்கை மூர்த்திமாம்பாவை சேவப்பருக்கு மணம்செய்துவைத்து தஞ்சையைப் பரிசாக அளித்தார் அச்சுதப்பர். [The Nayaks of Tanjore V.Vriddagirisan] இது ஒரு விதிவிலக்கு. பொதுவாக அடைப்பக்காரர்கள் அரசகுடியினருக்கு ஒருபடி கீழே உள்ள பிரபுக்கள்தான்.

இதெல்லாம் தமிழில் எங்காவது விரிவாக எழுதப்பட்டுள்ளதா என்று பார்த்தேன். ஆச்சரியமாக ஒர் இணையதளம். http://naickernaidu.blogspot.in அதில் தமிழில் எழுதப்பட்ட எந்த வரலாற்றுநூலிலும் இல்லாத நாயக்கர்களின் உட்பிரிவுகளும் உறவுமுறைகளும் வரலாற்றுத்தகவல்களும் உள்ளன.[அதிலுள்ள முகப்புமேற்கோள் அபாரம்.]

அடைப்பக்காரர் என்பவர் பேரரசரது அருகிலேயே எப்போதும் இருப்பவராதலாலும், அரசு மற்றும் அரசர் சார்பான அனைத்து இரகசியங்களையும் அறிந்து கொள்கிற வாய்ப்புள்ளவர் என்பதாலும், அரசருக்கு நெருங்கிய உறவினராக அல்லது உயர்குடி பிறந்தவராகவும் (Royal Family), மிகவும் நம்பிக்கையானவராகவும் இருப்பவரையே இராயர்கள் தமது அடைப்பக்காரராக நியமித்துக் கொள்வர் என்பது கருதத்தக்கது.

என்று இந்த இணையதளம் குறிப்பிடுகிறது. [உங்கள் தளத்திலிருந்தே விளக்கம் என்பதனால் நிறைவடைவீர்கள் என நினைக்கிறேன்]வரலாற்றுச்செய்திகளுடன் இதிலுள்ள குலச்செய்திகளை ஒப்பிட்டு ஆராயவேண்டுமென நினைத்துக்கொண்டேன்

ஜெ

http://naickernaidu.blogspot.in

முந்தைய கட்டுரைகசாக்,இருத்தலியல்,ஹைடெக்கர் -கடிதம்
அடுத்த கட்டுரைமதுரை நாயக்கர் வரலாறு (அ.கி.பரந்தாமனார் எம்.ஏ)